கஞ்சா கசக்கு... உயிரை நசுக்கு( ஹாய் மதன்)

24 April 2010 ·

நன்றி விகடன்

கஞ்சா கசக்கு... உயிரை நசுக்கு!

பரமத்தி கனகு, ஈரோடு-4.

மனிதனின் தோலைப் பயன்படுத்திச் செய்யப்படும் அறுவைசிகிச்சைக்கு 'பிளாஸ்டிக் சர்ஜரி' என்று ஏன் பெயர் வந்தது?

'பிளாஸ்டிக்' என்றால் 'செதுக்கி உருவாக்குவது' to give shape என்றுதான் அர்த்தம். இது கிரேக்க வார்த்தை. பிளாஸ்டிக் சர்ஜரியில் அதைத்தான் செய்கிறார்கள். சுமார் மூன்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் பிளாஸ்டிக் சர்ஜரி பிரபலம். கி.மு ஒன்பதாம் நூற்றாண்டில் சாரகா, சுஸ்ருதா என்ற இரண்டு பெரும் வைத்தியர்கள் மருத்துவம்பற்றி பெரும் புத்தகங்களை எழுதினார்கள். சாரகா எழுதியது எட்டு வால்யூம்கள் அடங்கிய என்சைக்ளோபீடியா!

சுஸ்ருதா பிளாஸ்டிக் சர்ஜரியில் கில்லாடி. குறிப்பாக, ரைனோபிளாஸ்டி என்கிற (மூக்கை உருவாக்குவது!) சர்ஜரியில் அவர் பிரமாதப்படுத்தினார். மூக்கு 'ஷேப்'புக்கு இலையைக் கத்தரித்து, அதில் தொடைப் பகுதியில் இருந்து சதையை வெட்டிப் பொருத்திவைத்துச் செதுக்கி, மூக்கு இருந்த பகுதியில்வைத்துத் தைப்பது அவர் ஸ்பெஷாலிட்டி. அப்போது திருமணமான பிறகு கள்ளக் காதலில் ஈடுபட்டவர்களின் மூக்கு வெட்டப்பட்டது. அவர்களுக்கு எல்லாம் 'மூக்கு' தந்து அருளியவர் சுஸ்ருதாவே

ஜி.மகாலிங்கம், காவல்காரபாளையம்.

மிகுந்த அறிவாளிகளை, 'உனக்கு உடம்பெல்லாம் மூளை' என்று கூறுகிறோமே... அப்படி இருந்தால் எப்படி இருக்கும்?

உடலை இயக்குவதற்குத்தான் மூளை. உடலே மூளையாக மாறினால்... அப்புறம் மூளை எதற்கு? இன்ஜின் இல்லாமல் கார் ஓடாது. வெறும் இன்ஜினை வைத்துக்கொண்டு என்ன செய்ய? ஒரு பேச்சுக்குக் கற்பனை செய்வோம். சராசரி மூளையின் எடை சுமார் மூன்று பவுண்டு. 150 பவுண்ட் எடை உள்ள மனித உடலே மூளையாக மாறினால், உடனே அவர் 50 மடங்கு மேலும் புத்திசாலி ஆவாரா?!


முதலில் மூளை சைசுக்கும் அறிவுக்கும் சம்பந்தம் இல்லை. அதிக எடை உள்ள மூளை உள்ள முட்டாள்களையும், சராசரிக்கும் குறைந்த எடை மூளை உள்ள ஜீனியஸ்களையும் விஞ்ஞானிகள் ஆராய்ந்திருக்கிறார்கள். (புகழ்பெற்ற பிரெஞ்சு நாவலாசிரியர் அனடோல் ப்ரான்ஸ் என்பவரின் மூளை சைஸ் ரொம்பச் சின்னது!) இன்னொரு விஷயம், ஒவ்வொரு நிமிடமும் மூளைக்கு 800 மில்லிகிராம் ரத்தம் பாய வேண்டும். அந்த ரத்தம் தரும் ஆக்ஸிஜன் இல்லாவிட்டால், சில நிமிடங்களில் மூளை செத்துவிடும். அதாவது ஆள் அவுட்!

உடலே மூளையாக இருந்தால் எங்கு இருந்து அதற்கு ரத்தம் கிடைக்கும். ஆகவே, அதை 'பம்ப்' செய்ய இதயம் தேவை. பிறகு, ஆக்ஸிஜனை மூக்கு வழியாக உள்ளுக்குள் இழுத்து ரத்தத்துக்கு அனுப்ப நுரையீரல் தேவை. சரி, இது எல்லாமே மூளைக்கு ஏன் தேவை என்று யோசித்துப் பாருங்கள். ஏன் கேள்வி கேட்டோம் என்று ஆகிவிடும்!


ஜி.மகாலிங்கம், காவல்காரபாளையம்.

முழுப் பூசணிக்காயை உண்மையிலேயே சோத்துல மறைக்க முடியுமா?

ஐயையோ! 'விகடன் பழமொழி வாசகர் சங்கம்'னு ரகசியமா ஒண்ணு இயங்கறாப்போல இருக்கே?! முடியுமுங்க - அண்டா நிறைய சோறு இருந்தால்!


டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

அந்த மாதிரி ஜோக்குக்குப் படம் வரைவது கஷ்டமா?

எனக்கென்னவோ அந்த மாதிரி 'ஜோக்'குகளுக்குப் படம் வரைகிறவர்கள் ரொம்ப 'ஹேப்பி'யான கார்ட்டூனிஸ்ட்டுகளாக இருப்பார்களோ என்று ஒரு சந்தேகம் உண்டு. ஏனெனில், ஏற்கெனவே மிகைப்படுத்தப்பட்ட விஷயங்களை மேலும் மிகைப்படுத்தி வரைகிறார்கள் இல்லையா?! ப்ளேபாய் போன்ற நிறுவனங்கள் 'அப்படிப்பட்ட' கார்ட்டூன் புத்தகங்களை வெளியிட்டு வருகிறது. நானும் பார்த்து... பிரமித்தது உண்டு!


விஜயலட்சுமி, பொழிச்சலூர்.

ஒரு பூசாரி, ஒரு கவர்னர், ஒரு சாமியார் ஆகியோரைப் புரட்டிப்போட்ட செக்ஸ் ஊழல்... அரசியல்வாதியை மட்டும் 'பதம்' பார்க்காதது, ஏன்?

பூசாரியிடமும் சாமியாரிடமும் குறிப்பிட்ட விஷயங்களைத்தான் நாம் எதிர்பார்க்கிறோம். ஆகவே, அவர்கள் அதனை மீறும்போது அதிர்ச்சி அடைகிறோம். கவர்னர் என்பவர் அநேகமாக ரிடையர் ஆன கிழம். அவர் இப்படிச் செய்யும்போது திகைக்கிறோம். அரசியல்வாதி இவர் களுக்கு எல்லாம் அப்பாற்பட்டவர், அவர் எதை வேண்டுமானாலும் செய்யக்கூடியவர் என்கிற எண்ணம் (அல்லது எதிர்பார்ப்பு!) ஏற்கெனவே நம்மிடையே பரவலாக இருப்பதால், அது பெரிய நியூஸ் ஆவது இல்லை!


விஜயலட்சுமி, பொழிச்சலூர்.

சிக்ஸ்டி 60 கிரிக்கெட் மேட்ச் எப்படி இருக்கும்? (நான் வயசைச் சொன்னேன்.)

முன்பே இந்த ஐடியாவைவைத்து நான் ஜோக் போட்டாச்சுங்க!


ச.ஆ.கேசவன், இனாம்மணியாச்சி.

விலையேற்றம் குறித்து விலங்குகள் கவலைப்படுவது இல்லையே, ஏன்?

விலங்கு ஜடப்பொருள். அது எப்படிக் கவலைப்படும்? ஒரு விலங்கின் விலை சுமார் 750 ரூபாய். (போகப் போக விலை ஏறலாம்!) அதற்கான டெண்டர் விடப்பட்டு அரசாங்கம் வாங்குகிறது. இப்போது எல்லாம் (சினிமாவில் வருவதுபோல) ஒருவரை போலீஸ் கைது செய்த பிறகு இஷ்டப்படி விலங்கெல்லாம் மாட்ட முடியாது. சம்பந்தப்பட்டவர் ஆபத்தானவர் என்பதற்கான ஆதாரத்துடன் நீதிபதியிடம் முன் அனுமதி வாங்க வேண்டும். ஆமாம்... நீங்க எந்த விலங்கைச் சொன்னீங்க?!


இ.பு.ஞானப்பிரகாசன், மடிப்பாக்கம்.

கொலையை ஏன் ஆங்கிலத்தில் Murder, Assassination என இரண்டாக வகைப்படுத்தி இருக்கிறார்கள்? இரண்டுக்கும் என்ன வேறுபாடு?

முடிவாக(!) ஒரே அர்த்தம் தான். 'மர்டர்' என்கிற ஆங்கில வார்த்தை பண்டைய சம்ஸ்கிருத 'மர்' என்கிற வார்த்தையில் இருந்து வந்தது. (இந்தியில்கூட 'மர்கயா' என்றால் இறந்துபோய்விட்டதாக அர்த்தம்!). Assassina-tion என்கிற வார்த்தையை இப்போது வி.ஐ.பி-க்களுக்குத்தான் பயன்படுத்துகிறோம். சுமார் 800 ஆண்டுகளுக்கு முன், புனிதப் போரில் ஈடுபட்ட கிறிஸ்துவர்களைக் கொல்ல அரேபியர்கள் 'கெரில்ல'ப் படை அமைத்தனர். அந்த வீரர்கள் கொலை செய்யக் கிளம்புவதற்கு முன்பு Hashish என்கிற ஒரு வகை கஞ்சாவை மென்று போதை ஏற்றிக்கொள்வார்கள். (அப்போதுதான் வெறி அதிகமாகும்!). அந்த வீரர்கள்Hashshashins என்று அழைக்கப்பட்டார்கள். அது இங்கிலீஷில் பிறகு Assassin என்று ஆகிவிட்டது!

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites