கருணாநிதி சொல்வது நம்பக் கூடியதாக இல்லை : விஜயகாந்த்
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் தமிழகத்துக்கு சிகிச்சைக்கு வந்தபோது விமான நிலையத்தில் இருந்து வெளியே விடாமல் அவரை திருப்பி அனுப்பிய சம்பவம் தனக்கு தெரியாது என்று முதல்வர் கருணாநிதி பேரவையில் கூறியிருப்பது நம்பக்கூடியதாக இல்லை என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் ஒரு பயணியாக வந்துள்ளாரே தவிர ஒரு முக்கிய அரசியல் பிரமுகராக அல்ல. இந்த விஷயம் பற்றி தனக்கு தெரிவிக்கவில்லை என்று தமிழக முதல்வர் கருணாநிதி குறைப்பட்டுக் கொள்வதில் அர்த்தமில்லை.
சென்னை விமான நிலையத்தில் மத்திய, மாநில அரசுகளின் உளவுத்துறையினர் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த தகவல் உடனடியாகத் தெரிந்திருக்கும். அப்படியிருக்க தனக்கு தெரியாது என்று முதல்வர் கருணாநிதி சொல்வது நம்பக்கூடியதாக இல்லை.
இந்திய அதிகாரிகள் மூலம் விசா பெற்றுதான் பார்வதி அம்மாள் சென்னை வந்திருக்கிறார். சென்னை விமான நிலையத்தில் தன்னை இறங்கவிடமாட்டார்கள் என்று அவர் எப்படி எதிர்பார்த்திருக்க முடியும்?
அவரை இறங்கவிடாமல் தடுத்தது இந்திய அரசுதான். ஆகவே இத் தகவல் தெரிந்தும் மெளனம் சாதித்துள்ளது தமிழக அரசு. ஆகவே, தடை ஆணை விதித்த இந்திய அரசும் அதற்கு துணை போன முதல்வர் கருணாநிதியும்தான் மீண்டும் பார்வதி அம்மாள் சென்னைக்கு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக பார்வதி அம்மாள் கோரிக்கை வைத்தால் பரிசீலிப்போம் என்று சொல்வது என்ன நியாயம்?
2003-ம் ஆண்டு அன்றைய முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டதற்கு இணங்க பிரபாகரனின் பெற்றோர்கள் மீண்டும் இந்தியாவுக்கு வர தடைவிதித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அன்றைக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் இருந்த சூழ்நிலை வேறு, இன்றைய நிலை வேறு. 2003-ம் ஆண்டு பட்டியலை பல ஆண்டுகள் கழித்துதான் பரிசீலிக்க வேண்டும் என்பதில்லை.
தமிழக அரசின் சார்பில் முதல்வர் கருணாநிதி இந்த தகவல் தனக்கு தெரிந்த உடனேயே இன்றைய சூழ்நிலையை மத்திய அரசுக்கு எடுத்துச் சொல்லி அந்தப் பட்டியலை ரத்து செய்திருக்கலாம். ஏன், இதை இன்றுகூட செய்யவில்லை என்பதுதான் கேள்வி," என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.




Ontario Time


0 comments:
Post a Comment