உலகைச் சுற்றும் ஆசை!

18 April 2010 ·


உலகைச் சுற்றும் ஆசை!

எஸ்.சுவாமிநாதன், மன்னார்குடி.

தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்பதை மதன் ஏற்றுக்கொள்கிறாரா?

ஏற்றுக்கொள்ளவோ, கொள்ளாமல் இருக்கவோ நான் யார்? சுதந்திரம் அடைந்தபிறகு, நம் நாட்டில் பல மாநிலங்கள் இரண்டாகப் பிரிந்திருக்கின்றன. அதற்கான காரணங் கள் உண்டு. இப்போதுகூட ஆந்திரத்தில் இருந்து பிரிந்து தனித் தெலுங்கானா உருவாகப் போராடுகிறார்கள். தமிழ்நாடு இரண்டு மாநிலங்களாகப் பிரிவதற்கான வலுவான காரணங் கள் தற்போது இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எதிர்காலத்தில் எப்படியோ?!


எம்.மிக்கேல் ராஜ், சாத்தூர்.

பழைய நடிகர்கள் அடைமொழியைவைத்தே புகழ் பெற்றிருக்கிறார்கள். உதாரணமாக, 'சிவாஜி' கணேசன், 'தேங்காய்' சீனிவாசன், 'என்னத்த' கன்னையா, 'ஒருவிரல்' கிருஷ்ணா ராவ், 'வெண்ணிற ஆடை' மூர்த்தி இப்படி இன்னும் நிறையப் பேர். இப்போது அதுபோல் ஏன் வைத்துக்கொள்வது இல்லை?

அப்போது எல்லாம் முதலில் ஏற்று நடித்துப் பிரபலமான கதாபாத்திரங்களை அடைமொழியாகப் பயன்படுத்தினார்கள். இப்போது மேலும் முன்னேறி பொதுவான அடைமொழிகளை (சூப்பர் ஸ்டார், மெகா ஸ்டார், அல்லது கேப்டன், தளபதி என்று) வைத்துக்கொள்கிறார்கள், நீங்களே சொல்லுங்கள் 'களத்தூர் கண்ணம்மா' கமல் என்றோ 'அபூர்வ ராக' ரஜினி என்றோ அழைத்தால் நன்றாகவா இருக்கிறது?!


ஜெ.கிறிஸ்டோஃபர், சென்னை-20.

'வெளிநாடுகளுக்குப் போக வேண்டும், உலகைச் சுற்றி வர வேண்டும் என்கிற என்னுடைய ஆசை இதுவரை நிறைவேறவில்லை' என்ற வருத்தம் எனக்கு உண்டு. உங்களுக்கு?

கொலம்பஸின் பாதிப் பெயர் வேறு உங்களுக்கு. நியாயம்தான், கவலைப்படாதீர்கள். நீங்களும் நானும் பூமி என்கிற விமானத்தில் அமர்ந்து சூரியனையே வருடத்துக்கு ஒருமுறை சுற்றி வருகிறோமாக்கும்!


ஜி.மகாலிங்கம், காவல்காரபாளையம்.

பத்திரிகைத் துறை என்னும் பள்ளியில்,

தன்மை (Tolerance), எச்சரிக்கை உணர்வு (Caution), அப்புறம்... கொஞ்சம் எருமைத் தோல் (இதுக்கு என்ன இங்கிலீஷ் வேண்டிக்கிடக்கு?!)!


கு.சிவதாணு, விழுப்புரம்.

'துஷ்டரைக் கண்டால் தூர விலகு?'- இதே அர்த்தத்தில் உங்களால் ஒரு புது பொன்மொழியை உருவாக்க முடியுமா?

முள்ளம்பன்றியிடம் முதுகைத் தேய்த்துக்கொள்ளாதே!


விஜயலட்சுமி, பொழிச்சலூர்.

ஒண்ணு - ஒண்ணே ஒண்ணு... என்ன வித்தியாசம்?

'ஒண்ணு' என்பது ஓர் எண். அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். 'ஒண்ணே ஒண்ணு' என்பது 'கிஸ்'ஸைத்தான் குறிக்கும்!


ச.இராசன், திருச்சி.

பாலைவனங்களில் ஒட்டகங்கள் தானாகவே வளர்கின்றனவா அல்லது வளர்க்கப்படுகின்றனவா? தண்ணீர் குடிக்காமல் அதனால் எவ்வளவு நாட்கள் இருக்க முடியும்?

ஆப்பிரிக்காவில் சிங்கமும் ஆஸ்திரேலியாவில் கங்காருவும் வளர்க்கப்படுகின்றனவா? தானாகவேதான் வளர்கின்றன. அதே மாதிரிதான் ஒட்டகங்களும். முதலில் ஒட்டகம் தோன்றியது வட அமெரிக்காவில் என்றால் பலருக்கு வியப்பாக இருக்கும். பிறகே ஒட்டகம் தென் அமெரிக்காவுக்குப் பயணித்தது. இன்றைய தென் அமெரிக்க 'ல்லாமா'(Llama)வின் மூதாதையர் ஒட்டகம்தான். அப்புறம் ஒட்டகம் ஆசியாவுக்கு வந்தது (Migration). அதைத் தொடர்ந்து, ஆப்பிரிக்காவுக்கு வந்து, கடைசியில்தான் மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்பட்டது. அரேபிய ஒட்டகம் என்பது (சவுதி அரேபியாவில் உள்ளது உட்பட) சூடான் போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒட்டகங்கள்தான். அரேபியா அதன் பிறப்பிடம் அல்ல. தண்ணீர் விஷயம்?! வட ஆஸ்திரேலியாவில் பாலைவனத்தில் 537 மைல் பயணத்தை வழியில் ஒருமுறைகூடத் தண்ணீர் குடிக்காமல் ஒட்டகங்கள் கடந்தன - 34 நாட்கள்! ஒரு வியப்பான விஷயம் - இப்படித் தண்ணீர் குடிக்காமல் வாடி வதங்கி, எலும்புக்கூடு தெரியும் அளவுக்கு ஒல்லியாகப் போய்விடும் ஒட்டகம் 10 நிமிடங்களில் 27 காலன் அல்லது 150 லிட்டர் தண்ணீர் குடிக்கும். தண்ணீரைக் குடிக்கும்போதே ஸ்லோமோஷனில் எலும்பு எல்லாம் மறைந்து, உடல் கட்டுக்கோப்பாக ஆகிவிடும் தனிச் சிறப்பு உயிரினங்களில் ஒட்டகத்துக்கு மட்டுமே உண்டு. கண் எதிரிலேயே நீங்கள் அந்த மாற்றத்தைப் பார்க்கலாம்!


என்.பாலகிருஷ்ணன், மதுரை.

வீட்டில் ஏதாவது பிரச்னை என்றால் மௌன விரதம் இருப்பீர்களா, உண்ணாவிரதம் இருப்பீர்களா?

முன்பெல்லாம் அசடு மாதிரி உண்ணாவிரதம் இருந்தது உண்டு. அதற்கு எந்த எஃபெக்ட்டும் இல்லை. சும்மா தெருக்கோடிக்குப் போய்த் திரும்பினால்கூட 'எந்த ஹோட்டலில் போய் வெளுத்துக் கட்டினீங்க?' என்று கமென்ட்தான் மிச்சம். பிறகு, மௌன விரதம் இருந்து பார்த்தேன். தயிர் சாதத்துக்கு ஊறுகாய்கூடக் கேட்க முடியாமல் பேஜார் ஆகிவிட்டது. இப்போது நான் எதையுமே கடைப்பிடிப்பது இல்லை!


பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.

உறவுகளை ஒட்டுமொத்தமாக ஒதுக்கிவிட்டு... ஒரு மனிதனால் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்துவிட முடியுமா சார்?

அப்படி வாழ ஆரம்பித்த உடனே புது உறவுகள் வந்து சேரும். மனிதனை 'அவன் யார்?' என்று நிர்ணயிப்பது உறவுகள்தான். (நான் குறிப்பிடுவது குடும்பத்து உறவுகள் மட்டுமல்ல).


பரமத்தி கனகு, ஈரோடு-4.

தாலாட்டு, ஒப்பாரி இதில் உங்களுக்குப் பிடித்தது எது?

இசை என்று பார்க்கும்போது இரண்டிலுமே ஓர் அழகு இருக்கிறது. உண்டா இல்லையா?

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites