ஐ.பி.எல்...எதிர்ப்பு : தடை செய்ய கோரிக்கை

20 April 2010 ·

ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளுக்கு எதிர்ப்பு : தடை செய்ய கோரிக்கைபுதுடில்லி : 'ஐ.பி.எல்., சார்பில் நடத்தப்படும் கிரிக்கெட் போட்டிகளில் அதிக அளவில் சூதாட்டம் நடக்கிறது. பெருமளவு கறுப்புப் பணம் புழங்கும் இந்த அமைப்பை தடை செய்ய வேண்டும். இவற்றின் நிதி ஆதாரம் குறித்து பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என்ற, நாடு முழுவதும் உள்ள மக்களின் எண்ணம், லோக்சபாவில் நேற்று எதிரொலித்தது. எதிர்க்கட்சிகள் நேற்று புயலை கிளப்பின. பி.சி.சி.ஐ., அமைப்பை தேசியமயமாக்க வேண்டும் என்றும் யோசனை தெரிவிக்கப்பட்டது.
'இந்த விஷயத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது' என, நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி எச்சரித்துள்ளார்.

ஐ.பி.எல்., கொச்சி கிரிக்கெட் அணி ஏலம் எடுக்கப்பட்ட விவகாரத்தில் வசமாக சிக்கிய மத்திய அமைச்சர் சசி தரூர், பதவியை ராஜினாமா செய்தார். இது தொடர்பாக தனக்கு கிடைத்த கொச்சி அணியின் பங்குகளை, அதன் உரிமையாளர்களிடமே, சசி தரூரின் தோழி சுனந்தா திரும்பக் கொடுப்பதாக அறிவித்தார். இதன் மூலம், ஐ.பி.எல்., விவகாரத்தில், சசி தரூருக்கு உள்ள தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது. ஐ.பி.எல்., தொடரில் விளையாடும் மற்ற அணிகளைப் பற்றிய முழு விவரங்களையும் அளிக்கும் படி, ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடிக்கு, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


ஐ.பி.எல்., விவகாரம், லோக்சபாவில் நேற்று எதிரொலித்தது. சபை துவங்கியதுமே, ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத், ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ், சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங் யாதவ் ஆகியோர், ஐ.பி.எல்., பிரச்னையை எழுப்பினர். 'ஐ.பி.எல்., போட்டிகளில் சூதாட்டம் நடக்கிறது. ஐ.பி.எல்., அமைப்பை தடை செய்து விட்டு, அதை அரசே ஏற்று நடத்த வேண்டும். கிரிக்கெட் போட்டிகளில் பெருமளவில் கறுப்புப் பணம் பங்கு வகிக்கிறது' என, சபையின் மையப் பகுதிக்கு வந்து அவர்கள் கோஷம் எழுப்பினர். சரத் யாதவ் பேசுகையில், 'நாங்கள் சசி தரூரை பற்றி கேள்வி எழுப்பவில்லை; ஐ.பி.எல்., குறித்து தான் கேள்வி எழுப்புகிறோம்' என்றார்.


சூதாட்டம்: இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் குருதாஸ் தாஸ் குப்தா: வெளிநாடுகளில் தொழிலதிபர் களால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கள்ளப் பணம், இங்கு கொண்டு வரப்பட்டு ஐ.பி.எல்., போட்டிகளுக்கு பயன்படுத்துவதன் மூலம், நல்ல பணமாக்கப்படுகிறது. 'டுவென்டி-20' போட்டியின் நடைமுறைகள், கிரிக்கெட் விளையாட்டை கேலிக்குரியதாக மாற்றியுள்ளன. வீரர்கள் பணம் குவிப்பதற்கு ஏற்ற வகையில், இவை மாற்றப்பட்டு உள்ளன. காய்கறிகளை வாங்குவதைப் போல், கிரிக்கெட் வீரர்களை வாங்குகின்றனர். சூதாட்டம் வெளிப்படையாக நடக்கிறது. இதை கிரிக்கெட் போட்டி என கூற முடியாது. முறைப்படுத்தப்பட்ட சூதாட்டம் என்று தான் கூற வேண்டும். கிரிக்கெட் போட்டி என்ற பெயரில், கறுப்புப் பணம் முழுவதும் வெள்ளைப் பணமாக மாற்றப்படுகிறது. அரசியல்வாதிகள், படுக்கை அறையில் கிரிக்கெட் விளையாடுகின்றனர்; தொழிலதிபர்கள், கிரிக்கெட் வாரிய அறையில் விளையாடுகின்றனர்.


யாரும் தப்ப முடியாது: லோக்சபாவில் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகையில், 'ஐ.பி.எல்., போட்டிகள் குறித்தும், இதில் உள்ள அணிகளின் நிதி ஆதாரம் குறித்தும் ஏற்கனவே விசாரணை துவங்கியுள்ளது. இதில் யாராவது தவறு மற்றும் குற்றம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது' என்றார். ஐ.பி.எல்., விவகாரம், லோக்சபாவில் பெரும் புயலை கிளப்பியுள்ளதன் மூலம், ஐ.பி.எல்., அமைப்புக்கும், அதன் தலைவர் லலித் மோடிக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஐ.பி.எல்., அமைப்பு தடை செய்யப்படுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் கிரிக்கெட் கன்ட்ரோல் போர்டும், லலித் மோடியுடன் சம்பந்தப்படாமல் ஒதுங்கிச் செயல்பட ஆரம்பித்திருக்கிறது. இந்த அமைப்பையும் தேசியமயமாக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.


கொதிக்கிறார் மோடி: ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடி கூறுகையில், 'ஐ.பி.எல்., போட்டிகளில் கறுப்புப் பணம் பயன்படுத்த படுவதாகவும், நிதி மோசடி நடப்பதாகவும் கூறப்படும் குற்றச் சாட்டுகள் முட்டாள் தனமானவை. சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் ஒழிப்புத் துறையினர், ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கூர்ந்து கண்காணித்து வருகின்றனர்' என்றார்.


கிரிக்கெட் வாரியத்தை அரசே ஏற்குமா: உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க, பெருமளவில் பணம் புரளும் விளையாட்டு அமைப்புகளில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் ஒன்று. இந்திய மக்களிடையே இருக்கும் வெறித்தனமான கிரிக்கெட் மோகத்தை பணமாக்கி, 'கல்லா' கட்டி வருகிறது கிரிக்கெட் வாரியம். இந்த கிரிக்கெட் வாரியத்தால் உருவாக்கப்பட்டது தான், ஐ.பி.எல்., அமைப்பு. டெஸ்ட் போட்டிகள், ஒரு நாள் போட்டிகள் ஆகியவற்றுக்கு ரசிகர்களின் கூட்டம் குறைந்து வருவதையொட்டி, மூன்று மணி நேரம் மட்டுமே நடக்கும் வகையில், 'டிவென்டி-20' போட்டிகளாக, கிரிக்கெட் விளையாட்டு முறையை மாற்றி, பணத்தைக் குவிக்கும் திட்டத்துடன் ஐ.பி.எல்., ஏற்படுத்தப்பட்டது. இந்த போட்டிகள், நாடுகளுக்கு இடையேயானது இல்லை. உலகில் உள்ள அனைத்து கிரிக்கெட்அணிகளையும் சேர்ந்த வீரர்களையும், ஆடு, மாடுகளை ஏலம் எடுப்பது போல் எடுத்து, போனால் போகிறது என, ஒரு சில உள்ளூர் வீரர்களையும் சேர்த்து, இந்த போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதனால் தேசிய நலன் எதுவும் இல்லை.


போட்டிகளுக்கான கட்டணம், விளம்பரம், 'டிவி' ஒளிபரப்பு உரிமை ஆகியவற்றின் மூலமாகவும், கோடிக்கணக்கில் ஐ.பி.எல்., அமைப்புக்கு பணம் குவிகிறது. கிடைக்கும் வருவாய்க்கான வருமான வரி மட்டுமே இவர்களால் கட்டப்படுகிறது. கிரிக்கெட் போட்டிகளால் கோடிக் கணக்கில் பணம் புரண்டாலும், இதனால் நாட்டுக்கு எந்த பயனும் இல்லை. கோடிக்கணக்கான மக்கள் அடுத்த வேளை உணவுக்கே வழி இல்லாமல் இருக்கும் நம் நாட்டில், ஒரு விளையாட்டு அமைப்பும், அதைச் சார்ந்தவர்களும், பணத்தைக் குவித்து குளிர் காய்ந்து வருவது, கவலையான விஷயம் தான். இதனால் தான், ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளை தடை செய்ய வேண்டும் என்றும், கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை அரசே ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது வலுத்து வருகிறது. கிரிக்கெட் வாரியத்தை அரசே ஏற்று நடத்துவதன் மூலம், அரசுக்கு ஏராளமான நிதி கிடைக்கும். இந்த நிதியை நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு பயன்படுத்தலாம். இனியாவது விழித்துக் கொள்ளுமா மத்திய அரசு?

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil