அ.தி.மு.க. எடுத்த தீர்மான முடிவு

21 April 2010 ·

'வேண்டாம் விஜயகாந்த்!'


மூச்சுக்கு முந்நூறு தடவை தி.மு.க-வை 'மைனாரிட்டி அரசு' என்று வார்த்தை ஊசிகளால் ரணப்படுத்திய அ.தி.மு.க-வை பென்னாகரம் இடைத்தேர்தல், மூன்றாவது இடத்துக்குத் தள்ளிய கையோடு, டெபாசிட்டையும் பறித்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது! இதில், அதிர்ந்துபோன அ.தி.மு.க. வட்டாரம்... கூட்டணி மராமத்து வேலைகளில் அவசரமாக இறங்கியிருக்கிறது. அதற்கான முன்னோட்டமாக, வருகிற 27-ம் தேதி இந்தியா முழுக்க நடைபெறவிருக்கும் 'பாரத் பந்த்'தையட்டி தமிழகத்தில், அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்று திரட்டி, பொது வேலை நிறுத்தத்தை நடத்து வதற்கான முன்னேற்பாடுகளில் அ.தி.மு.க. தீவிரமாகியிருப்பதாகச் செய்திகள்..! அந்தப் புள்ளியில், 'விஜயகாந்த்தின் தே.மு.தி.க-வும் இந்த கூட்டணிக்குள் வருமா?' என்ற கேள்வி மறுபடியும் பலமாக எழும்ப ஆரம்பித் திருக்கிறது!

'புஸ்' பேச்சுவார்த்தை!

தே.மு.தி.க-வை அ.தி.மு.க. கூட்டணிக்குள் கொண்டுவருவதில் மீண்டும் மீண்டும்

ஆர்வம் காட்டி வருபவர் முத்தான அந்த முன்னாள் அமைச்சர்தான். விஜயகாந்த்தின் நெருங்கிய நண்பருமான இவரே, பெ.பி. (பென்னாகரத்துக்குப் பின்) கூட்டணிப் பேச்சுவார்த்தையை ஆரம்பித்து வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள் அவரது விசுவாசிகள். ''சினிமாவில் மட்டுமே அரசியல் வசனம் பேசியவரை அரசியலுக்குள் அடியெடுத்துவைக்கக் கைப்பிடித்துக் கூட்டி வந்தவரே எங்க அண்ணன்தான். 'இந்தத் தனி ரூட்டு ராஜாங்கம் சரிப்பட்டு வராது'ங்கிற

கணக்கை விளக்கமா எடுத்துச் சொல்லித்தான் மறுபடி பேச்சுவார்த்தையைத் தொடங்கினாரு...'' என்கிறார்கள் இவர்கள்.

ஸீட் எண்ணிக்கை பற்றி பேச ஆரம்பித்ததுமே சட்டென்று, 'தே.மு.தி.க-வுக்கு 30-க்கும் அதிகமான எம்.எல்.ஏ. ஸீட்கள், அமைச்சரவையில் மூன்று இடம்' என்று விஜயகாந்த் தரப்பில் இருந்து பிடிவாதமாகச் சொல்லப்பட... எடுத்த எடுப்பிலேயே தேக்கம் ஏற்பட்டதாம்.

'சட்டமன்றத் தேர்தலுக் கான எந்த அறிவிப்புமே வெளிவரவில்லை. கூட்டணி பற்றிய சம்பிரதாயப் பேச்சுவார்த்தைதான் இது. ஸீட் எண்ணிக்கை, அமைச்சரவையில் பங்கு எல்லாமே உங்களுக்குத் திருப்திகரமான எண்ணிக் கையில் அம்மாவிடம் பேசி ஏற்பாடு செய்கிறேன். முதலில், கூட்டணிக்குள் வந்துவிடுங்கள்' என்று நயமாகப் பேசியிருக்கிறார் அந்த முத்தான முன்னாள் அமைச்சர். ஆனாலும், விஜயகாந்த் தரப்பிலிருந்து கொஞ்சமும் இறங்கிவரவில்லை என்றே தெரிகிறது.

அப்செட் அம்மா!

பேச்சுவார்த்தை விவரங்களை அறிந்துகொண்ட போயஸ் கார்டன் கடும் வெப்பத்தில் ஆழ்ந்ததாம்!

''என்ன நினைக்குறாரு அவரு? அரசியல் நிலவரம் தெரிஞ்சுதான் பேசுறாரா? கூட்டணிக்குள்ளே அவரைக் கொண்டுவர நாமளும் எவ்வளவோ வாய்ப்புகள்கொடுத்துப் பார்த்துட்டோம்... ஆனாலும் அவருடைய நடவடிக்கைகள் எதுவுமே நமக்கு ஆதரவாக இருந்ததில்லை. பென்னாகரம் பிரசாரத்திலேகூட ஆளுங்கட்சி விஷயத்துல அடக்கி வாசிச்சவரு, சம்பந்தமேயில்லாம நம்மைப் பத்தி அதிகம் விமர்சிச்சாரு! அமைச்சரவை பங்கு பற்றி இப்பவே பேசுறாருன்னா... தேர்தல் நெருக்கத்தில் இன்னும் என்னவெல்லாம் நெருக்கடி கொடுப்பாரோ..?'' என்ற ரீதியில் கருத்து வெளியிட்டதாம் கார்டன். அதோடு, ''தற்போது விஜயகாந்த் துவங்கியிருக்கும் 'கேப்டன் டி.வி'யை நாடு முழுக்க தெளிவாகத் தெரிய வைப்பதற்கு ஆளுங்கட்சி மற்றும் சன் நிறுவனத்தின் ஆதரவு விஜயகாந்துக்கு தேவைப்படுகிறது என்பதையும் முத்தான முன்னாள் அமைச்சரிடம் சுட்டிக் காட்டிய கார்டன், ''இப்போதைக்கு இதை ஆறப் போடுங்க. மத்த கட்சிகளில் யாரை எல்லாம் ஒண்ணு சேர்க்கலாம் என்பதை மட்டும் பார்ப்போம்'' என்று கூறியதாகவும் தகவல்.

இதற்கிடையில், அ.தி.மு.க. ஆதரவு காம்ரேட் தலைவர்தான் விடாப்பிடியாக தே.மு.தி.க-வை தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவருவதில் மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பதாகச் சொல்கிறார்கள். அதற்கான முயற்சிகளை சளைக்காமல் நடத்திவரும் காம்ரேட், பொது வேலை நிறுத்தப் போராட்ட தினத்துக்குள் ஓரளவாவது இதில் வெற்றி காணத் துடிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

'தனித்திரு விழித்திரு...'

தே.மு.தி.க-வில் உள்ள முக்கிய பழம்பெரும் அரசியல் தலைகளிடம் பேசிய அந்த காம்ரேட் தலைவர், ''வறட்டுப் பிடிவாதம் காட்டி அ.தி.மு.க. கூட்டணி வாய்ப்பை நழுவ விடாதீர்கள்...'' என்று எடுத்துச் சொன்னதாகவும், அந்த தலைவர்களின் பிரஷரைத் தொடர்ந்து தே.மு.தி.க. தலைமையும் அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைக்கு சற்று இறங்கிவரத் தயாராகிவிட்டது என்றும் சொல்கிறார்கள் அந்த வட்டாரத்தில் சிலர்!

''இதன் முதல்கட்டமாகத்தான்... அ.தி.மு.க-வின் தோழமைக் கட்சியான ம.தி.மு.க. சமீபத்தில் கோவையில் நடத்திய உண்ணாவிரதத்தில் தே.மு.தி.க-வின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டார்கள்...'' என்று சுட்டிக்காட்டுகிறார்கள் அக்கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் சிலர்.

''கேப்டன் டி.வி. என்பது பிசினஸ். அரசியலையும், பிசினஸையும் ஒன் றாக்கிக் குழப்பிக்கொள்ளக் கூடாது என்பதில் கேப்டன் தெளிவாக இருக்கிறார். அதனால்தான், ஒளிபரப்பு ஒப்பந்தத்தின் போதே சுமங்கலி கேபிள் விஷனோடு தெளிவாகப் பேசி முடித்துவிட்டார். எனவே, அ.தி.மு.க. எங்களை சந்தேகக் கண்கொண்டு பார்க்கத் தேவையேயில்லை. பிரச்னைகளைப் பொறுத்து ஆளுங்கட்சிக்கு எதிரான கூட்டணியில் இணைந்து செயல்படுவோம்...'' என்கிறார்கள் இவர்கள்.

இந்த நியாயங்களை எல்லாம் அ.தி.மு.க. கவனத்தில் எடுத்துக்கொள்வதைப் பொறுத்துதான் தே.முதி.க-வின் 'தனித்திரு விழித்திரு' பாலிசி தொடர்வதும், முடிவதும்..!

உடைபடும் காங்கிரஸ்..?

'எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்' என்று திண்டாடும் அ.தி.மு.க-வின் நடவடிக்கைகளை வேடிக்கை பார்த்துவரும் தி.மு.க-வுக்கும் அடுத்த சோதனை ரெடி என்கிறார்கள், அரசியலை உன்னிப்பாக ஆழ்ந்து நோக்குகிறவர்கள்.

''சட்டசபை திறப்பு விழா ரிப்பன் வெட்டிய 'கை'யை தி.மு.க. கெட்டியாகத்தான் பிடித்திருக்கிறது. ஆனாலும், இங்குள்ள அ.தி.மு.க. ஆதரவு கதர்த் தலைவர்கள் சிலருடைய நடவடிக்கைகள் கருணாநிதியின் தூக்கத்தைக் கெடுப்பதும் நிஜம்! தே.மு.தி.க-வை முழுசாக நம்பிக் காத்திருக்க முடியாது என்று நினைக்கும் ஜெயலலிதா, அடுத்த முயற்சியையும் அதிரடியாகத் துவங்கிவிட்டார். 'தமிழக காங்கிர ஸிலுள்ள அ.தி.மு.க. பாசத் தலைவர்களை வைத்தே தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியை உடைக்கும் தளராத முயற்சி அது. இதில் தங்களுக்கு சாதகமான முடிவு கிடைக்கவில்லையெனில், குறிப்பிட்ட 'அந்த'க் கதர்த்தலைகள் கட்சியையே உடைத்து வெளியேறி, 'போட்டி காங்கிரஸ்' பெயரில் அ.தி.மு.க-வுக்கு ஆதரவளிக்க வைப்பதும் அவர் திட்டம்!'' என்கிறார்கள்.

''காங்கிரஸை உடைப்பதெல்லாம் நடக்காத காரியம். ஜெயலலிதா இனியும் எங்களைப் புறக்கணித்துவிட்டு தேர்தலை சந்திக்க விரும்ப மாட்டார். அதேசமயம், பா.ம.க-வை கூட்டணிக்குள் கொண்டுவரவும் விரும்ப மாட்டார். மாறாக, பா.ம.க-வை தி.மு.க. தன் கூட்டணிக்குள் விரோதம் பாராமல் இழுத்துக் கொள்ளத்தான் போகிறது. அப்போது, அ.தி.மு.க-வின் பீதி மேலும் அதிகரிக்கும். நாங்கள் வைக்கும் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு கூட்டணிக்குள் எங்களை ஜெயலலிதா சேர்த்தே தீருவார்!'' என்கிறார்கள் தே.மு.தி.க-வில் ஒரு தரப்பினர்.

'மறுபடி கேப்டன் தனித்துப் போட்டி என்று இறங்கிவிடுவாரோ... தங்கள் கைக்காசுக்கு மறுபடியும் வேட்டு வைப்பாரோ' என்ற பீதி இவர்கள் முகத்தில் தெளிவாகத் தெரிகிறது!

ந்திய கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியனிடம் பேசியபோது, ''பொது வேலை நிறுத்தத்துக்கு ஆதரவாக, பல கட்சித் தலைவர்களோடும் பேசி வருகிறோம். தே.மு.தி.க. தரப்பிலும் உரியவரிடம் பேசி, பொது வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்'' என்றவரிடம், ''எதிர்வரும் தேர்தலில் தே.மு.தி.க-வை உங்கள் கூட்டணிப் பக்கம் இழுப்பதற்கான முன்னோட்டம்தான் இந்த முயற்சியா?'' என்றோம்.

''நான் இப்போது வெளியூரில் இருக்கிறேன். சென்னைக்கு வந்ததும்தான் பொது வேலை நிறுத்தத்துக்காக தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளோடு பேச இருக்கிறோம். மற்றபடி, இப்போதே தேர்தல் கூட்டணி குறித்துப் பேசவேண்டிய அவசியம் கிடையாது!'' என்றார் தா.பா.

ளசும் இளசும்...

தே.மு.தி.க-வின் இளவயது பிரமுகரும் விஜயகாந்த்தின் நெருங்கிய உறவினருமான அந்தப் புள்ளி அ.தி.மு.க-வின் பாசறை தளபதியிடம் சமீப நாட்களாக அநியாயத்துக்கும் அன்பு பாராட்டுகிறாராம். தனி இடத்தில் அடிக்கடி சந்தித்துப் பேசும் இவர்கள், கூட்டணி குறித்த விஷயங்களுக்கு தனி ரூட்டில் ஃபார்முலா வகுத்து வருகிறார்களாம்! சமயம் பார்த்து அவரவர் தலைமையிடம் சொல்லி, நினைத்ததை சாதிப்பது இவர்கள் திட்டமாம்!

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil