பிரபுல் படேல் மகளுக்காக ரத்து செய்யப்பட்ட ஏர் இந்தியா விமானம்

23 April 2010 ·

பிரபுல் படேல் மகளுக்காக ரத்து செய்யப்பட்ட ஏர் இந்தியா விமானம்

மும்பை: டெல்லி – கோயம்பத்தூர் இடையிலான ஏர் இந்தியா விமானம், சண்டிகரிலிருந்து சென்னைக்கு மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரபுல் படேலின் மகள் பூர்ணா படேல் மற்றும் சில வீரர்களை அழைத்து வருவதற்காக கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டு சார்ட்டர்ட் விமானமாக திருப்பி விடப்பட்டது தெரிய வந்துள்ளது.

இந்த நடவடிக்கையில் விமானப்போக்குவரத்து விதிமுறைகள் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளனவாம்.

ஏப்ரல் 20ம் தேதி காலை 5.20 மணிக்கு டெல்லியிலிருந்து கோவை செல்லவிருந்தது ஐசி 7603 ஏர் இந்தியா விமானம். ஆனால் சண்டிகரிலிருந்து பூர்ணாவையும், சில வீரர்களையும், சென்னைக்கு அழைத்துச் செல்வதற்காக இந்த விமானத்தை திடீரென ரத்து செய்து விட்டனர். பின்னர் பூர்ணா உள்ளிட்டோரை அழைத்து வருவதற்காக விமானத்தை சண்டிகருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த விமானத்தில் பயணம் செய்யவிருந்த பயணிகளை இன்னொரு விமானத்தில் போட்டு அனுப்பி வைத்துள்ளனர். ஒரு பயணிகள் விமானத்தை ரத்து செய்து விட்டு அதை வாடகை விமானமாக அனுப்ப அனுமதி கிடையாது. ஆனால் பூர்ணா விஷயத்தில் இந்த விதிமுறை காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது. அதாவது அவரது தந்தை பிரபுல் படேல் விமானப் போக்குவரத்து அமைச்சராக இருப்பதால் அதைப் பயன்படுத்தி முறைகேடாக பயணிகள் விமானத்தை ரத்து செய்து வாடகை விமானமாக திருப்பி விட்டுள்ளனர்.

இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், திங்கள்கிழமை மாலை பூர்ணா படேல், விமான நிறுவனத்திற்குப் போன் செய்து, சண்டிகரிலிருந்து சென்னைக்கு ஒரு சார்ட்டர்ட் விமானம் தேவை என்று கேட்டார். இதையடுத்து டெல்லி- கோவை விமானம் ரத்து செய்யப்பட்டு அது சார்ட்டர்ட் விமானமாக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விமானத்துக்கான கட்டணத்தை ஐபிஎல் நிறுவனம் செலுத்தியது. இருப்பினும் பயணிகள் விமானத்தை ரத்து செய்து விட்டு சார்டட்ட் விமானமாக அனுப்பியது அப்பட்டனமான விதி மீறலாகும் என்றார்.

இதுகுறித்து பிரபுல் படேலிடமிருந்து கருத்து ஏதும் இல்லை. சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சக செய்தித் தொடர்பாளரோ, இதுகுறித்து நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறி விட்டார்.

ஏர் இந்தியா நிறுவன செய்தித் தொடர்பாளர் பயணிகள் விமானம் சார்ட்டர்ட் விமானமாக மாற்றப்பட்டது உண்மைதா என்று மட்டும் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், பயணிகள் விமானத்தை சார்ட்டர்ட் விமானமாக மாற்ற முடிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து திங்கள்கிழமை இரவு 7.20 மணிக்கு எங்களது கால் சென்டருக்கு தகவல் கொடுத்தோம். அவர்கள், ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்கவிருந்த பயணிகளுக்கு அவர்கள் அனைவரும் டெல்லி – மும்பை – கோவை விமானத்தில் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவித்தனர்.

இதையடுத்து ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்கவிருந்த 75 பயணிகளும் மும்பை- டெல்லி- கோவை விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர் என்றார்.

இந்தக் குழப்பம் காரணமாக ஏர் இந்தியாவில் பயணிக்க வேண்டிய பயணிகள் முற்பகல் 11.45 மணிக்கு கோவை போய்ச் சேர்ந்தனராம்.

இந்த விவகாரம் குறித்து சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இயக்குநர் நசீம் ஜைதி கூறுகையில், சார்ட்டர்ட் விமானமாக மாற்றுவதற்கு முன்பு அதற்குரிய அனுமதி பெறுவது தேவையில்லை. அதேசமயம், விதி மீறல் இருந்தால் அதில் இயக்குநரகம் தலையிடும் என்றார்.

ஆனால் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என விமான பயணிகள் சங்கத் தலைவர் சுதாகர ரெட்டி கோரிக்கை விடுத்துள்ளார். அதிகாரம் இதில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. பயணிகள் பெரும் அசவுகரியத்தை சந்தித்துள்ளனர். இதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்றார்.

பிரபுல் படேலின் மகளுக்காக பயணிகள் பயணிக்கவிருந்த விமானத்தை ரத்து செய்து விதிகளை அப்பட்டமாக மீறியுள்ள செயல் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites