திரைப்படங்களுக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் புதிய மாற்றம்

19 April 2010 ·

திரைப்படங்களுக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் புதிய மாற்றம்!


திரைப்படங்களுக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் புதிய மாற்றம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதன்படி, 'யு. ஏ' (U/A), 'ஏ' (A) தணிக்கை தரச் சான்றிதழ்கள் போல மேலும் 3 தரச் சான்றிதழ்களைக் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தற்போது, திரைப்படங்களின் தன்மையைப் பொறுத்து அவற்றுக்கு மூன்று விதமான தணிக்கை சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அனைத்து தரப்பினரும் பார்க்கக்கூடிய படங்களுக்கு 'யு' தரச் சான்றிதழும், பெரியவர்களின் வழிகாட்டுதலுடன் குழந்தைகள் பார்க்கக்கூடிய படங்களுக்கு 'யு.ஏ' சான்றிதழும், பெரியவர்கள் மட்டும் பார்க்கக்கூடிய படங்களுக்கு 'ஏ' தரச் சான்றிதழும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மத்திய அரசு புதிதாக மேலும் 3 வகையான தணிக்கை தரச்சான்றிதழ்களை கொண்டுவர முடிவு செய்துள்ளது. ஏற்கனவே இருந்து வரும் 'யு.ஏ' தரச்சான்றிதழ் நீக்கப்படுகிறது.

இதுதொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் புதிய சட்டத்தை கொண்டு வரவுள்ளது. அந்த சட்ட மசோதாவில் இடம்பெற்றுள்ள அம்சங்களாவன:

* தற்போது மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் சினிமா படங்களுக்கு வழங்கும் யு, யு.ஏ, ஏ ஆகிய தரச்சான்றிதழ்களில் மாற்றம் செய்யப்படுகிறது. இதன்படி, 'யு', 'ஏ', '12 பிளஸ்', '15 பிளஸ்', 'எஸ்' என 5 விதமான தரச்சான்றிதழ்கள் வழங்கப்படும்.
* சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் பார்க்கக்கூடிய படங்களுக்கு 'யு' சான்றிதழ் வழங்கப்படும்.

* 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் பார்க்கக்கூடிய படங்களுக்கு 12 பிளஸ் தரச்சான்றையும், 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கக்கூடிய படங்களுக்கு 15 பிளஸ் தரச்சான்றையும் தணிக்கை வாரியம் வழங்கும்.

* 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கக் கூடிய படங்களுக்கு 'ஏ' தரச்சான்றிதழ் வழங்கப்படும்.

* குறிப்பிட்ட வகுப்பினர் அல்லது தொழில் பிரிவினர் மட்டுமே பார்க்கக்கூடிய படங்களுக்கு 'எஸ்' சான்றும் வழங்கப்படும்.

* நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள், ஒழுக்கம் ஆகியவற்றுக்கு எதிரான படங்கள் என்று கண்டறியப்படும் படங்களை திரைப்பட கண்காட்சியில் திரையிட அனுமதி அளிக்கப்படாது.

* மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் சிறந்த முறையில் செயல்படும் வகையில் மத்திய அரசு மண்டல அளவில் ஆலோசனை குழுக்களை நியமிக்கலாம். திரைப்படம் சமுதாயத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கங்கள், விளைவுகள் குறித்து நன்கு அறிந்தவர்கள் இந்த ஆலோசனைக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள். உறுப்பினர்களில் 30 சதவீதம் பெண்களாக இருப்பார்கள்.

மத்திய அரசு கொண்டுவர உள்ள புதிய தணிக்கை தரச்சான்றிதழ் முறை மூலம் இந்திய சினிமா தணிக்கையின் தரம், சர்வதேச தரத்திற்கு உயரும் நிலை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவிலும் திரைப்படங்களுக்கு இதேபோல் 5 விதமான தரச்சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil