''நிச்சயமா ஒருத்தனைக் காதல் மாத்தும். ஆனா, அப்படி ஒரு காதலாலும் மாற்ற முடியாத ஒருவனின் கதைதான் 'மந்திரப் புன்னகை'. தன் தேவை, தன் வசதி, தன் சௌகர்யம் மட்டுமே போதும்னு நினைக்கிறவன். 'மந்திரப் புன்னகை'யில் வில்லன்னு தனியா ஓர் ஆள் கிடையாது. இது நல்லவன், கெட்டவன்னு யாரோ ரெண்டு பேருக்குள் நடக்கிற போரும் இல்லை. எல்லாமே ஒருத்தன்தான். இதுவரை கல்யாணக் குணங்களோடு இருக்கிறவங்களைப்பத்தி சொன்ன நான், முதல் தடவையா மரபு மீறி இருக்கேன். இதில் ஒரு சின்னப் போட்டி இருக்கு. எழுதுகிற பழனியப்பனுக்கும், நடிகன் பழனியப்பனுக்கும் நடக்கிற போட்டி. கதாபாத்திரங்களை உருவாக்கிய எழுத்தாளனுக்கும், அவற்றுக்கு உருவம் கொடுக்கிற நடிகனுக்கும் நடக்கிற யுத்தம். இது தற்பெருமை இல்லை. இருந்தாலும், சொல்றேன்னா, அவ்வளவு அர்த்தப்பூர்வமா வந்திருக்கு!'' - மூச்சுவிடாமல் அழகு தமிழில் வார்ப்பாகப் பேசுகிறார் இயக்குநர் கரு.பழனியப்பன்.
''நீங்களே ஒரு நம்பிக்கையான இயக்குநர். ஏன் திடீரென்று நடிக்கணும்னு திரும்பிட்டீங்க?''
''என் ஒவ்வொரு படத்துக்கும் கதையை ரெடி பண்ணிட்டு ஹீரோ யாருன்னு காத்திருப்பேன். என் கதைகளுக்கு தயாரிப்பாளர்களே ஹீரோ தேடிக் கொடுத்திருக்காங்க. நானும் மகிழ்ந்து செய்திருக்கேன். இந்தக் கதை ரெடியானதும், முழுக்கக் கேட்டுட்டு, 'நீயே இதில் நடிக்கலாம். ரொம்ப நல்லா வரும். வேறே சான்ஸே இல்லை'ன்னு என் தயாரிப்பாளர் கார்த்திக் சொன்னார். அவர் என் நண்பர். அவரே சொன்ன பிறகு, 'சரி'ன்னு சொல்லிட்டேன். உங்களையும் என்னையும் மாதிரி ஒரு மனுஷன்தான் இந்தக் கதைக்கு வேணும். பார்க்கிற ரசிகன் அவனையே கொஞ்சம் பார்த்துக்கிற மாதிரியான படம் இது!''
''இதில் நீங்க நடிக்கிற மாதிரி... கதையில் இருக்கிற சௌகர்யம் என்ன?''
''கதையைச் சொல்லிடலாம். ஆனா இப்போ இல்லை. எல்லோரையும் தியேட்டருக்குக் கூப்பிட்டு கலர்ஃபுல்லா கதை சொல்றேன். இது காதல் படம். எது சந்தோஷமோ, அதுவே துக்கம் தரும். உலகத்திலே பெரிய விஷயம் அன்பு. ஆனால், அந்த அன்பு தருகிற வலி ரொம்பப் பயங்கரமா இருக்கும். மனித உணர்வுகளைப் பயப்படாமல் சொல்லணும்னு ஆசை. அது இந்தப் படத்தில் இருக்கு. மத்த ஹீரோக்களை இப்படிப் பண்ணவைக்கலாமான்னு யோசிச்சிருக்கேன். அவங்க தயங்கிருவாங்க. ஆனால், எனக்குச் சுதந்திரம் இருக்கு. என் நண்பன் தயாரிப்பாளர். என் கதை, என் டைரக்ஷன். நானே ஹீரோன்னு தடைகள் எதுவுமே இல்லை. 'கனிகளின் மீது விழுந்தோரே, உண்ணுங்கள்; கடலின் மீது விழுந்தோரே, நீந்துங்கள்'னு சொல்வாங்க. நான் இந்த நடிப்புக் கனியை இப்போது ருசித்துக்கொண்டு இருக்கிறேன்.''
''மீனாட்சி உங்களுக்கு ஜோடியா எப்படிச் சரியா வந்தாங்க?''
''மங்களகரமா வந்தால், குத்துவிளக்கு மாதிரி இருக்கும். மார்டன் டிரஸ்ஸில் வந்தாலும் அமர்க்களப்படுத்துவாங்க. எம்.பி.பி.எஸ் படிக்கப் போன பொண்ணு, இப்ப பேருக்கு ஏத்த மாதிரி தமிழ்ப் பொண்ணா ஆகிட்டாங்க!''
''உங்களோட ஆஸ்தான மியூஸிக் டைரக்டர் வித்யாசாகர் டியூன்ஸ் எப்படி வந்திருக்கு?''
''எப்பவும் எல்லோருக்கும் தர்றதைவிடஎனக்கு ஸ்பெஷலாத் தருவார் வித்யாசாகர். அழகான பாடல் எழுதத் தெரிந்த அறிவுமதி அண்ணன் கொஞ்ச நாளா ஒதுங்கி இருந்தார். 'வாங்கண்ணே'னு அவர் கையைப் பிடிச்சு அழைச்சுட்டு வந்து பாடல் எழுதவெச்சிருக்கேன். 'இந்த உலகத்தில் இருக்கிறது எல்லாமே ஒரேவிதமான உணர்ச்சிகள் கிடையாது. துக்கம், உறவு, மகிழ்ச்சி எல்லாமே ஆளுக்காள் வேறுபடுது. எத்தனை மனிதர்கள், எத்தனை முகங்கள்'னு டைட்டில் பாடலுக்கு முகாந்திரம் சொல்லும்போதே அண்ணன் எழுத ஆரம்பிச்சிட்டார்.
'சித்தன் முகம் ஒன்று,
புத்தன் முகம் ஒன்று
பித்தன் முகம் ஒன்று,
எத்தன் முகம் ஒன்று
எத்தனை முகங்கள் வீதியிலே
என் முகம்போல வேறு இல்லை'ன்னு வார்த்தைகள் சரசரன்னு விழுந்துட்டே இருந்தது. அனுபவ தரிசனம்தான் இந்த வார்த்தைகளைக் கொண்டுதர முடியும். 'மந்திரப் புன்னகை' நம்மை நாமே பார்க்கப்போற தரிசனம்!''
0 comments:
Post a Comment