அடி வாங்கிச் செத்த டைனோசர்!
மயிலுக்குத் தோகை, தவளைக்கு விரியும் கழுத்துப் பை என ஆண் விலங்குகள் அனைத்துக்கும் தங்களை விளம்பரம் செய்துகொள்ளும் ஸ்டைல் உண்டு. தன்னைச் சரியாக விற்கும் ஆண் மட்டும்தான் பெண்ணின் உறவைப் பெற முடியும். இனத்தையும் பெருக்க முடியும்!சுமார் எட்டுக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மடிந்த, டைனோசர்கள் இனப் பெருக்கக் காலத்தில் தன்னை விளம்பரப்படுத்த, முதுகுப் பகுதியில் இருக்கும் பட்டைகளில் மிக அதிக ரத்தத்தைச் செலுத்தி அவற்றைச் சிவப்பு நிறமாக மாற்றுமாம். அப்படிச் செய்யக் கற்றுக்கொள்ளாத சில ஆண் டைனோசர்கள், பெண் டைனோசர்களிடம் அடி வாங்கியே செத்துப்போயினவாம். மனித இனத்தில் மட்டும்தான் பெண்கள் விளம்பரப் பொருளாக இருக்கிறார்கள்.கிரேக்க காலத்தில் விலை மாதுக்கள் தங்களை விளம் பரப்படுத்த அனுமதி இருந்தது. அம்புக் குறி பொறிக்கப்பட்ட காலணிகளில் சிவப்பு மை பதித்த விலை மாதர்கள் கிரேக்க வீதிகளில் வாடிக்கையாளர்களுக்காகக் காத்திருப்பார்களாம். அவர்கள் நகரும்போது செருப்புத் தடத்தின் சிவப்பு மையைப் பார்த்து வாடிக்கையாளர்கள் பின் தொடர்ந்ததாக வரலாறு!
--------------------------------------------------------------------------
நீங்க கோலா ஆளா?
'கோகோ கோலா, பெப்சி' - விளம்பர உலகின் தவிர்க்க இயலாத பாடங்கள். 30 பைசா செலவில் ஒரு பானத்தைத் தயாரித்து ஏழு ரூபாய்க்கு விளம்பரம் செய்து 10 ரூபாய்க்கு விற்கும் விற்பனைத் தந்திரத்தை உலகுக்குக் கற்றுத் தந்தது இந்த கோலாக்கள்தான்.1890-களில் இருந்தே விளம்பரங்கள் மூலமாக மக்களை வசியப் படுத்தும் ஆராய்ச்சியைச் செய்து வருகின்றன கோலா நிறுவனங்கள். இவர்களின் முக்கியமான விளம்பர உத்தி 'பாலின ஈர்ப்பு'! பெண்ணின் உடல் போன்ற வடிவத்திலேயே கோலா பாட்டில்கள் உருவாக்கப் படுகின்றன. ஐரோப்பாவில் விற்கும் கோலா பாட்டில் நீண்டு மெலிந்ததாகவும், இந்திய பாட்டில்கள் அதைவிடக் கொஞ்சம் உயரம் குறைவானதாகவும், சீன கோலா பாட்டில்கள் குட்டையாகவும் இருக்கும்! தவிர, நட்சத்திரங்கள் மீதான கவர்ச்சி, தேசியஉணர்ச்சி போன்றவையும் இவர்களுக்கு விளம்பர ஆயுதங்களே. இந்திய கிரிக்கெட் டீமின் டி-ஷர்ட் கலர் புளூ. உடனே, 'புளூ பெப்சி' வந்தது. சீனாவில் ஒலிம்பிக்... அதனால் 'சிவப்பு கோக்'
--------------------------------------------------------------------------------
மனசே மந்திரம்... உடலே விளம்பரம்தேர்தல் சமயத்தில் தலைமுடியை இரட்டை இலைபோல வெட்டிக்கொள்ளும் தொண்டர்கள் நம் ஊரில் உண்டு. உலகம் முழுக்க உடம்பில் விளம்பரம் செய்து கொள்வது ஒரு வியாபாரம். இவர்களுக்கு Human Billboards என்று பெயர்.
19-ம் நூற்றாண்டில் லண்டனில் விளம்பரப் பலகைகளுக்கு வரி விதிக்க ஆரம்பித்தனர். இட நெருக்கடியும், போட்டியும் சேர்ந்து கொள்ள மாற்றுவழியாக உருவானதுதான் மனித விளம்பரப் பலகைகள். சாண்ட்விச் கடைகள் தங்கள் விளம்பரங்களைச் சிலரின் கழுத்தில் முன்னும் பின்னுமாகத் தொங்க விட்டுச் சுற்றவிட்டன. (பிராண்ட் அம்பாஸடர்?!). இதை எழுத்தாளர் சார்லஸ் டிக்கன்ஸ் 'ஒரு துண்டு மனித இறைச்சி இரண்டு விளம்பரப் பலகைகளுக்கு நடுவே மாட்டியிருக்கிறது' என எழுதினார். இது படிப்படியாக வளர்ந்து, பணம் கொட்டும் பிசினஸ் ஆகிவிட்டது. 2003-ம் ஆண்டு ஜிம் நெல்சன் என்ற 22 வயது இளைஞர், தன் பின் மண்டையை ஒரு இணைய தள நிறுவன விளம்பரத்துக்கு 7,000 டாலருக்காக விற்றார். அடுத்த ஆறு மாதங்களில் இந்த விளம்பரம் மூலமாக 500 புதிய வாடிக்கையாளர்கள் அந்தத் தளத்துக்குக் கிடைத் தனர். 2005-ல் ஆண்ட்ரீவ் ஃபிச்சர் என்பவர் தன் நெற்றியை eBay நிறுவன விளம்பரத்துக்கு விற்றார். அதற்கு அவர் பெற்ற சம்பளம் 37,375 டாலர்!
------------------------------------------------------------------------------------
மின்னலைப் பிடித்து, மேகத்தைச் சமைத்து விளம்பரம் செய்!
விண்ணில் ஏறி விளம்பரம் செய்யும் வித்தை இது. ஸ்கை ரைட்டிங் (Sky writing), ஸ்கை டைப்பிங் (Sky Typing) என்பார்கள்.
ஸ்கை ரைட்டிங் முறையில் சிறிய விமானம் ஒன்றை விண்ணில் செலுத்தி அதன் எக்ஸாஸ்டில் இருந்து சிறப்பு வகையான புகையை வெளிவரச் செய்வார்கள். அழுத் தம் ஊட்டப்பட்ட கன்டெயினரை எக்ஸாஸ்ட்டுடன் இணைத்து அதற்குள் கானோபஸ் 13 என்ற எண்ணெய் அல்லது பாரஃபின் எண்ணெயை அடைத்து, இந்த அடர்த்தியான வெண் புகையை வரவழைப்பார்கள். விமானத்தைக் குறிப்பிட்ட முறையில் பறக்கச் செய்யும் போது வெளிவரும் புகையானது விளம்பர வாசகங்களை வானில் உருவாக்கும். கீழே இருந்து பார்க்க ஜோராக இருக்கும். சில பணக் காரக் காதலர்கள் தங்களின் காதலைக்கூட இப்படிச் சொல் வார்களாம். நியூயார்க்கில் இதற்கு என்றே இயங்கும் ஒரு நிறுவனம் மாதத்துக்குக் கிட்டத்தட்ட 50 ஸ்கை ரைட்டிங் காதல் வாசகங் களை வானில் எழுது கிறது. காற்று குறைவான, மேகங்கள் இல்லாத தெளிவான வானிலை இதற்கு அவசியம்.கிட்டத்தட்ட 10 ஆயிரம் அடி முதல் 17ஆயிரம் அடி உயரத்தில் இந்த ஸ்கை ரைட்டிங் விளம்பரங்கள் எழுதப்படும். ஒரு விமா னம் மூலம் ஆறு எழுத்துக்கள் வரை எழுதலாம். ஓர் எழுத்தை உருவாக்க ஆறேழு விநாடிகள் ஆகும். அதிக எழுத்துக்கள் கொண்ட நீளமான வாசகங்கள் என்றால் ஏழெட்டு விமானங் களைப் பயன்படுத்தி, பல திசை களில் விமானங்களைச் செலுத்தி மிகுந்த திறமையுடன் வாசகங்களை எழுதுவார்கள். அதிகபட்சம் 20 நிமிடங்கள் வரை இந்த எழுத் துக்கள் வானில் இருக்கச் சாத்தி யம் உண்டு. காற்று பலமாக வீசி னால் கலைந்துவிடும். கிட்டத்தட்ட 30 மைல் சுற்றளவில் உள்ளவர்களால் இந்த விளம்பர வாசகங்களைப் படிக்க முடியும். ஸ்கை ரைட்டிங், விமானிகளின் சாகச விளையாட்டு. 1922-ம் ஆண்டு முதல் ஸ்கை ரைட்டிங் என்பது விளம்பரங்களிலும் வந்தது. பெப்ஸியும் ஸ்கை ரைட்டிங் மூலம் விளம்பரம் செய்தது. நம் ஊர் சர்க்கஸ்களில் சர்ச் லைட்டுகள் மூலம் மக்களை ஈர்ப்பதும் ஒரு வகையான வான் வழி விளம்பரம் தான்!
-------------------------------------------------------------------------------
ஒரு படம்... ஒரு பாடம்!
ஒரு படம் அல்லது சில வார்த்தைகள் மூலம் விளம்பரம் செய்வது ரொம்பவே சவாலான விஷயம். அந்தச் சவாலில் சாதித்த சில விளம்பரங்கள்இவை...
புயலில் சிக்கிச் சின்னாபின்னமாகிக்கிடக்கும் ஊரில் எதுவும் மிஞ்சவில்லை. நான்கு சக்கரங்கள் மட்டுமே எஞ்சி நிற்கினறன. ஜே.கே. டயர்ஸின் விளம்பரம் இது.
'ஷாரூக்கான் ஒரு நிமிடத்துக்கு 247 ரூபாய் சம்பாதிக்கிறார். அமிதாப் 361 ரூபாய். சச்சின் 1,163 ரூபாய். இந்திரா நூயி (பெப்ஸி நிறுவன அதிகாரி) நிமிடத்துக்கு 2,911 ரூபாய் சம்பாதிக்கிறார்' என்பதோடு அந்த லிஸ்ட் முடிகிறது. கீழே 'பெண் குழந்தைகளைக் கருவிலேயே அழிக்காதீர்கள்' என்ற விளம்பர வாசகம்.
டூ மினிட் மேகி நூடுல்ஸின் சமீபத்திய விளம்பரம் இது. 'கடந்த 20 வருடங்களாக நாங்கள் உங்களின் இரண்டு நிமிடங்களை மட்டும்தான் கேட்கிறோம்!' என்கிற ஸ்லோகனுக்குக் கீழே மேகி நூடுல்ஸின் லோகோ. கெஞ்சல் தொனியில் இருக்கும் இந்த விளம்பரம் எக்கச்சக்க ஹிட்.
காரின் ஜன்னல் வழியே பார்த்தால் பச்சைப் பசேல் என்ற நிலம் இருக்கும். அதன் மிரர் வியூவில் (பின்புறம் பார்க்கும் கண்ணாடி) வறண்ட, கரடுமுரடான நிலம் இருக்கும். கண்ணாடியில் 'objects in the mirror are closer than they appear' என்கிற வாசகம் இருக்கும். 'மரத்தைக் காப்பாற்றுங்கள்... உலகத்தைக் காப்பாற்றுங்கள்' என்பது விளம்பர வரிகள்.
v s on என்கிற வார்த்தைக்குக் கீழே 'கண்தானம் செய்யுங்கள்' என்கிற அறிவிப்பு. ஏதாவது புரிகிறதா? vision என்கிற எழுத்தில் இருந்து இரண்டு 'ஐ'யை எடுத்துத் தானம் செய்யச் சொல்கிறார்கள். எவ்வளவு பெரிய விஷயத்தைச் சிம்பிளாகச் சொல்லிவிட்டார்கள்?
பரமபத விளையாட்டில் ஏணிகள் மட்டுமே இருக்கின்றன. பாம்புகள் ஒன்றுகூட இல்லை. அனிமல் பிளானெட் சேனலின் உலக அளவிலான பாம்புகள் பற்றிய ஷோவுக்கான விளம்பரம் இது. (பாம்புகள் எல்லாம் ஷோவுக்குச் சென்றுவிட்டனவாம்!) ஒற்றை மனிதக் காலுக்கு அருகிலேயே ஒரு செயற்கைக் கால். 'காரைப்போல மனிதர்களுக்கு ஒரிஜினல் ஸ்பேர்பார்ட்ஸ் கிடைப்பது இல்லை' என்பது விளம்பர வாசகம். 'குடித்துவிட்டு வண்டி ஓட்டாதீர்கள்' என்கிற பி.எம்.டபிள்யூ காரின் விளம்பரம் இது.
------------------------------------------------------------------------
வாழ்க்கையே ஒரு விளம்பர இடைவேளைதான்!
'நான் என்ன சொன்னேன்... நீ என்ன செஞ்சே?' என்று புலம்பும் கவுண்டரைப்போல ஆகிவிடுகின்றன பல விளம்பரங்களின் நிலைமை. இவர்கள் ஓர் அர்த்தத்தில் விளம்பரம் எடுக்க, மக்கள் அதை வேறு மாதிரி புரிந்துகொள்கின்றனர்.
ஆல் அவுட் கொசு மருந்தை வாங்கி வைத்துவிட்டு அது எம்பி நாக்கை நீட்டிக் கொசுவைப் பிடிக்கும் என்று காத்திருந்தவர்கள் பலர். 1990 வரையிலும் ஆணுறை உபயோகம்பற்றி மக்களுக்கு விளக்க இந்தியாவில் சமூக சேவகர்களே கிடைக்கவில்லை. பீஹார் பகுதிகளில் 'விளக்கியே ஆக வேண்டும்' என்று அரசால் அனுப் பப்பட்டவர்கள் கட்டை விரலில் ஆணுறையை மாட்டிக்கொண்டு 'இப்படி அணிந்துகொண்டால் எய்ட்ஸ் வராது' என்றார்கள். விளைவு, மக்களும் ஆளுக்கு ஒன்றை வாங்கி கட்டை விரலில் மாட்டிக்கொண்டார்கள்!
மின் விளக்குகள் இந்தியாவில் பிரபலமாகாத நிலையில் பிரிட்டன் நிறுவனம் ஒன்று கண்ணாடி பொருத்தப்பட்ட சிம்னி விளக்கு ஒன்றை அறிமுகப்படுத்தியது. 'சாதாரண விளக்கு காற்றில் அணைந்துவிடும். இது புயலில்கூட (ஹரிகேன்) அணையாது' என்று அவர்கள் ஆங்கிலத்தில் விளம்பரம் செய்ய... நாம் அதை இன்னமும் 'ஹரிகேன் லைட்' என்றே அழைக்கிறோம். போட்டோ காப்பியரை ஜெராக்ஸ் என்றும்,
அடிசிவ் பேன்டேஜ் என்பதை பேன்ட் -எய்டு என்றும், பெட்ரோலியம்ஜெல் லியை வாசலின் என்றும், வேக்குவம் க்ளீனரை ஹோவர் என்றும் அழைக்கும் அளவுக்கு விளம்பரங்களின் தாக்கம் மக்களின் மனங்களில் பதியவைக்கப்பட்டுள்ளது.
ரேடியோக்கள் வந்த புதிதில் விளம்பரங்கள் அதிகபட்சம் மூன்று நிமிடங்களில் முடிந்துவிடும். ஆனால் இன்று, 18 நிமிடங்கள் வரை நீள்கின்றன. 'நமது மூளையில் சராசரியாக ஒரு நாளைக்கு சுமார் மூவாயிரம் மார்க்கெட்டிங் செய்திகள் விளம்பரங்கள் மூலமாக நுழைகின்றன. சராசரியாக ஒருவர் தன் வாழ்நாளில் மூன்று வருடங்கள் விளம்பரங்கள் பார்ப்பதிலேயே செலவழிக்கிறார்' என்கிறார் பிரபல விளம்பர விமர்சகர் கல்லே லாசன்!
--------------------------------------------------------------------------
கார் வாங்கினால்தான் கெளரவமா?
விளம்பரங்கள் பல நூற்றாண்டு காலமாக இருந்தாலும், தொழில் புரட்சிக்குப் பின்னர்தான் இத்தனை முன்னேற்றம். தொலைக்காட்சிகளின் வருகைக்குப் பிறகு இந்த முன்னேற்றம் பல மடங்கு அதிகரித்தது.
இந்தியாவில் டி.வி. விளம்பரங் களைக் கட்டுப்படுத்திக் கண்காணிக்கும் அமைப்பு, அட்வர்டைஸிங் ஸ்டாண்டர்ட்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா. விதிமுறைகளுக்கு எதிராக மற்றும் தவறான, நேர்மையற்ற, ஆபாசமான, சட்டத்துக்குப் புறம்பான, பாதுகாப்பற்ற செயல் முறைகளுக்கு வழிவகுக்கக்கூடிய விளம்பரங்கள் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கும் உரிமை இவர்களுக்கு உண்டு. சமீபத்தில் உணவுப் பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள் தொடர்பான விளம்பரங்களின் விதிமுறைகளைக் கடுமையாக்கி உள்ளனர். இதன்படி, குறிப்பிட்ட பொருளைச் சாப்பிட்டால் புத்திக்கூர்மை அதிகரிக்கும், உடல் திறன் அதிகரிக்கும் என்ற விளம்பர வாசகங்களுக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டால் மட்டுமே இந்த வாசகங்களைப் பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கான உணவு மற்றும் பானங்கள் தொடர்பான விளம்பரங்களில் வரும் வாசகங்கள், அவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் இருக்க வேண்டும். விளம்பரத்தில் காட்டுவதற்கும் உண்மைக்கும் எவ்வித வித்தியாசமும் இருக்கக் கூடாது எனக் கட்டுப்பாடுகள் எல்லாம் ஓ.கே. ஆனால், இவை பின்பற்றப்படுகின்றனவா?
பணத் தேவை இல்லாதபோது, உங்களிடம் 100 ரூபாயை திடீரெனக் கொடுத்து செலவு செய்யச் சொன்னால், அதில் 50 ரூபாயை உங்கள் மனதில் ஓடும் விளம்பரங்களின்படிதான் நீங்கள் செலவு செய்வீர்கள். அதுதான் விளம்பரங்களின் வெற்றி. கறுப்பான பெண்ணை ஆண்களுக்குப் பிடிக்காது, பைக் இல்லாத பையனைப் பெண்களுக்குப் பிடிக்காது, கார் வாங்கினால்தான் குடும்பத்துக்குக் கௌரவம் போன்ற கருத்துக்கள் யாருடைய வெற்றி... யாருடைய தோல்வி?
2 comments:
I loved your both articles on advertising
Very interesting information..i really loved it...keep up ur gud work.
Thanks
Raja
tnx
Post a Comment