மெள்ள மெள்ள கொல்லப் பார்க்கிறார்கள்!

24 April 2010 ·

ஓயாத நளினி விவகாரம்!
மெள்ள மெள்ள கொல்லப் பார்க்கிறார்கள்!

சிறையிலிருந்து விடுதலை கிடைத்துவிடும் என்று நம்பிக்கொண்டிருந்த நளினிக்கு, சிக்கல்தான் கூடிப் போய்விட்டது!

ராஜீவ் கொலை வழக்கில் வேலூர் பெண்கள் தனி சிறையில் 19 வருடங்களாக தண்டனை அனுபவித்து வரும் நளினி, தன்னை விடு தலை செய்ய வேண்டும் என்று போராடி வந்தார். இது தொடர்பாக அமைக் கப்பட்ட அறிவுரை குழு சட்ட ஒழுங்கு என பல காரணங்களை எடுத்து வைத்த தால், தமிழக அரசு நளினியை விடு விக்க மறுத்துவிட்டது.

ஆனாலும், சட்டத்துக்குப் புறம்பாக தான் செயல்படவில்லை என்பதை நன்னடத்தை அதிகாரியே கொடுத்த சான்று மூலமாக வலியுறுத்தி, மீண்டும் சட்டரீதியான

போராட்டங்களில் நளினி இறங்க முற்பட... கடந்த 20-ம் தேதி அவர் மீது திடுக் குற்றச்சாட்டு பாய்ந்தது. சட்டத்துக்குப் புறம்பாக சிறைக்குள் அவர் செல்போனும், சிம்கார்டும் வைத்திருந்ததாகச் சொல்லி அவரது 'நன்னடத்தை' ஆயுதத்துக்கு வேட்டு வைத்திருக்கிறது சிறைத் தரப்பு. தற்போது நளினியை சிறையில் சந்தித்துவிட்டு வந்த அவரது வழக்கறிஞர் புகழேந்தியிடம் பேசினோம்.

''வழக்கமாக அனைத்து கைதிகளும் காலை ஆறு மணிக்கு சிறை அறையிலிருந்து வெளி யில் செல்ல அனுமதிக்கப்படுவர். ஆனால், செவ்வாயன்று காலை 10 மணி வரை எந்த கைதியையும் வெளியில் விடவே இல்லை. சிறை அதிகாரிகளும், கான்விக்ட் வார்டன்கள் சிலரும் நளினியின் அறைக்குள் சென்று சோதித்துவிட்டு வந்த சில மணி நேரத்தில் 'செல்போனும், சிம்கார்டும் கைப்பற்றினோம்' என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால், தன்னிடம் எந்த போனும் இல்லை என்றும், தனது அறையிலிருந்து எதையுமே எடுத்துச் செல்லவில்லை என்றும் அடித்துச் சொல்கிறார் நளினி.

இவ்விவகாரத்தில் அரசியல் பிளஸ் அதிகார விளையாட்டுகள் அடங்கி இருக்கின்றன. சமீபத்தில், தமிழகம் வந்த பிரபாகரனின் தாயார் திருப்பி அனுப்பப்பட்ட செய்தியை திசை திருப் பவே, நளினி மீது இப்படியரு திடீர் பழி சுமத்தப்பட்டிருக்கிறது. மேலும், கடந்த 18 வருடங்களில் சிறையில் சட்டத்துக்குப் புறம்பாக எந்த செயலும் செய்யவில்லை என்கிற நன்னடத்தையோடு இருக்கும் நளினி, அதன் மூலம் விடுதலையை எதிர்நோக்கியிருக்கும் வேளையில்... இப்படிப்பட்டதொரு பொய்யான நாடகம் நடந்திருக்கிறது.

சிறையில் இருக்கும் அவர் கடந்த பல ஆண்டுகளாகவே சிறைக் கைதிகளின் மனித உரிமைகளுக்கு ஆதரவாகப் போராடி வருகிறார். பெண் கைதிகளுக்கு மாதவிடாய் காலங்களில் சுகாதாரமற்ற நாப்கின்களை கொடுத்ததை எதிர்த்து, தரமான நாப்கின்களை பெற்று தந்தார். கடந்த வருடம் சாரதா என்கிற கைதியை கான்விக்ட் வார்டன்கள் சிலர் நிர்வாணப்படுத்தி அடித்து சித்ரவதைப்படுத்தியதை, நீதிமன்றம் மூலமாக உலகுக்குத் தெரியப்படுத்தி, உரிய இழப்பீடு வாங்கிக் கொடுத்தார் நளினி. அதில் சிறை அதிகாரிகள் மீது துறைரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கவும் வழி வகுத்தார்.

இதெல்லாம் ஒருபுறமிருக்க, கடந்த ஆறாம் தேதியும், 12-ம் தேதியும் கறிக்கோழியில் ஆரம்பித்து கஞ்சா விற்பனை வரை பெண்கள் சிறையில் நடக்கும் சட்ட விரோத செயல்களையும், அவற்றில் ஈடுபடும் பெண் அதிகாரி உதயகுமாரி உள்ளிட்ட பலர் குறித்தும் சிறைத் துறை ஏ.டி.ஜி.பி-க்கு இரண்டு கடிதங்களை எழுதி அனுப்பியிருக்கிறார். இதில் வெகுண்டுபோய், தப்பானவர்கள் ஒன்று சேர்ந்து அவரைக் கவிழ்க்க நேரம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இதற்கு சிறை அதிகாரிகளின் முழு ஒத்துழைப்பும் இருக்கிறது!'' என சொன்ன வழக்கறிஞர் புகழேந்தி... மேற்கொண்டு விவரித்ததுதான் பகீர் ரகம்.

''நளினியை கொஞ்சம் கொஞ்சமாக சித்ரவதை செய்து, மொத்தமாக சிறைக்குள்ளேயே கதையை முடிக்கும் திட்டத்தை புகாருக்குள்ளான சிறை ஊழியர்கள் சிலர் அரங்கேற்றி வருகிறார்கள். அவரது உறவினர்களால் கொடுக்கப்படும் பழங்களை அழுக வைத்துக் கொடுப்பது, சாப்பாட்டை கேவலமான இடத்தில் வைத்துவிட்டு, எடுத்துத் தருவது என்றெல்லாம் அவருடைய உடல் நலத்துக்கு கேடு விளைவித்து வருகிறார்கள். இன்னொரு புறம், அவருக்கு எதிராக மற்ற கைதிகளை தூண்டி விடுவது, அவருடைய உடைகளைக் கிழிப்பது, அவருடைய பொருட்களை நாசம் செய்வது என்று மனரீதியான தொல் லைகளையும் கொடுத்து வருகின்றனர். இதையெல்லாம் விரிவாகவே நளினி, ஏ.டி.ஜி.பி-க்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் அவருக்கு கொடுக் கப்படும் உணவில் ஏதாவது கலந்து கொடுத்து அவரது உயிருக்கு அபாயம் செய்து விடுவார்களோ என்கிற அச்சமும் எங்களுக்கு இருக்கிறது!'' என்றார் புகழேந்தி.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து பெண்கள் சிறை கண்காணிப்பாளரிடம் கேட்க முயற்சித்தபோது, ''நளினி யிடமிருந்து செல்போன் கைப்பற்றப்பட்டது குறித்து லோக்கல் ஸ்டேஷனில் புகார் எதுவும் கொடுக்கப் போவதில்லை. சிறைத் துறை விதிகளின்படி நாங்களே நடவடிக்கை எடுத்துக்கொள்வோம்!'' என்று மட்டும் சொன்னார்கள். அதன் பிறகு நளினியின் அறையில் சோதனையிடும்போது கிடைத்த செல்போனை மறைக்க அவர் முயற்சி செய்ததாகவும்... அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் அருகில் உள்ள பாகாயம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்கள்.

நளினி ஏற்கெனவே சிறைத் துறை உயரதிகாரிகளுக்கு எழுதி இருக்கும் கடிதத்தில், 'மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கும் இந்த சிறை, என்னை பொறுத்த வரை கல்லறை!' என்று வருத்ததுடன் குறிப்பிட்டிருக்கிறாராம்.

''உண்மையில் அவர் செல்போன் வைத்திருந்தாரா? சட்டமன்றத்தில் பேசப்பட்டது போல இரண்டு சிம்கார்டு கள் வைத்திருந்தாரா என்பதை உறுதிப்படுத்துவது ஒன்றும் கடினமானதல்ல! யாருடனெல்லாம் அதிலிருந்து யார் பேசினார்கள் என்பதை கண்டறிவதும் பெரிய காரியமல்ல! அதை ஆராய்ந்து உடனே நாட்டுக்குச் சொல்ல வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது! அப்போதுதான் யார் முகம் எப்படிப்பட்டது என்று மக்கள் ஒரு முடிவுக்கு வரமுடியும்!'' என்கிறார்கள் நடுநிலையான சிறை அதிகாரிகள்.

நடக்குமா இது?!

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil