மேலவையில் குஷ்பு?

18 April 2010 ·

மேலவையில் குஷ்பு?

'தமிழ் வருடப் பிறப்பு என்பது தை திங்கள் முதல் நாள்தான் என்று உரத்துச் சொன்னார் முதல்வர். ஆனால், அவர் புதல்வர் மு.க.அழகிரியோ சித்திரை முதல் தேதிதான் தன் மகனுக்கான 'ஜாக் கம்யூனிகேஷன்ஸ்' பிரைவேட் நிறுவனத்தை தடபுட லாகத் தொடங்கியிருக்கிறார். இதை என்னவென்று எடுத்துக் கொள்வது?'' கழுகார் கேட்டது நல்ல கேள்வி!

'''யெஸ்! சன் டி.வி-கூட 'பதினெட்டாவது பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சிகள்' என்றே சொன்னது - சித்திரைப் பிறப்பை! அழகிரியின் அணுகுமுறையில் தெரியும் திடீர் வேகம் தி.மு.க. குடும்பத்துக்குள் கவலையோடு கவனிக்கப்படுகிறது. 'ஜாக் கம்யூனிகேஷன்ஸ்' என்ற கேபிள் கனெக்ஷன் நிறுவனத்தைத் தொடங்குவது இப்போது அமலில் உள்ள குடும்ப சமாதான ஒப்பந்தப்படி சரிவராது என்பது குடும்பத்து மூத்த தலைவரின் உறுதியான கருத்து. ஆனால், மத்திய அமைச்சராக டெல்லிக்கு தான் அனுப்பி வைக்கப்பட்ட பிறகு, அடுத்தடுத்து அரங்கேறிய சில நிகழ்வுகளுக்கு குறிப்பிட்ட சிலரைக் காரணமாக நினைக்கும் அழகிரியோ, 'சமாதான ஒப்பந்தத்தை நான் மட்டுமா மீறுகிறேன்?' என்று எதிர்க்கேள்வி போட்டு விட்டாராம்.''

''ஓ!''

''அழகிரியைப் பாசத்தால் கட்டிப் போடக்கூடியவர் தாயார் தயாளு அம்மாள்

மட்டுமே! அவர் மூலமும் 'ஜாக் கம்னியூனிகேஷன்ஸ்' அமைப்பைத் தொடங்க விடாமல் தடுக்க இறுதிவரை முயற்சிகள் நடந்தன. அழகிரியோ, நாசூக்காக தன் தாயாரிடம் 'இதில் தலையிடாதீங்க' என்று சொல்லிவிட்டாராம். தொடக்க விழாவுக்கு கலைஞர் டி.வி-யின் இயக்குநர் அமிர்தம் எத்தனை விருப்பத்தோடு வந்தார் என்பது தெரியாது. தென்மாவட்ட அமைச்சர்களில் தங்கம் தென்னரசு, தமிழரசி ஆகியோரும் எம்.பி-யான ரித்தீஷும் எந்தத் தயக்கமும்

இன்றி கலந்துகொண்டனர். ஆனால், 'விழாவுக்கு வந்தே ஆக வேண்டும்' என அழகிரி அழைத்தும்... வர ஒப்புக் கொண்டிருந்த தயாளு அம்மாள் கடைசி நேரத்தில் வரவில்லை. குடும்பத் தலைவர் தடுத்தாட்கொண்டதே காரணமாம்!''

''அப்பா - மகனாக நடிகர் திலகம் டபுள் ஆக்ஷன் கொடுக்கும் படங்களில், குடும்பத் தலைவிக்கு இதுபோன்ற உணர்ச்சிப் போராட்டம் ஏற்படுவதைப் பார்த்த ஞாபகம்!'' என்று நாம் சொல்ல... கழுகார் முகத்திலோ தொடர்ந்து சிந்தனை ரேகைகள்.

''அழகிரியைவிட அவர் புதல்வர் தயாநிதி அழகிரியின் அணுகுமுறைகள் குறித்தே படபடப்பான கேள்விகள் நிலவுகின்றன. தனது புதிய நிறுவனத்தின் தொடக்க விழா முடிந்ததும் பத்திரிகையாளர்களை சந்தித்த துரை தயாநிதி, 'சென்னையிலிருக்கும் 17 லட்சம் கேபிள் இணைப்புகளையும் படிப்படியாக எங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதுதான் முதல் வேலை!' என்று சொல்லியிருப்பதையெல்லாம் தி.மு.க-வின் மேல்மட்டப் பிரதிநிதிகள் கவனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 'எந்தவொரு தொழிலையும் யார் வேண்டுமானாலும் செய்யலாம். செல்போன் தொழிலில் நிறையப் பேர் ஈடுபடுவதில்லையா? அதேபோன்றுதான் இந்தத் தொழிலும்' என்றெல்லாம் தன் மகன் வீசிய அதிரடிகளை, உள் அறையில் அமர்ந்து கேஷுவலாக கேட்டுக் கொண்டிருந் தாராம் அழகிரி.''

''கேப்டன் டி.வி-யும் ஜோராகத் தொடங்கி விட்டதே..?''

''சேனலில் செய்தி வாசிப்பு இப்போ தைக்கு இல்லை. ஒரு மாதத்துக்கு மேலாகுமாம். எல்லா நிகழ்ச்சிகளையும் ஒருநாள் முன்னதாகவே பதிவு செய்து பி.எஸ்.என்.எல்-லிடம் கொடுத்து விடுகிறார்களாம். சுமங்கலி கேபிள் விஷன் மூலமாகத்தான் கேப்டன் டி.வி. எல்லா வீடுகளுக்கும் போகிறது. அரசியல் தலைவராக வெள்ளை முழுக்கை சட்டை - வேட்டியில் கம்பீரம் காட்டும் விஜயகாந்த், சேனல் நிறுவனர் என்ற முறையில் சேனல் ஆபீஸுக்கு வரும்போது அந்த டிரெஸ் கூடாது என்பது மனைவியின் அன்புக் கட்டளையாம். 'பொழுதுபோக்கு அம்சத்துக்கே இதில் பிரதான இடம். எனவே, கலர்ஃபுல் மனிதராக இங்கே நடமாடுங்கள்' என்று அதற்கொரு லாஜிக்கும் சொல்லியிருக்கிறாராம் பிரேமலதா!''

''ஆக்ஷன் லேடியான திலகவதி ஐ.பி.எஸ்-ஸின் மகள் திவ்யாவுக்கு மே 15திருமணம். கடந்தகால வாழ்க்கையின் வருத்தங்களையெல்லாம் மறந்துவிட்டு, புதுப் பாதையில் போய்க் கொண்டிருக்கிற அவர் வீட்டில், இந்த கல்யாண விஷயத்திலும் ஒரு புயல். திலகவதியும் நாஞ்சில் குமரன் ஐ.பி.எஸ்-ஸும் மனமொத்த தம்பதியாக வாழ்ந்த காலத்தில் பிறந்த திவ்யா... இப்போது ரேங்க் வாங்கி பட்டம்பெற்ற டாக்டர். ஆனால், அவருடைய நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு திலகவதிக்கு அழைப்பு வைக்கவில்லையாம் நாஞ்சில் குமரன் தரப்பு. திருமணத்துக்கான அழைப்பிதழிலும் 'நாஞ்சில் குமரன் - மங்களம் குமரன்' தம்பதியின் பெயர்தான் பெற்றோராகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 'பத்து மாதம் சுமந்து பெற்ற என்னை விடுத்து, யாரையோதாயாராகக் காட்டுவது என்ன நியாயம்?' என்று புழுங்கித் தவிக்கிறாராம் திலகவதி''

''கழுகாரே! பிரபு திலக் என்றொரு மகனும் உண்டே அவருக்கு?''

''தாய் - தந்தை பிரிந்த பின்பும் முழுக்க முழுக்கத் தாயிடம் வளர்ந்தவர் அவர். அவர் வாழ்க்கையிலும் இடையிடையே சர்ச்சைப் புயல்கள். ஒருவழியாக இப்போது ஒரு மருத்துவக் கல்வி நிறுவனத்தில் செட்டில் ஆகிவிட்டார் பிரபு திலக்...'' என்ற கழுகார் சட்டென்று உச்சுக் கொட்டினார். நாம் புருவம் உயர்த்த...

''அடுத்த வருடம் மார்ச் மாதத் தோடு திலகவதியின் பதவிக் காலம் முடிகிறது. கூடுதல் டி.ஜி.பி. பதவியிலிருக்கும் அவருக்கு டி.ஜி.பி. அந்தஸ்துக்கான பதவி உயர்வு இந்நேரம் வந்திருக்க வேண்டும். இவர் பேட்ச்சில் வந்த லத்திகா சரண் பதவி உயர்வு பெற்று, தமிழக டி.ஜி.பி-யாகவே ஆகிவிட்ட நிலையில்... தீர்ப்பாயம் வரை போய் சாதக முடிவு வந்தும் தனக்கு மட்டும் உயர்வு வராமல் தடுப்பது எந்த சக்தி என்று தடுமாறிக் கொண்டி ருக்கிறாராம் திலகவதி!''

தொலைக்காட்சியில் பனிமலை சிகரம் ஒன்று காட்சிதர...

''தி.மு.க-வின் மாவட்டச் செயலாளர்கள் நால்வர் கொளுத்தும் இந்தக் கோடையிலும் நடுங்கிக் கொண்டிருக் கிறார்களாம். பென்னாகரம் இடைத் தேர்தலில் அவர வருக்கு ஒதுக்கப்பட்ட ஏரியாவாரியாக, மாவட்டச் செய லாளர்கள் பெற்றுத் தந்த ஓட்டுகளைப் பார்த்தபோது... இந்த நால்வருக்குப் பொறுப்பான பகுதிகளில் மட்டும் மைனஸில் பதிவாகியிருக்கிறதாம் தி.மு.க. வாக்குகள்! கே.கே.எஸ்.எஸ்.ஆர்., ராணிப்பேட்டை காந்தி, பழனி மாணிக்கம் மற்றும் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்தானாம் அந்த நாலு பேர். துணை முதல்வர் ஸ்டாலின் கண் சிவந்துபோய், இந்த நால்வருக்கும் தனி கண்காணிப்பே போட்டிருக்கிறாராம். இதில் ஒரு மா.செ-வின் ரத்த உறவு ஒருவர் முந்திரி ஏரியாவில் மந்திரியாகவே செயல்படுகிற விவகாரங்களையெல்லாம் தோண்டி எடுக்க ஆரம்பித்து விட்டதாம் கண்காணிப்புப் படை!''

கழுகார் செல்போனில் மிஸ்டு கால்! எடுத்து பொறுப்பாக டயல் செய்து பேசியவர், ''கண்ணுக்கு நிறைந்த குஷ்பு சீக்கிரமே கருத்துக்கு நிறைவாக பேசவும் தொடங்கலாம். மேல்சபையில் அவருக்கு ஒரு அதிர்ஷ்ட ஸீட் நிச்சயம் என்கிறார்கள். மானாட மயிலாட... மேல்சபையில் இன்னும் சில மெம்பர்களும் கலர்ஃபுல்லாக கருத்தாடு வார்கள் என்கிறது என் ஸோர்ஸ்!''

வடக்கு திசை நோக்கி கழுகார் பறந்த காரணம் புரியவில்லை.

''ஏற்கெனவே சர்ச்சையில் சிக்கியும் அந்த உலகாளும் தலைவரின் நிறுவனத்துக்கு உஷார் பிறக்கவில்லையே'' என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். குறிப்பிட்ட ஒரு கல்வி நிறுவனத்துக்கு விடுமுறை அளித்து அதே கட்டடங்களுக்கு மருத்துவ கல்லூரியின் போர்டு மாட்டி செக்கிங் வந்த கவுன்சில் முன்பு சூப்பர் டிராமா போட்டார்களாம். டெல்லி வரை போயிருக்கிறது புகார்.
நானே வருவேன்!

மறைமலைநகரில் விடுதலைச் சிறுத்தைகள் பிரமாண்டமான விழா எடுத்து கருணாநிதிக்கு 'அம்பேத்கர் சுடர்' என்று விருது கொடுத்திருக்கிறார்கள். விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வைத்த சில கோரிக்கைகளுக்கு பதில் அளித்த முதல்வர், ''ஆறாவது முறையும் நான்தான் முதல்வராவேன் என்று விழாவில் பேசியவர்கள் சொன்னார்கள். அப்படி நான் ஆறாவது முறையும் முதல்வராகும்போது சிறுத்தைகள் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவேன்!'' என்றார். 'செம்மொழி மாநாட்டுக்குப் பிறகு ஓய்வு' என்றும், 'அடுத்த தேர்தலில் ஸ்டாலினை முதல்வராக முன்னிறுத்தியே பிரசாரம்' என்றும் வெளியில் பரவிவந்த தகவல்களுக்கு இதன்மூலம் இப்போதைக்கு விழுந்தது முற்றுப்புள்ளி என்கிறார்கள் தி.மு.க-வில் - லேசான நிம்மதியுடன்! அழகிரி தரப்பு இதை கூடுதல் உற்சாகத்தோடு ரசித்ததாகக் கேள்வி

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites