ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் 27 வீரர்களுக்கு தொடர்பு

24 April 2010 ·

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் 27 வீரர்களுக்கு தொடர்பு


ஐ.பி.எல். என்று அழைக்கப்படும் `இந்தியன் பிரீமியர் லீக்' அமைப்பு சார்பில், 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே இரண்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், தற்போது நடைபெற்றுவரும் 3-வது ஐ.பி.எல். போட்டி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து இருப்பது போல், போட்டிகளை நடத்தி வரும் ஐ.பி.எல். அமைப்பின் ஊழல் குறித்தும் கடந்த சில நாட்களாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தனது காஷ்மீர் காதலி சுனந்தா புஷ்கருக்காக கொச்சி அணியில் ரூ.70 கோடிக்கு இலவச பங்குகளை பெற்று கொடுத்த விவகாரத்தில் வெளியுறவு துறை ராஜாங்க மந்திரி சசிதரூர் சமீபத்தில் பதவி இழந்தார். அதைத் தொடர்ந்து நாளுக்கு நாள் ஐ.பி.எல். விவகாரம் விசுவரூபம் எடுத்து வருகிறது. சசிதரூர் விவகாரத்தை அம்பலப்படுத்திய ஐ.பி.எல். அமைப்பின் தலைவர் லலித் மோடிக்கு எதிராகவும் பரபரப்பான ஊழல் புகார்கள் கூறப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக லலித்மோடியை ஐ.பி.எல். தலைவர் பதவியில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சசிதரூர் மந்திரி பதவி விலகியதை தொடர்ந்து, ஐ.பி.எல். விவகாரம் பற்றி வருமான வரித்துறையினர் விரிவான விசாரணை நடத்தி வருகிறார்கள். அதன்பிறகு 11 பக்கங்களை கொண்ட அறிக்கை ஒன்றை வருமான வரி துறை அதிகாரிகள் மத்திய அரசிடம் சமர்ப்பித்து உள்ளனர்.

அந்த அறிக்கையின் ஒரு பக்கத்தில் ஐ.பி.எல். போட்டிகளில் கிரிக்கெட் சூதாட்டம் நடைபெற்ற பரபரப்பான தகவலும் இடம் பெற்றுள்ளது. ஆனால், வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த தகவலை அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை. விசாரணை குழுவில் இடம்பெற்றுள்ள உயர் அதிகாரி ஒருவர்தான் தனது பெயரை குறிப்பிடாமல் இந்த தகவலை வெளியிட்டு இருக்கிறார்.

அதன்படி, கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற 2-வது ஐ.பி.எல். போட்டியில், பெரிய அளவில் இந்த சூதாட்டம் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஐ.பி.எல். அணிகளில் இடம் பெற்றுள்ள முன்னணி இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்கள் உள்பட 27 வீரர்களுக்கு கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்பு இருந்த தகவலும் தெரிய வந்துள்ளது.

ஆனால், அந்த வீரர்களின் பெயர் விவரத்தை அந்த அதிகாரி தெரிவிக்கவில்லை. ஐ.பி.எல். அணி ஒன்றின் கேப்டனாக இருக்கும் சர்வதேச வீரர் ஒருவரும் சூதாட்ட புகாரில் சிக்கி இருக்கிறார்.

பல்வேறு அணிகளில் இடம் பெற்றுள்ள சீனியர் வீரர்கள் ஜுனியர் வீரர்களை மனம் மாறச்செய்து `சொதப்பல்' ஆட்டங்கள் மூலம் அணியின் வெற்றி தோல்வியை மாற்றி அமைத்து இருக்கிறார்கள். இந்த மோசடியை உறுதிப்படுத்துவதற்காக, கிரிக்கெட் வீரர்களின் செல்போன் பேச்சுகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil