அழைக்கிறது அரசியல்... இறங்கலாமா இளைஞர்களே!

18 April 2010 ·


ளைஞர்களுக்கு அரசியல் என்பது அத்தை மகள் மாதிரி. சுற்றிச் சுற்றி வரலாமே தவிர, தொட்டுவிடக் கூடாது!' என்றார் அண்ணா. சுற்றுவதோ, தொடுவதோ அவரவர் ஆர்வத்தைப் பொறுத்தது. ஆனால், அரசியல் அனைவருக்கும் பொதுவானது. அதில் இருந்து இளைஞர்கள் தங்களை விடுவித்துக்கொள்வதோ, விலகி நிற்பதோ இயலாது என்பதால்தான், வாக்குரிமைக்கான வயதைக்கூட 21-ல் இருந்து 18 ஆகக் குறைத்தது தேர்தல் ஆணையம். ஆனால், இன்று அரசியலை ஆகாத பிள்ளையாகப் பார்க்கிறது இளைஞர் வர்க்கம். எம்.பி., எம்.எல்.ஏ-க்கள், மந்திரி வீட்டுப் பிள்ளைகள், பணக்கார வீட்டுப் பிள்ளைகள் மட்டும்தான் அரசியலுக்கு வர முடியும். அவர்களுக்கு மட்டும் அது பரம்பரைச் சொத்து என்று ஒதுங்கிச் செல்கிறார்கள். ஆனால், அந்தக் காலத்தில் நிலைமையே வேறு.

மதுரைக்கு வந்த நேதாஜியை வரவேற்க பெருங்கடலெனக் குழுமி நின்றிருந்த கூட்டத்தில் சரிபாதி அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள்தான். 'இனி மாணவர்கள் வீதிக்கு வந்தால் கல்லூரி முதல்வரும் அதற்குப் பொறுப்பு' என்று அரசு உத்தரவில் திருத்தம் கொண்டுவர வைத்தது கல்லூரி மாணவர்களின்அந்த வரவேற்பு. சென்னை சட்டக் கல்லூரி தொடங்கி மதுரை தியாகராயர் கல்லூரி வரையிலும் நடந்த போராட்டங் களின்போது இந்தி எதிர்ப்பு நிலைமையைச் சமாளிக்க நாட்டுக்குள் ராணுவம் வரவழைக்கப் பட்டது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை ஆட்சிக் கட்டிலில் இருந்து அகற்றுவதற்கு மாணவர் போராட் டமே அடித்தளமாக அமைந்தது. ஆனால், இன்று அரசியல் மீது ஏன் இந்த வெறுப்பு? சமூகத்தை நிர்மாணிக்கும் வாய்ப்பினைப் பற்றிக்கொள்ள ஏன் மறுக்கிறது இளைய சமுதாயம்?

''30 ஆண்டுகளுக்கு முன் எந்தக் கல்லூரிக்குச் சென்றாலும் அங்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பெரியாரிஸ்ட் என மூன்றில் ஏதாவது ஒருவகையில் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் மாணவர்கள்தான் அதிகம் இருப்பார்கள். ஆனால், இன்று அரசியல் சார்புள்ள மாணவர்கள் மிகக் குறைவாக இருக்கிறார்கள். அதற்குக் காரணம், நம்பிக்கையான தலைவர்கள் இல்லாமல் போனதுதான். பெரியார், அண்ணா, காமராஜர், ராஜாஜி, ஜீவா ஆகிய தலைவர்கள் அன்று இருந்தார்கள். ஆனால், இன்று சுயநலத்தால் சுருங்கியவர்கள்தான் தலைவர்களாக இருக்கிறார்கள். ஆனால், அதைக் காரணம் காட்டி அரசியலைத் தீண்டாமல் இருக்கக் கூடாது. இன்றைய வாழ்க்கை, சூழல், தளம் அனைத்துமே அரசியல்வாதிகளால்தான் தீர்மானிக்கப்படுகிறது. அப்படி இருக்கும்போது அரசியலைத் தெரிந்துகொள்ள மாட்டேன் என்பது தனக்குத் தானே வைத்துக்கொள்ளும் சூன்யமாகத்தான் முடியும்!'' என்று ஆதங்கத்தோடு ஆரம்பித்தாலும் உற்சாகமாகத் தொடர்கிறார் தமிழருவி மணியன்

''அரசியல் என்பது சாக்கடைதான். சாக்கடைக்குள் இறங்காமல் அதைத் தூய்மைப்படுத்த முடியாது. சேற்றில்தான் செந்தாமரை முளைக்கிறது. ஆனால், தாமரை இலை மீது சேறு படிவது இல்லை. அதைப்போல தாமரையாக இருக்க முடிந்த இளைஞர்களை அரசியல் அழைக்கிறது.அரசியலில் நல்லவர்களே இல்லை என்பதால் அதில் ஈடுபடத் தயக்கமாக இருக்கிறது என்று பல இளைஞர்கள் கூறுகிறார்கள். ஆனால், ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். அரசியலில் யோக்கியர்கள்தான் அதிகம் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் தனித்தனியாகப் பிரிந்திருக்கிறார்கள். குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் அயோக்கியர்கள் சேர்ந்தே

இருக்கிறார்கள். தாங்கள் நினைப்பதைச் சாதித்துக்கொள்கிறார்கள். 'எங்கே பெரியார்?', 'யார் காமராஜர்?' என்று கேள்விகள் கேட்டுக்கொண்டு இருப்பதில் இனி அர்த்தம் இல்லை. கேள்வி கேட்பவனே காமராஜராக, பெரியாராக மாறுவதைத் தடுப்பது எது? சுயநலம்தானே! வலிகளை, இழப்புகளைத் தாங்கும் சக்தி உள்ளவன் பெருந்தலைவராக உருவாக முடியும். அப்படியான சக்தியை இளைஞர்கள் கைக்கொள்ள வேண்டும்'' என்கிறார்.

பெரியவர் நல்லகண்ணு, ''இது அக்கறையற்ற உலகமாக மாறிவிட்டது. சுய முயற்சி இருந்தால் எவரும் முன்னேறலாம், தன் கையே தனக்கு உதவி, எதையாவது செய்து பணத்தைச் சம்பாதி என்பது போன்றவை இன்றைய இலக்கணங்களாக மாறிவிட்டது. தொழிலில் நான் முன்னேற வேண்டும், நினைத்த இடத்தில் வேலை கிடைத்துவிட வேண்டும் என்ற சுயநலம் மட்டுமே இன்று இருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத சங்கிலித் தொடரின் ஒரு கண்ணிதான் தனக்குக் கிடைத்திருக்கும் வேலை என்பதை உணரும்போதுதான் அரசியலை உணர முடியும். கம்யூட்டர் படித்தான், கம்பெனியில் வேலை கிடைத்தது, கை நிறையச் சம்பளம், 25 ஆண்டு அனுபவம் வாய்ந்த ஓர் ஊழியர் வாங்க முடியாத சம்பளத்தை இரண்டாவது ஆண்டில் பெற்றான், இது அவனது தகுதி, படிப்பால் கிடைத்ததாக நினைத்தான். ஆனால், அமெரிக்கா தொடங்கி எல்லாக் கம்பெனிகளும் வீழ்ந்தபோது இன்றைய இளைஞர்களுக்கு அரசியல் புரிய ஆரம்பித்தது. எல்லாவற்றையும் ஆட்டுவிக்கும் நூலின் நுனி எங்கே இருக்கிறது என்கிற சூட்சுமம்தான் அரசியல். அது இல்லாத தன்மை என்று எதுவுமே இல்லை. அரசியலே வேண்டாம் என்று சொல்வதே ஒருவித அரசியல்தான்!

இன்றைய அரசியல் பிரமுகர்கள், நடவடிக்கைகள், சம்பவங்களைப் பார்த்து, இளைஞர்களுக்குச் சலிப்பு வரலாம். ஆனால், கொள்கைரீதியான அரசியலைப் புரிந்து கொண்டு அதற்காகத் தன்னைத் தயார் படுத்திக்கொள்ள இளைஞர்கள் முன்வர வேண்டும். சாதி, மத பேதமற்ற, மூட நம்பிக்கையை வலியுறுத்தாத, சுயநலமற்ற, ஆடம்பர ஆர்ப்பாட்டம் அற்ற அரசியலுக்குத் தங்களைத் தயார்படுத்திக்கொண்டு இளைஞர்கள் வந்தால் மட்டும்தான் அது சாத்தியமாகும்'' என்று நம்பிக்கையை விதைக்கிறார் அவர்.

பொதுவாக, ஒரு நாட்டை கப்பலுக்கு ஒப்பிடுவார்கள். கப்பலில் உள்ள சிப்பந்திகள் ஒவ்வொருவரும் அவரவர் வேலையில் கவனமாக இருப்பார்கள். ஆனால், எல்லோருக்குமே கப்பல் பத்திரமாகக் கரை சேர வேண்டும் என்பதுதான் ஒற்றைக் குறிக்கோள். அதைப்போலத்தான், ஒரு நாட்டின் குடிமக்கள் அனைவரும் அவரவர் வேலையைச் செய்துகொண்டு இருந்தாலும், நாட்டின் நிர்வாகம், நீதி, சட்டம் மூன்றும் சரியான பாதையில் பயணிக்கிறதா என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும். அதில் குடி மக்களுக்கு ஏற்படும் அலட்சியம்தான் அரசியலை மிக மோசமானதாக ஆக்குகிறது. 'நான் என்ன எம்.எல்.ஏ-வா ஆகப்போறேன்?' என்ற கேள்வி அனைவருக்கும் இருக் கலாம். எல்லோராலும் அப்படி ஆகிவிட முடியாது. ஆனால், ஒரு எம்.எல்.ஏ-வை உருவாக்கும் சக்தி, அல்லது அவரைத் தோற்கடிக்கும் சக்தி உங்களது கையில் தான் இருக்கிறது. தினப்பத்திரிகையில் தொடங்கி அரசியல் தலைவர்களின் சுவாரஸ்யமான வாழ்க்கை வரலாற்றைப் படிப்பது வரை உங்களது அரசியல் ஆர்வத்தை விஸ்தரியுங்கள். மூளைக்கும் இதயத்துக்கும் சம்பந்தம் இல்லாமல் தினமும் கையில் காபியுடன் சும்மா 'ஹெட்லைன்ஸ்' புரட்டுவதை விட்டுவிட்டு, பிடித்த ஏதேனும் ஒரு செய்திக்குள் உள்நுழைந்து வாசித்துப் பாருங்கள். ஒரே செய்தியை இரண்டு நாளிதழ்கள் எந்தக் கண்ணோட்டத்தில் பிரசுரித்துள்ளன என்று ஒப்பிட்டுப் பாருங்கள். எது சரியான பார்வை என்பதைத் திறனாய்வு செய்யுங்கள். ஒரே பிரச்னைக்கு நான்கைந்து கட்சிகள் செய்துள்ள விமர்சனங்களை ஒப்பிட்டுப் பாருங்கள். உங்களுக்குள் ஒரு 'அரசியல் வாத்தியார்' உருவாகி இருப்பார்!

சமூகத்தின் அரசியலில் பங்குகொள்ளச் சில வழிகள் இவை...

திராவிடம், தேசியம், கம்யூனிசம் ஆகிய மூன்று தத்துவத்துக்குள் அனைத்து அரசியல் கட்சிகளையும் அடக்கிவிடலாம். இந்தக் கொள்கையில் உங்களது நெஞ்சுக்கு நெருக்கமான தத்துவத்தை முன்னெடுக்கும் அரசியல் கட்சியில் உறுப்பினராக இணையலாம்.

கருணாநிதி, ஜெயலலிதா, சோனியா காந்தி, அத்வானி, என்று தனிப்பட்ட மனிதர்களை உங்களுக்குப் பிடித்திருந்தால், அவர்களது கொள்கை சார்ந்த நடவடிக்கை களுக்கு ஆதரவு தெரிவிக்கலாம்.

அரசியல் கட்சிகளைத் தாண்டி தேர்தலில் இறங்காத எத்தனையோ சமூக அமைப்புகள் தமிழகத்தில் இருக் கின்றன. அவை தேர்தல் காலங்களில் மட்டும் குறிப்பிட்ட கட்சிகளை ஆதரித்துவிட்டு, மற்ற நேரங்களில் சமூகப் பணிகளில் ஈடுபடும். அப்படிப்பட்ட அமைப்புகளுடன் உங்கள் ஓய்வு நேரங்களிலேனும் இணைந்து பணி ஆற்றலாம்.

கட்சிகள், பிற அமைப்புகளுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் இல்லாதவர்கள், 'இளைஞர் இயக்கம்', 'மக்கள் மன்றம்', 'படிப்பு வட்டம்' போன்ற பதிவு செய்யப்பட்ட அமைப்புகள் மூலம் பொதுநலப் பணிகளில் ஈடுபடலாம்.

அனைத்துக் கட்சியினரும் ஒரே மேடைக்கு வந்து வாக்குகளைக் கேட்பது 20 ஆண்டுகளுக்கு முன்பு வழக்கத்தில் இருந்தது. அதுபோன்ற பொது மேடைகளை இளைஞர்கள் அமைக்கலாம்.

அனைத்து மக்களையும் வாக்களிக்கத் தூண்டும் பணியை அரசியல் விழிப்பு உணர்வுள்ள இளைஞர்கள் செய்வது ஜனநாயகத்துக்கு அவர்கள் செய்யும் பெரும் தொண்டாக இருக்கும்.

அரசியல் கட்சிகள், தலைவர்கள் பின்புலமும் இல்லாமல் ஒரு ஊரில் உங்களுக்கென தனியாக ஒரு கூட்டம் திரள ஆரம்பிக்கும் அளவுக்கு மக்களது பிரச்னைகளில் உங்களை ஈடுபடுத்திக்கொண்டால், அதுவே உங்களை அரசியலில் ஈடுபடவைக்கும்.

'100 இளைஞர்களைத் தாருங்கள். நான் இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன்!' என்பது விவேகானந்தரின் நம்பிக்கை. '1000 பேர் ரத்தத்தைத் தந்தால் நான் விடுதலையை வாங்கித் தருகிறேன்!' என்று நேதாஜி பகிரங்கமாக அறிவித்தார். நூற்றில், ஆயிரத்தில் ஒருவராக உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். கோடிகளுக்குள் கரைந்துபோகாதீர்!

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites