ஐ.பி.எல். கிரிக்கெட் பிரச்சினையில் மேலும் 2 மந்திரிகள் மீது புகார் - பிரதமர் மன்மோகன்சிங் அவசர ஆலோசனை

23 April 2010 ·

ஐ.பி.எல். கிரிக்கெட் பிரச்சினையில் மேலும் 2 மந்திரிகள் மீது புகார் - பிரதமர் மன்மோகன்சிங் அவசர ஆலோசனை


ஐ.பி.எல். கிரிக்கெட் ஊழல் தொடர் பாக தேசியவாத காங்கிரசை சேர்ந்த மத்திய மந்திரிகளான சரத்பவார், பிரபுல் படேல் ஆகியோர் மீது புகார் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து பிரதமர் மன்மோகன்சிங் அவசர ஆலோசனை நடத்தினார்.

ஐ.பி.எல். அமைப்பில் புதிதாக கொச்சி அணியை உருவாக்கிய விவகாரத்தில் சிக்கியதால் மத்திய மந்திரி பதவியில் இருந்து சசிதரூர் நீக்கப்பட்டார்.

அதன் தொடர்ச்சியாக, ஐ.பி.எல். தலைவர் லலித்மோடி மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டதால், நெருக்கடியில் லலித்மோடி இருக்கிறார்.

இந்த சூழ்நிலையில், கூட்டணி கட்சியை சேர்ந்த இரண்டு மந்திரிகளும் ஐ.பி.எல். சிக்கலில் மாட்டியுள்ளனர். மத்திய மந்திரிகளாக இருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் (விவசாயத்துறை மந்திரி) மற்றும் பொதுச் செயலாளர் பிரபுல் படேல் (சிவில் விமான போக்குவரத்து மந்திரி) ஆகியோர் மீது புதிய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இது தொடர்பான ஆதாரங்களை பிரதமர் மன்மோகன்சிங் சேகரித்து வருகிறார். நிதி மந்திரி பிரணாப் முகர்ஜியுடனும் ஆலோசனை நடத்தினார்.

ஐ.பி.எல். கொச்சி அணியை தனது காதலி சுனந்தாவுக்கு வாங்கிக் கொடுக்க, சசிதரூர் ஆர்வமாக இருந்தார். அப்போது, மற்ற ஏலதாரர்கள் சார்பில் அளிக்கப்பட்ட ஏலத் தொகை பற்றிய விவரங்களை சசிதரூருக்கு மத்திய மந்திரி பிரபுல் படேல் அளித்துள்ளார்.
தனது மகளும், ஐ.பி.எல். மேனேஜர்களில் ஒருவருமான பூர்ணா மூலமாக சசிதரூருக்கு இ-மெயில் அனுப்பினார். ஏலத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன், இந்த இ-மெயில் அனுப்பப்பட்டது.

எனவே, மற்ற நிறுவனங்களை விட அதிக தொகையை, சுனந்தாவை பங்குதாரராக கொண்ட ரெண்டாவஸ் நிறுவனம் அளித்து கொச்சி அணியை ஏலத்தில் எடுத்தது. இந்திய கிரிக்கெட் வாரியத்தில் சக்தி வாய்ந்த தலைவர்களாக சரத்பவார் மற்றும் பிரபுல் படேல் ஆகியோர் இருப்பது குறிப்பிடத்தக்கது. அடிப்படையில் தொழில் அதிபரான பிரபுல் படேல், மிகப்பெரிய கோடீஸ்வரர்.

இதுபோல, ஐ.பி.எல். போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை பெற்றுள்ள `மல்டி ஸ்கிரீன் மீடியா` (சோனி குழுமம்) நிறுவனத்தில் சரத்பவாரின் மருமகன் சதானந் சுலே பங்குதாரராக இருக்கிறார். தனது மருமகன் பங்குதாரராக உள்ள நிறுவனத்துக்கு ஒளிபரப்பு உரிமை கிடைக்கச் செய்வதில் சரத்பவார் துணையாக இருந்துள்ளார். சரத்பவாரின் மகளும், எம்.பி.யுமான சுப்ரியா சுலேவின் கணவர்தான் சதானந்சுலே ஆவார்.

பத்திரிகை மற்றும் டி.வி. மூலமாக வெளியாகி உள்ள இந்த தகவல்களை பற்றி அறிந்ததும், சரத்பவார் மற்றும் பிரபுல் படேல் இருவருடைய ஐ.பி.எல். முறைகேடு குறித்த முழு விவரங்களையும் சேகரித்து அளிக்குமாறு பிரதமர் மன்மோகன்சிங் கேட்டார்.

இதைத் தொடர்ந்து சரத்பவார், சதானந் சுலே, பிரபுல் படேல், பூர்ணா ஆகியோரை பற்றிய முழு விவரங்களையும் பிரதமரிடம் நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி அளித்துள்ளார். அதன் அடிப்படையில், மன்மோகன்சிங் விசாரணை நடத்தி வருகிறார். பிரதமரிடம் தெரிவித்த தகவல்களை காங்கிரஸ் தலைவர் சோனியாவிடமும் பிரணாப் முகர்ஜி விளக்கி கூறினார்.


இத்தகைய பரபரப்பான குற்றச்சாட்டுகளுக்கு இடையே, பாராளுமன்றத்துக்கு சசிதரூரும், பிரபுல் படேலும் நேற்று வந்தனர். மத்திய மந்திரியான பிரபுல் படேல், ஆளும் தரப்பில் பின் வரிசைக்கு சென்று அமர்ந்தார்.

உடனே, சசிதரூரும் அவருக்கு அருகே வந்து அமர்ந்தார். பின்னர், இருவரும் 15 நிமிடங்களுக்கு மேல் தனியாக பேசிக்கொண்டு இருந்தனர். அதன் பிறகு, இருவரும் ஒருவர் பின் ஒருவராக வெளியேறினர்.

இதற்கிடையே, சரத்பவார் மற்றும் பிரபுல் படேல் மீதான குற்றச்சாட்டுகளை தேசியவாத காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. கட்சியின் செய்தி தொடர்பாளர் திரிபாதி கூறுகையில், `ஐ.பி.எல். விவகாரத்தில், எங்கள் கட்சியை சேர்ந்த தலைவர்கள் எந்த தவறான செயலிலும் ஈடுபடவில்லை. ஐ.பி.எல். ஏலத்தில் முன்னாள் மத்திய மந்திரி சசிதரூக்கு எந்த தகவலையும் பிரபுல் படேல் அளிக்கவில்லை. சரத்பவாரின் மருமகனுக்கு அந்த நிறுவனத்தில் எந்த பங்கும் கிடையாது. எனவே, எந்த விசாரணைக்கும் தயாராக இருக்கிறோம்` என கூறினார்.

மேலும், இந்த பிரச்சினை தொடர்பாக சரத்பவார் மற்றும் பிரபுல் படேல் இருவரும் மத்திய மந்திரி பதவியில் இருந்து விலகும் பேச்சுக்கே இடமில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதுபோல, சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே எம்.பி., கூறுகையில், "ஒளிபரப்பு உரிமையில் பங்கு இருப்பதாக எங்களுடைய பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் செய்தியை பரப்புவோர் மீது அவதூறு வழக்கு தொடர இருக்கிறோம். இது குறித்து வக்கீல்களுடன் எனது கணவர் (சதானந்) ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த செயல்களின் பின்னணியில் காங்கிரஸ் இருப்பதாக கருதவில்லை. அது, எங்களுடைய கூட்டணி கட்சி. நாட்டுக்கு சேவை செய்வதற்காக நாங்கள் இணைந்து செயல்படுகிறோம். கொச்சி அணி ஏல விவரங்களை சசிதரூருக்கு பிரபுல் படேல் அனுப்பி இருக்க மாட்டார். அவை, மிகவும் ரகசிய ஆவணங்கள் என்பதால் அடுத்தவருக்கு தெரிவிக்க முடியாது`` என்றார்.

அதே நேரத்தில், தீவிர கிரிக்கெட் ரசிகர்கள் என்பதை தவிர வேறு எந்த தொடர்பும் எனக்கோ, எனது கணவருக்கோ கிடையாது என நேற்று முன்தினம் சுப்ரியா கூறியிருந்தார்.

ஆனால், நேற்று பேட்டியளித்தபோது, ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமையை பெற்றுள்ள மல்டி ஸ்கிரீன் மீடியா நிறுவனத்தில் தனது கணவருக்கு 10 சதவீத பங்குகள் இருப்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil