''தம்பி, என் கதியைப் பார்த்தாயா?''

22 April 2010 ·


''தம்பி, என் கதியைப் பார்த்தாயா?''


கண்ணீர் அலையில் பிரபாகரன் தாய்!


டந்த பதினாறாம் தேதி இரவில் எத்தனையோ பேரைச் சுமந்து வந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் புலித் தலைவர் பிரபாகரனின் தாய் பார்வதியும் இருந்தார். உடன் வந்தவர்களுக்கு அவர் வயதான மூதாட்டி, அவ்வளவுதான். ஆனால், சென்னை விமான நிலையம் அவரை வேறு மாதிரியாகப் பார்த்தது. 'நீங்க இங்கே இறங்குவதற்கு அனுமதி இல்லை. எனவே, வந்த விமானத்திலேயே மலேசியா போகலாம்' என்றார்கள் அதிகாரிகள். பார்வதிக்குப் பக்கத்தில் துணையாக இருந்த பெண்ணுக்கு தலையை ஆட்டுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. ஆனால், அந்தத் தாய்க்கு அதுவும் தெரியவில்லை. ஏதோ நடக்கிறது என்று தெரிகிறது. ஆனால், என்னவென்று புரியவில்லை. லேசாக இமைகள் அசைகின்றன. ஆனால், உள்ளுணர்வுக்கு அதை முழுமையாக யோசிக்கும் சக்தி இல்லை. அவர் இங்கு வந்தது சொந்தங்களைச் சந்திக்கவோ, இங்குள்ள புலி ஆதரவாளர்களை உசுப்பேற்றவோ, ராஜபக்ஷே போர்க் குற்றவாளி என்று பிரசாரம் செய்யவோ அல்ல. தன்னுடைய நோவுக்கும் உடல் நலிவுக்கும் மருந்திட்டுக்கொள்வதற்காக! தவித்த வாய்க்குத் தண்ணீர் மறுப்பதுபோல்தான் சிகிச்சை அவருக்கு இங்கே மறுக்கப்பட்டு இருக்கிறது

திருக்குறளும், குறிஞ்சிப்பாட்டும், நாலடியாரும், திரிகடுகமும் விருந்தோம்பலை எப்படி எல்லாம் வியந்தோதியிருக்கிறது என்று மாநாடு கூட்டி நம்முடைய முதுகை நாமே தட்டிக்கொள்ளக் காத்திருக்கும் நேரத்தில்தான், இப்படி ஒரு சம்பவம் தமிழகத்தில் நடந்திருக்கிறது.

அப்பா வேலுப்பிள்ளை வல்வெட்டித்துறைக்காரர். அம்மா பார்வதி பருத்தித்துறையைச் சேர்ந்தவர். வேலுப்பிள்ளை அரசு அதிகாரியாக இருந்ததால் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊர் மாற்றிக்கொண்டே இருப்பார்கள். பிரபாகரன் ஆயுதம் தூக்கி தலைமறைவான காலத்தில்

இந்தக் குடும்பத்துக்கு வீடு கிடைக்காமல், கிடைத்தாலும் அங்கு நிரந்தரமாகத் தங்க முடியாமல் அலைந்து வந்தார்கள். ஒருகட்டத்தில் இந்தியா வந்து திருச்சியில் தங்கினார்கள். அங்கே போர் மேகம் சற்று விலகிய சமயம் ஈழத்துக்குப் போனார்கள். இறுதிப் போர் முற்றுகைக்குப் பிறகு... எல்லாம் முடிந்த பிறகு... முள்வேலி முகாமில், ராணுவப் பாதுகாப்புக்குப் போனவர்கள்... அதைஅடுத்து இலங்கை ராணுவத்தின் கடுமையான கண்காணிப்புப் பிடிக்குள் இருந்தார்கள். வேலுப்பிள்ளை மறைவைத் தொடர்ந்து அங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் முயற்சியால் மலேசியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் பார்வதி அம்மாள். அங்கு அவருக்கு குறுகிய காலமே விசா தரப்பட்டு இருந்தது. எனவே, பிரபாகரனின் அக்கா வினோதினி, தான் இருக்கும் கனடாவுக்கே தாயாரை அழைத்துச் செல்ல விரும் பினார். அங்கு மருத்துவச் செலவு அரசாங்கத்தின் வசமாக இருப்பதால், ரொம்பவே யோசித்துதான் விசா கொடுப்பார்கள் என்று தெரியவர... மலேசியாவில் இருந்து தமிழகம் அழைத்து வந்து, பார்வதி அம்மாளுக்கான சிகிச்சையை முடித்துவிட்டு, அதன்பிறகு யார் பாதுகாப்பில் வைத்திருப்பது என்று முடிவெடுக்க நினைத்தார்கள். பழ.நெடுமாறன் இதற்கான முயற்சிகளைச் செய்தார். பிரபாகரனின் தாய் நெடுமாறன் வீட்டில் தங்கப்போவதாகத்தான் முகவரியும் தரப்பட்டது.

பார்வதி அம்மாள் புலிகள் அமைப்பின் உறுப்பினர் அல்ல. பிரபாகரனது அண்ணன் மனோகரன் தனது தம்பிக்கு இயக்கம் தொடர்பாக ஒரு கடிதம் அனுப்பிவைத்தபோது, அப்பா வேலுப்பிள்ளை - பார்வதியின் முகவரி அதில் இருந்தது. கடிதத்தைப் பெற்ற அந்தப் பெற்றோர், 'நீ பிரபாகரனுக்கு அண்ண னாக இருப்பது குடும்பம் சம்பந்தப்பட்டது. அவன் இயக்கத்தை நடத்துபவன். சொந்த பந்தத்தை முன்னிட்டு இப்படி உறவு கொண்டாடுவது தவறு' என்று சொல்லி, அந்தக் கடிதத்தைப் பிரிக்காமலே திருப்பி அனுப்பிவைத்தார்கள் அந்தத் தம்பதி. ஆனால் இன்று அவரை இயக்கத்தைக் காரணமாகக் காட்டி சிகிச்சைக்கு மறுத்திருப்பது ஆச்சர்யமானது!

கடந்த 10 ஆண்டுகளாகவே பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர் பார்வதி அம்மாள். சர்க்கரை வியாதியும் இருப்பதால் உடல் நிலை மேலும் பாதிக்கப்பட்டது. கிட்னி பாதிப்புக்கும் ஆளானவர். அண்மையில் தன் கணவர் வேலுப்பிள்ளை மறைந்த பிறகு, திடீர் திடீரென்று 'ஐயா... ஐயா..' என்று அவர் நினைப்பில் அழ ஆரம்பித்தால் வெகுநேரம் வரை விசும்பல் தொடர்ந்துகொண்டே இருக்குமாம். பார்வதி அம்மாள் தானாக இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை நிதானப்படுத்த முடியாது.

அதாவது... உடல் இயக்கத்தின் மிக முக்கியமான சிந்தனை, பேச்சு, அசைவுகள், நடை ஆகிய நான்குமே பாதிக் கப்பட்டுதான் இருந்தார்.

ஏப்ரல் 16-ம் தேதி காலைதான் இந்தியா செல்வதற்கான அனுமதி அவருக்குக் கிடைத்ததாம். அன்று இரவு விமானத்திலேயே இடம்பிடித்தார்கள். அவருடன் உதவிக்காக விஜயலட்சுமி என்ற நர்ஸ் வந்திருந்தார்.

இந்தத் தகவலை வைகோவிடம் மட்டும் சொல்லியிருக்கிறார் நெடுமாறன். அவர்கள் இருவர் மட்டும் தான் விமான நிலையத்துக்குச் சென்றிருக்கிறார்கள். ஆனால், அங்கு தமிழக போலீஸ் படை பலமாகக் காத்திருந்தது. இருவரையும் உள்ளேயே செல்லவிடாமல் தடுத்துவிட்டது. அந்தப் பெரும் போராட்டம் முடிவதற்குள், பிரபாகரனின் தாயார் மலேசியாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டுவிட்டார். இதுபற்றி வைகோ, ''தமிழனைத் தலை நிமிரவைத்த பிரபாகரனைப் பெற்றெடுத்த தாயைத் திருப்பி அனுப்பியதன் மூலம், தீராத பழியை தமிழ்நாடு அடைந்துவிட்டது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்தப் பாவம் நம்மை விட்டுப் போகாது. அவர் ஒன்றும் ஆள்மாறாட்டம் செய்து ரகசிய பெயரில் இந்தியாவுக்கு வரவில்லை. சொந்தப் பெயரில்தான் வந்தார். அவர் நெடுமாறன் வீட்டில் தங்கப்போவதாகத்தான் முகவரியையும் கொடுத்திருக்கிறார். அவரை மத்திய அரசுதான் திருப்பி அனுப்பியது என்றால், அவர்கள் ஏன் முன்னர் அனுமதி கொடுத்தார்கள். இப்போது மறுத்தார்கள். இரண்டுக்கும் மத்தியில் என்ன நடந்தது? 'மத்திய அரசாங்கமே கருணாநிதியின் ஆலோசனைப்படிதான் நடக்கிறது' என்று மன்மோகன் சிங் சொல்வது உண்மையானால், இந்த நடவடிக்கையும் கருணாநிதி சொன்னதால்தானே நடந்திருக்கும்?'' என்று கொதித்தார்.

''நீங்கள் அனைத்துத் தமிழ் உணர்வாளர்களையும் அழைத்துச் செல்லாமல் இந்த விஷயத்தை ரகசியம் காத்தது ஏன்?'' என்று வைகோவிடம் கேட்டபோது,

''இப்படியரு பலமான ஏற்பாட்டை நாங்கள் செய்திருந்தால் கருணாநிதிக்கு வேறு காரணமே தேவைப்பட்டு இருக்காது. புலிகளை வைத்து அரசியல் நடத்த பார்வதியைப் பயன்படுத்துகிறார்கள் என்று சொல்லி, அதையே காரணமாகக் காட்டி திருப்பி அனுப்பியிருப்பார். அவரை இங்கு மாநாட்டுக்கு அழைத்து வரவில்லை. எங்களுக்கு பார்வதி தாயைக் குணப்படுத்த வேண்டும் என்பது மட்டும்தான் நோக்கம். தமிழ் உணர்வாளர்கள் வருத்தப்படலாம். ஆனால், அப்படிச் செய்திருந்தால் கருணாநிதிதான் லாபம் அடைந்திருப்பார்'' என்று பதில் அளிக்கிறார்.

''எத்தனையோ கொடூரங்களை நடத்திக் காட்டிய இலங்கை அரசேகூட பார்வதி அம்மாள் விடுதலைப் புலி இயக்கத்தின் உறுப்பினர் அல்ல என்ற விளக்கத்தை ஏற்றுக்கொண்டுதான் மலேசியா செல்ல அனுமதித்தது. மலேசியாவும் தங்க அனுமதித்தது. சென்னை விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பிய உடனேயே யோசிக்காமல் மறுபடியும் ஒரு மாத கால அனுமதியை மலேசியா வழங்கியுள்ளது. மலேசியாவில் இருந்து கிளம்பிச் சென்ற ஒருவர், அடுத்த மூன்று மணி நேரத்தில் மீண்டும் வந்து இறங்க சட்டப்படி அனுமதி கிடையாது. அதைச் சொல்லி மறுத்திருந்தால் பார்வதி, மீண்டும் கொழும்புக்குத்தான் போயிருக்க வேண்டும். ஆனால், அவருக்குத் துணையாகச் சென்றவரோ மலேசிய பிரஜை. விசா இல்லாமல் கொழும்பில் இறங்க முடியாது. தனியாக அநாதை யாகத்தான் பார்வதி அனுப்பிவைக்கப்பட்டு இருப்பார்'' என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

கியூபா ஹவானாவில் நடந்த அணி சேரா மாநாட்டுக்குச் சென்ற பிரதமர் மன்மோகன் சிங்கை இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்தித்தார். அவர் மீது தமிழகத்தில் சூளைமேடு, கீழ்ப்பாக்கம் பகுதி காவல் நிலையங்களில் வழக்குகள் இருக்கின்றன. அவரும் நிம்மதியாக இங்கு வந்து போகிறார். பத்திரிகைகளுக்கு வெளிப்படை யாகப் பேட்டிகள் கொடுப்பார். ஈ.என்.டி.எல்.எஃப். இயக்கத்தைச் சேர்ந்த பரந்தன் ராஜன் குரூப் இங்கு வெளிப்படையாக இயங்குகிறது. அவர்கள் மீதும் வழக்குகள் உண்டு என்றெல்லாம் சுட்டிக்காட்டு கிறார்கள் ஈழத் தமிழ் உணர்வாளர்கள்.

இரவு பத்தரை மணிக்கு வந்த பார்வதி ஒரு மணி நேரக் காத்திருப்புக்குப் பிறகு, மீண்டும் மலேசியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டு, அங்கு இறக்கிவிடும்போது அதிகாலை மூன்றரை. இந்த ஐந்து மணி நேரத்தில் நடுவானத்தில் அவர் நடுங்கிப்போய்விட்டாராம். சென்னை யில் இறக்காமல் திருப்பி அனுப்பிவிட்டார்கள் என்பதைச் சிரமப்பட்டு அவர் நினைவில் பதியவைத்தபோது... அவரது உதட்டில் இருந்து, ''தம்பி, என் கதியைப் பார்த்தாயா?'' என்று 'எங்கோ' இருக்கும் தன் மகனை நோக்கி வார்த்தைகள் வந்தனவாம். கூடவே, கண்களில் இருந்து அலை அலையாக இயலாமை கலந்த நீர்த் துளிகள்!

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)
There was an error in this gadget

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil