18 April 2010 ·

சோனா... இனி தேவி சோனா!

டூ பீஸ் ஸ்விம் சூட்டில்கூட 12 ஜன்னல்கள்வைக்கும் சோனா, ஆன்மிகத்தில் திளைக்கிறாரா? ஆம், உச்சி முதல் உள்ளங்கால் வரை காவி உடுத்தி அமர்ந்திருக்கிறார் தேவி சோனா!

லிப்ஸ்டிக், பெர்ஃப்யூம், மேக்கப் சாதனங்களின் இடத்தை, வெண்கல விளக்குகள், 'லிவிங் வித் ஹிமாலயன் மாஸ்டர்ஸ்' போன்ற ஆன்மிகப் புத்தகங்கள் நிரப்பியிருந்தன. "இன்னிக்கு நான் விரதம்!" என்றபடி புன்னகையுடன் வந்து அமர்ந்தார்.

"இதுதான் நான். சினிமா நடிகையாகவும் ஒரு தொழிலதிபராகவும்தான் பலருக்கு என்னைத் தெரியும். நான் ஆன்மிகத்தில் ஐக்கியமாகி ஐந்து வருடங்கள் ஓடிவிட்டன. வாரத்துக்கு ஒருநாள் விரதம், மாதத்துக்கு ஒருநாள் மௌன விரதம், வருடத்துக்கு ஒருமுறை புனிதப் பயணம் என்கிற வாழ்க்கைமுறை உலகத்துக்குத் தெரியாது!" - ஆங்கிலத்தில் தடதடத்துத் தந்தியடிக்கும் சோனாவிடம் இருந்து மென்மையான நதியாக வார்த்தைகள் நழுவுகின்றன.

"ஆஸ்திரேலியா ட்ரிப் முடிச்சுட்டு வர்ற வழியில் நண்பர்களோடு ரிஷிகேஷ் போயிருந்தேன். அப்போதான் அவரைப் பார்த்தேன். யோகி குகராஜ் சுவாமிகள். அவருக்கு எத்தனை வயசுன்னு யாராலும் கணிக்க முடியாது. ஆனா, இதுவரை அவர் வாழ்க்கையில் ஒட்டுமொத்தமாகப் பேசியதே 100 வார்த்தைகளுக்குள்தான் இருக்குமாம். சுவாமி என் கண்களை உற்றுப் பார்த்தார். அந்தக் கண்கள் அபாரமான கடலாக விரிந்து என்னை உள்வாங்கிடுச்சு. ஒரு நிமிஷம் காற்றில் மிதக்கும் சருகு மாதிரி லேசாயிட்டேன். ஒரே நேரத்தில் எரிமலையின் வெப்பத்தையும் இமயமலைச் சிகரத்தின் குளிர்ச்சியையும் உணர்ந்தேன்

நான் என்பது நானில்லை, அது வேறு என்பதை உணர்ந்தேன். அந்த ஆனந்தம் என்பது சிரித்து மகிழ்கிற பரவசம் இல்லை. அழுது கரைகிற ஆனந்தம். நான் எனது சுய உணர்வை அடைந்தபோது என்னையும் அறியாமல் கண்களில் நீர் வழிந்துகொண்டு இருந்தது. சுவாமியின் முகத்தை நிமிர்ந்து பார்த்தேன். லேசான புன்னகை, 'போய் வா' என்பது மாதிரியான தலையசைப்பு, அவ்வளவுதான். இன்னிக்கு வரைக்கும் சுவாமிக்கும் எனக்கும் எந்தத் தகவல் தொடர்பும் இல்லை. ஆனால், நான் தியானத்தில் ஈடுபடுவது, காவி உடை அணிந்தது, என்னுடைய கோபங்களைப் பொசுக்கி சாந்தத்தையும் அமைதியையும் கைக்கொண்டது எல்லாமே சுவாமி சொல்லிச் செய்வதைப் போலத்தான் இருக்கு!"


"அப்ப இனிமே சினிமா, நடிப்பெல்லாம் விட்டுடுவீங்களா?" - தயக்கத்துடன்தான் கேட்டோம்.

மெல்லிய புன்னகையை மட்டும் பதிலாக அளித்த சோனா, "நான் இப்போது சோனா இல்லை. தேவி சோனா என என் திருநாமத்தை மாற்றிக்கொண்டேன். ஜீவன் என்பது ஆன்மா. நீங்களும் நானும் பாத்திரங்கள். ஆன்மா என்பது பளிங்குபோல் ஓடும் பரிசுத்தமான நீர். பாத்திரத்துக்கு ஏற்றாற்போல ஆன்ம நீர் தோற்றத்தை மாற்றிக்கொள்ளும். ஆன்மாவின் பயணம் முடிவில்லாதது. பிரபஞ்சத்துக்கு எப்படி வயது இல்லையோ அதுபோல ஆன்மாவின் பயணத்துக்கும் முடிவு இல்லை. ஆன்மா தங்கிப்போகிற கூடுதான் உடல்!"

"இல்லைங்க... தொடர்ச்சியா நடிப்பேன்னு சொல்றீங்களா... இல்லை மாட்டீங்களா?"

"போர் புரிவது அர்ஜுனனின் கடமை. கடமை தவறியபோது அர்ஜுனனை நல்வழிப்படுத்தியது கண்ணனின் திறமை. எனது கடமை இப்போதைக்கு சினிமா. கடோபநிஷதம் சொல்கிறது, 'வாயுவும், வருணனும், அக்கினியும் தங்கள் கடமை களில் இருந்து தவறாதவரை நீங்களும் உங்கள் கடமைகளில் இருந்து விலகாதீர்கள்' புரிகிறதா?" என்கிறார் தேவி சோனா!

பிரேம்ஜியை ஹீரோவாக்கி '2010 பாக்யராஜ்' படம் தயாரிக்கும் பெண்ணுக்குள் இப்படி ஓர் ஆன்மிக அலையா

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil