டிஜிட்டலில் செதுக்கிய மீட்டர்!

21 April 2010 ·

டிஜிட்டலில் செதுக்கிய மீட்டர்!

கார் டேஷ் போர்டில் இருக்கும் மீட்டர்கள் அனைத்தும் வேகம் மற்றும் எரிபொருள் அளவைக் காட்டும் கருவிகளாகவே இருந்து வருகின்றன. ஆனால், சேலம் சோனா கல்லூரி மாணவர்கள் வடிவமைத்துள்ள புதிய கருவி, டேங்கில் இருக்கும் எரிபொருள், கிலோ மீட்டர், வேகம் என அனைத்தையும் கிராபிக்கல் எல்சிடி மூலம் டிஜிட்டல் முறையில் காட்டுகிறது. காரில் இருக்கும் எரிபொருள் அளவையும் கார் போகும் வேகத்தையும் வைத்து, மேற்கொண்டு எவ்வளவு தூரம் பயணிக்கலாம் என்பதையும் இந்த 'இன்டெலிஜென்ட் டேஷ் போர்டு' காட்டுகிறது. ஆம்! இதுதான் இவர்கள் இதற்குச் சூட்டியிருக்கும் பெயர்.

''இது போன்ற வசதி, சாதாரண கார்களில் இப்போது இல்லை. இதை எல்லா கார்களுக்கும் வரவேண்டும். இதுதான் எங்கள் நோக்கம்!'' என்கிறார்கள் இந்த இன்டெலிஜென்ட் டேஷ் போர்டை மிகக் குறைந்த செலவில் உருவாக்கியிருக்கும் மாணவர்களான சங்கர், ஹரி, சிவா ஆகிய மூவரும்.


கமல் தந்த இன்ஸ்பிரேஷன்!

நின்ற வாக்கிலேயே செல்வதற்கு உதவி செய்யும் வாகனம் - செக்வே. 'தசாவதாரம்' படத்தில் கமல்ஹாஸன் பயன்படுத்துவதற்கு முன்பே மேலை நாடுகளில் இது பிரபலம். ஆனால், இதை கமல் அறிமுகப்படுத்திய பிறகுதான் நம்மூரில் ஆட்டோமொபைல் மாணவர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

மிகக் குறைந்த செலவில் சூரிய ஒளியாலும், மின்சாரத்தாலும் இயங்கக் கூடிய 'கேம்பஸ் ரைடர்' வாகனத்தை தஞ்சை பெரியார் மணியம்மை கல்லு£ரி மாணவர்களான சித்தார்த்தன், விவேக், சதீஷ்குமார், அன்பழகன் ஆகியோர் வடிவமைத்திருக்கிறார்கள்.

''வாகனங்கள், வெளியிடும் புகையால் சுற்றுச்சூழல் மாசுபட்டு ஓசோன் லேயர் வரை அது பாதிப்பை ஏற்படுத்துவதும், அதனால் புவி வெப்பம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருவதும் நம் எல்லோருக்கும் அறிந்த அபாயம்!

இதை மனதில் வைத்துப் பார்க்கும்போது, சூரிய ஒளியால் இயங்கக் கூடிய எந்த வாகனமும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று'' என்றுசொன்ன மாணவர்கள், தாங்கள் வடிவமைத்திருக்கும் வாகனம் பற்றிச் சொன்னார்கள்.

''இது ஒரு எலெக்ட்ரிக் ரைடர். சூரிய ஒளியைப் பயன்படுத்தி இதற்கு சார்ஜ் ஏற்றிக்கொள்ளலாம். பயன்படுத்துவதற்கு மிக எளிதானது. நின்றுகொண்டே ஆக்ஸிலேட்டரைத் திருகினால், இது முன்னோக்கிச் செல்லும். இதில் மொத்தம் மூன்று சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 'படத்தில் இரண்டுதானே இருக்கிறது?' என்று பதறாதீர்கள். பேட்டரிக்குக் கீழே பாருங்கள் ஒரு சக்கரத்தின் விளிம்பு மட்டும் தெரியும். இதில் ஒருவர் நின்று கொண்டும், இன்னொருவர் உட்கார்ந்து கொண்டும் போக வசதியாக ஒரு இருக்கையை அமைத்திருக்கிறோம். தொழிற்சாலைக்குள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்த்துக்குப் பொருட்களை எடுத்துச் செல்லவும் இதைப் பயன்படுத்தலாம்.

இதில், 48 வோல்ட் பவர் கொண்ட பேட்டரிகள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இதை நேரடியாக பேட்டரியில் சூரிய ஒளியைக் கொண்டோ, மின்சாரம் கொண்டோ சார்ஜ் ஏற்றிக் கொள்ளலாம்.

பைக்கில் இருப்பதுபோல ஆக்ஸிலரேட்டர் கைப்பிடியில் வைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 20 கி.மீ வேகம் வரை செல்லலாம். இதை பேலன்ஸ் செய்வது மிகவும் எளிது. திருப்புவதற்கு மிக எளிதான ஸ்டீயரிங் இருக்கிறது. எதிர்காலத்தில் பின் பக்கமாக (ரிவர்ஸ்) செல்லும் வகையிலும், ஊனமுற்றோர் பயன்படுத்தும் வகையிலும் இதை உருவாக்கும் திட்டமும் இருக்கிறது' என்கின்றனர்.

வெல்டன்!

எமர்ஜென்சி பேட்டரி சார்ஜர்!

காரில் பேட்டரி செயலிழந்துவிட்டால், பிறகு அது தள்ளு மாடல் வண்டி ஆகிவிடும். நவீன தொழில்நுட்பம் கொண்ட வாகனங்களைத் தள்ளிவிட்டுக்கூட ஸ்டார்ட் செய்ய முடியாது. அதனால், பேட்டரியைச் சரியாகப் பராமரிக்காமல் விட்டால், எப்போது வேண்டுமானாலும் அது நம்மைப் பழி வாங்கிவிடும். பயணத்தின்போது நடு வழியில் பிரச்னை செய்தால், பேட்டரியை சார்ஜ் செய்ய வேண்டும் அல்லது புதிதாக மாற்ற வேண்டும். இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காண, ஒரு எமர்ஜென்ஸி பேட்டரி சார்ஜரை உருவாக்கியுள்ளார் பவானி அருகே உள்ள்ள சித்தார் கிராமத்தைச் சேர்ந்த நந்தகுமார்.

கோவை ஜி.டி.நாயுடு ஆட்டோமொபைல் பயிற்சிப் பள்ளியில் பயின்று, தற்போது டிப்ளமோ படித்து வரும் நந்தகுமார் இந்த பேட்டரி சார்ஜரை உருவாக்கிய விதம் பற்றிச் சொன்னார். ''வழக்கமாக நாம் பேட்டரியை சார்ஜ் செய்ய மின்சாரத்தின் மூலம் இயங்கும் சார்ஜரையே பயன்படுத்தி வருகிறோம். பெட்ரோலில் இயங்கும் பேட்டரி சார்ஜரைக் உருவாக்கலாமே எனத் திட்டமிட்டு, பல மாதங்கள் வெவ்வேறுவிதமான சோதனைகள் நடத்தி இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளேன். இப்போது நான் உருவாக்கியுள்ள சார்ஜரின் மூலம் விரைவாக பேட்டரியை சார்ஜ் செய்ய முடியும். எலெக்ட்ரிக்கல் சம்பந்தப்பட்ட பாகங்களையும் பரிசோதித்துப் பார்க்க முடியும்'' என்றார்.

35 சிசி, 2 ஸ்ட்ரோக் பெட்ரோல் இன்ஜின், 12 வோல்ட் ஆல்டர்னேட்டர் டைனமோ - இவை இரண்டையும் இணைத்து ஒரு பாக்ஸில் பொருத்தி, சார்ஜரைக் கையாள அடக்கமான சாதனமாக மாற்றியுள்ள நந்தகுமார், ''இந்த சார்ஜரைக் கொண்டு, பைக் பேட்டரியை 30 நிமிடத்திலும், கார் பேட்டரியை 1 1/2 மணி நேரத்திலும் சார்ஜ் செய்ய முடியும்!'' என்கிறார்.



0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites