புதுசு-திடீர் அறிக்கையும், திடுக் பின்னணியும் நித்தியானந்த

01 May 2010 ·


'விசாரணை என்ற பேரில் எனது ருத்திராட்ச மாலையைப் பிடுங்கிட்டாங்க. ருத்திராட்சத்தை உருட்டாமல் என்னால் ஒரு நிமிஷம்கூட இருக்க முடியாது. அந்தப் படபடப்புலதான் எனக்கு நெஞ்சு வலியே வந்திடுச்சு. தயவுபண்ணி ருத்திராட்சத்தை திருப்பிக் கொடுங்க!'' - பெங்களூருவில் உள்ள ஜெயதேவா இதய நோய் ஆராய்ச்சி மருத்துவமனையில் நித்தியானந்தா இப்படிக் கெஞ்ச... ''இதயத் துடிப்பு சீராகத்தான் இருக்கிறது. எந்தப் பிரச்னையும் இல்லை!'' என்று புன்னகைத்தார்கள் டாக்டர்கள்.நித்தியானந்தா மறுபடியும் போலீஸ் கஸ்டடி யில்!

தகதக தங்கக் கடத்தல்!

கஸ்டடியில் நித்தியானந்தாவிடம் அதிரடி விசாரணை நடக்கிறது. அவர் மீது புகார் கொடுத்த லெனின் கருப்பனை பெங்களூருவுக்கு அழைத்து வந்து, ஆசிரமத்தின் கணக்கு வழக்குகளைத் துருவிய கர்நாடக சி.ஐ.டி. போலீஸார், அந்தக் குறிப்புகளுடன் நித்தியானந்தாவிடம் விசாரணை நடத்தி இருக்கிறார்கள். இதுவரைக்கும் நித்தியானந்தா ஒப்புதல் அளித்திருக்கும் உண்மைகளை வைத்து அவர் மீது மூன்றே மூன்று மோசடி வழக்குகளை மட்டுமே போட முடியுமாம். இதனால், நித்தியானந்தா அடிக்கடி வெளிநாடுகளுக்குப் போய் வந்த பயணங்களில் கண் பதித்த போலீஸ், அவர் மீது தங்கக் கடத்தல் வழக்கைப் பதிவுசெய்ய முடிவு எடுத்திருக்கிறதாம். அமெரிக்காவுக்கு அடிக்கடி போன நித்தியானந்தா, போகும்போது சாதாரண ருத்திராட்சம், செம்புக் காப்புகளை அணிந்திருந்ததாகவும், திரும்பி வரும்போதெல்லாம் அவை மொத்தமும் தங்கமாக மாறி இருந்ததையும் கடந்த ஜனவரி மாதமே மத்திய சுங்க வரித் துறை சந்தேகப்பட்டு கண்காணித்திருக்கிறது. இதுபற்றி அவரிடம் கேட்டதற்கு, ''ஆசிரமத்துக்கு கோடிக்கணக்கில் சொத்து இருக்கிறது. தங்கத்துக்கு ஆசைப்பட்டால்... என் பக்தர்களே கிலோ கணக்கில் கொட்டி இருப்பார்கள். அமெரிக்காவுக்குப் போய் நான் தங்கம் கடத்தி வந்ததாகச் சொல்றதைக் கேட்டால் சின்னக் குழந்தைகூட சிரிக்கும்!'' என கமென்ட் அடித்தாராம்.

இரவில் வருவேன்... ரகசியம் சொல்வேன்!

கடந்த ஜூ.வி-யில் குறிப் பிட்டது போல் கர்நாடக சி.ஐ.டி. போலீஸ் ரஞ்சிதாவை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர முடிவு செய்திருக்கிறது. விசாரணை அதிகாரிகள் இதுபற்றி, ''நித்தி யானந்தா, ரஞ்சிதாவின் போன் நம்பரை எங்களுக்குக் கொடுத்ததாக சில மீடியாக்களில் செய்தி வந்திருக் கின்றன. அது உண்மை இல்லை. போன் நம்பர் தொடங்கி ரஞ்சிதா குறித்த எந்த விவரங்களையும் நித்தியானந்தா தர மறுக்கிறார். அவர் தலைமறைவாக இருந்த காலத்தில் பேசிய போன் ஆதாரங்களை வைத்துத் தான் ரஞ்சிதாவின் எண்ணைக் கண்டுபிடித்தோம். ரஞ்சிதாவிடம் நாங்கள் பேசியபோது, ஆரம்பத்திலேயே அழத் தொடங்கிவிட்டார். 'நான் எந்தக் குற்றத்திலும் ஈடுபடலை. எல்லாமே என்னோட விதி. தயவுபண்ணி என்னை நோகடிக்காதீங்க'ன்னு சொன்னாங்க. நாங்க விளக்கிச் சொன்னதும் நீண்ட தயக்கத்துக்குப் பிறகே விசாரணைக்கு வருவதாகச் சொன்னாங்க. பகலில் வந்தால், மீடியாக்களை எதிர்கொள்ள முடியாதுன்னு... இரவு நேர விசாரணைக்கு வருவதாகச் சொல்லும் ரஞ்சிதா, எல்லா ரகசியங்களையும் உடைச்சுப் பேசத் தயாராகி விட்டார்!'' என்றார்கள்.

சி.டி-களும் செல்போன்களும்!

ஆசிரமத்தில் அள்ளி வந்த சி.டி-களையும் நூற்றுக்கணக்கான புகைப்படங்களையும் தனி டீம் அமைத்து விசாரித்துக்கொண்டு இருக் கிறது கர்நாடக போலீஸ். இமாசலில் தங்கி இருந்தபோது, அவர் பயன்படுத்திய ஏழு செல்போன்களைக் கைப்பற்றிய போலீஸ், அதில் இருக்கும் அத்தனை தொடர்பு எண்களையும் துருவிக்கொண்டு இருக்கிறது. ''ரஞ்சிதாவுடன் பல முறை நித்தியானந்தா தொடர்புகொண்டு பேசி இருக்கிறார். போலீஸ் விசாரணை எப்படி எல்லாம் விரியும் என்பதை முன்கூட்டியே ரஞ்சிதாவிடம் சொல்லி இருக்கும் நித்தியானந்தா, பெரிய அளவிலான பேரத்தையும் அவரிடம் நடத்தி இருக்கிறார். 'எனக்கு எதிராக ரஞ்சிதா ஒரு வார்த்தைகூட சொல்ல மாட்டார்!' என நித்தியானந்தா எங்களிடம் அடித்துச் சொல்வதற்கு இந்த பேரம்தான் காரணம்!'' என்கிறார்கள் அதிகாரிகள்.

கோபிகாவும்... ரஞ்சிதாவும்!

ரஞ்சிதாவை ரகசிய இடத்துக்கு அழைத்து விசாரிக்கத் தயாராகி வரும் கர்நாடகப் போலீஸ், நித்தியானந்தாவின் செயலாளர் நித்திய கோபிகாவையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப் போகிறது. ஆசிரமத்தின் சொத்து குறித்த விவரங்களை நித்ய கோபிகா விடமும், நித்தியானந்தாவின் செக்ஸ் சேட்டைகளைப்பற்றி ரஞ்சிதாவிடமும் துருவ நினைக்கிறது போலீஸ். ரஞ்சிதா உண்மைகளைச் சொல்ல ஒப்புக்கொண் டாலும், நித்திய கோபிகா விசாரணைக்கு உடன்பட மறுக்கிறாராம். ''சுவாமி தவறு செய்பவராக இருந்தால், நாங்கள் எப்படி இப்போதும் அவருடைய தயவில் வாழ்ந்து கொண்டு இருப்போம்?'' என போலீஸிடம் சீறும் நித்திய கோபிகா, சில ஆடிட்டர்கள் மூலமாக ஆசிரமக் கணக்குகளை துல்லியமாக ரெடி செய்துவைத்திருக்கிறாராம்.

ரஞ்சிதா எந்த அளவுக்கு உதவுவார் என்பது குறித்து கர்நாடக சி.ஐ.டி. பிரிவின் எஸ்.பி-யான யோகப்பாவிடம் பேசினோம். ''ரஞ்சிதா எந்த அளவுக்கு விவரங்களைச் சொல்வார் என்பது தெரியவில்லை. ஆனாலும், அவரிடம் விசாரணை நடத்த இப்போதே கேள்விகளை ரெடி பண்ணி விட்டோம்...'' என்று மட்டும் சொன்னார்.

திடீர் அறிக்கையும், திடுக் பின்னணியும்

கர்நாடக போலீஸ் உயரதிகாரி ஒருவர் நம்மிடம், ''மீடியாக்களில் நித்தியானந்தாவுடன் ரஞ்சிதா இருப்பது போன்ற காட்சிகள் ஒளிபரப்பாகத் தொடங்கிய நிமிடத்திலிருந்து ரஞ்சிதாவின் இருப்பிடம் தெரியாமலே இருந்தது. அதே போல நித்தியானந்தாவும் தலைமறைவாகி விட்டார். போலீஸ் கஸ்டடிக்குள் நித்தியானந்தா வந்தவுடன், 'அடுத்து ரஞ்சிதாதான்' என்று முடிவானது. எப்படி யும் தன்னையும் போலீஸ் நெருங்கும் எனத் தெரிந்து கொண்ட ரஞ்சிதா சட்ட பூர்வமாக அதை சந்திக்க முடிவெடுத்தார். தான் சம்பந்தப்பட்ட காட்சிகள், தன்னைப் பற்றிய செய்திகள் வெளியானபோது அமைதி காத்த ரஞ்சிதா, டெல்லியில் இருக்கும் பிரபலமான வழக்கறிஞர்கள் மூலம் தன் தரப்பைச் சொல்ல முடிவெடுத்தார். வழக்கறிஞர்கள் மூலமாகவே ரஞ்சிதாவின் அறிக்கை மீடியாக்களுக்கு அனுப்பப்பட்டது. இதுவரை தன்னைப் பற்றி வந்த செய்திகள், தன் பேட்டியாக பிரசுரித்த விவரங்கள் எல்லாவற்றையும் தன் அறிக்கையில் மறுத்தார் ரஞ்சிதா. நித்தியானந்தாவுடன் ரஞ்சிதா இருப்பது போன்று வெளியான வீடியோவைப் பற்றி தன் அறிக்கையில் 'அது உண்மை என்று நீதிமன்றத்தில் நிரூபிக்கப் படாதவை' என்று குறிப்பிட்டிருக்கிறார்!'' என்று சொல்லும் அந்த அதிகாரி, ''ரஞ்சிதாவின் அறிக்கைக்குப் பின்னால் முழுக்க முழுக்க நித்தியானந்தாவின் சகாக்கள்தான் இருக்கிறார்கள். காரணம், ஏற்கெனவே நித்தியானந்தா மீது பல வழக்குகள் பாயத் தயாராக இருக்கும் நிலையில் ரஞ்சிதா மூலமும் இடைஞ்சல் வரக்கூடாது என்பதுதான். இனி நாங்கள் நித்தியானந்தாவிடம் முழுக்க முழுக்க ரஞ்சிதா பற்றிய விவரங்களைத்தான் கறக்கப் போகிறோம்!'' என்றார்.

தமிழக போலீஸிடம் நித்தியானந்தா!!

மௌன விரதம், நெஞ்சு வலி என பல காரணங்களைச் சொல்லி நித்தியானந்தா கர்நாடக சி.ஐ.டி. போலீஸை காய வைக்கும் நிலையில், கஸ்டடி விசாரணையை நீட்டிக்கக் கூடாது என கோர்ட்டில் வலுவான வாதங்களை வைத்திருக்கிறது நித்தி யானந்தா தரப்பு. இதற்கிடையில், அவரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க தமிழக போலீஸும் தயாராகிவிட்டது. ''சாத்வீக முறையில் விசாரித்தால் நித்தியானந்தாவிடம் இருந்து எந்த உண்மையையும் வரவழைக்க முடியாது. அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் போலீஸை அணுகத் தயாராக இருக்கிறார்கள். அவர்களின் முன்னிலையில் வைத்து நித்தியானந்தாவை விசாரிக்க வேண்டும்!'' என கர்நாடகபோலீஸிடம் வற்புறுத்தி இருக்கிறது தமிழக போலீஸ்.

யாகமும் புத்தகமும்!

போலீஸ் கஸ்டடியில் விசாரணையில் சிக்கியுள்ள நித்தியானந் தாவைக் காப்பாற்றுவதற்காக பிடதி ஆசிரமத்தில் புதிய நிர்வாகியான சதானந்தா மூலம் இரண்டு நாட்களாக யாகம் நடத்தப்பட்டு வருகிறது. இப்போது ஆசிரமத்துக்கு ஆதரவாக இருக்கும் பக்தர்கள் இந்த யாகத்தில் பெரிய அளவில் கலந்து கொண்டு, குறிப்பிட்ட ஒரு மந்திரத்தை உரக்கச் சொல்கிறார்களாம். ஆசிரமத்தின் நிர்வாகிகள் உலகம் முழுக்க இருக்கும் பக்தர்களைத் தொடர்புகொண்டு, அதே மந்திரத்தைச் சொல்லி 'எத்தனை முறை உங்களால் அந்த மந்திரத்தைச் சொல்ல முடியுமோ... அத்தனை முறையும் சொல்லுங்கள். சுவாமியை சூழ்ந்திருக்கும் அத்தனை கஷ்டங்களையும் அகற்றி அவருக்கு சக்தியைக் கொடுக்க இந்த மந்திரத்தால் முடியும்!' எனச் சொல்கிறார்கள்.

இதற்கிடையில், நித்தியானந்தாவுக்கு ஆரம்ப காலம் தொட்டு நெருக்கமாக இருக்கும் இரண்டு நிர்வாகிகள், ஆசிரமத்தில் இருந்தபடியே ஒரு புத்தகத்தைத் தயாரிக்க... அந்தப் புத்தகத்தில், 'ஆசிரமம் எப்படி வளர்ந்தது... யார் யாரால் ஆசிரமத்துக்கு மிரட்டல் வந்தது?' எனப் பல விவரங்களை எழுதிக்கொண்டு இருக்கிறார்களாம். பல அரசியல் புள்ளிகளைச் சரிக்கட்டுவதற்காக, ஆசிரமம் எவ்வளவு பணத்தை இழந்தது என்பதையும் அதில் மறைக்காமல் சுட்டிக்காட்டப் போகிறார்களாம். 'எதற்கு இந்தப் புத்தக முயற்சி?' எனக் கேட்டதற்கு, ''இன்னொரு முறை இந்த ஆசிரமத்துக்குள் போலீஸ் அடி எடுத்துவைத்தால், அவர்களுக்கு முதலில் அந்த புத்தகத்தைத்தான் கொடுக்கப் போகிறோம். எதையும் நாங்கள் மறைக்கவில்லை என்பது அதன் பிறகுதான் அவர்களுக்குப் புரியும். விசாரணை என்கிற பெயரில் இங்கிருந்து போலீஸ் அள்ளிக்கொண்டு போன பணமும், பத்திரங்களும் கொஞ்சநஞ்சமில்லை!'' என்கிறார்களாம் சீறலாக!


நன்றி விகடன்

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites