கருணாநிதியின் உண்ணாவிரதத்தை நிறுத்தியது எவ்வாறு?: கோத்தபாய

30 April 2010 ·


தமிழகமுதலமைச்சர் கலைஞர் கருணாநிதி வன்னிச் சமரின் இறுதிக்கட்டத்தில் நடத்திய உண்ணாவிரதம் குறித்து ஏலவே பல்வேறு கருத்துக்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில், Indian Defence Review வில் வந்த செய்தியொன்றினை ஆதாரமாகச்சுட்டி, புதினப்பலகை இணையத்தளத்தில் எழுதப்பட்டிருக்கிறது. "புதினப் பலகை" இணையத்தளத்துக்கான நன்றிகளுடன் அக் கட்டுரையை இங்கு மீள்பதிவு செய்கின்றோம் - ஆகாயம்

உடனடி யுத்த நிறுத்தம் வேண்டி, தமிழக முதல்வர் கருணாநிதி கடந்த வருடம் மேற்கொண்ட உண்ணாவிரதத்தை இந்திய சிறிலங்கா அதிகாரிகள் எவ்வாறு ஒரு குழுவாக இணைந்து முறியடித்தனர் என்பதை சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் விரிவாக எடுத்துக் கூறியுள்ளார்.

Indian Defence Review இற்காக திரு சசிக்குமார் என்பவருக்கு அளித்த விரிவான செவ்வியிலேயே இந்த ஏமாற்று நாடகத்தின் பின்னணியை கோத்தபாய போட்டு உடைத்துள்ளார். புலிகளை வெற்றிகரமாகத் தோற்கடிக்க முடிந்தமைக்கான ஒன்பது காரணங்கள் என்ற தலைப்பில் வெளியான இந்தச் செவ்வியின் சில பகுதிகளை பொங்குதமிழில் ஏற்கனவே வெளியிட்டிருந்தோம்.

இந்த செவ்வியில் முதல்வர் கருணாநிதியின் உண்ணாவிரதம் தொடர்பாக கோத்தபாய ராஜபச்ச தெரிவித்திருப்பதாவது:

கடந்த வருடம் ஏப்ரல் 24 ம் திகதி, தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி உடனடிப் போர்நிறுத்தம் வேண்டி சென்னையிலுள்ள அண்ணா சமாதியில் உண்ணாவிரதம் இருந்தார். இச்சம்பவம் நடப்பதற்கு முதல் நாள் மாலை 4 மணிக்கு, இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் சிவசங்கர மேனன் என்னை அவசரமாகத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். இந்தியத் தூதுக்குழு ஒன்று அவசரமாக கொழும்பு வரவிருப்பதாகத் தெரிவித்தார்.

நான் உடனடியாகவே ஜனாதிபதி ராஜபச்சவின் அலுவலகத்திற்குச் சென்று அவரின் அனுமதியைப் பெற்று 5 நிமிடத்திற்குள்ளாகவே மீண்டும் மேனனைத் தொடர்பு கொண்டேன்.

முதல்வர் கருணாநிதி உண்ணாவிரதத்தைத் தொடங்கி ஆறு மணி நேரத்திற்குள் நாம் யுத்த தவிர்ப்பு பிரதேசத்திற்குள் (No Fire Zone) ஷெல் தாக்குதல்கள் உட்பட சகல தாக்குதல்களையும் நிறுத்துவதாக அறிக்கையை வெளியிட்டோம். இந்த அறிக்கையைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதியின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது. இதன்மூலம் தமிழ்நாட்டிலிருந்து எழுந்திருக்கக்கூடிய பெரிய ஆபத்தை நாம் தவிர்த்துக் கொண்டோம். இந்தியா சிறிலங்கா அதிகாரிகள் குழவாக மேற்கொண்ட இராஜதந்திர நடவடிக்கையின் ஒரு சிறந்த உதாரணமாக இது உள்ளது என இந்தச் செவ்வியில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இச்சம்பவம் தொடர்பாக இதுவரை வெளியிடாத சில உண்மைகளை வெளியிட்டிருக்கிறார்.

வன்னியில் பேரழிவு யுத்தம் நடந்த காலப்பகுதியில் இந்திய இலங்கை அதிகாரிகள் மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கூட்டுச் செயற்பாடுகள் பற்றி கோத்தபாய விரிவாக எடுத்துக் கூறியுள்ளதாவது:

இந்திய நிலைப்பாடு என்பது இந்த யுத்தத்தில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் ஒரு சக்தியாக இருந்தது. 1987 ஆண்டு ஒப்பரேஷன் லிபரேஷன் நடவடிக்கையின்போது இந்திய விமானப்படை வடமராட்சியில் உணவுப் பொட்டலங்களைப் போட்டது. அதன் பின்னான காலத்தில் இப்படியான நிலை ஏற்படக்கூடாது என்பதில் கவனமாகவே இருந்தோம்.

மகிந்த ராஜபக்ச இந்தியாவுடன் தொடர்புகளைப் பேணுவதிலும் இந்தியாவிற்கு உடனுக்குடன் நிலமைகளை தெளிவாக்குவதிலும் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார்.

எமது பக்கத்தில் நானும், பசில் ராஜபக்ச, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் இந்தியத் தரப்பில் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், வெளிவிவகாரத்துறையின் செயலாளர் சிவசங்கர மேனன் மற்றும் பாதுகாப்புத் துறைச் செயலாளர் விஜய் சிங் ஆகியோருடன் இணைந்து செயற்பட்டோம்.

நாம் தொடர்ந்து ஒருவருடன் ஒருவர் தொடர்பிலிருந்தோம். சிக்கலான விடயங்கள் எழும்போதெல்லாம் நாம் கூடிப் பேசி பிரச்சினைகளைத் தீர்த்துக் கொண்டோம். இதனால் எமது இராணுவம் எந்தவிதமான தடைகளும் இன்றி தமது இராணுவ நடவடிக்கையைத் தொடர முடிந்தது என கோத்தபாய இந்திய அதிகாரிகளுடன் இருந்த இறுக்மான உறவையும் இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்வதில் இந்தியா காட்டிய ஈடுபாட்டையும் விரிவாக எடுத்துக் கூறியுள்ளார்.

கோத்தபாயவின் இந்த சுய வாக்குமூலம் இவ் உண்ணாவிரதம் தொடர்பாக பல கேள்விகளை எழுப்பியுள்ளது. கடந்த வருடம் முதல்வர் கருணாநிதி உண்ணாவிரதத்தை ஆரம்பித்தபோது அன்றைய தினம் அதிகாலை எவருக்கும் அறிவிக்காது, தான் அண்ணா சமாதிக்கு முன்னர் திடீரென உண்ணாவிரதத்தை ஆரம்பித்ததாகத் தெரிவித்திருந்தார். தமிழக இந்திய ஊடகங்களும் அவ்வாறே எழுதியிருந்தன.

ஆனால் கோத்தபாயவின் நேர்காணலில் உண்ணாவிரதம் ஆரம்பிப்பதற்கு முதல்நாளே இது தொடர்பாக இந்திய அதிகாரிகள் தன்னைத் தொடர்பு கொண்டு ஒரு சந்திப்பிற்கு அழைப்பு விடுத்ததாகத் தெரிவித்துள்ளமை இந்த உண்ணாவிரதம் என்பதே இந்திய அரசும் தமிழக முதல்வரும் இணைந்து நடத்திய நாடகமா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

மேலும் கோத்தபாய தனது நேர்காணலில், இந்திய அதிகாரிகளுடன் ஏற்பட்ட சந்திப்பை அடுத்து சகல இராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்துவதாக தாம் அறிக்கை விட்டதன் மூலம் தமிழகத்திலிருந்து எழுந்திருக்ககூடிய ஆபத்தை தவிர்த்துக் கொண்டதாகத் தெரிவித்திருக்கிறார். ஆனால் முதல்வர் தனது உண்ணாவிரதத்தை முடிக்கும்போது, வன்னியில் யுத்தநிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என்றும் இது தொடர்பாக மத்திய அமைச்சர் சிதம்பரம் தனக்கு அறிவித்துள்ளதாகவும் கூறியே உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். திமுக ஆதரவு ஊடகங்களும் முதல்வர் கருணாநிதியின் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து வன்னியில் யுத்த நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாகவே பிரச்சாரப்படுத்தின என்பதும் குறிப்பிடத்தக்கது.

கோத்தபாயவின் நேர்காணலைப் பார்க்கும்போது எழும் கேள்வி – இந்த உண்ணாவிரதம் முதல்வர் கருணாநிதியும் இந்திய அதிகாரிகளும் இணைந்து நடத்திய கூட்டு நாடகமா அல்லது இந்திய அதிகாரிகள் சிறிலங்கா அதிகாரிகளுடன் இணைந்து கருணாநிதியை இத்தனை சுலபமாக ஏமாற்றிவிட்டார்களா என்பதுதான்.

-நன்றி் 'புதினப்பலகை'

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites