உங்களுக்குள் ஓர் உருளைக்கிழங்கு! மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. என்னவென்று கணிக்க முடிகிறதா? இந்தக் கதையைப் படியுங்கள்! அந்தக் கிராமம் முழுக்க உருளை விவசாயம்தான். உருளைக் கிழங்குகளை அறுவடை செய்ததும் அவற்றின் அளவு, எடைக்கேற்ப வகை பிரித்து, மூட்டைகளில் கட்டி, லாரி ஏற்றி மார்க்கெட்டுக்கு அனுப்புவார்கள். அந்தத் தரம் பிரித்தலுக்கே கிட்டதட்ட ஒருநாள் செலவாகும். ஆனால், ஒரே ஒரு விவசாயி மட்டும் உருளைகளை மெனக்கெட்டு தரம் பிரித்துக்கொண்டு இருக்காமல் மொத்தமாக லாரியில் அள்ளிப்போட்டு மார்க்கெட்டுக்குக் கொண்டுசெல்வார். மற்றவர்களுக்கு ஒருநாள் முன்னதாகவே சரக்குகளைக் காலி செய்துவிட்டு ஹாயாக காலை ஆட்டிக்கொண்டு அமர்ந்துஇருப்பார். 'நீங்கள் மட்டும் ஏன் உருளைகளைத் தரம் பிரிப்பது இல்லை?' என்று ஒருநாள் அவரிடம் மற்ற விவசாயிகள் கேட்டுஇருக்கிறார்கள். 'நீங்கள் ஒருநாள் செலவழித்து உருளைகளை தரம் பிரித்து லாரியில் ஏற்றிக்கொண்டு வழுவழு சாலையில் மார்க்கெட்டுக்குச் செல்கிறீர்கள். நான் மொத்தமாக உருளைகளை லாரியில் அள்ளிப்போட்டு கரடுமுரடான மேடு பள்ளம் நிறைந்த பாதையில் லாரியை ஓட்டிச் செல்வேன். அந்த எட்டு மைல் காட்டுப் பாதையில் லாரி அலுங்கிக் குலுங்கிச் செல்லும்போது, பொடிஉருளைகள் தானாகவே அடியாழத்துக்கு இறங்கிவிடும். நடுவாந்திரமான உருளைகள் நடுவில் சிக்கி நின்றுகொள்ளும். கனமான பெரிய உருளைகள் ஜம்மென்று மேலே தங்கிவிடும். மார்க்கெட்டுக்குச் சென்றதும் அப்படியே அலேக் ஆக அள்ளிக் கொட்ட வேண்டியதுதான் பாக்கி!'' என்றாராம். இந்த விதி உருளைக்கிழங்குகளுக்கு மட்டுமல்ல; மனிதர்களுக்கும் பொருந்தும். இக்கட்டான சூழல்களை எதிர்கொண்டு சமாளித்து எழுந்து நிற்பவர்களைத்தான் உலகம் வெற்றியாளர்கள் என்கிறது. சின்னச் சிக்கல்களைக்கூட எதிர்கொள்ளப் பயந்து பின்வாங்கிவிடுபவர்கள் பொடி உருளைகளாகத் தேங்கித் தங்கி விடுவார்கள். நீங்கள் செல்லும் பாதை கடினமாக இருக்கலாம், உங்களுக்குச் சாதகமான சூழல்கள் அமையாமல் போகலாம். காயங்களை மட்டுமே எதிர்கொண்டு இருக்கலாம்... ஆனால், அவை எவையும் நிரந்தரமானவை அல்ல. ஒவ்வொரு நாளையும் கழிப்பதே சவாலாக இருந்தால், எந்தச் சவாலும் ஒருநாளுக்கு மேல் உங்களிடம் தாக்குப்பிடிக்காது. உங்கள் பாதை கடினமாக இருக்கிறதே என்று தயங்கி மயங்காதீர்கள். அந்தப் பாதைதான் உங்களை எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்க வார்த்தெடுக்கும் வாசல் என்கிறார் ராபர்ட். 'Tough Times Never Last, But Tough People Do!' புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் வாழ்வில் அனுதினமும் நாம் சமாளிக்கவிருக்கும் சவால் சூழல்களுக்கு நம்மைப் பழக்குகிறது! டேட்டிங் செல்லுங்கள்! படித்து முடித்து வேலை கிடைக்காமல் தவிப்பவரா நீங்கள்? 'நான் அன்எம்ப்ளாய்ட்!' என்ற கழிவிரக்கத்தில் தத்தளிக்கிறீர்களா? நீங்கள் வேலை தேடும் முறைகளில் எங்கோ ஏதோ சிக்கல். சிம்பிளாக ஒரு வழி சொல்லவா? நீங்கள் உங்களுக்கு காதலன்/காதலி தேடினால், என்னென்ன தகுதிகளுடன் தேடுவீர்களோ, அப்படி உங்களுக்கு ஒரு வேலை தேடுங்கள். வேலை நேரம், அலுவலக அமைப்பு, சம்பளம், ஊர், வேலை அலுவலகத்திலா... ஊர் சுற்றிக்கொண்டே இருப்பதா என்று நீங்கள் விரும்பும் சங்கதிகள் எல்லாம் எந்த வேலைகளில் இருக்கிறதோ,அவற்றுக்குக் குறிவையுங்கள். இன்றைய பரந்து விரிந்த உலகத்தில் நீங்கள் என்ன தகுதிகள் எதிர்பார்த்தாலும், அந்தத் தகுதிகளுடன் எங்கோ ஒருமூலையில் ஒரு வேலை காத்துக்கொண்டு இருக்கும் உங்களுக்காக. ஓ.கே காதலன்/காதலியை ஃபிக்ஸ் செய்தாயிற்று. அடுத்து? உங்கள் மனதுக்குப் பிடித்தவர்களிடம் உங்கள் காதலைத் தெரிவிக்க எப்படியெல்லாம் ரிகர்சல் செய்வீர்கள். அதுபோல, உங்களுக்குப் பிடித்த வேலைக்கு விண்ணப்பிப்பதில் தொடங்கி இன்டர்வியூவில் கலந்துகொள்வது வரை முன் திட்டமிட்டுச் செயல் படுங்கள். இத்தனை காதலுடன் நீங்கள் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும்போது, உங்களின் உடல்மொழியில் தொனிக்கும் அந்த ஆர்வமே உங்கள் 'காதலை' உங்களிடம் சேர்த்துவிடும். என்ன, உடனே 'டேட்டிங்'கை ஆரம்பிக்க வேண்டியதுதானே! விட்டுக்கொடுக்காதே! அப்பா தன் மகனை அழைத்தார். ''மகனே, வாழ்க்கையில் உனக்கென்று ஒரு கொள்கை வைத்துக்கொள். அந்தக்கொள்கையை அடையும் முயற்சிகளை ஒருநாளும் விட்டுக்கொடுக்காதே. உனக்கு மகாத்மா காந்தி யாரென்று தெரியுமா?'' ''தெரியும்!'' ''கபில்தேவ்?'' ''தெரியும்!'' ''ஏ.ஆர்.ரஹ்மான்?'' ''தெரியும்!'' ''இவர்கள் எல்லாருக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்று தெரியுமா?'' ''என்ன?'' ''அவர்கள் எந்தச் சமயத்திலும் தாங்கள்கொண்ட கொள்கையில் இருந்து விலகவில்லை. உனக்கு சந்தான கோபாலகிருஷ்ணனைத் தெரியுமா?'' ''தெரியாதே... யார் அவர்?'' ''அவர் பாதியில் விலகிவிட்டார். அதனால்தான் உனக்கு அவரைத் தெரியவில்லை!'' என்றார் அப்பா. இதுதான். இவ்வளவுதான். உலக சமாதானமோ, உலகக் கோப்பையோ, ஆஸ்கர் விருதோ, ஆறிலக்கச் சம்பளமோ, தூத்துக்குடி அவுட்டரில் சொந்தமாக ஒரு வீடோ... எந்தச் சமயத்திலும் உங்கள் கொள்கையை விட்டுக்கொடுக்காதீர்கள்! முழுமையாக ஒப்படை! கேதே மில்லர்பற்றி உங்களில் சிலர் அறிந்திருக்கலாம். அபாரமான ஓட்டப் பந்தய சாம்பியன். பள்ளி நாட்களில் கேதே கலந்துகொள்ளும் எந்தப் போட்டிகளிலும் அவள்தான் வின்னர். எதிர்காலத்தில் அபாரமான உலக சாதனைகளைப் படைப்பாள் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த அவளது 13-வது வயதில் கேதே ஒரு மோசமான விபத்தில் சிக்கினாள். மிக மிக மூர்க்கமான விபத்து. கிட்டத்தட்ட மூளை சிதைந்துவிட்டது. 11 வாரங்கள் கழித்து கண் விழித்த கேதே, அதன் பிறகு மூச்சுவிட, தண்ணீர் குடிக்க, நடக்க, பேச, ஆரம்பம் முதல் பழக வேண்டி இருந்தது. சரசரவென குறைந்த எடை, உடலில் ஒரு துளி உயிரையும் சொற்ப எலும்புகளையுமே மிச்சம் வைத்திருந்தது. ஓட்டப் பந்தயங்களில் கலந்துகொள்வதைப்பற்றி கேதே நினைத்துக்கூட பார்க்க முடியாது என்றார்கள் மருத்துவர்கள். ஆனால், ஒருநாள் கேதே மீண்டும் ரேஸ் டிராக்குக்கு வந்தாள். துப்பாக்கி வெடித்து மற்றவர்கள் பாதி தூரம் கடந்த பிறகுதான் கேதேவால் எழுந்து நிமிர்ந்து எட்டுவைக்க முடிந்தது. நடுநடுவே பொத்பொத்தென்று கீழே விழுந்து எழுந்ததில் உடலெங்கும் காயங்கள். ஒவ்வொரு அடி எடுத்துவைக்கும்போதும் ரத்தம் கசிகிறது. ஆனாலும், விடாமல் ஓடி எல்லைக் கோட்டைத் தாண்டுகிறார் கேதே. 'முதன்முறையாக ரேஸில் கடைசி இடம் பிடித்து வெற்றியை நழுவவிட்டிருக்கிறீர்கள். எப்படி உணர்கிறீர் கள்?'' என்று அவரிடம் கேட்டிருக்கிறார்கள். ''முதல் இடத்தைப் பிடிப்பதுதான் வெற்றி என்று நான் எண்ணவில்லை. இந்த ரேஸை நான் முடிப்பதே எனக்கு வெற்றிதான். முதல் இடமோ, கடைசி இடமோ, நான் என்னிடம் உள்ள அனைத்தையும் கொடுத்தேன். அதற்கு எனக்குக் கிடைத்த வெகுமதி நிச்சயம் எனக்கு மகிழ்ச்சிதான். நமது முழுத்திறமைகளையும் வெளிப்படுத்திய பிறகு விளையும் விளைவுகளுக்கு நிச்சயம் நாம் பொறுப்பாக மாட்டோம்!'' என்றார் கேதே. உங்களிடம் உள்ள அனைத்தையும் நீங்கள் ஒப்படைக்கவிருப்பது எப்போது?
காந்தி,கபில்தேவ்,ரஹ்மான்,-இவர்கள் எல்லாருக்கும் உள்ள ஒற்றுமை
Subscribe to:
Post Comments (Atom)
!-end>!-local>
Labels
- Books (9)
- Camera (4)
- car (4)
- Cinema (44)
- Computer (20)
- Ilayaraya Hits (1)
- India (2)
- Janahi Hits (1)
- Mcse (1)
- Mobile (3)
- Motorcycle (1)
- Mp3s (10)
- music (1)
- News (30)
- Nithiyanantha (5)
- Spb Hits (1)
- Tamil (4)
1 comments:
Really good one friend...thanks for the share...!
Post a Comment