'அங்காடித் தெரு' ப்டம்... வெரிகோஸிஸ் பயம்!

24 April 2010 ·


'அங்காடித் தெரு' ப்டம்... வெரிகோஸிஸ் பயம்!

செ.கோபி, சென்னை-67.

''பைக்கில் வெயிலில் நீண்ட நேரம் பயணிப்பதால், சருமம் முழங்கை வரை மட்டும் கறுத்துவிட்டது. கையுறைகளை அணிந்துகொண்டு பைக் ஓட்ட எனக்குப் பிடிக்கவில்லை. கைகளில் இழந்த நிறத் தைத் திரும்பப் பெற இயலுமா?''

வீணா, அழகுக் கலை நிபுணர்

''கை உறை அல்லது முழுக்கைச் சட்டை அணிவதன் மூலம்தான் சூரிய ஒளியின் பாதிப்பைப் பெரும்பாலும் தடுக்க முடியும். பைக்கில் பயணிக்கும்போது, சூரிய ஒளி நேரடியாகத் தாக்குவதால், சருமம் கறுத்துவிடும். மார்க்கெட்டில் கிடைக்கும் சன்ஸ்கிரீன் லோஷன், சன் புரொடக்ஷன் க்ரீம்கள் போன்றவை முதல் சில மணி நேரங்களுக்குப் பாதிப்பில் இருந்து தற்காப்பு அளிக்கும். ஆனால், இழந்த நிறத்தைக் கொஞ்சம் மெதுவாகத்தான் பெற முடியும். தயிர்- தக்காளியைக் கலந்து சருமத்தில் பூசி 10 நிமிடங்கள் வரை ஊறவைத்துக் கழுவுவதன் மூலமும் பழைய நிறத்தைப் பெறலாம்!''


எம்.எஸ்.சவுந்தரராஜன், சேலம்-4.

''எத்தனை வயது பூர்த்தியானால் 'சீனியர் சிட்டிசன்' என்பார்கள்? அவர்களுக்கு டூ வீலர் ஓட்டும்போது ஹெல்மெட் அணிவதில் இருந்து விலக்கு உண்டா?''

எம்.ரவி ஐ.பி.எஸ்., போக்குவரத்துக் கூடுதல் ஆணையர்.

''60 வயது பூர்த்தியானவர்களை சீனியர் சிட்டிசன் என்போம். ஆனால், மோட்டார் வாகனச் சட்டப்படி வயது அடிப்படையில் எவருக்கும் ஹெல்மெட் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்படவில்லை. மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களின் பாதுகாப்புக்காகத்தான் அவர்களை ஹெல்மெட் அணியச் சொல்கிறோம். ஆனால் ஒரு விஷயம், உடல் ஆரோக்கியமாக இருக்கும் சீனியர் சிட்டிசன்கள்தான் வாகனம் ஓட்ட வேண்டும். இளைஞர்களைக் காட்டிலும் அவர்களுக்குத்தான் ஹெல்மெட் மிகவும் அவசியம்!''


ஹெச்.ரவி, திருச்சி-20.

''நான் அசைவம் சாப்பிடுவதைக் கடந்த ஆறு மாதங்களாக நிறுத்திவிட்டேன். சமீப நாட்களாக எனது எடை நாலு கிலோ வரை குறைந்துவிட்டது. அசைவம் சாப்பிடுவதை நிறுத்தியதுதான் காரணமா? அல்லது சைவ உணவு வகைகள் மூலமே எடையை அதிகரிக்க வழி இருக்கிறதா?''

ஷைனி சந்திரன், நியூட்ரீஷியன்.

''அசைவ உணவைத் தவிர்த்தது மட்டுமே உங்கள் எடை குறைந்ததற்குக் காரணமாக இருக்காது. அசைவ உணவுகளிலும் ரெட் மீட் எனப்படும் மட்டன், பீஃப் போன்ற கொழுப்புச் சக்தி அதிகம் உள்ள இறைச்சிகள்தான் எடையை அதிகரிக்கும். பொதுவாக, அனைத்து அசைவ உணவுகளிலும் அதிக அளவில் எண்ணெய் சேர்க்கப்படுவதால், அந்தக் கொழுப்புதான் உடல் எடையை அதிகரிக்கும். இப்போது அந்த எண்ணெய்ப் பொருட்கள் குறைந்ததாலும் உங்கள் உடல் எடை குறைந்திருக்கலாம். இதற்காகக் கலலைப்பட வேண்டாம். சைவ உணவுகள் மூலமும் உடல் எடையை அதிகரிக்கலாம். காய்களில் அதிக அளவு பருப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். தினமும் உலர்ந்த பழங்கள், நட்ஸ் சாப்பிடலாம். மில்க்ஷேக், லஸ்ஸி நிறையக் குடிக்கலாம். வாழைப்பழம், மக்காச்சோளம், வேகவைத்த வேர்க்கடலை சாப்பிடலாம். எடை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக சாஃப்ட் டிரிங்ஸ்,நொறுக் குத் தீனிகள் எனக் கண்டதையும் உட்கொள்ளாதீர்கள். உங்கள் வயது, உயரம், வாழ்க்கைமுறை ஆகியவற்றைக் கணக்கில்கொண்டுதான் உங்களுக்கு ஏற்ற எடை என்ன என்பதைத் தீர்மானிக்க முடியும். எனவே, எதற்கும் ஒருமுறை நியூட்ரீஷியன் அல்லது டயட்டீஷியனிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள்!''


கே.சிவா, சென்னை-58.

''வெயிலுக்குப் பயந்து அலுவலகம், வீடு, சினிமா தியேட்டர் என எப்போதும் ஏ.சி-யிலேயே இருக்கிறேன். எப்போதாவது வெயிலில் நின்றால் குபுகுபுவென வியர்த்துக்கொட்டி திக்குமுக்காடிவிடுகிறது. ஏ.சி. அறைகளிலேயே இருப்பது நல்லதா... அல்லது அவ்வப்போது வெயிலிலும் தலை காட்ட வேண்டுமா?''

எஸ்.நிர்மலா, சரும நோய் மருத்துவர்.

''ஏ.சி. என்பது செயற்கையான சூழல்தானே. அதிலேயே பெரும்பாலான நேரங்களைக் கழிப்பது நல்லதல்ல. நமது சருமத்தைத் தூய்மையான இயற்கைக் காற்றும் தழுவ வேண்டும். உச்சி வெயில் நேரங்களில் ஏ.சி. அறைகளில் பதுங்கி இருப்பது தவறு இல்லை. மற்ற நேரங்களில் காற்றோட்டம் உள்ள மரம், செடி, கொடிகள் நிறைந்த இடத்தில் ஓய்வு எடுங்கள். அறை ஜன்னலைத் திறந்தேவைத்துஇருங்கள். இயற்கைக் காற்றோட்டம் இருந்தால்தான் உங்கள் நுரையீரலுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்கும். ஏ.சி-யிலேயே இருப்பது சிலருக்கு சைனஸ், தலைவலி போன்ற பிரச்னைகளை உண்டாக்கும். எவருக்குமே வெயில் காலத்தில் அதிகமாக வியர்த்துக்கொட்டும்தான். உணவு முறையிலும் சின்னச் சின்ன மாற்றங்களை மேற்கொள்ளுங்கள். நீராகாரம் அதிகமாக எடுத்துக்கொள்ளுங்கள். மோர், இளநீர், தர்பூசணி போன்ற பழங்களை நிறையச் சாப்பிடுங்கள். எப்போதும் பருத்தி ஆடைகளையே அணியுங்கள்!''


ப.ஜெகதீஷ், மதுரை.

''என் நண்பன் கடந்த ஏழு வருடங்களாகத் தினமும் கிட்டத்தட்ட 14 மணி நேரம் வேலை பார்க்கிறான். பெரும்பாலும் நின்றுகொண்டே பார்க்க வேண்டிய வேலை. கடந்த ஒரு வருடமாக அவனுடைய இரண்டு முழங்கால்களுக்குக் கீழேயும் இரண்டு மூன்று இடங்களில் நரம்புகள் சுருண்டும், ரத்தம் கோத்திருப்பதுபோலவும் தோன்றுகிறது. 'அங்காடித் தெரு' படத்தில் இதுபோன்ற பிரச்னை காரணமாக ஒருவர் 'வெரிகோஸிஸ்' நோயால் பாதிக்கப்பட்டு இறந்து போவதுபோலக் காட்டினார்கள். என் நண்பனும் அதுபோல பாதிக்கப்படுவானா?''

எம்.ராஜ்குமார், வாஸ்குலார் சர்ஜன்.

'' 'வெரிகோஸிஸ்' நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இறந்துவிடுவார்கள் என்பது தவறான தகவல். தினமும் நீண்ட நேரம் நின்றுகொண்டே இருப்பதால் வெரிகோஸிஸ் நோய் வரலாம். அதனால் கால் வீக்கம், புண், வலி இல்லா ரத்தப்போக்கு, காலைச் சுற்றி கறுப்பு நிறமாகுதல், மூட்டுக்கள் இறுக்கமாகி குதிரைபோல நடப்பது போன்ற பாதிப்புகள் நேரலாம். 10 முதல் 15 ஆண்டுகள் இந்தப் பிரச்னை நீடித்தால், அது கேன்சராக மாற இரண்டு சதவிகித வாய்ப்பு உள்ளது. இதுதான் உண்மை நிலை. 'இறந்துவிடுவீர்கள்' என்றெல்லாம் நோயாளிகளைப் பயமுறுத்தாதீர்கள். தக்க மருத்துவரிடம் உங்கள் நண்பரை அழைத்துச் செல்லுங்கள். ஸ்கேன் செய்து நிலைமையின் தீவிரத்துக்கு ஏற்ப கிரேடு வரிசையில் வகைப்படுத்துவார்கள். கிரேடு 2 அல்லது கிரேடு 3 என்றால் மருந்து மாத்திரைகள் மற்றும் அறுவைசிகிச்சை மூலம் குணப்படுத்திவிடலாம். கிரேடு 1-க்கு சிகிச்சை இல்லை!''

இளைஞர்களே...

உங்கள் சந்தேகம், குழப்பம், மயக்கம் எதுவாக இருந்தாலும், 'டீன் கொஸ்டீன்' பகுதிக்கு அஞ்சலில் எழுதி அனுப்பலாம். அல்லது 044-42890004 என்ற தொலைபேசி எண்ணிலும் உங்கள் குரலிலேயே பதிவு செய்யலாம். நாங்கள் உதவக் காத்திருக்கிறோம்

நன்றி விகடன்

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil