நமக்கு உணர்த்தும் பாடம் என்ன? ''புதையுண்டவர்கள் எரியுண்டவர்கள் ஈழத்துக் கவிஞர் சேரனின் கவிதை இப்படியாக நீள்கிறது. ''கண்ணீர் எழுப்பிய நினைவுச் சின்னத்தில் ஒருவர் வெற்று வார்த்தைகளை எழுதுகிறார். பலர் கனவுகளைப் பின்னுகிறார்கள்!'' என்று சேரனின் கவிதை பேசுகிறது. முள்ளிவாய்க்கால் என்ற கடலோரக் கிராமத்தின் பெயர் தமிழ் நினைவில் கல்வெட்டாய் பதிந்துவிட்டது. ஒருவர்... இருவரல்ல - சுமார் 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்ட இடம். அண்மைக் கால வரலாற்றில் இவ்வளவு பெரிய இனப்படுகொலை வேறு எதுவும் நடந்ததாக நினைவு இல்லை. கடந்த ஆண்டு இதே நாட்களில் நாம் கவலையோடு தொலைக்காட்சித் திரைகளைப் பார்த்துக்கொண்டு இருந்தோம். பிரபாகரனின் உடல் என்று காட்டியபோது அதை நம்ப முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. அது ஓர் உடல் அல்ல. அங்கே கொன்றும், உயிரோடும் புதைக்கப்பட்ட 40 ஆயிரம் தமிழர்களின் குறியீடு அது. ஓர் இனம் அழிக்கப்பட்டதன் அடையாளம். தீ நாக்குகள் மேலேறி காற்றை நக்குகின்றன. கரும் புகை சூழ்கிறது. அந்தக் காட்சிஅந்தச் சாம்பலோடு பறந்து செல்லும் ஆயிரம் ஆயிரம் உயிர்களின் அவல ஓலத்தை நமக்குச் சொல்வதாக இருந்தது. எல்லாம் முடிந்துவிட்டது. ஓர் ஆண்டு ஓடிவிட்டது. புறநானூற்றுப் பாடல்களில் வரையப்பட்ட காட்சிகள் உயிர்பெற்று நிகழ்ந்து முடிந்துவிட்டன. புறநானூற்றில் ஒரு பாடல் வரும். உக்கிரப் பெருவழுதி என்னும் மன்னனை ஐயூர் மூலங்கிழார் என்ற புலவர் பாடிய பாடல்.''கருங்கைக் கொல்லனின் உலையில் காய்ச்சப்பட்ட இரும்பு, உறிஞ்சிக்கொண்ட நீரை எப்படி மீண்டும் பெற முடியாதோ... அப்படி நீ கைப்பற்றிய நாட்டையும் உன் எதிரிகளால் திரும்பப் பெற முடியாது!'' என்று அரசனைப் பாராட்டும் பாடல். முள்ளிவாய்க்கால் உறிஞ்சிக்கொண்ட தமிழ் உயிர்களின் கதியும் அதுதான். அந்த உயிர்கள் மீண்டு வரப்போவது இல்லை. அங்கே சிந்தப்பட்ட கண்ணீரோ, குருதியோ எதுவுமே திரும்பக் கிடைக்கப்போவது இல்லை. முள்ளிவாய்க்கால் சோகத்தின் நினைவு நாள் அனுசரிப்போடு நமது கடமை முடிந்துவிட்டதா? ஈழத்தின் துயரம் தமிழக அரசியலுக்கு எப்போதுமே தீனியாக இருந்து வந்து இருக்கிறது. அதையும் தாண்டி தமிழ் மக்கள் அந்தப் பிரச்னையை நேர்மையோடு பார்த்து வருவது உண்மை. அந்த உணர்வை நாம் கவனத்தில்கொள்ள வேண்டும். 1983-ம் ஆண்டில் இலங்கையில் இனக் கலவரம் மூண்டு தமிழர்கள் பெருமளவில் கொல்லப்பட்டபோது வீதிகளில் 'தமிழன் கறி கிடைக்கும்' என்று எழுதிப்போட்டு சிங்கள இனவெறியர்கள் நர மாமிச வேட்டையாடியபோது, தமிழ்ப் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டபோது, தமிழகத்தில் மிகப் பெரும் கொந்தளிப்பு எழுந்தது. தன்னிச்சையாக அது வெளிப்பட்டது. ஆனால், அப்போது கொல்லப்பட்டதைவிடவும் மிகப் பெரும் எண்ணிக்கையில் முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் கொல்லப் பட்டனர் என்ற போதிலும், அப் போது ஏற்பட்ட கொந்தளிப்பு இங்கு உண்டாக வில்லை. அது ஒரு தேர்தல் பிரச்னை யாகக்கூட இல்லை. இந்த அதிர்ச்சிகரமான மாற்றம் எப்படி ஏற்பட்டது? 1983 கலவரத்தைப்பற்றிக் கேள்விப்படாத தலைமுறைதான் நமது இளைய தலைமுறை. அன்று உலகமயமும், திறந்த பொருளாதாரக் கொள்கைகளும் நம்மை இன்றுபோல எந்திரங்களாக்கி இருக்கவில்லை. கொஞ்சம் மனிதாபிமானம் நம்மிடம் ஒட்டிக்கொண்டு இருந்தது. ஆனால், இன்றைய இளைய தலைமுறை அந்த உணர்வில் இருந்து விலகி எங்கோ சென்றுவிட்டது. தொழில்மயமான நேரத்தில் ஐரோப்பியச் சமூகத்தில் ஏற்பட்ட 'அன்னியமாதல்' தான் இப்போது நமது சமூகத்தை ஆட்டிப்படைக்கிறது. இன்று நமது இளைஞர்களுக்கு தமது வாழ்வைத் தவிர சிந்திப்பதற்கு நேரம் இல்லை. இன்னொரு புறம் தகவல் தொழில்நுட்பப் பெருக்கம்; அதன் தாக்கம்.நூற்றுக்கணக்கான சேனல்களில் காட்சிகள் வழிகின்றன. ஈழத்துப் போர்க் காட்சிகளும் வேறு ஏதோ ஒரு சேனலில் ஓடும் ஹாலிவுட் திரைப்படக் காட்சியின் தொடர்ச்சியாக மாறிவிட்டது. எல்லாமே பிம்பங்கள்; கணம்தோறும் மாறுகிற பிம்பங்கள். இலவசத் தொலைக்காட்சித் திட்டத்துக்குப் பிறகு தமிழகம் அதிக அளவில் தொலைக்காட்சிப் பெட்டிகள் உள்ள மாநிலமாகிவிட்டது. அதன் அரசியல், கலாசாரத் தாக்கம் என்னவாக இருக்கும் என்பதைப்பற்றி இதுவரை ஆழமாக நாம் ஆய்வு செய்யவில்லை. ஈழப் படுகொலைக்கான தமிழக எதிர்வினையில் தொலைக்காட்சியின் பங்கு கணிசமானது. முள்ளிவாய்க்காலை நினைவுகூரும் இந்த நேரத்தில் அதில் இருந்து நாம் கற்றுக்கொண்ட பாடம் என்ன? முப்படைகளை வைத்திருந்த ராணுவ வலிமைகொண்ட ஓர் இயக்கம்; உலகின் மிகப் பெரிய ராணுவங்களில் ஒன்றான இந்திய ராணுவத்தையே எதிர்கொண்ட ஒரு தலைமை; ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான அதன் சொத்து - அது தந்த பொருளாதார பலம்; உயிரைக் கொடுப்பதற்கு அஞ்சாத போராளிகள் - இப்படி சாகசத்துக்கு எல்லாவிதத்திலும் பொருத்தமாக இருந்த ஒரு சூழல். இதனால், 'அவர்களை வெல்ல முடியாது' என்று அறைகூவல் விடுத்தோம். ஆனால், நம்ப முடியாத அளவுக்கு அந்தக் காட்சி சடசடவென சரிந்தது. அது எப்படி நடந்தது என்பதை நாம் ஆராய வேண்டும். உலக வல்லரசுகள் ஒன்றுசேர்ந்து கொண்டு ராஜபக்ஷேவின் அரசை ஆதரித்தன. இந்தியப் பேரரசு தமிழர்களுக்கு எதிராக இருந்தது; தமிழக ஆட்சியாளர்கள் நாம் எதிர்பார்த்த அளவுக்குப் போராடவில்லை. இப்படியாகப் பல்வேறு எளிமையான காரணங்கள் இப்போது கூறப்படுகின்றன. ஆனால், இவை எல்லாவற்றுக்கும் மேலான காரணங்களும் இருக்கின்றன. 'அரசியல் முதன்மை பெறாத ஆயுதப் போராட்டம் வெற்றியடையாது' என்ற சாதாரண உண்மையை ஈழம் நமக்கு மீண்டும் உணர்த்துகிறது. விடுதலைப் புலிகள் ஆயுத வளங்களைச் சேர்ப்பதற்குக் காட்டிய அக்கறையை, அறிவாளிகளைச் சேர்ப்பதில் காட்டவில்லை. அது மட்டுமின்றி, அவர்கள் உருவாக்கிய போர்ச் சூழல் எல்லோரையும் சந்தேகிக்கிற நிலைக்குக் கொண்டுபோனது. சிந்திப்பது என்பதே அங்கே துரோகத்தின் ஒரு வடிவமாகக் கருதப்பட்டது. சிந்தனையாளர்கள் கொல்லப்பட்டனர்... அல்லது, மௌனமாக்கப்பட்டனர். கடந்த 25 ஆண்டுகளாக முறையான கல்வி பெற முடியாத இனமாக ஈழத் தமிழினம் மாற்றப்பட்டது. ஒரு காலத்தில் அவர்கள்தான் தமிழ்க் கருத்தியலுக்கு முன்னோடியாக இருந்தனர். கைலாசபதியோ, தளைய சிங்கமோ, டானியலோ, தமிழ்நாட்டின் முற்போக்கு, நற்போக்கு, தலித் இலக்கிய முயற்சிகளுக்கு அவர்கள்தான் பாதை அமைத்தவர்கள். ஆனால், இன்று ஈழத் தமிழரின் நிலை என்ன? உலக நாடுகளில் எதிரிகளாகத் தஞ்சம் புகுந்துள்ள ஈழத் தமிழர்களை அந்தந்த நாடுகள் குற்றவாளிகள்போலவே நடத்துகிறார்கள். முள்ளிவாய்க்காலை நினைவு கூரும் இந்த நேரத்தில் சிலவற்றை நாம் திட்டமிட்டால் நல்லது. இப்போது இலங்கையில் தமிழர் வாழ்ந்த பகுதிகளில் மீண்டும் மக்கள் குடியேற ஆரம்பித்துள்ளனர். அங்கே மறு கட்டுமான நடவடிக்கைகளைச் செய்ய பெருமளவில் ஆட்கள் தேவைப்படுகின்றனர். போரால் அலைக்கழிக்கப்பட்ட தமிழர்கள் எந்தத் திறனையும் கற்றுக்கொள்ளவில்லை. அவர்களுக்கு உடனடியாகத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை (Skill Development) அளிக்க வேண்டியது அவசியம். முறைசாராக் கல்வி மூலமாக அவர்களுக்கு உடனடியாகக் கல்வி வழங்கப்பட வேண்டும். ஐந்து அல்லது 10 ஆண்டுகள் என காலக்கெடு விதித்துக்கொண்டு பெருமளவிலான கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்பட வேண்டும். பதுங்கு குழிகளில் படித்த மாணவர்களுக்கு நல்ல வகுப்பறைகள் அவசியம். போரால் சிதைந்த பள்ளிகளைப் புனர் நிர்மாணம் செய்வதோடு புதிய பள்ளிகளைத் திறக்க வேண்டும். போரால் விதவைகளாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பெண்களின் மறுவாழ்வுக்கு உடனடியான திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். பல ஊர்களில் ஆண்களே இல்லை என்ற நிலை உள்ளது. அங்கு பெண்கள் சேர்ந்து சிறு தொழிற்கூடங்களை அமைக்கப் பயிற்சியும் மூல வளங்களும் வழங்கப்பட வேண்டும். அவர்களது மறுவாழ்வுக்கான நியாயத்தை உணர்த்துமாறு மனோவியல் சார்ந்த 'கவுன்சலிங்' செய்யப்பட வேண்டும். போரால் ஊனமாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கான சிறப்பு இல்லங்கள், பள்ளிகள் உருவாக்கப்பட வேண்டும். தற்போதைய நவீன மருத்துவ முறைகளைப் பயன்படுத்தி அவர்களது ஊனத்தின் தாக்கத்தைக் களைய வேண்டும். ஈழத்தின் இயற்கை வளங்களையும், விவசாயத்தையும், மீன் பிடித் தொழிலையும் புத்துயிர்ப்புப் பெற வைப்பதற்கான அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். சர்வதேசங்களில் இருக்கும் ஈழத் தமிழர்கள் தமது அரசியல் உரிமைகள் மீட்கப்படுவதின் அவசியத்தை வலியுறுத்தி சர்வதேச மன்றங்களில் 'லாபி' செய்ய வேண்டியது மிகவும் முக்கியம். அதைப்போலவே, 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு போர்க் குற்ற விசாரணை மேற்கொள்ள வலியுறுத்த வேண்டியதும் அவசியம். தற்போது, ஈழத் தமிழர்களின் ஒரு பிரிவினர் மேற்கொண்டு இருக்கும் 'நாடு கடந்த தமிழீழ அரசு' எவ்வாறு உருவெடுக்கும் என்பது இனிமேல்தான் தெரியும். அது எந்த அளவுக்கு வெற்றி பெறப் போகிறது என்பதைவிடவும், அது எத்தகைய பணிகளை ஆற்றப்போகிறது என்பதே கவனிக்க வேண்டியதாகும். தமிழ் இனத்துக்கு ஏற்பட்டுள்ள இந்த மாபெரும் துயரம் தமிழ்நாட்டில் உள்ள அறிவுஜீவிகளைப் பாதித்ததாகவே தெரியவில்லை. அதற்கு அவர்கள் மட்டுமே காரணமல்ல. இங்கு ஈழப் பிரச்னையைப் பேசியவர்கள் அதை ஓர் அரசியல் பிரச்னையாக மட்டுமே குறுக்கிவிட்டனர். அதன் பண்பாட்டுப் பரிமாணத்தைக் கவனிக்கத் தவறிவிட்டனர். அந்தத் தவறு களையப்பட வேண்டும். இங்கு அந்தப் பிரச்னையில் கரிசனம்கொண்ட அனைவரும் ஒன்றிணைந்து இயங்க வேண்டிய நெருக்கடியான காலம் இது. அதைப் புரிந்துகொண்டு செயல்பட அறிவுஜீவிகளும் முன்வர வேண்டும். 80-களில் வெளி வந்த ஈழத் தமிழ் இலக்கிய நூல்களை மறுபதிப்புச் செய்து மீண்டும் அறிவுத் தளத்தில் ஈழத் தமிழரின் நியாயங்களை எடுத்துச் சொல்ல வேண்டிய தேவை உள்ளது. இதை நமது படைப்பாளிகளும் பதிப்பாளர்களும் முன்னெடுத்துச் செய்யலாம். முள்ளிவாய்க்கால் பேரவலத்தைப் பேசும்போது அதை நமது அரசியல் சுயலாபத்துக்காகப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டியது மிக மிக அவசியம். நாமும் மனிதர்கள்தான், நம்மிடமும் கொஞ்சம் மனிதாபிமானம் உள்ளது என்பதை நிரூபிக்க இது ஒரு சந்தர்ப்பம். இப்போதாவது நாம் செயல்படுவோமா?
கடலோடு போனவர்கள்
எல்லோரதும் தெளிவான, திருத்தமான தகவல்கள்
உலகப் பணிமனையின்
நிலத்தடி ஆவணக் காப்பகங்களுக்குப் போய்விட்டன.
எங்கள் எல்லோருடைய ஒற்றைப் புதைகுழி மீது
படைத் தளபதியின் கோவணத்தை
தேசியக் கொடியாக ஏற்றுகிறார்கள்...''
முள்ளிவாய்க்கால்-நமக்கு உணர்த்தும் பாடம் என்ன?
Subscribe to:
Post Comments (Atom)
!-end>!-local>
Labels
- Books (9)
- Camera (4)
- car (4)
- Cinema (44)
- Computer (20)
- Ilayaraya Hits (1)
- India (2)
- Janahi Hits (1)
- Mcse (1)
- Mobile (3)
- Motorcycle (1)
- Mp3s (10)
- music (1)
- News (30)
- Nithiyanantha (5)
- Spb Hits (1)
- Tamil (4)
1 comments:
முள்ளிவாய்க்கால் நமக்கு உணர்த்துவது ஆயுதம் அழிவை தரும். இறுதியில் மௌனிக்க வைக்கபட்ட ஆயுதங்களை முதலே நிறுத்தியிருக்கலாம்.
Post a Comment