அழகிரியின் அழைப்பிதழ் பாணம்

21 April 2010 ·



'செருப்பு சின்னதா போச்சுன்றதுக்காக காலை யேவா குறைச்சுக்குவாங்க..?'' -கட்டியம் கூறிக் கொண்டே வந்து சேர்ந்தார் மங்கூஸ். ''வாடி, என் தத்துவ திலகமே..!'' என்று வஞ்சப் புகழ்ச்சியால் வரவேற்றார் இம்சை! ''அது ஒண்ணுமில்லை மன்னா... ம.தி.மு.க. உட்கட்சி தேர்தல் தமிழகம் முழுசும் பர பரப்பா நடந்துக்கிட்டு இருக்கு. கட்சி இப்ப இருக்கிற நிலையில தேர்தல் மனஸ்தாபங்களால் மேற்கொண்டும் சிக்கல் வந்துடக்கூடாதுன்னு பயப்படுறாராம் வைகோ. அதனால, கூடியவரை கடும் போட்டியே இல்லாமல் சுமுகமான முறையில நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க யோசனை சொல்லியிருக்காங்களாம். அப்படி இருந்தும் சில இடங்களில் போட்டிகள் இருக்கத்தான் செய்யுதாம். நாமக்கல் மாவட்டம் பரமத்தி ஒன்றியத்தில் தற்போதைய ஒன்றியச் செயலாளரான செல்வ ராஜுக்கு எதிராக வசந்தபுரம் பொன்னுசாமி என்பவர் களத்தில் குதித்திருக்கிறார். இதைக் கேள்விப்பட்ட வைகோ, 'எதுக்கு பிரச்னை..? ரெண்டு பேருமே கட்சிக்காக நல்லா உழைக்கிறவங்கதான். அதனால, பரமத்தி ஒன்றியத்தையே ரெண்டா பிரிச்சு, ரெண்டு பேரையும் ஒன்றியச் செயலாளராக்கிடுங்க'னு சொன்னாராம். ஆனாலும், மாவட்ட ம.தி.மு.க. வி.ஐ.பி-க்கள் சிலர், 'என்ன ஆனாலும் பரவாயில்லை... தேர்தலை நடத்தியேதான் ஆகணும்'னு ஒற்றைக் காலில் நிக்கிறதால, பரமத்தி விவகாரம் மறுபடியும் வைகோவிடம் பஞ்சாயத்துக்குப் போயிருக்குதாம்.''

''எப்படியோப்பா... மதுரை மேட்டர் கணக்கா, 'ஒண்ணுக்கு ரெண்டு... உபத்திர வத்துக்கு மூணு'ன்னு ஆகாம இருந்தா சரிதான்...'' என்று பிட்டு போட்டார் மன்னர்.

''அது என்னது மன்னா?''

''பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை பொருட்காட்சி கடந்த 18-ம் தேதி தொடங்கியிருக்கு. இதன் தொடக்க விழாவுக்காக முதலில் ஓர் அழைப்பிதழை ரெடி பண்ணுனாங்களாம். அதுல செய்தித் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி தலைமையில் மத்திய அமைச்சர் அழகிரி பொருட்காட்சியை திறந்து வைக்கிறதா போட்டு இருந்துச்சாம். அழகிரி மத்திய அமைச்சர்ங்கிறதால அவரது பெயரை முதலாவதாகவும் பரிதியின் பெயரை ரெண்டாவதாகவும் போட்டுருந்தாங்க. இந்த அழைப்பிதழை ஒப்புதலுக்காக அனுப்பி வெச்ச அதிகாரிகளுக்கு, மேலிடத்தில் இருந்து செம டோஸாம். அங்க இருந்து குடுத்த இன்ஸ்ட்ரக்ஷன்ஸ்படி ரெண்டாவதா ஓர் அழைப்பிதழை ரெடி பண்ணிருக்காங்க. அதுல, விழா தலைமையா பரிதியின் பெயரைப் போட்டு, சபா நாயகர் பொருட்காட்சியை திறந்து வைப்பார்னு போட் டுட்டாங்களாம். அதுகூட பரவாயில்லை... அந்த அழைப்பிதழில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணிகட்சின்னு அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ-க்களின் பெயர்களையும் போட்டுருந்தாங்க. பக்கத்து தொகுதி காங்கிரஸ் எம்.பி-க் களான மாணிக்க தாகூர், ஆரூண் பெயரெல்லாம்கூட இருக்கு. ஆனா, அழகிரி பேரு காணாமப் போயிருந்ததாம். மதுரை பக்கம் இப்ப இதுதான் பரபரப்பான பேச்சு... மாவட் டச் செயலாளர்களான நண் பர்களைக் கூட்டிக்கிட்டு மாலத்தீவுக்கு போயிருக்கிற அழகிரிக்கு, இந்த அழைப்பிதழ் மேட்டரை இ-மெயிலில் அனுப்பி வெச்சுருக்காங்களாம், அவரது விசுவாசிகள். 'ஊர் திரும்பியதும் அஞ்சா நெஞ்சன் என்ன பூகம்பத்தைக் கௌப்பப் போறாரோ தெரியலையே'ன்னு அதிகாரிங்க பித்துப் பிடிச்ச மாதிரி திரியுறாங்க!'' சொன்ன மன்னர், பாயின்ட் டு பாயின்ட் வேகத்தில் அடுத்த மேட்டரை கொட்டினார்...

''தொண்டாமுத்தூர் இடைத்தேர்தல் நடந்த சமயத்துல ஓட்டுக்கு பணம் கொடுத்த தி.மு.க. கூட்டணியினரை கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தினர் துரத்தித் துரத்திப் பிடிச்சாங்க. அப்படித்தான் 13-8-2009 அன்னிக்கு ராத்திரி கோவை மாநகராட்சிக்குட்பட்ட காந்தி மாநகர் ஏரியாவில் கொ.மு.கழகத்தின் தலைமை நிலைய செயலாளரான சூரியமூர்த்தி தலைமையில் ஒரு டீம் பணம்கொடுத்தவர்களை துரத்தியது. அவர்களுக்கு பயந்து பண கவர்களை தெருவில் வீசிவிட்டுப் போனது அந்த கும்பல். அவர்கள் போட்டுவிட்டுப் போன 148 கவர்களில் இருந்த சுமார் 30 ஆயிரம் ரூபாயையும், அந்தக் கும்பல் தவறவிட்டுச் சென்ற ஒரு செல் போனையும் கொண்டுபோய் சரவணம்பட்டி போலீஸிடம் ஒப்படைத்தாரு தலைமை நிலைய செயலாளர் சூர்யமூர்த்தி. அதுதொடர்பாக புகாரும் குடுத்தாராம். அதுக்கு எஃப்.ஐ.ஆரும் போட்டுருக்காங்க. தேர்தல் பரபரப்பில் இந்த விவகாரத்தை அத்தோடு மறந்துட்டாராம் சூர்யமூர்த்தி. சமீபத்துல, அந்த கேஸ் சம்பந்தமா ஞாபகம் வந்து, தகவலறியும் உரிமை சட்டத்தின் மூலமா சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டே ஷன்ல கொ.மு.க-வின் மாநில மாணவரணி செயலாளர் வக்கீல் லோகநாதன் தகவல் கேட்டுருக்காரு..''

''அட மக்கா... போலீஸ் என்ன சொல்லுச்சாம்..?'' கேட்டார் மந்திரி.

''அவங்களுக்கா தாக்கல் சொல்ல தெரியாது! 'அந்த கேஸ் சம்பந்தமா இன்னும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை... அவங்களை தொடர்ந்து தேடிக்கிட்டு இருக்கோம். வழக்கில் கைப்பற்றப்பட்ட பணம் உள்ளிட்ட ஆவணங்களை கோர்ட்டில் ஒப்படைச்சுட்டோம்'னு பதில் குடுத்தாங்களாம். விடுவாங்களா கொ.மு.க. ஆளுங்க... போலீஸ் சொல்றது உண்மைதானானு கோர்ட்டுல மனு போட்டு கேட்டுருக்காங்க. அதுக்கு, 'அந்த கேஸ் சம்பந்தமா எந்தப் பொருளும் இதுவரை கோர்ட்டில் ஒப்படைக்கப்படலை'ன்னு பதில் கிடைச்சுதாம். இந்த கேஸ்ல நடந்திருக்கிற கோல்மால்களை வெளிச்சத்துக்கு கொண்டு வர்றதுக்காக, ஒரு பொதுநல வழக்கு போட தயாராகிட்டு இருக்கிறாராம் லோக நாதன்!''

''எப்புடியெல்லாம் ஏமாத்துறாங்க..!'' என்று இழுத்த மங்குனி, ''மன்னா போன மாச சம்பள பாக்கி தொங்கல்ல நிக்கிது... அதைக் கொஞ்சம் கவனிச்சா நல்லா இருக்கும்...'' என்றார்.

''சந்து கெடச்சா சிந்து பாடிருவியே...'' என்ற மன்னர், சம்பள பாக்கியை காதிலே வாங்கிக்கொள்ளாமல் அந்தப்புரம் ஏகினார்!

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites