சிரித்துக்கொண்டே இறப்பீர்களா?-I Love Me சொல்லி காதலில் ஜெயிக்க சில டிப்ஸ்-

09 May 2010 ·

ம்ஸ்கிருதத்தில் இப்படிச் சொல்வார்கள்... 'நீ அழுதுகொண்டே பிறந்தபோது, உன்னைச் சுற்றி இருப்பவர்கள் சந்தோஷமாகச் சிரித்திருப்பார்கள். ஆனால், இறக்கும்போது நீ சந்தோஷமாகக் கண் மூட வேண்டும். அப்போது உன்னைச் சுற்றி இருப்பவர்கள் உன் பிரிவால் கண்ணீர் சிந்த வேண்டும். இதுதான் வாழ்க்கையின் இலக்கணம்!'

மரணப் படுக்கையில் இருந்த ஜார்ஜ் பெர்னாட்ஷாவிடம், 'நீங்கள் மீண்டும் உங்கள் வாழ்நாளைக் கழிக்க முடியும் என்றால், அதனை எப்படிக் கழிப்பீர்கள்?' என்று கேட்டார்கள். நீண்ட பெருமூச்சுடன் பெர்னாட்ஷா இப்படிப் பதிலளித்தார், 'இப்படி எல்லாம் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டு, எப்படி எல்லாம் வாழாமல் இருந்தேனோ... அப்படி எல்லாம் வாழ்வேன்!'

சம்ஸ்கிருத வாக்கியத்துக்கும் பெர்னாட்ஷாவின் கூற்றுக்கும் இடையே ஏதோ ஓர் ஒற்றுமை இழை ஒளிந்திருக்கிறது. அது என்னவென்று கண்டுகொண்டால்... அதுதான் வாழ்க்கைக்கான மந்திரம். இந்தப் பயிற்சி கஷ்டமாக இருந்தால், உங்கள் இறப்புக்கு யாரெல்லாம் அழுவார்கள் என்று யோசித்துப்பாருங்கள். ஒற்றைப் படையில் எண்ணிக்கை இருந்தால்... நீங்கள் இதுவரை வாழ்ந்த வாழ்க்கையில் எதையோ மிஸ் செய்திருக்கிறீர்கள் என்று அர்த்தம். வாருங்கள் அந்த எண்ணிக்கையை அதிகரிப்போம் என்று அழைக்கிறார் ராபின் ஷர்மா. 'The monk who sold his ferrari' என்ற ஒற்றைப் புத்தகத்தின் மூலம் தன்னம்பிக்கை குரு அந்தஸ்து எட்டியவர் இவர். 'who will cry when you die?' என்ற புத்தகத்தின் மூலம் 101 வழிகளில் உங்களை இனிமையானவர் ஆக்கிக்கொள்ள வழி சொல்கிறார் ராபின் ஷர்மா.

'ஐ லவ் மீ' சொல்லத் தைரியம் இருக்கிறதா?

நமக்குப் பிடிக்காத செயலாக இருந்தாலும், அதற்கென நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவில் அதை சிறப்பாகச் செய்துமுடிக்கும் வல்லமையைக் கற்றுக்கொடுப்பதுதான் எந்த ஒரு கல்வியின் சிறப்பம்சமாக இருக்க வேண்டும். 'படிக்காத மேதை' என்று போற்றப்படுவர்களிடம் இந்தத் தகுதி தவறாமல் குடிகொண்டு இருக்கும். ஒரே வரியில் சொன்னால், 'சுய ஒழுக்கம்' என்ற ஒற்றைத் தகுதி உங்களிடம் இருக்கிறதா?நினைத்ததை நினைத்த நேரத்தில் முடிப்பது, மற்றவர்களிடம் இனிமையாகப் பழகுவது, துல்லியமான, தெளிவான இலக்குகளை நிர்ணயித்துச் செயல்படுவது, உங்கள் ஆரோக்கியத்தைப் பேணுவது போன்றவை சுய ஒழுக்கம் இல்லாமல் சாத்தியமாகாது. வேதனை தரும் என்றாலும் சில செயல்களைச் செய்யத் தயங்காததால்தான், சாதனையாளர்கள் என்ற பட்டம் சுமக்கிறார்கள் சிலர். தயங்குபவர்கள் பின்தங்கித் தேங்கிவிடுகிறார்கள். அழகைத் தாண்டி சில பிரத்யேக குணங்கள் தான் ஓர் ஆண்/பெண் மீது காதல்கொள்ள நம்மைத் தூண்டும். அதேபோல 'சுய ஒழுக்கம்' என்ற ஒற்றைத் தகுதிதான் நம் மீது நமக்குக் காதல் தூண்டும். 'ஐ லவ் மீ' சொல்லும் தைரியம் இருக்கிறதா உங்களுக்கு?

சூரியனாக ஜொலிக்க ஆசையா?

யாருக்குத்தான் இந்த உலகில் சூரியனாக ஜொலிக்க ஆசை இருக்காது. அதற்கு அடிப்படை முதல் காரியமாக நீங்கள் செய்ய வேண்டியது... சூரியனோடு சேர்ந்து எழுவது. சூரியன் தோன்றிய காலந்தொட்டு கடைபிடிக்கச் சொல்லப்படும் பழக்கம்தான் என்றாலும், சூரியன் இருக்கும் வரை ஸ்கோர் செய்ய உதவும் பழக்கம். அதிகாலை ஐந்து மணியில் இருந்து எட்டு மணி வரை சுற்றுப்புறத்தில் நிலவும் ஓர் அமைதி, ஒரு நாளின் மற்ற எந்த நேரத்திலும் கிடைக்காது. மகாத்மா காந்தி, தாமஸ் ஆல்வா எடிசன், நெல்சன் மண்டேலா போன்றவர்கள் சூரியனோடு சேர்ந்து எழுந்தவர்கள். சூரியனாக ஜொலித்தவர்கள். அந்த அந்தஸ்தை எட்ட ஆசைப்படுபவர்களுக்கு சில சிம்பிள் டிப்ஸ்...

எட்டு மணிக்கு மேல் உணவு உட்கொள்ளாதீர்கள்.

உறங்கச் செல்வதற்கு முன் செய்தி சேனல்களைப் பார்க்காதீர்கள்.

படுக்கையில் படுத்துக்கொண்டு படிக்காதீர்கள்.

படுக்கையில் இருக்கும்போது மறுநாள் அலுவல் களைப்பற்றிய முன்னோட்டம் ஓட்டாதீர்கள்.

ஐந்து மணிக்கெல்லாம் எழுந்துகொள்ள ஆரம்ப நாட்களில் ரொம்பவே கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால், எது ஒன்று கஷ்டமாக இருக்கிறதோ, அதுதான் அதிகப் பலன் அளிக்கும் என்பதை உணர்ந்தவர்தானே நீங்கள்?

மூன்று வாசல் சோதனைகள்?

'எவராலும் எவர் மீதும் கோபம்கொள்ள முடியும். ஆனால், சரியான நபர் மீது சரியான விகிதத்தில், தக்க தருணத்தில், கச்சிதமான காரணத்துக்காகக் கோபம்கொள்வது ஒரு கலை!' என்கிறார் அரிஸ்டாட்டில்.

இத்தனை சங்கதிகளை உங்களால் கவனத்தில் வைத்துக்கொண்டு கோபம்கொள்ள முடியவில்லை என்றால், இன்னொரு ஐடியா இருக்கிறது. புத்த பிட்சு கள் எப்போதும் அமைதியாகத்தான் இருப்பார்கள். அவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் மூன்று வாசல்களைக் கடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். 'அந்த வார்த்தைகள் உண்மையானவைதானா?' என்பது முதல் வாசல் கேள்வி. இந்தக் கேள்விக்குப் பதில் 'ஆம்' என்றால்தான், அடுத்த வாசலுக்குச் செல்ல முடியும். இரண்டாவது வாசலில், 'இந்த வார்த்தைகள் அவசியம்தானா?' என்பது கேள்வி. அந்தக் கேள்வியையும் கடந்த பிறகு 'அந்த வார்த்தைகள் கனிவானவையா?' என்பது மூன்றாவது வாசல் கேள்வி. இந்த மூன்று வாசல்களையும் கடந்து வெளிவரும் வார்த்தைகளை மட்டும்தான் அவர்கள் உச்சரிப்பார்கள். நாம் அனைத்து வார்த்தைகளுக்கும் இல்லாவிட்டாலும், கோபத்தில் உதிர்க்கும் வார்த்தைகளையேனும் இந்த மூன்று வாசல் கள் வழி அனுப்பலாமே!

ஒளிவுமறைவு இல்லாத உண்மை!

ஒரே ஒரு விஷயம் மட்டும் உண்மை... உலகத்தையே அடக்கியாளப் புறப்பட்ட பேரரசன் நெப்போலியனாக இருந்தாலும் சரி... ஒண்டுக் குடித்தன வீட்டில் மூன்றாவது பெண்ணைக் கட்டிக்கொடுக்க முடியாமல் தவித்த நாகராஜனாக இருந்தாலும் சரி... அவர்களது மரணப் படுக்கை மனநிலை என்பது ஒன்றாகத்தான் இருந்திருக்கும்! 'இன்னும் கொஞ்சம் ரிஸ்க் எடுத்திருந்தால் வாட்டர்லு போரில் வெற்றி பெற்றிருக்கலாம்' என்று நெப்போலியனும், 'பயப்படாம அந்த சீட்டுப் பணத்தை வாங்கியிருந்தா மூணாவது மகளுக்கும் கல்யாணம் பண்ணியிருக்கலாம்!' என்று நாகராஜனும் வருந்திக்கொண்டு இருப்பார்கள். 'அந்த ரிஸ்க்' உங்கள் வாழ்க்கையில் எந்தச் சமயத்தில் உங்களை எதிர்கொள்கிறது என்பதைக் கணிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

நீங்கள் மிக வசதியாக இருப்பதாக உணர்ந்தால், அடுத்த கட்டத்துக்கான பயணத்தைத் துவங்க வேண்டிய சமயம் அது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இந்த வசதியை எட்டுவதற்கு முன் நீங்கள் எதிர்கொண்ட சிரமங்களை எண்ணிப்பாருங்கள். அடுத்தகட்டச் சோதனைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்!

1 comments:

கே.ஆர்.பி.செந்தில் said...
May 9, 2010 at 7:08 PM  

நீங்கள் படித்த நல்ல புத்தகங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்,

நல்ல பகிர்வு, அதிகாலை நான்கு மணிக்கு எழும் அனுபவங்கள் அற்புதம், இப்போது நான் இரவில் வேலை பார்ப்பதால் அதிகாலைதான் தூங்கப் போகிறேன்

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)
There was an error in this gadget

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil