16 April 2010 ·

ந்த மூலைக்கு இந்த நித்தியானந்தா..! அன்றொரு நாளில் அரசியல் அரங்கமெல்லாம் சேர்ந்துஅதிர, ஊடகங்களில் பம்பைச் சுருள் முடியுடன் பளீர் சிரிப் போடு பிரேமானந்தா பிடிக்காத பிரதான இடமா?

இரட்டை ஆயுள் தண்டனை பெற்று கடலூர் மத்திய சிறையில் இப்போது இருந்தாலும், வெளி உலக நடப்புகளை கண்கொத்திப் பாம்பாகப் பார்த்துக்கொண்டே இருக்கிறார் இந்த பிரபல சாமியார். 'இரண்டு ஆயுள் தண்டனையையும் தனித்தனியாக அனுபவிக்க வேண்டும்... காந்தி ஜெயந்தி, பண்டிகை நாட்கள் போன்ற விடுமுறையை கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது... எந்த சலுகையும் தண்டனை இவருக்கு. நித்தியானந்தாவுக்கு ஒரு பிடதி ஆசிரமம் என்றால், பிரேமானந்தாவுக்கோ புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள பாத்திமா நகர் ஆசிரமம். இவருக் கென்று எதையும் செய்யத் தயாராக இப்போது அங்கே உண்டு சீட கோடிகள்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் பிரபல வழக்கறிஞர் யானை ராஜேந்திரனுக்கு சமீபத்தில் பிரேமானந்தா ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அதில், 'வாயில்லா ஜீவன்களுக்காக குரல் கொடுக்கிறீர்கள்... நல்ல விஷயம். ஆனால், எந்தத் தவறும் செய்யாமல் சிறை தண்டனை பெற்றுள்ள என்னைப் போன்றோருக்கும் நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று எழுதி இருந்தார். அவரைப் பார்க்க யானை ராஜேந்திரன் கடலூர் சிறைக்குச் சென்றார். தகவல் அறிந்து விவரம் கேட்க அவரை அணுகினோம். கூடவே, பிரேமானந்தாவின் லேட்டஸ்ட் எண்ண ஓட்டங்களை அப்படியே வாசகர்களுக்குத் தரும் வண்ணம் ஒரு பேட்டியும் பெற்றுத் தரச் சொன்னோம். இதோ சிறைச் சுவர்களுக்கு மத்தியிலிருந்து ஒலித்த பிரேமானந்தாவின் குரல், இங்கே வழக்கறிஞர் குரலில்..!

''சிறையில் எப்படி இருக்கிறீர்கள்?''

''ஓ, ஊடக நண்பர்களெல்லாம் என்னைப் பார்த்து ரொம்ப நாளாகிப் போச்சில்லையா... நான் மற்ற கைதிகள்போல இல்லாமல் வழக்கமான என் உடையில் தான் இருக்கிறேன், ராசா. வெள்ளை வேட்டி, சட்டை போட்டுக்கொண்டு நெற்றி, கழுத்து, கைகளில் பட்டை போட்டிருக்கிறேன். குடுமி, மீசை, தாடி என காட்சி அளிக்கிறேன். பைபாஸ் சர்ஜரி, கண்ணில் இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்து... ரத்தக்கொதிப்பு, சிறுநீரக பிரச்னையாலும் அவதிப்படுகிறேன். இருந்தாலும், எப்போதும்போல எனக்கான சிரித்த முகத்துடன்தான் இருக்கிறேன்.''

''கீழ் நீதிமன்றம் அளித்த தண்டனையை உயர் நீதிமன்றம், சுப்ரீம் கோர்ட்டு உறுதிப்படுத்திய பிறகும் எப்படி உங்களை குற்றமற்றவர் என்று சொல்லிக் கொள்கிறீர்கள்?''

''அடித்துச் சொல்கிறேன்... என்னிடம் எந்தத் தவறும் இல்லை, ராசா. இந்த வழக்கின் விசாரணை அதிகாரிகள், அப்போதைய புதுக்கோட்டை கலெக்டர், எஸ்.பி., தாசில் தார் போன்ற எல்லாருக்குமே இது தெரியும். மேலிடத்து பிரஷர் என்று ஒதுங்கிக்கொண்டார்கள். என்மீது குற்றச் சாட்டு எழுந்து பத்திரிகைகளில் பரபரப்பாகப் பேசப்பட்டது. ஒரு எஃப்.ஐ.ஆர்-கூட முதலில் என் மீது கிடையாது. ஒரு மாதம் கழித்த பிறகே 6 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரமத்தில் இருந்த பெண்ணை பலாத்காரப்படுத்தியதாகவும், இன்ஜினீயர் ஒருவரை கொலை செய்ததாகவும் குற்றம் சாட்டினார்கள். ஆசிரமத்தில் இருந்த பெண்களை அடித்து உதைத்து வாக்குமூலம் வாங்கினர். அந்தப் பெண்களை ஒரு சேவை இல்லத்தில் தங்கவைத்து உணவு, உடை, பணம் கொடுத்து பாதுகாத்தனர். இதற்குப் பணியாத சிலரை அவர்களின் உறவினர்களைக் காட்டி மிரட்டினர்.

ஹ§ம்... பாவம் அந்த அப்பாவிகள். கோர்ட்டில் சாட்சி சொல்லும் வரை அவர்களை பத்திரமாகப் பாது காத்தனர். சாட்சி சொல்லிய அந்தநாளே அவர்களை அம்போவென்று விட்டுச் சென்றனர். பின்னாளில் அதே பெண்கள் என்னை சிறையில் வந்து பார்த்து, 'அப்பா... போலீஸ் அடிச்சாங்க. எங்களால் எதுவும் செய்ய முடியலை'ன்னு அழுதாங்க. அவங்களை என்னுடைய ஆசிரமத்துக்கு போகச் சொன்னேன். இப்போ அவங்களும் அந்த ஆசிரமத்தில்தான் இருக்கிறாங்க.

நான் இலங்கையில் இருந்து வந்தவன். எனக்கு இங்குள்ள சட்டங்கள் சரிவரத் தெரியாது. அதனாலதான் மனநிலை பாதிக்கப்பட்ட அந்த இன்ஜினீயர் இறந்தப்போ, போலீஸுக்கு சொல்லணும்னு யோசிக்காம போயிட்டேன். எல்லாரும் அந்த உடலை எரிக்க வேண்டும் என்று கூறியபோதும்கூட, 'அவன் மதம் என்ன என்று தெரியாது. அவனை புதைத்துவிடுங்கள். அவன் ஆன்மா அமைதியடையும்' என்றுதான் சொன்னேன். ஆனால்... அதுவே எனக்குப் பிரச்னையா மாறிடுச்சு. 'தோண்டத் தோண்ட பிணங்கள், ஆசிரம சுவரில் இருந்தெல்லாம் எலும்புக் கூடுகள் எடுக்கப்பட்டன, பிரேமானந்தாவின் ஆசிரமத்துக்குள் கஞ்சா தோட்டம்' என்றெல்லாம் போலீஸார் இஷ்டப்படி செய்தி பரப்பினாங்க. இதனால என்னுடைய பெயர் கெட்டு, நிம்மதி கெட்டு, வாழ்க்கை போனதுதான் மிச்சம்.''

''கொலை, பலாத்காரம் எதுவுமே செய்யவில்லை என்கிறீர்களா?''

''என்ன ராசா இப்படி கேட்கறீங்க... ஆன்மிக வாழ்க்கைக்கு வந்து கிட்டத்தட்ட 40 வருஷம் ஆகப் போகுது. செக்ஸ், கொலைக்கும் எனக்கும் வெகுதூரம். அப்பவும், இப்பவும், எப்பவும் இதையேதான் நான் சொல்லுவேன்.''

''சசிகலா குடும்பத்தினரோடு ஏற்பட்ட பழக்கமும், அதில் உண்டான பகையும்தான் உங்களின் சிக்கல் களுக்குக் காரணம் என்று அப்போது சில செய்திகள் வந்ததே..?''

''அன்னிக்கு ஆட்சியில் செல்வாக்கா இருந்தவங்களுக்கு நெருக்கமானவங்க ஆசிரமத்துக்கு வர்றதுண்டு... போற துண்டு. அவங்க மட்டுமா..? பெரிய பெரிய வி.ஐ.பி-க்கள் நிறைய பேர் என்னிடம் அருள்வாக்கு கேட்டு வந்தாங்க. சொன்னது நடந்ததால், மீண்டும் மீண்டும் வந்தாங்க. என்னிடம் சில உதவிகள் கேட்டாங்க. முடிஞ்சதை செஞ்சும் கொடுத்திருக்கேன். அப்புறம் இதை செஞ்சு கொடுங்கன்னு ('ஹவாலா பணப் பரிமாற்றம்' என்று சாமியாருக்கு வேண்டியவர்கள் கூறுகிறார்கள்!) கேட் டாங்க. அதை நான் செய்வது சரியாக இருக்காது என்பதால், மறுத்துவிட்டேன். இதுவும் பிரச்னைக்குக் காரணமாக இருந்திருக்கலாம்.

சிறை செல்லும் வரை பெரிய இடத்துக் குடும்பத் தாரோடு தொடர்பு இருந்தது. அதன்பிறகு அவர்கள் யாரும் என்னைப் பார்க்கவில்லை. நானும் அவர்களிடம் உதவி கேட்கவில்லை. நான் கைதான நேரத்தில் 'உண்மை ஜெயிக்கும்... நிச்சயம் வெளியே வந்துவிடுவோம்' என்று தான் நம்பினேன். அப்போதுதான் என்னை சந்திக்க வந்த இலங்கை எம்.பி-யான தொண்டைமான், 'இன்னுமா இவங்களை நம்பிட்டு இருக்கீங்க சுவாமி... உன்னை உள்ளே வைத்ததே அவங்கதானே. இவங்க போய் கலைஞர் வந்தால்தான் உங்களுக்கு ஜாமீன் கிடைக்கும். அதுவரைக்கும் உங்களை வெளியே விடமாட்டங்க' என்றார். நான் அதிர்ச்சியடைந்தேன்.

அப்போ உலகத் தமிழ் மாநாட்டில் பங்கேற்க தொண்டைமான் வந்திருந்தார். அப்போ எனக்காக அவர் பேசியிருக்கார். ஆனால் அவங்க, 'பிரேமானந்தா கொலை செஞ்சதாக சி.பி.சி.ஐ.டி. சொல்லுதே' என்றார்களாம். ஆனால், சி.பி.சி.ஐ.டி.யை கேஸ் போட வைத்ததே யார் என்று பிறகு எனக்குத் தெரிந்தது.

அதையெல்லாம் இப்போது பேசி என்ன ஆகப் போகிறது? எல்லாம் என் நேரம். இப்படி சிறையில் இருக்க வேண்டும் என்று இருக்கு. அனுபவிக்கிறேன். யாரையும் நான் குற்றம் சொல்ல விரும்பலை, ராசா! இரண்டு முறை ஹார்ட் அட்டாக் வந்திருச்சு. மூன்றாவது அட்டாக் வந்தா போயே சேர்ந்திடுவேன். அதுக்கு முன்னாடி நான் குற்றமற்றவன் என்பதை இந்த உலகத்துக்கு நிரூபிக்கணும்னு துடிக்கிறேன்.''

''பதினாறு ஆண்டுகால சிறைவாசம் எப்படி இருக்கிறது?''

''நான் இலங்கையில் இருந்து வந்தவன். ஆசிரமம், ஆசிரமம் என்றே என் சிந்தனை இருந்தது. வெளிஉலகம் தெரியாமல் போய்விட்டது. 1994-ல் ஜெயிலுக்கு வந்தேன். இந்த 16 ஆண்டுகளில் நிறைய விஷயங்களை சிறைச் சாலை எனக்கு கற்றுக்கொடுத்துள்ளது. என்னைக் கேட்டால் 10 நாள் சிறையில் ஒருவன் இருந்தாலே போதும்... வாழ்க்கையை உணர்ந்து கொள்வான்.

இங்கு நிறைய அப்பாவிகள் இருக்கிறார்கள். செய்யாத தப்புக்கு தண்டனை அனுபவிக்கிறார்கள். குடிபோதையில் ஒரு கொத்தனார் தன் மனைவியை சைக்கிளில் அழைத்துச் சென்றார். மனைவி சாலையில் விழுந்துவிட்டார். இது தெரியாமல் கொத்தனார் சென்றுவிட்டார். சாலையில் பெண் ஒருவர் இருப்பதைப் பார்த்து, பரிதாபப்பட்டு தண்ணீர் தெளித்து எழுப்ப பார்த்திருக்கிறார் வேறொருவர். அந்தப் பெண் அதற் குள் இறந்துவிட்டார். தண்ணீர் தெளித்து எழுப்பிய நபர் இப்போது சிறையில் இருக்கிறார்!

இதுபோல ஆயிரம் கதைகள் இங்கே இருக்கு, ராசா! இந்த ஜெயிலுக்கு நிறைய பிரபலங்கள் கைதிகளாக வந்து சென்றுள்ளனர். துணை முதல்வர் ஸ்டாலின் எனக்கு பக்கத்து அறையில்தான் அடைக்கப்பட்டார். யதேச்சை யாக அவரிடம் பேசுகிற வாய்ப்பு கிடைத்தது. நன்றாகவே பேசினார். இதுபோல் பல அனுபவங்கள்.

இப்போது சிறையில் புத்தகங்கள் எழுதிக் கொண்டிருக் கிறேன். எங்கள் ஆசிரமத்தின் மாத இதழுக்கும் எழுதிக் கொண்டிருக்கிறேன். மாதத்துக்கு ஒரு முறை ஆன்மிகச் சொற்பொழிவு இங்கேயே நிகழ்த்துவேன். ஆனால், பாருங்க... பத்து பேர்கூட அதில் பங்கேற்க மாட்டாங்க.''

''கிடார் வாசிப்பது போல் எல்லாம் படங்களுடன் உங்களின் பெண் சீடர் திவ்யா மாதாஜி பற்றி அப்போது செய்திகள் வந்ததே... அவர் மீதும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டதே..?''

''அவங்க வெளிநாட்டில் (அமெரிக்காவிலாம்!) பத்திரமா இருக்காங்க, ராசா. ஆனால், நான் அவங்களோடு தொடர்பு கொள்வதில்லை. தொடர்புகொண்டால் வீணாக அவங்களுக்கும் சிக்கல் வரும். இப்ப நம்ம ஆசிரமப் பொறுப்புகள் எல்லாத்தையும் அறக்கட்டளை பார்த்துக் கொள்கிறது. இப்போகூட 1,200 பிள்ளைகள் அங்கிருக்கும் பள்ளியில் படிக்கிறார்கள். அவர்களுக்கு இடம், உடை, உணவு, பாட புத்தகம் எல்லாவற்றையும் இலவசமாகவே வழங்குகிறோம். சோதனைகள் வருதுனு சேவைகளை நிறுத்திட முடியுமா?''

''நித்தியானந்தா தொடர்பான சி.டி. விவகாரங் களை கவனிச்சுக்கிட்டுதானே இருக்கீங்க?''

''(ஒரு நீண்ட பெருமூச்சு) நித்தியானந்தா செஞ்சது பெரிய தப்புதான். அந்த விவகாரத்துக்குள் நான் போக விரும்பல்லை. ஆனா, சம்பவம் நடந்தது கர்நாடக மாநிலத்தில். அங்கே அவர் ரூமுக்குள்ளே மெனக்கெட்டு கேமரா வச்சு படம் பிடிச்சிருக்காங்கன்னா... இது பிளாக்மெயில் செய்யற நோக்கமாத்தானே இருக்க முடியும்? என்ன... பேரம் படியல்லே... வீடியோ வந்திடுச்சு!

என்னைக் கேட்டா வீடியோ வெளியிட்டதே ஒரு குற்றம்! அதை வெளியிட்டவர் மேலே முதல்ல வழக்குப் போட்டு உள்ளே தள்ளிட்டு, அப்புறம்தான் நித்தியானந்தாவிடம் வந்திருக்கணும். இலங்கையில் பௌத்தம், இந்து கிறிஸ்துவம், இஸ்லாம்னு மதங்கள் இருந்தாலும்... அங்கு சாதி-மத வெறுப்புகள் அதிகம் இல்லை. ஆனால் இங்கே சாதி, மதம் என்பது மிகப்பெரிய சக்தியாக உள்ளது. இந்து மதத்தை அழிக்கணும், இந்து மதத்துக்கு கெட்ட பெயர் வாங்கிக்கொடுக்கணும் என்பதற்காகவே ஒரு குரூப் இங்கே செயல்படுகிறது. இது தெரியாமல் இங்குள்ள அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும் கிடைக்கும் லாபத்தை மட்டுமே பார்த்து, கண்ணை மூடிக்கிட்டு அந்த குரூப் சொல்றதைச் செய்யுறாங்க. இப்படித்தான் ஜெயேந்திரரை கைது செய்து அவமானப்படுத்தினாங்க.

இனி நித்தியானந்தா நிம்மதியா வெளியேநடமாட முடியுமா? அப்படியே நடமாடினா லும்பழையபடி பக்தர்களை சந்திக்க முடியுமா? கல்லால் அடிக்க மாட்டாங்களா..!

சாய்பாபா, கிருஷ்ணா நதி நீர் சென்னை வருவதற்காக தன்னுடைய நிதியை கொடுத்தார்... கூவம் ஆறு சீரமைப்புக்கு உதவுவதாகக் கூறியிருக்கிறார். நல்லது பண்றதை பற்றியெல்லாம் யாரும் பேசுறதில்லை. 'லிங்கம் எடுத்தார், விபூதி எடுத்தார்'னு அதை மட்டும் ஏன் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?'

- கோபமாகவே முடிந்தது பிரேமானந்தா பேட்டி!

க்கீல் யானை ராஜேந்திரன் நம்மிடம், 'ஜெயலலிதா, தன்னுடைய ஆட்சியில் இந்து மதத்துக்கு இரண்டு பெரும் துரோகம் செய்துவிட்டார். ஒன்று சங்கராச்சாரியார் கைது, மற்றொன்று பிரேமானந்தா கைது. தற்போது பிரேமானந்தா பல நோய்களால் அவதிப்பட்டுக்கொண்டு இருக்கிறார். கொலைக்கும் பிரேமானந்தாவுக்கும் தொடர்பில்லை என்பதுதான் இன்றும் என் வாதம். ஆனால், நீதிமன்றம் தனக்கு முன் வைக்கப்பட்ட வாதங்கள், சாட்சிகளை வைத்து அவருக்கு முடிவான ஆணை வழங்கிவிட்டது. சாட்சியங்களை மிரட்டி, பொய் வாக்குறுதிகள் கொடுத்து தயார் செய்துவிட்டதால், நீதிமன்றம் என்ன செய்ய முடியும்-? ஆதாரங்கள், தடயங்களை வைத்துக் குற்றத்தையும், குற்றவாளிகளையும் கண்டறிவார்கள். ஆனால், இந்த வழக்கில் குற்றம் என்னவென்றும், அதில் சிக்கவேண்டியது யார் என்றும் முடிவு செய்துவிட்டு... அதற்கு ஏற்றாற்போல தடயங்களையும் சாட்சியங்களையும் தேடியுள்ளனர்.

சுப்ரீம் கோர்ட்டே முடிவான தீர்ப்பு வழங்கிய நிலையில், எப்படி குற்றமற்ற பிரேமானந்தாவைக் காப்பாற்ற முடியும் என்று தெரியவில்லை. இருந்தாலும் நியாயம் தாமதமாகவாவது ஜெயிக்க வேண்டும் என்ற கருத்தில் வழக்கை நான் ஆய்வு செய்கிறேன். முடிவு பற்றி கவலையில்லை!'' என்றார்

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil