பிரபாகரன் தாயாரின் சிகிச்சைக்காக மத்திய அரசுக்கு கடிதம் எழுதத் தயார் : கருணாநிதி அறிவிப்பு

19 April 2010 ·


பிரபாகரன் தாயாரின் சிகிச்சைக்காக மத்திய அரசுக்கு கடிதம் எழுதத் தயார் : கருணாநிதி அறிவிப்பு

பிரபாகரன் தாயார் தனது சிகிச்சைக்காக மீண்டும் சென்னை வர விரும்பினால், மத்திய அரசின் அனுமதிக்காக கடிதம் எழுத தயாராக இருப்பதாக முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்,.

மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை மீண்டும் மலேசியாவுக்கு திருப்பி அனுப்பியது குறித்து சட்டப்பேரவையில் இன்று உறுப்பினர்கள் பிரச்னை எழுப்பினார்கள்.

இந்த விவாதத்தில் டி.சுதர்சனம் (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பா.ம.க.), பாலபாரதி (மார்க்சிஸ்டு), சிவபுண்ணியம் (இந்திய கம்யூ.), சதன் திருமலைக்குமார் (ம.தி.மு.க.), ரவிக்குமார் (விடுதலை சிறுத்தைகள்) ஆகியோர் பேசினார்கள்.

இதற்கு பதில் அளித்து முதலமைச்சர் கருணாநிதி பேசியது:

இதுபற்றி என்னுடைய கருத்துக்களை கூறுவதற்கு முன்பு, கடந்த கால வரலாற்றில் சில துளிகளையாவது இந்த அவைக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

இந்திய அரசினுடைய உத்தரவு - முதலில் பார்வதி அம்மாள் சிகிச்சைக்காக விசா பெறலாம் என்று அமைந்து, அந்த விசாவினைப் பெற்று அவர் சென்னை விமான நிலையத்துக்கு வந்தபோது, மத்திய அரசினுடைய அதிகாரிகளே சிலர், விமான நிலையத்தில் - விமானத்துக்குள்ளே நுழைந்து தவறுதலாக உங்களுக்கு விசா வழங்கப்பட்டிருக்கிறது. ஆகவே, நீங்கள் திரும்பிச் செல்ல வேண்டும் என்று கூறி - எங்கே மலேசியாவிலிருந்து வந்த அவர்களை, மலேசியாவிற்கே திரும்ப அனுப்பியிருக்கிறார்கள். இது பற்றிய தகவல் மறுநாள் காலையிலேதான் 'ஹிண்டு' பத்திரிகையைப் படித்து நான் முழுத் தகவல்களையும் தெரிந்து கொள்ள முடிந்தது.

இதேபோல ஒரு சம்பவம் - 23-8-1985 அன்று நம்முடைய தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டுமென்ற ஒரு உத்தரவு தந்தை செல்வா அவர்களுடைய மகன் சந்திரஹாசன், பாலசிங்கம், சத்தியேந்திரா ஆகியோரை நாட்டை விட்டு வெளியேற்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது. அந்த ஆணையும் அன்றிருந்த மாநில அரசின் வேண்டுகோளின்படிதான் இடப்பட்டது என்று கூறப்பட்டது. அதில் உண்மை எதுவோ எனக்குத் தெரியாது.

ஆனால், ஆணை பிறப்பிக்கப்பட்டு அவர்கள் விமானம் ஏறுகிற நிலையில், எங்களுக்குச் செய்தி கிடைத்து உடனடியாக டெசோ அமைப்பின் சார்பாக - அப்பொழுதுதான் டெசோ தொடங்கப்பட்டது. நான், வைகோ, நெடுமாறன், தமிழர் தலைவர் வீரமணி, பேராசிரியர் ஆகியோரெல்லாம் இருந்த அமைப்பு டெசோ. 23-ந்தேதி முடிவெடுத்து உத்தர விடப்படுகிறது. அந்த 'டெசோ' அமைப்பின் சார்பாக 25-8-1985 அன்று சென்னையிலே ஒரு கண்டனப் பேரணி நடத் தினோம். தொடர்ந்து 30-8-1985 அன்று ரெயில் நிறுத்தப் போராட்டம் என்று அறிவித்தோம். அதனையொட்டி 5000 பேர் அன்றைக்கிருந்த ஆட்சியா ளர்களால் கைது செய்யப்பட்டார்கள். உடனே மத்திய அரசு சந்திரஹாசன் மீதான உத்தரவைத்திரும்பப் பெற்றது. அதற்குப்பிறகு தொடர்ந்து 7-10-1985 அன்று பாலசிங்கம் மீதான நாடு கடத்தும் உத்தரவையும் திரும்பப் பெற்றது.

அந்தக் காலத்திற்கும், டெசோ அமைப்பின் சார்பாக எல்லோரும் சேர்ந்து போராடியதற்கும் - தனித்து இப்பொழுது மற்றவர்களுக்கெல்லாம் பெயர் வந்து விடக் கூடாது என்பதற்காக, ரகசியமாக இந்த விமான நிலைய வரவேற்பை அளித்ததற்கும் உள்ள வேறுபாட்டை நீங்கள் உணர்ந்தால் - "அந்தோ தமிழர்களே!" என்று நம்மை அறியாமல் நாம் சொல்லத்தான் நேரிடுகிறது என்பதை முதலிலே குறிப்பிட விரும்புகிறேன்.

பார்வதி அம்மாள் தமிழகத்திற்கு வருவது பற்றி அவரிடமிருந்தோ - அவருக்கு துணை புரிய விரும்புவர்களிடமிருந்தோ தமிழக அரசுக்கு எந்தவிதமான கடிதமோ - தகவலோ நேரடியாக வரவே இல்லை. மத்திய அரசுக்கும் - பார்வதி அம்மாளுக்கும் இடையே தான் இந்தப்பயணம் பற்றிய செய்தி தொடர்பு இருந்திருக்கிறதே தவிர தமிழக அரசுக்கு இதிலே எந்தவிதமான சம்மந்தமும் கிடையாது.

இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமே யானால், 5-5-2003 அன்று தமிழக அரசின் சார்பில் மத்திய உள்துறைக்கு ஒரு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் பத்தி 2 வருமாறு:

இலங்கைத் தமிழர்களான வேலுப்பிள்ளையும் அவரது மனைவி பார்வதி அம்மாளும் மீண்டும் இந்தியாவுக்கு திரும்பி வரலாம். விடுதலைப்புலி தலைவர், தமிழர் தேசிய இயக்கம் மற்றும் தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் அவர்களுக்கு தொடர்பு இருப்பதால் அவர்கள் மீண்டும் இந்தியா வருவது விரும்பத்தகாததாக இருக்கலாம்.

எனவே இந்த இரு இலங்கைத் தமிழர்களின் தனிப்பட்ட குறிப்புகளை இத்துடன் அனுப்பியுள்ளோம். அவர்கள் பெயரை கருப்பு பட்டியல் மற்றும் முன்னதாக அனுமதி பெற வேண்டியவர்கள் பட்டியலில் வைத்து அவர்கள் சட்டப்பூர்வமாகவோ அல்லது சட்ட விரோதமாகவோ மீண்டும் இந்தியாவுக்குள் வருவதை தடுக்கக் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு கடிதம் எழுதி, அதன் காரணமாக தடை விதிக்க ஏற்பாடு செய்தவர்கள் - எங்கே அந்த உண்மை இங்கே வெளியிடப்பட்டு விடும் என்ற காரணத்தாலோ என்னவோ - மிக முக்கியமான இந்தப் பிரச்னையில் எல்லா கட்சிக்காரர்களும் குரலெழுப்புகின்ற இந்தப் பிரச்னையில் அவர்கள் மாத்திரம் வராமல் இருந்து விட்டார்கள் என்பதைப் பார்த்தாலே நீங்கள் புரிந்து கொள்ளலாம். அவர்கள் தான் இன்றைக்கு மாபெரும் கூட்டணியிலே இருக்கிறார்கள் அது தமிழர் கூட்டணி என்றும் சொல்லப்படுகிறது.

அப்படிப்பட்ட நண்பர்கள் இந்தப் பிரச்னையில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றால், இது முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசாங்கத்திற்குத் தான் உரிய பிரச்சினை என்பதைப் போல ஏடுகளில் செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். நிச்சயமாகச் சொல்கிறேன்.

இரவு 12 மணிக்கு விமான நிலையத்திலே இப்படிப்பட்ட ஒரு தகராறு நடைபெறுவதாக எனக்குச் செய்தி கிடைக்கிறது. நான் விமான நிலையத்திற்குத் தொடர்பு கொள்கிறேன். அந்த அம்மையார் திரும்ப அனுப்பப்பட்டு விட்டார்கள் என்று அடுத்த செய்தி எனக்குக் கிடைக்கிறது. ஆனால் இந்தச் செய்தியை முறையாக - உரிய வகையில் எனக்குச் சொல்லப்படவில்லை. அரசில் யாருக்கும் சொல்லப்படவில்லை. அதன் காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு விட்டார்கள். அப்படித் திருப்பி அனுப்பப்பட்டவர்கள் மலேசியாவிற்கே, அதாவது கோலாலம்பூருக்கே திரும்பச் சென்றிருக்கிறார்கள்.

அவர்கள் அங்கே வைத்திய வசதி பெறுவதாக பத்திரிகைகளிலே செய்தி வந்திருக்கிறது. அவர்கள் - இல்லை, நான் மீண்டும் தமிழகத்திற்குத் தான் சென்று வைத்திய வசதி செய்து கொள்ள விரும்புகிறேன் என்று அறிவிப்பார்களானால் - நம்முடைய சுதர்சனம், கோ.க. மணி, சிவபுண்ணியம், ரவிக்குமார் மற்றவர்கள் எல்லாம் குறிப்பிட்டதைப்போல - அதைப் பரிசீலனை செய்து மத்திய அரசுக்கு அது பற்றி எழுத மாநில அரசு தயாராக இருக்கிறது என்பதை நான் இங்கே தெரிவித்துக் கொள்ளவிரும்புகிறேன்.

மத்திய அரசின் பதிலைப் பற்றி - அது என்ன கூறுகிறது என்பதைப் பற்றி - அதுபற்றிய விளக்கம் தேவைப்பட்டால் அந்த நேரத்தில் பதில் வந்த பிறகு அதனை இந்த அவைக்குத் தெரிவிப்பேன் என்று கூறி இந்த அளவில் இந்தப் பிரச்னையை முடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்," என்றார் முதல்வர் கருணாநிதி.

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil