orkut, facebook பாதுகாப்பாக இயங்குவது எப்படி?

17 May 2010 ·


'சமூகம் என்பது நாலு பேர்!' என்றார் ஜெயகாந்தன். ஆனால், இருந்த இடத்தில் இருந்தே நாலு கோடிப் பேர் சமூகத்தில் நம்மை இணைத்துப் பிணைத்துக் கொள்பவை சமூக வலைதளங்கள் எனப்படும் 'சோஷியல் நெட்வொர்க்கிங் சைட்ஸ்'! படிக்கட்டு பஸ் பயணம், ஸ்டோன் வாஷ் ஜீன்ஸ், எஸ்.எம்.எஸ். அடித்துக் கொண்டே இருக்கும் விரல்கள், பல்சர்-யமஹா பைக் வகைகள் போன்ற இளமை அடையாளங்களில் லேட்டஸ்ட் என்ட்ரி, இந்த சோஷியல் நெட்வொர்க்கிங் சைட்கள். மிகத் துல்லியமான எண்ணிக்கை இல்லை என்றாலும், சமூக வலை தளங்களின் எண்ணிக்கை இன்றைய தேதியில் 350 வரை இருக்கலாம். ஆர்குட்டில் ஆரம்பித்த போதை மைஸ்பேஸ், கிளாஸ்மேட்ஸ், ஃபேஸ்புக், ட்விட்டர் என்று அடுத்தடுத்த கிளை தாவி, பிரமாண்ட கற்பனைப் பந்தலாக பூமிப் பந்தைக் கவர்ந்திருக்கிறது. உலகின் ஒவ்வொரு நொடி நிகழ்வுகளிலும் பங்கெடுக்க வாய்ப்பு தரும் இந்தத் தளங்களில் நம்மைப்பற்றிய சில தகவல்களை அளிக்க வேண்டியிருக்கும். பெயர், வயது, பாலினம், படிப்பு, வேலை, புகைப்படம் போன்ற அடிப்படைத் தகவல்களைத் தாண்டியும் சில பெர்சனல் விவரங்களைக் கேட்கும் சில தளங்கள். 'காபி சாப்பிடப் போகிறேன்', 'கார் வாங்கப் போகிறேன்', 'இரண்டாவது அரியர்', 'பெண் பார்க்க வருகிறார்கள்', 'ஹேங்ஓவர் கண்ணைக் கட்டுகிறது' என்று நமது அத்தனை செயல்களையும் நடவடிக்கைகளையும் சேட்டைகளையும் இந்தத் தளத்தில் பதிப்பிக்கச் சொல்கிறார்கள். நண்பர்களுடனான தனிமைத் தருணங்களில் மட்டுமே மனம்விட்டுப் பேசிச் சிரிக்கும் சங்கதிகளையும் உலகத்துக்கே நாம் காட்சிப் பொருளாக்குகிறோம். ஆனால், அவை ஏதோ ஒரு வடிவில், விதத்தில் எதிர்காலத்தில் நமக்கே வில்லனாக வந்து நிற்கும் அபாயத்தை உணர்ந்திருக்கிறீர்களா? ஓ.கே. சிம்பிளாக ஆரம்பிக்கலாம். இந்தத் தளங்கள் உங்களுக்கு எதற்காக இலவச சேவை அளிக்க வேண்டும்? நீங்கள் உங்களைப்பற்றி அளிக்கும் தகவல்களின் அடிப்படையில், உங்கள் அக்கவுன்ட்டில் லாக்-இன் செய்யும்போது, உங்களுக்குத் தேவையான விளம்பரங்களைப் பரவவிடுவதற்காக! அதாவது, உங்கள் ப்ரொஃபைலில், '28 வயது கல்யாணம் ஆகாத ஆண்' என்று நீங்கள் பதிவிட்டால், மேட்ரிமோனியல் விளம்பரங்களாகக் குவியும். 'பெண்களின் மீது நாட்டமுள்ள 52 வயது ஆண்' என்று பதிவிட்டால் வயாகரா-ட்ரிபிள்எக்ஸ் விளம்பரங்களாகக் குவியும். 'அடுத்த வாரம் கொடைக்கானல் போகிறேனே!' என்று நீங்கள் ஸ்கிராப் அடித்தால், கொடைக்கானலுக்கு டூர் பேக்கேஜ் அளிக்கும் சுற்றுலா நிறுவனங்கள், கொடைக்கானல் ஹோட்டல் விளம்பரங்களாகக் குவியும். இதுதான் மெக்கானிசம். ஆனால், தற்போது இதையும் தாண்டி உங்களின் இணைய நடவடிக்கைகள் அனைத்தையும் பின் தொடர்ந்து ஒரு கட்டத்துக்கு மேல் உங்களை அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வேலைகள் அரங்கேறும் நாள் வெகு தொலைவில் இல்லை.

உங்கள் ஆன்லைன் வங்கிக் கணக்கில் நீங்கள் மேற்கொள்ளும் பணப் பரிமாற்றங்கள், ஆன்லைன் ஷேர் டிரேடிங், நண்பர்களுக்கு அனுப்பும் மெயில்கள், டவுன்லோட் செய்யும் தகவல்கள் அனைத்தும் மூன்றாவது கண்களினால் கண்காணிக்கப்படும். சட்டென்று ஒரு குட்டி வைரஸ் சாஃப்ட்வேரை உங்கள் கணினிக்குள் இறக்கி, 'அதைச் சரிசெய்ய இந்த லிங்க்கைக் க்ளிக் செய்யுங்கள். ஆடித் தள்ளுபடி ஆஃபர் 50 ரூபாய் மட்டுமே!' என்று காசு கறப்பார்கள். அப்படியே தொட்டுத் தொடர்ந்து நமது அக்கவுன்ட்டை முடக்கி, அதை விடுவிக்க பைசா கேட்பதில் தொடங்கி, நமது கணினியை ஹேக் செய்வது வரை வலை விரிப்பார்கள். ஆனால், நம்மையும் அறியாமல் அவர்களுக்குத் தேவையான அனைத்துத் தகவல்களையும் நாமே உள்ளீட்டுக்கொண்டு இருப்போம். இது போக, நாம் அப்லோட் செய்யும் போட்டோக்களுக்கு வரும் சகிக்க முடியாத கமென்ட்கள் ஏற்படுத்தும் மன உளைச்சல், நமது பெர்சனல் விஷயங்களைப்பற்றிய விவாதங்களின்போது எழும் கோபதாபங்கள் என நம்மை மனரீதியாக முடக்கும் சிக்கல்கள் பட்டியலுக்குள் அடங்காது. பலருக்குத் தமது அடையாளத்தை வெளிப்படுத்திக்கொள்ளாமல் பொய்யான தகவல்கள் மற்றும் புகைப்படங்களுடன் பிறரின் ஆர்குட், ஃபேஸ்புக் பக்கங்களை மேயும் 54 சதவிகித பதின்பருவ வயதினர் 'ஆபத்தான இணையப் போக்கு' எனும் மனச் சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள். நீங்கள் நண்பர்களுடன் பார்ட்டிகளில் லூட்டி அடித்துக்கொண்டு இருந்த படங்களை 'சும்மா ஜாலி'க்கு என்று அப்லோட் செய்வது எதிர்காலத்தில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்று யாராலுமே கணிக்க முடியாது. இணையத்தில் உலவும் சில விஷமிகளை 'செக்சுவல் பிரடேட்டர்கள்' என்றுகுறிப்பிடு கிறார்கள். இவர்களின் முழு நேர வேலையே சோஷியல் நெட்வொர்கிங் சைட்களில் குவிந்திருக்கும் புகைப்படங்களை நோட்டம் இட்டுக்கொண்டே இருப்பதுதான். அதில் அழகாக இருக்கும் ஆண்/பெண்களைக்குறி வைத்து நட்புப் பாலம் கட்ட முயற்சிப்பார்கள். அவர்களது நட்பைப் பெறுவதற்காக எந்த அளவுக்கும் இறங்கி வருவார்கள். தங்கள் ரத்தத்தில் பெயரை எழுதி அதை வீடியோ பதிவாகக்கூட அப்லோட் செய்வார்கள். குறிவைத்த நபர்கள் மசிந்து இறங்கி வந்ததும், அன்பு மழையில் நனையவைப்பார் கள். திகட்டத் திகட்டத் தித்திக்கும் அன்பு, பாசம், நேசம் பொழிவார்கள். ஒரு கட்டத் தில் சம்பந்தப்பட்டவர்கள் பிரடேட்டர்களின் அரவணைப்பை ஒவ்வொரு விஷயத்திலும் எதிர்பார்ப்பார்கள். அந்தக் கட்டத்துக்குப் பிறகுதான் பிரடேட்டர் தன் சுயரூபத்தைக் காட்டுவார். பாலீஷ் சில்மிஷப் பேச்சுகளில் துவங்கி நிர்வாண போட்டோக் கள் பரிமாறிக்கொள்வதில் தொடர்ந்து சந்திக்கும்போது, செக்ஸ் சீண்டல்களைக் கடந்து அடுத்த கட்டம் எட்டிப் பார்க்க முயற்சிப்பார். உங்களையும் அறியாமலேயே உங்களை நீங்களே அந்த பிரடேட்டருக்கு இரையாக்கிக்கொள்ளும் மாயம் நிகழும். 'இதில் என்ன தப்பு?', 'உலகத்தில் வேறெங்கும் நடக்காத சங்கதியா இது?' போன்ற கேள்விகளால் உங்களை நீங்களே சமாதானப்படுத்திக்கொள்ளும் நிலையை நீங்கள் எட்டுவது, இதில் ரெட் அலர்ட் அபாயக் கட்டம்.

பெர்சனல் பிரச்னைகள் மட்டுமல்லாமல், டெக்னிக்கலாகவும் உங்களின் கணிணியைத் தாக்க முடிகிற பல்வேறு மால்வேர்கள், வைரஸ்களை அனுப்பிக்கொண்டே இருப்பார்கள். உங்கள் வங்கியின் வெப் பக்கத்தைப் போலவே போலியாக ஒரு வெப் பக்கத்தை உருவாக்கி, உங்களின் அக்கவுன்ட்டில் இருந்து பணத்தைத் கவர்வது போலவே, உங்கள் நண்பரின் ஆர்குட் பக்கத்தைப்போலப் பொய்யாக ஒன்றை உருவாக்கி, உங்கள் அந்தரங்கங்களைச் சுடுவதற்கு URL Spoofing என்று பெயர். உங்களைப்பற்றிய தவறான, நெகட்டிவ்வான செய்திகளைப் பரப்புவது, உங்கள் அனுமதி இல்லாமல் உங்கள் அக்கவுன்ட்டில் நுழைந்து தகவல்களை மேய்வது, போட்டோக்களை டவுன்லோட் செய்வது, வீடியோக்களை மற்றவருக்கு உங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து அனுப்புவது போன்றவை Cyberstalking வகை. உங்கள் வலைப் பக்கத்தை ஹேக் செய்து அதில் சில வைரஸ்களை லோட் செய்துவிட்டால், பின்பு நீங்கள் ஒவ்வொரு முறை உங்கள் நட்பு வட்டத்துக்குள் செல்கையில் அவர்களின் ஆர்குட் அல்லது ஃபேஸ்புக் பக்கத்திலும் இந்த வைரஸ்கள் குடி பெயர்ந்து பரவும்.

முன்னர்தான் இணையம் என்பது அனைவராலும் எளிதில் எட்ட முடியாத சங்கதியாக இருந்தது. ஆனால், இன்று செல்போன் இல்லாதவர்கள்கூட தினமும் இணையத்தை மேய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். மின்சாரக் கட்டணம் செலுத்த, அப்ளிகேஷன் டவுன்லோட் செய்ய, பங்குப் பரிவர்த்தனைகளில் ஈடுபட எனப் பல்வேறு நடைமுறைகளுக்காக எல்லா வயதினரும் இணையத்தோடு தங்களை இணைத்துக்கொண்டே ஆக வேண்டியிருக்கிறது. இதில் ஏதோ ஒரு காரணத்துக்காக உங்கள் பெற்றோர் இணையத்தில் இயங்கும் சமயம், நமீதா கம்யூனிட்டி, த்ரிஷா குளியலறைக் காட்சி கம்யூனிட்டி, குடும்பத் தலைவிகள் கம்யூனிட்டி, லேடீஸ் ஹாஸ்டல் கம்யூனிட்டி, சிக்ஸ்பேக் ரசிகைகள், லிவிங் டுகெதர் பார்ட்னர் தேடும் காலேஜ் பெண்கள் கம்யூனிட்டிகளில் உங்கள் போட்டோக்களை அவர்கள் பார்க்க நேர்ந்தால், விளைவுகளின் விபரீதங்களை கணிக்க முடியுமா?

இப்போதெல்லாம் திருமண வயதில் இருப்பவர்கள் தங்களுக்கு நிச்சயமான பெண் அல்லது பையனின் பெயரை கூகுள் தேடுதல் இயந்திரத்தில் டைப் செய்தால், அவர்களைப் பற்றிய முழுத் தகவல்களையும் போட்டோக்களுடன் கொட்டிவிடும். நனைந்த டவுசருடன் நண்பர்களுடன் நீச்சல் குளத்தில் போட்ட ஆட்டம், தோழிகளுக்கு மத்தி யில் கேக் அப்பிய முகத்துடன் நீங்கள் இருக்கும் கோலம், காலேஜ் கல்ச்சுரலில் அத்தனை ஆண் நண்பர்களுக்கு மத்தி யில் ஒற்றைப் பெண்ணாக நீங்கள் ஜீன்ஸ்-டி ஷர்ட்டுடன் ஆடும் வீடியோ, டாஸ்மாக் பார்-கையில் பீர் என மல்லாந்த தருணங்கள் என நீங்கள் நினைத்தே பார்த்திராத தகவல் மழை கொட்டும்.

புகைப்படம் எடுக்கப்பட்ட சூழல் பற்றித் தெரியாதவர்களுக்கு உங்கள் மீதான முதல் பிம்பம் என்னவாக இருக்கும்? ஒரு வரித் தகவல், ஒரு போட்டோ உங்கள் எதிர்காலத்தையே காலி செய்துவிடும்.

சிம்பிளாக ஒரே விஷயம்தான்... சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும்போது 'rather safe than sorry' என்பதை மட்டும் மனதில்வைத்துச் செயல்படுங்கள். ஆல் தி பெஸ்ட்!

பாதுகாப்புக்குச் சில வழிமுறைகள்

ஃபேஸ்புக், ஆர்குட் போன்ற சோஷியல் நெட்வொர்க்கிங் சைட்களில் வலைப்பதிவு செய்யும் விருப்பம் இருந்தால், professional மற்றும் personal சமாசாரங்களைத் தனியாகப் பிரித்து எடுத்துவிடுங்கள். ஒவ்வொருவரும் பொதுவான வலைதளம் ஒன்றும், விருப்பம் சார்ந்த ஒன்றும் பயன்படுத்துவது நல்லது. Professional வலைப்பதிவுத் தளத்தை அனைவரும் பார்க்கும்படியும், Personal வலைதளத்தை உங்கள் நட்பு வட்டாரம் மட்டும் பார்க்கும்படி பிரைவஸியை அமைத்துக்கொள்ளுங்கள். தெரியாத நபர்களை உங்கள் நட்பு வட்டத்தில் இணைத்துக்கொள்வது வம்பை விலை கொடுத்து வாங்குவதுபோல. வழக்கறிஞரான உங்களது வலைப்பதிவில் குற்றாலக் குடி கொண்டாட்டங்கள் முக்கியம் இல்லை. 'அதெல்லாம், தேவை இல்லை, பிரதர்! என் வாழ்க்கையே ஒரு திறந்த புத்தகம்!' என்று ஜல்லியடிக்கத் தோன்றினால், உங்களுக்கு ஒரு கேள்வி... அடுத்த வாரம் நீங்கள் வேலைக்கான நேர்முகத் தேர்வில் அமர்ந்திருக்கும்போது, நீங்கள் பிரசுரித்திருக்கும் தகவல்கள் உங்களை தர்ம சங்கடத்தில் நிறுத்துமா?

அதே சமயம் உங்களை ஒரு பிராண்டாக நிலை நிறுத்தவும் ட்விட்டர் (www.twitter.com), கூகுளின் பஸ்ஸ் (www.google.com/buzz) போன்ற கண நேர இணையதளங்கள் (Real time web) உதவும். பொதுவாக, நீங்கள் படித்த அல்லது பதிப்பித்தவற்றில் உரலிகளை இதில் கொடுப்பது நல்லது. முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, கண நேர இணையதளங்களில் தவறுகளைத் திருத்திக்கொள்வதிற்குச் சாத்தியம் மிகவும் குறைவு. காரணம், இவற்றை அடிப்படை யாகவைத்துப் பல்வேறு தளங்கள் கட்டப்பட்டு இருப்பதால், உங்களது பதிவு உங்களுக்கே தெரியாத பல தளங்களில் பிரதி எடுக்கப்படும். அது மட்டுமல்ல, உங்களது பதிவை நீங்கள் சரிசெய்வதற்கு முன்னால், வேறொருவர் Retweet செய்ய முடியும். ஆக, பதிவு செய்வ தற்கு முன்னால் பலமுறை யோசித்து அந்த Submit பட்டனை அழுத்துங்கள்!


செய்

பிடிக்காத வலைப்பதிவுகளுக்குப் பின்னூட்டம் எழுத வேண்டியிருந்தால், மரியாதையான தொனியுடன் எழுதுங்கள். தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே ஆன்லைனில் இட்ட வடு.

எவருடைய நட்பு வட்டத்தில் (Social Graph) சேர விரும்பி அழைப்பு அனுப்பி அதை அவர் ஏற்றுக்கொண்டால், சுருக்கமாக நன்றி நோட் ஒன்று அனுப்புங்கள்.

கடினமான கடவுச் சொல்லைத் தேர்ந்தெடுங்கள். உங்கள் பெயரையே கடவுச்சொல்லாகவைப்பது, படுமோசமான ஐடியா. சில மாதங்களுக்கு ஒருமுறை கடவுச் சொல்லை மாற்றிவிடுங்கள்.

எல்லாப் பதிவுகளும் எல்லோருக்கும் (Everyone) தெரியும் விதத்தில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சில பதிவுகள் உங்களது நட்பு வட்டத்துக்கு. சில நண்பர்களின் நட்பு வட்டங்களுக்கு; சில உலகில் உள்ள அனைவருக்கும். தெளிவாகப் புரிந்து பிரசுரியுங்கள். தவறுகளைத் திருத்திக்கொள்ளும் வாய்ப்பு சோஷியல் மீடியாவில் குறைவு!


செய்யாதே

ரொம்பவும் பெர்சனலான விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளாதீர்கள். உங்களது நட்பு வட்டம் மிகச் சிறியதாக, உங்கள் நம்பிக்கைக்கு உரியதாக இன்றைக்கு இருக்கலாம். ஆனால், எதிர்காலத்தில் அது விரிவடையும்போது, இந்தத் தகவல்கள் தவறான வழியில் பயன்படுத்தப்படும் வாய்ப்புகள் அதிகம்.

அறிமுகம் இல்லாதவர்களிடம் இருந்து நட்புக் கான அழைப்புகள் (Friendship Requests) வரும்போது உடனடியாக அவர்களுடன் மவுஸ் குலுக்கிக்கொள்ளா தீர்கள். அவர்களது நட்பு வட்டாரத்தில் (Friends of friends) உங்களுக்குத் தெரிந்தவர்கள் இருக்கிறார்களா என்பதைப் பாருங்கள்.

கடவுச் சொல்லை யாருக்கும் கொடுக்கா தீர்கள்.

கண்ணில் தெரியும் குழுக்களில் (Groups) எல்லாம் சேராதீர்கள். உங்களது அரசியல், சமூக, கல்விப் பிரிவு சம்பந்தமான குழுக்களில் மட்டுமே சேருங்கள். சமூக வலைதளங்களில் இருக்கும் பெரும்பாலான குழுக்கள், வணிக உள்நோக்கம் கொண்டவை. மானாவாரியாக எல்லாவற்றிலும் சேருவது உங்களை spam செய்யும் வாய்ப்பை அவர்களுக்கும் கொடுப்பது போன்றது!

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil