17 April 2010 ·

மயக்க வாடா மாப்பிள்ளே!
குஷி வித் குஷ்பு ஆண்ட்டி

ஹலாவ் பேச்சுலர்ஸ்... 'குஷி வித் குஷ்பு ஆன்ட்டி' ஆட்டத்துக்கு நீங்கள் தயாரா? விஜய் டி.வி-யின் 'அழகிய தமிழ்மகன்' நிகழ்ச்சியின் அதிகாரபூர்வ ஜட்ஜ் குஷ்பு. தமிழகத்தின் 'எலிஜிபிள் பேச்சுலரை'த் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு.

''உங்களைப் பொறுத்தவரை என்னென்ன தகுதிகள் இருந்தால் அவர் 'அழகிய தமிழ் மகன்'?''

''பொதுவா, அப்படி டாப் டென் விஷயங்கள்னு பளிச்சுனு சொல்ல முடியாது. என்னைப் பொறுத்தவரை ஜிம்முக்குப் போய் கும்கும்னு உடம்பை ஏத்திட்டு வர்ற கட்டுமஸ்து பார்ட்டிகளை அவ்வளவாப் பிடிக்காது. மீசை இருந்தா பரவாயில்லை... இல்லைன்னாலும் பிரச்னை இல்லை. உயரமா இருக்கணும். ஓவர் சிவப்பா இருந்தா அலர்ஜி. இந்தியன் லுக் அவசியம். ஒட்டடைக்குச்சி ஸ்லிம் ஆகவே ஆகாது. எனக்கு மாப்பிள்ளை பார்க்கிற வயசெல்லாம் எப்பவோ போயிருச்சு. இருந்தாலும், இன்னும் சில வருஷங்களில் என் மகள்களுக்கு மாப்பிள்ளை தேட வேண்டி இருக்கும். அப்போ சிரமப்படாமல் இருக்க இந்த நிகழ்ச்சி எனக்கு ஒரு டிரைலரா இருக்கும். ஏகப்பட்ட சவால்கள் வெச்சிருக்காங்க. ஆனா, கவலைப்படாதீங்க பேச்சுலர்ஸ்... 'மயக்க வாடா மாப்பிள்ளே'னு உங்களுக்குத் தோள் கொடுக்க நான் இருக்கேன்!'' என்று இளைஞர்களுக்கு இனிய செய்தி சொல்கிறார் குஷ்பு ஆன்ட்டி.


சீரியல் வரலாற்றில் உலக சாதனை!

'சன் குடும்ப விருதுகள்' என்ற பெயரில் தங்களின் சீரியல்களுக்கு விருது வழங்கிக் கௌரவித்தது சன் டி.வி. சென்ற வாரம் நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் நடந்த விழா வில் சன் டி.வி. சீரியல்களின் அத்தனை ஸ்டார் களும் ஆஜர். சிறந்த சீரியல், ஹீரோ, ஹீரோயின் என 19 பிரிவுகளில் நேயர்களின் எஸ்.எம்.எஸ். ஓட்டு மற்றும் நடுவர்களின் தேர்வு அடிப்படையில் விருதுகள் வழங்கப்பட்டன. விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரித்த 'திருமதி செல்வம்' சீரியல் ஒன்பது விருதுகளையும், 'கோலங்கள்' சீரியல் ஐந்து விருதுகளையும் அள்ளியது ஹைலைட்!

சாதனையாளருக்கான சிறப்பு விருது பெற்றார் ரம்யா கிருஷ்ணன், 'தங்கம்' சீரியல் யூனிட்டை மேடையேற்றி நன்றி சொன்னார். 'வாழ்நாள் சாதனையாளர்' விருது பெற்ற ராதிகா, ''சீரியல்னா அழுகைன்னு சொல்றது தப்பு. மற்ற மாநிலங்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பெண்கள் அழுது வடியுறாங்க. தமிழ் சீரியல்களில் மட்டும்தான் முற்போக்கான பெண்கள் வர்றாங்க. சித்தி, அபி எல்லாமே அதற்குச் சரியான உதாரணங்கள்'' என்றார்

சிறந்த துணை நடிகர் விருது பிரிவில், தொல்காப்பியன் கேரக்டருக்கு விருது பெற்றார் திருச்செல்வம். பளபளா கோட்சூட்டில் மேடையேறிய திருச்செல்வம், ''நான் நடிகன் ஆனதற்குக் காரணம் திருமுருகன். அவரோடு இந்த விருதை வாங்க வேண்டும்'' என்று 'மெட்டி ஒலி' திருமுருகனை மேடைக்கு அழைத்தார். ''நானே நடிச்சிட்டேன். அதனால நீ நடிக்கலாம்னு திருச்செல்வத்துக்கு ஐடியா கொடுத்தேன். திருச்செல்வத்தை எப்போ பார்த்தாலும் எனக்குச் சிரிப்பு வரும். இப்பவும் வருது. காரணம் அவரோட கோட்'' என்று ஜாலியாகக் கலாய்த்தார் திருமுருகன். ''அட, நான் ரொம்ப சாதாரணமா டிரெஸ் பண்ற ஆளு. ஃபங்ஷனுக்கு டிரெஸ்கோட் இருக்குன்னு சொன்னாங்க. அதனால காலையில் இருந்து அண்ணா நகர் முழுக்க அலைஞ்சு கோட் வாங்கினேன். இங்கே வந்து பார்த்தா, என்னைத் தவிர எல்லாருமே சாதாரணமா டிரெஸ் பண்ணியிருக்காங்க. என்னை எல்லாரும் சேர்ந்து காமெடி பீஸ் ஆக்கிட்டீங்க'' என்று கமென்ட் அடித்து, அரங்கைக் குலுங்கவைத்தார் திருச்செல்வம்.


சிறந்த ஒளிப்பதிவாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் 'அரசி' ஒளிப்பதிவாளர் செந்தமிழ்ச் செல்வன். அவருக்குப் பதிலாக விருதைப் பெற்றுக்கொண்டார் அந்த சீரியலை இயக்கிய சமுத்திரக்கனி. ''எனக்கும் செந்தமிழ்ச் செல்வனுக்கும் சின்னக் கருத்து வேறுபாடு. நாங்க பேசி இரண்டரை வருடங்களுக்கு மேல் ஆச்சு. நான் சினிமாவுக்கு வந்துவிட்டதால் நட்பைப் புதுப்பிக்க முடியலை. நாங்க மீண்டும் நட்பைத் தொடர இந்த விழா அடித்தளம் அமைத்திருக்கு. என் நண்பனுக்கு நானே தேடிப் போய் இந்த விருதைக் கொடுத்து வாழ்த்துச் சொல்வேன்'' என்று நெகிழ்ந்தார் சமுத்திரக்கனி.

சிறந்த சீரியலுக்கான விருது பெற்றது 'திருமதி செல்வம்'. ''எல்லாரும் டபுள் ரோல் பண்ணுவாங்க. ஆனா, இவர் டபுள் சீரியல் பண்றார். 'திருமதி செல்வம்', 'தென்றல்'னு ரெண்டு சீரியல்களையும் ஒரே நேரத்தில் டைரக்ட் பண்ணி ஹிட் ஆக்கின சூப்பர்ஹிட் டைரக்டர்'' என்று கஸ்தூரி அறிமுகப்படுத்த, ஆரவாரத்துக்கு இடையே மேடையேறினார் குமரன். ''நான் சீரியலுக்குப் போகிறேன் என்று சொன்னதும் 'நீ நிச்சயம் ஜெயிப்பே' என்று வாழ்த்தி வழியனுப்பிய என் பெற்றோருக்கும், என்னை நம்பி இரட்டைப் பொறுப்பு வழங்கிய விகடனுக்கும் நன்றி!'' என்று தழுதழுத்தார்.

இதைத் தொடர்ந்து மேடையேறினார் 'திருமதி செல்வம்' தயாரிக்கும் விகடன் டெலிவிஸ்டாஸ் பா.சீனிவாசன். ''இதை ஒரு மதிய சீரியலாகத்தான் ஆரம்பித்தோம். ஆனால், 'மதிய சீரியல்தானே' என்று துளிகூடத் தயங்காமல் ஒரு ப்ரைம் டைம் சீரியலுக்கான அசுரத்தனமான உழைப்பையும் அர்ப்பணிப்பையும் கொடுத்தது இயக்குநர் குமரன் தலைமையிலான எங்கள் டீம். அதனால்தான் 'திருமதி செல்வம்' இன்று ப்ரைம் டைம் சீரியலாக சக்கைப்போடு போடுகிறது.

அதுபோலத்தான் 'கோலங்கள்'. திருச்செல்வம், தனித்து நின்று திரைக்கதை, இயக்கம், நடிப்பு என மூன்று பெரும் பொறுப்புகளையும் சுமந்து 1,533 எபிசோடுகளைத் தொடர்ந்து பிரமாதப்படுத்தியது சீரியல் வரலாற்றில் பிரமிப்பூட்டும் ஓர் உலக சாதனை!'' என்றார் பெருமிதமாக!

சிறந்த இயக்குநர்களுக்கு மரியாதை செலுத்தும்விதமாக மேடையேற்றிக் கௌரவித்தார்கள். 'மெட்டி ஒலி' திருமுருகன், 'கோலங்கள்' திருச்செல்வம், 'திருமதி செல்வம்' குமரன் என மூன்று இயக்குநர்களுக்கும் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. ''நாமினேஷன் இல்லாமலேயே எனக்கு விருது கிடைச்சிருக்கு. நினைக்கவே சந்தோஷமா, பூரிப்பா இருக்கு. எனக்கு முதன்முதலில் வாய்ப்பு கொடுத்தது விகடன் நிறுவனம். எங்க மூணு பேருக்குமே ஒரு ஸ்பெஷல் இருக்கு. என்னன்னா, நாங்க மூணு பேருமே விகடனில் இருந்து வந்தவர்கள். விகடனுக்கும் சன் டி.வி-க்கும் நன்றி!'' என்று நெகிழ்ச்சியோடு மற்றவர்களைச் சேர்த்து அணைத்துக்கொண்டார் திருமுருகன்.
க்ளைமாக்ஸில் சிறந்த நாயகன், சிறந்த நாயகி என இரண்டு விருதுகளையும் எக்கச்சக்கக் கைதட்டல்களோடு ஒருசேர வாங்கியது 'திருமதி செல்வம்'!


ஒரே கேள்வி!

கலைஞர் தொலைக்காட்சியின் 'நாளைய இயக்குநர்' நிகழ்ச்சி செம ஹிட். 5 நிமிடங்களில் பட்டையைக் கிளப்பும் படங்களுடன் இளைஞர்கள் வரிசை கட்டுகிறார்கள். இதன் தயாரிப்பாளர் ஜெயவேலிடம்...

''ஜெயிக்கிறவங்களுக்கு என்ன தருவீங்க?''

''ஒரு பெரிய தொகை பரிசா தருவோம். அதுபோக, ஒரு தயாரிப்பாளர் மூலமா படம் பண்ணுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். டி.வி. நிகழ்ச்சி மூலமா ஓர் இயக்குநர் உருவாகும் புதிய புரட்சி இந்த நிகழ்ச்சியில் நடக்கப் போகுது!''


'தினமும் 35 ஆயிரம் சம்பளம் வாங்குறார். ஆனால், டி.ஆர்.பி. ஏறலையே' என இயக்குநர் மீது வருத்தத்தில் இருக்கிறார் அந்தத் தயாரிப்பாளர். 'ஒண்ணு ஸ்லாட் மாத்தித் தாங்க.. இல்லைன்னா டைரக்டரை மாத்திக்கிறேன்' என்று சேனலி டம் வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

ஆட்டம் போடும் நிகழ்ச்சியில் அடுத்தடுத்த கட்டங்கள் செல்வதற்கு அக்காவுக்கு லஞ்சமாக அமவுன்ட் வெட்ட வேண்டுமாம். இல்லை என்றால் நன்றாக ஆடினால்கூட எலிமினேஷன்தானாம்.


பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர்களின் குரலை அச்சு அசலாக மிமிக்ரி செய்து பாடும் பாடகர்களைத் தேடிப் பிடித்து சம்பந்தப்பட்ட பாடகர்களின் முன்னிலையில் பாடவைக்கும் நிகழ்ச்சி 'பாடவா உன் பாடலை'! ஜெயா டி.வி-யில் ஒளிபரப்பாகப் போகும் இந்த நிகழ்ச்சியின் முதல் எபிசோடு குரல் ஜானகியுடையது. தொடர்ந்து டி.எம்.எஸ்., எம்.எஸ்.வி., எஸ்.பி.பி. என பிரபல பாடகர்களின் குரலும், பாடகர்களும் வரப்போகின்றனர்.

அனுஹாசன் தொகுத்து வழங்கும் டாக் ஷோ ஒன்று விரைவில் ஜெயா டி.வி-யில் ஒளிபரப்பாக உள்ளது. சமூகத்தால் வஞ்சிக்கப்பட்டவர்கள், வசதியடைந்தவர்கள் எனப் பலர் கலந்துகொண்டு இந்த நிகழ்ச்சியில் பேசுகிறார்கள்.


நன்றி விகடன்

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites