'எப்பப் பார்த்தாலும் முட்டி வலிச்சுக்கிட்டே இருக்கு... என்ன பண்றதுனே புரியல' 'ஏன்தான் இந்தக் கழுத்து வலி படாதபாடு படுத்துதோ...' 'ஒரு நாளப் பார்த்தாப்பல நிம்மதியா இருக்க முடியல. அப்பப்ப இடுப்பு வலி வந்து ஆட்டிப் படைக்குது' - இப்படிப்பட்ட கம்ப்ளைண்ட் சொல்லாத 30, 40 வயதுக்காரர்களை பார்ப்பதே இப்போதெல்லாம் அபூர்வம்தான்!இவர்களுக்கெல்லாம் அக்கம்பக்கத்திலிருந்து இலவசமாக வந்துவிழும் அழுத்தமான அட்வைஸ்... 'யோகா செய்ங்க... எந்த வியாதியா இருந்தாலும் ஓடோடிப் போயிடும்' என்பதுதான். இதைப்பயன்படுத்திக் கொண்டு, யோகாவை வியாபாரமாக்குபவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. திரும்பிய பக்கமெல்லாம், அந்த யோகா... இந்த யோகா என்று விளம்பரங்கள் கொடிகட்டுகின்றன. உண்மையில்... இப்படிப்பட்ட பிரச்னைகளுக்கெல்லாம் தீர்வு யோகா மட்டும்தானா..?யோகா என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ரிஷிகள், சித்தர்கள், யோகிகள் போன்றோர் கண்டுபிடித்து பயன்படுத்தி வந்த உடற்பயிற்சி! ஆம், காட்டுவாசியாக திரிந்த வரை மனிதனுக்கு இதெல்லாம் தேவைப்படவே இல்லை. உணவுத் தேவைக்காக, எதிரிகளிடமிருந்து தப்பிப்பதற்காக, உற்சாகத்துக்காக என்று அவன் ஓடிய ஓட்டங்களே பெரும் பயிற்சியாக இருந்ததால், யோகா போன்ற உடற்பயிற்சிகளைப் பற்றி அவன் யோசிக்க வேண்டிய அவசியமே இருக்கவில்லை. ஆனால், ரிஷி, சித்தர், யோகி, அரசர், மடாதிபதி என்று அடுத்தடுத்த பரிணாம வளர்ச்சியின் காரணமாக மனிதர்களில் ஒரு பகுதியினரின் வாழ்க்கை முறை மாறிப்போகவே... வந்து புகுந்ததுதான் யோகா உள்ளிட்ட பல விஷயங்களும். அதற்கென சில விதிமுறைகளை ஏற்படுத்தி, அதையும் ஒரு பாடமாகவே மாற்றிவிட்டனர். அன்றைக்குக் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே வாய்த்த அந்த ரிஷி வாழ்க்கை... இன்று பல்கிப் பெருகிவிட்டது. வேலைச் சூழல் காரணமாக... தரையில் உட்கார்ந்து எழும் பழக்கம்கூட அற்றுப்போகும் அளவுக்கு வாழ்க்கை முறையே மாறிக்கிடக்கிறது. விளைவு... உடல் எடை கூடி, உடம்பு பல்வேறு வியாதிகளின் வாசஸ்தலமாக மாறிவிட்டது பெரும்பாலானவர்களுக்கும்! இந்நிலையில், 'யோகா என்பது எந்த அளவுக்கு அவசியம்..? இயல்பாக நம்முடைய வீட்டு வேலைகளைச் செய்வது மட்டுமே உடலை சமநிலையில் பராமரிப்பதற்கு போதுமானதாக இருக்காதா..?' என்பது பற்றியெல்லாம் பேசுகிறார் சென்னை, மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த கிருஷ்ண வாசுதேவன். இவர், விரும்பிக் கேட்பவர்களுக்கு யோகா கற்று தருவதை ஒரு சேவையாக செய்து வருபவர். ''நம் முன்னோர்கள் அன்றாடம் வீட்டில் செய்த வேலைகள் எல்லாமே ஆசனங்கள்தான். அப்போவெல்லாம் கல்லுரல்ல மாவை ஆட்டி, அம்மியில சட்னி அரைச்சு, துவைக்கிற கல்லுல துணிகளை அடிச்சு, துவைச்சுனு தினமும் குனிஞ்சு நிமிர்ந்து செஞ்சுட்டு வந்த வீட்டு வேலைகளை... இப்ப மெஷின்கள் செஞ்சுடுது. மெஷின் மாதிரி ஓடிட்டு இருந்த மனுஷங்க சோம்பிப் போய், ஆணி அடிச்ச மாதிரி அலுவலகத்துல கம்ப்யூட்டரும், வீட்டுல டி.வி-யுமா மூழ்கிக் கிடக்கறாங்க. அதுவும் எல்லா வீடுகள்லயும் இருக்கற டைனிங் டேபிள் உபயத்தால, குழந்தைங்க சம்மணமிட்டு உட்காரக்கூட சிரமப்படறாங்க. மாடி ஏறி இறங்கறதோ, நிக்கற பழக்கமோ இல்லாததால, முழங்கால் வலி வந்துடுது. உடம்பின் எல்லா பகுதி ஜாயிண்டுகளும் வளைந்து கொடுக்கும் தன்மை இல்லாமப் போயிடுது. 'பட்டனை தட்டி விட்டா, ரெண்டு தட்டுல இட்லியும், காபியும் நம்ம பக்கத்துல வந்துடணும்' என்று காமெடியாக ரசித்து, சிரித்து மகிழ்ந்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் - டி.ஏ.மதுரம் பாட்டு, இன்னிக்கு நிஜமாயிடுச்சு. செல்போன் பட்டனை தட்டினா போதும்... இட்லி மட்டுமா? அகிலத்துல இருக்கற அத்தனையும் அடுத்த நொடியில வீட்டுக்கு வந்துடுது. இதனால... கை, கால்களுக்கு போதிய அசைவு இல்லாம போயிடுச்சு. அது ஆளையே முடங்கச் செய்து, நோயிலயும் முடக்கிப் போட்டுடுது. 'வாய்விட்டு சிரிச்சா... நோய்விட்டுப் போகும்'னு சொல்லி வெச்சுருக்காங்க. ஆனா, வாழ்க்கைச் சூழல் மாறிப்போனதால... வீட்டுலயெல்லாம் சிரிச்சுப் பேசறது ரொம்பவே குறைஞ்சு போச்சு. அதேசமயம், பார்க்குல போய் உக்காந்துக்கிட்டு, கூட்டமா 'ஹாஹாஹா'னு செயற்கையா சிரிக்கறாங்க - யோகாங்கற பேருல. சிரிக்கறதுக்குனு கிளப்கூட இருக்குது. இதையெல்லாம் இயல்பா வீட்டுல செய்யுறப்பதான் அதுக்கான பலன் கிடைக்கும்'' என்று சொன்னவர், யோகா விஷயத்துக்குள் வந்தார். ''உலகத்துல வாழற சகல ஜீவராசிகளையும் அடிப்படையா வெச்சுதான் ஆசனங்களே இருக்கு. மீன் மாதிரி இருந்தா 'மச்சாசனம்', ஆமை மாதிரி இருந்தால் 'கூர்மாசனம்', வில்லு மாதிரி வளைஞ்சா 'தனுராசனம்', பாம்பு மாதிரி தலையை தூக்கினால் 'புஜங்காசனம்', வெட்டுக்கிளி மாதிரி காலை தூக்கினால் 'சலபாசனம்'. ஐந்தறிவு படைச்ச மிருகங்கள் எல்லாமே ஆரோக்கியமா இருக்கறதால, அதுங்களோட இயல்பான நடவடிக்கைகளைப் பார்த்து உருவாக்கினதுதான் இந்த ஆசனங்கள் எல்லாம். அதாவது, மனிதனும் இயற்கையோட இணைஞ்சு, இயல்பு மாறாம இருக்கணும்கறதுதான் யோகா உருவானதோட அடிப்படை'' என்றவர், நாம் அன்றாடம் செய்யும் வீட்டு வேலைகளுக்கும் யோகாவுக்கும் உள்ள தொடர்பைப் பற்றியும் சொன்னார். ''ஜப்பான்ல இருக்கற மிட்சுபுஷி கார் கம்பெனியின் எம்.டி., ஒரு மல்டி மில்லியனர். ஆனா, அவர் ஒரு கார் கூட வெச்சுக்கல. தினமும் சைக்கிள்ல ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய் அங்க சைக்கிளை விட்டுட்டு, அப்புறம் டிரெயின்ல ஆபீஸ§க்குப் போறாரு. இன்னிவரைக்கும் ஆரோக்கியமா இருக்காரு. நாமும் நல்ல ஆரோக்கியத்தோட இருக்கணும்னா... வீட்டுல குனிஞ்சு, நிமிர்ந்து, வளைஞ்சு, நெளிஞ்சு வேலைகளைச் செய்ய பழகணும். உட்கார்ந்த நிலை, நிக்கற நிலை, படுக்கும் நிலைனு இந்த மூணு செய்கை களை ஒட்டித்தான் ஒட்டு மொத்த யோகாசனங்களும் வருது. அப்படியிருக்கறப்ப... வீட்டு வேலைகள்லயே அதையெல்லாம் செய்துட்டா... தனியா யோகா பயிற்சிக்குப் போக வேண்டிய அவசியம் ஏற்படாது. மனசோட தொடர்புடையதுதான் ஆசனங்கள். மூச்சை மெதுவாக இழுத்து மெதுவாக விடுறதுகூட, நம்ம மனசு ஒன்றியிருந்தாதான் செய்ய முடியும். அதோட, எப்பவும் உற்சாகமான மனநிலையை ஏற்படுத்திக்குங்க'' என்றவர், ஒரு சில வேலைகளை உதாரணங்களாக புள்ளி வைத்துக் காட்டினார். பஸ் ஸ்டாப்புக்கு நடந்து போய் பஸ் ஏறுங்க. தரையில சம்மணமிட்டு சாப்பிடுறதை வழக்கமாக்கிக்குங்க. குனிஞ்சு, நிமிர்ந்து பரிமாறுங்க (முதுகுவலி, கழுத்து வலி வர வாய்ப்பே இருக்காது). வீட்டிலுள்ள பெரியவர்களுக்கு விழுந்து நமஸ்காரம் செய்ங்க (முட்டி, கால், கைகளுக்கு நல்ல எக்சர்சைஸ்). எப்பவும் டி.வி. முன்ன குழந்தைகளை உட்கார வைக்காம, ஓடியாடி விளையாட விடுங்க. நிம்மதியாக தூங்கறதோட... உற்சாக மனநிலையோட குழந்தைங்க வளரும். தொடர்ந்து பேசிய கிருஷ்ண வாசுதேவன், ''வீட்டு வேலைகளைச் செய்யுங்கனு சொன்னதுமே பெண்களுக்கு மட்டும்தானா...னு கேட்கக்கூடாது. நான் சொல்றது பொதுவா மனுஷங்களுக்குத்தான். இதுல ஆண், பெண் வித்தியாசம் கிடையாது. யாரா இருந்தாலும் உடம்பைப் பராமரிக்கணும்னா... தங்களோட வேலைகளை தாங்களே செய்றதுதான் நல்லது. அப்பதான்... உடலும், மனமும் ஆயுள் இருக்கும் வரை ஆரோக்கியமா இருக்கும். உறவுகளையும் பலப்படுத்தி, நிரந்தரமான மன நிம்மதிக்கும் வழி வகுத்துடும்'' என்று சொன்னவர், ''இதையெல்லாம் செய்ய வாய்ப்பில்லாதவங்க, யோகாங்கற பேருல தனியா பயிற்சி எடுக்கறதைத் தவிர்க்க முடியாது. ஆனா, அந்த விஷயத்துல சரியான குருவை அடையாளம் கண்டு பயிற்சி எடுக்கறதுதான் நல்லது'' என்றார் எச்சரிக்கை தொனியில்! பல்வேறு விஷயங்களில் மக்களுக்கும் இருக்கும் பயத்தையே முதலீடாக்கி பணம் பார்ப்பதைப் போல... யோகா விஷயத்திலும் பணம் பார்ப்பவர்கள் புற்றீசலாகப் பெருகிவிட்டனர். அதைப் பற்றியும் கிருஷ்ண வாசுதேவன் பேசியபோது, வார்த்தைக்கு வார்த்தை கோபம் கொதித்தது. ''எத்தை தின்னா பித்தம் தெளியும்னு திரியற ஜனங்களுக்கு யோகா விளம்பரங்கள் ஜென்ம சாபல்யமா படுது. வீட்டுக்கு வீடு, தெருவுக்கு தெரு யோகா வகுப்புகள் முளைச்சுடுச்சு. ரிலாக்ஸ் பண்றதுக்காக செய்யப்பட்ட சில வேலைகளுடன் கூடிய ஆசனங்களைத்தான் நம் முன்னோர்கள் நமக்குத் தந்திருக்காங்க. ஆனா, இவங்களோ அதைப் பிரிச்சு, சார்ட் போட்டு, காலம் போட்டு, ஏ.சி. சுவர்கள்ல இமய மலை, இயற்கை சூழலுடன் கூடிய வால்பேப்பரை ஒட்டி, 'பவர் யோகா, இது டைனமிக் யோகா', இது சண்டை யோகா'னு (தற்காப்பு யோகா) விளம்பரம் பண்றாங்க. 'பத்து நாளில் யோகா பயிற்சி'னு ஆர்வமாப் போய் பணத்தை கட்டிச் சேர்ந்துட்டு, 'ஐயோ... பணம் போச்சே'னு புலம்பி தவிச்சு மனசளவுல பாதிக்கப்பட்டவங்கதான் இங்க அதிகம். ஒரு சவாலா நினைச்சு முரட்டுத்தனமா யோகா கத்துக்கறது பெரிய ஆபத்துல போய் முடியும்" என்று எச்சரித்தவர், ஓர் அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டார். "ஒருநாள் பிரபல பழம்பெரும் நடிகை என்னைத் தேடி வந்திருந்தாங்க. 'ஒரு யோகா வகுப்புக்கு போயிட்டு வந்ததுலேர்ந்து எனக்கு இடுப்பு, முதுகுல உயிர் போற மாதிரியான வலி'னாங்க. அந்த வகுப்புல இவங்கள படுக்க வெச்சு, இவங்க இடுப்புல ஒரு பெண் காலை வெச்சுட்டிருக்க, இன்னொரு பெண் காலை மேல தூக்கியிருக்காங்க. என்ன கொடுமை இது? எந்தவிதமான 'எக்ஸ்டர்னல் டச்'சும் யோகாவுக்கு தேவையே இல்லை. ஆனா, இன்னிக்கு யோகாங்கற பேர்ல யார் என்ன செஞ்சாலும், அதை மக்கள் கூட்டம் நம்பிப் போறது வருத்தமான விஷயம். நம்மளை நாமளேதான் காப்பாத்திக்கணும்" என்றார் அக்கறையுடன் -vikatanபணத்தைப் பறிக்கும் யோகா எதற்கு? தினசரி வேலையில் அனைத்தும் இருக்கு ! "யோகா வியாபாரிகளிடம் ஏமாறாதீர்கள்!"
பணத்தைப் பறிக்கும் யோகா எதற்கு? தினசரி வேலையில் அனைத்தும் இருக்கு !
Subscribe to:
Post Comments (Atom)
!-end>!-local>
Labels
- Books (9)
- Camera (4)
- car (4)
- Cinema (44)
- Computer (20)
- Ilayaraya Hits (1)
- India (2)
- Janahi Hits (1)
- Mcse (1)
- Mobile (3)
- Motorcycle (1)
- Mp3s (10)
- music (1)
- News (30)
- Nithiyanantha (5)
- Spb Hits (1)
- Tamil (4)
3 comments:
http://ulavan.files.wordpress.com/2010/05/ak.gif
Welcome
www.ulavan.net
சூப்பர் பதிவு.. விஞ்ஞான வளர்சியின்..மறு பக்கம் பாதிப்பு..
கலக்கல்...
நன்றி
Post a Comment