நீரா ராடியா|| மௌனம் கலைகிறார் - ஆ.ராசா

15 May 2010 ·
தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா வோடு நீரா ராடியா என்கிற பெண் தொலைபேசியில் பேசிய உரையாடல் லீக்-அவுட் ஆக... அதன் எதிரொலியாக பெரும் பிரச்னை உருவானது. கடந்த 12.05.10-ம் தேதி ஜூ.வி. இதழிலும் அதுகுறித்த தகவல்கள் வெளியாகின. இந்த விவகாரத்தின் பின்னணி மற்றும் அவரது பங்கு குறித்து மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசாவைத் தொடர்புகொண்டு பேசினோம். ஜூ.வி-க்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டி...

''வருமான வரிப் புலனாய்வுத் துறையினர் பதிவு செய்ததாகச் சொல்லப்படும் தொலைபேசி உரையாடல்களில் தனியார் டெலிகாம் 'லயஸன்' அதிகாரி நீரா ராடியாவும் நீங்களும் பேசியதாக வெளி யாகும் தகவல் பற்றி...?''

''எப்போது யார் என்னோடு பேசினார்கள்... நான் யாரோடு என்ன பேசினேன் என்பதை யெல்லாம் காலவரிசைப்படி நினைவுபடுத்திக் கொள்வது... என்னால் மட்டுமல்ல... எவராலும் சாத்தியப்படாதது. ஓர் அரசு புதிதாக அமையும்போது, எந்தவொரு துறைக்கும் வரப்போகும் புதிய அமைச்சர் யார் என்பதை தெரிந்துகொள்வதில் பல்வேறு நிறுவனங்களும், தொழிலதிபர்களும், ஊடகங்களும் ஆர்வம் காட்டுவார்கள். இது இயற்கை. உதாரணமாக, 'ராசாவுக்கு அமைச்சரவையில் மீண்டும் இடமில்லை' என்று பல டி.வி. சேனல்கள் ஒளிபரப்பின. அதற்காக அந்த சேனல்கள், பிரதமரின் அதிகாரத்தில் தலையிட்டன என்று சொல்ல முடியுமா? பிரதமரிடம் கேட்டுக்கொண்டா அப்படி அவர்கள் செய்தி வெளியிட்டார்கள்? இவையெல்லாம் அனுமானங்கள் மட்டுமல்ல... அவர்களின் சுய விருப்பு வெறுப்புகளின் வெளிப்பாடும் உண்டு. இவற்றுக்கெல்லாம் எந்த அமைச்சரும் விளக்கமளிக்க முடியாதுஅந்த வகையில், இந்த முறை அரசு அமைந்தபோது, 'ஆ.ராசாவுக்கு மந்திரிப் பதவி உண்டா? உண்டு எனில் எந்த இலாகா என்பதை எனக்கு வேண்டியவர்களும் ஆராய்ந்திருக்கக்கூடும். 'இல்லையா' என்பதை அறிய வேண்டாதவர்களும் தெரிந்துகொள்ள முயற்சித்திருக்கக்கூடும். அந்த வகையில் என்னிடமும் பல அரசியல்வாதிகள், அதிகாரிகள், தொழிலதிபர்கள், ஊடக நண்பர்கள் அந்த நேரத்தில் வெவ்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளனர். ஆனால், தலைவர் கலைஞரைத் தாண்டி - காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாரதப் பிரதமர் ஒப்புதல் இன்றி இன்னொருவர் எனக்கு அமைச்சர் பதவியையோ குறிப்பிட்ட இலாகாவையோ தர முடியும் என்று நம்புகிற அளவுக்கு நான் அரசியலில் - நிர்வாகத்தில் முட்டாள் அல்ல. எனவே, சில ஊடகங்கள் தங்கள் அறியாமைக்கு என்னை இரையாக்க வேண்டியதில்லை!.''

''அந்த 'லாபியிஸ்ட்' பெண்மணி நீரா ராடியாவோடு நீங்கள் பேசுவதாக ஆடியோ உரையாடல் கூறுகிறது. அவருக்கும் உங்களுக்கும் எப்படி தொடர்பு ஏற்பட்டது?''

''நீரா ராடியா டாடா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான பொதுத் தொடர்பு அலுவலர். இதுகுறித்து டாடா நிறுவனம் தெளிவான பத்திரிகைச் செய்தியையும் வெளியிட்டுள்ளது. எந்தத் தொலைத்தொடர்புத் துறை அமைச்சருக்கும் இருக்கும்தலையாய பணிகளில் ஒன்று - இத்துறையில் உள்ள பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட தொலைபேசி நிறுவனங்களிடையே அரசோடு நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, வர்த்தகத்தை சீராக வைத்திருப்பதுதான். அந்த வகையில் ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் பலமுறை என்னை சந்திக்கிறார். ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானி என்னை சந்திக்கிறார். அதேபோல வோடஃபோன், ஏர்செல் போன்ற எல்லா நிறுவனங்களின் தலைவர்களோ, தலைமை அதிகாரிகளோ சந்திப்பதும் சாதாரணமானது. அந்த வகையில் 'டாடா டெலிகம்யூனிகேசன்' நிறுவனத்துக்காக நீரா ராடியா ஆபரேட்டர் கூட்டங்களிலும் இதர சந்திப்புகளிலும் கலந்துகொண்டுள்ளார். என்னிடம் பல்வேறு சட்டப்படியான கோரிக்கைகளை கடந்த காலத்தில் வலியுறுத்தியுள்ளார்.

ஆனால், ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள்... ஒரு நிறுவனத்தின் தலைவரோ, அதிகாரியோ என்னை துறை சார்பாக சந்திக்கிறார் என்பதற்காக அவர் துறைக்கு வெளியேயும் மற்ற இடங்களிலும் செய்கிற அல்லது ஈடுபடுகிற காரியங்களுக்கு எல்லாம் என்னை சம்பந்தப்படுத்திப் பேசுவது முறையல்ல. என்னோடு ஒரு விருந்தில் ஒருவர் கலந்துகொண்டு படம் பிடித்துக்கொண்டார் என்பதற்காக, அவர் செய்யும் ஏனைய காரியங்களுக்கு நானே பொறுப்பு என்பதுபோல் செய்தி வெளியிட முயற்சிப்பது பத்திரிகை தர்மமல்ல என்பதை பத்திரிகை துறையிலே இருப்பவர்கள் உணரவேண்டும்.''

''டாடா நிறுவனம் நீங்கள்தான் மறுபடியும் இந்த இலாகாவுக்கு அமைச்சராகவேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. 'தயாநிதி மாறன் மீண்டும் அமைச்சரானால் டெலிகாம் துறையிலிருந்து டாடா வெளியேற வேண்டும்' என்று ரத்தன் டாடா கூறியதாகவும் சொல்லப்படுகிறதே... இந்தளவுக்கு டாடா யோசிக்கக் காரணம் என்ன?''

''ஆங்கில சேனல் ஒன்றில் என்னுடைய தொலைபேசி உரையாடல் ஒளிபரப்பானது என்ற அடிப்படையில், அடுத்த நாள் பத்திரிகையைப் பார்த்து அதன் விவரங்களை (டெக்ஸ்ட்)படித்துப் பார்த்தேன். அதுகுறித்து மட்டுமே உங்களுக்கு என்னால் விளக்கமளிக்க முடியும். வேறு உரையாடல்கள் குறித்து எனக்குத் தகவல் இல்லை; எனவே, அதுகுறித்து நான் கருத்து சொல்வது நியாயமாக இருக்காது.''

''2008-ல் இந்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடைபெற்ற சமயத்திலேயே வருமான வரி புலனாய்வுத் துறையினர் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்டு உரையாடல்களைப் பதிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதில் நீரா ராடியா சில நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு செய்வதில் பேரம் பேசியதாகவும், சில நிறுவனங்களுக்கு முன் உரிமை கொடுக்கச் செய்வதற்கு அவர் முயற்சித்ததாகவும்கூட தகவல்கள் உள்ளனவே..?''

''அதில் நீரா ராடியா என்ன பேசியிருக்கிறார் என்பது தெரியவில்லை. ஆனால், எந்த ஒரு விதிமுறையும் யாரோ ஒரு தனி நபரால் மாற்றக்கூடிய அளவுக்கு அரசாங்கம் பலகீனமானதல்ல... நானும் சட்டம் படிக்காதவனல்ல!''

''சில ஆவணங்களை வருமான வரியினர் சி.பி.ஐ. வேண்டுகோள்படி அனுப்பி வைத்ததாகவும், அதில் தங்கள் துறையிலும் இன்னும் சில அமைச்சகங்களிலும் நீரா ராடியா தலையிட்டு இடைத் தரகராகச் செயல்பட்டதாகவும்கூட செய்திகள் வருகிறதே?''

''ஓர் ஆவணத்தைப்பற்றி பேச இரண்டு பேருக்குத்தான் தகுதி உண்டு. ஒருவர் அந்த ஆவணத்தை எழுதியவர் அல்லது தயாரித்தவராக (Executor) இருக்கவேண்டும். இன்னொருவர், அந்த ஆவணத்தை வைத்திருப்பவராக (Custodian) இருக்க வேண்டும். நீங்கள் குறிப்பிடும் ஆவணங்களில் நான் இந்த இரு நிலைகளிலும் தொடர்புடையவன் அல்ல; எனவே, அது உண்மையா... போலியா என்பதை நான் தீர்மானிக்க முடியாது.''

''ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலம் எடுத்தவர்கள் வெளிநாட்டு முதலீடுகளை தவறான வழியில் கொண்டுவந்துள்ளார்கள் என்ற குற்றச்சாட்டு குறித்து தங்கள் கருத்தென்ன?''

''என்னுடைய துறையின் பணி என்பது உரிமங்கள் மற்றும் அவைகளுக்கான அலைவரிசை ஒதுக்கீடு மட்டுமே. உரிமங்கள் வழங்கிய பிறகு ஒரு நிறுவனம் கொண்டுவரும் அன்னிய முதலீடு பற்றி நாங்கள் விசாரிக்க வேண்டிய அவசியமில்லை. இதுகுறித்து ஆய்வு செய்ய வேண்டியது நிதி மற்றும் உள்துறை அமைச்சகங்களின் பணிதான்.''

''இரண்டு துறைகளுக்கும் இடையே நடக்கும் ரகசியக் கடிதப் போக்குவரத்துகள் மீடியாக்களில் வெளி வருகிறது... இதன் பின்ன ணியில் எந்த சக்தி இருப்பதாகக் கருதுகிறீர்கள்?

''நான் பலமுறை எழுப்பும் கேள்விதான் இங்கும்... இந்தத் துறையில் நான் மட்டும் ஏன் கடுமையாக விமர்சிக்கப்படுகிறேன்... குற்றம் சாட்டப்படுகின்றேன்? புதிதாக நான் ஏதாவது சட்டம் கொண்டு வந்தேனா? அல்லது இருக்கிற சட்டத்தை தூக்கியெறிந்து விட்டேனா? இல்லையே! ஸ்பெக்ட்ரம் - அலைவரிசை இருப்பை வெளியுலகுக்கு காட்டாமல் மறைத்துவைத்துவிட்டு ஏர்டெல், ஏர்செல், வோடஃபோன் ஐடியா போன்ற 'ஏற்கெனவே இருக்கும்' நிறுவனங்கள் மட்டுமே தொடர்ந்து தொலைபேசி சேவை வழங்கினால், தொலைபேசி இணைப்புகளின் எண்ணிக்கையும் உயராது; மக்கள் அளிக்கவேண்டிய கட்டணமும் குறையாது. அதனால் புதிய நிறுவனங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவேண்டும் என்ற ஒழுங்குமுறை ஆணையத்தின் கொள்கை யை பிடிவாதமாக இருந்து நிறைவேற்றினேன். கால் நூற்றாண்டு காலமாக தங்கள் கையில் மட்டுமே இருந்த தொழில், இன்னும் சிலபேருக்கு கை மாறுகிறது என்ற கோபத்தில் - ஒரு வர்த்தகக் கூட்டு (Cartel) உடைக்கப்படுகிறது என்ற எரிச்சலில் சிலர் இருந்திருக்கலாம். இது இயற்கையான, சராசரி வியாபார உணர்ச்சிதான். அதன் விளைவுகளையும் நான் எதிர்கொள்ளத்தான் வேண்டும்.

பிரதமர் இதுகுறித்து நன்றாகவே அறிவார். இந்த முயற்சியில் நான் இறங்காமல் இருந்திருந்தால் எனக்கு பிரச்னையே இருந்திருக்காது. நாடா ளுமன்றத்தில் இதுகுறித்து கேள்வி வந்தபோது, 'நான் தேங்கிக் கிடக்கும் சாக்கடையாக இந்தத் துறையில் இருக்க விரும்பவில்லை; நீரோட் டத்தில்தான் மின்சாரம் வெளிப்படும்' (I don't want to be a stagnated stinking pool.. Flowing water only explores current)என்று குறிப்பிட்டு இருக்கின்றேன். அதுமட்டுமல்ல, இந்தத் துறையில் எவ்வளவு அலைவரிசை கையிருப்பு இருக்கிறது என்று முதன்முதலில் இணையதளத்தில் வெளியிட்ட இந்தத் துறையின் ஒரே அமைச்சர் நான்தான் என்பதையும் நாடாளுமன்றத்தில் பதிவு செய்துள்ளேன். இவையெல்லாம் சிலருக்கு தொழில்ரீதியான பின்னடைவுகளை ஏற்படுத்தியிருக்கலாம்... அதன் காரணமாகவும் நான் குறி வைக்கப்படுகின்றேன்.''

''இப்போது 3ஜி ஏலத்தில் விட ஏற்பாடு நடப்பதுபோலவே அதற்கு முந்தைய 2ஜி-யை ஏன் ஏலத்தில் விடவில்லை?அங்கேதானே சர்ச்சையின் அடிப்படையே எழுகிறது?''

''நல்லகேள்வி! இதை சில நாளிதழ்களும் எழுப்பியுள்ளன. 2ஜி என்பது பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் அரிசி போன்றது. 3ஜி என்பதோ பிரியாணிக்கு பயன்படும் உயர்தர பாசுமதி அரிசி போல! பொது விநியோகத் திட்டத்தில் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கப்படுகிறது என்பதற்காக, பாசுமதி அரிசியை ஒப்பீடு காட்டி 'ஒரு ரூபாய் அரிசி விநியோகத்தால் அரசுக்கு நஷ்டம்' என்று சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா? 2ஜி சேவை என்பது சாதாரண மனிதனுக்கும் போய்ச் சேரவேண்டிய குரல் (Voice) சேவை. 3ஜி என்பது வர்த்தக ஆவணங்களை அனுப்புவதற்கும், வீடியோ சினிமா போன்ற உயர்ரக சேவைக்கும் உரியது. 2ஜி சேவை கல்வி, சுகாதாரம், கிராமிய வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் கடைசி மனிதனுக்கும் பயன்படவேண்டிய ஒன்று. 3ஜி என்பது வர்த்தகம் சார்ந்த மற்றும் வசதி படைத்தவர்களுக்கு சேவை அளிக்கக் கூடியது. ஒழுங்குமுறை ஆணையம் உலக நாடுகளில் உள்ள நடைமுறைகளை எல்லாம் கருத்தில்கொண்டுதான், 3ஜி அலைவரிசையை ஏலம்விட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. இப்போதைய இந்தியாவின் சமூகப் பொருளியல் புள்ளி விவரங்களின் அடிப்படையில், சாதாரண குரல் வழி சேவை வழங்கும் 2ஜி சேவைதான் சாதாரண சாமானிய மக்களுக்கு தேவையே தவிர, 3ஜி அல்ல! இன்னுமொரு 10, 20 ஆண்டுகள் கழித்து நிலைமை மாறலாம். 1994-ம் ஆண்டு 2ஜி சேவை வந்தபோது எத்தனை பேர்கள் செல்போனை பயன்படுத்தினார்கள்? இப்போது நிலை என்ன? அதேபோல கல்வி அறிவும், தொழில்நுட்ப தாக்கமும் சாதாரண மக்களிடையே உயருமானால் இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு 3ஜி சேவைகூட எளிதாக்கப்படலாம்; படவேண்டும்! அப்போது, 4ஜி சேவையும் வந்துவிடும். இதுகுறித்து ஒழுங்குமுறை ஆணையம் உரிய முடிவுகளை சூழலுக்கு ஏற்ப எடுக்கும். இப்போதைய ஒழுங்குமுறை ஆணையத்தின் முடிவின்படி 3ஜி ஏலம் விடப்படுகிறது.''

''இந்த உரிமங்களை பெற்ற கம்பெனிகளில் நீங்களோ உங்களுக்கு சம்பந்தப்பட்டவர்களோ முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறதே?''

''இது அப்பட்டமான, அரசியல் காழ்ப்புணர்ச்சி கலந்த பொய். ஒரு கம்பெனியின் பங்குகள் யார் யாருக்கு சொந்தம் என்பதை இணைய தளத்திலும் தெரிந்துகொள்ளலாம். தகவல் உரிமைச் சட்டத்தினாலும் தெரிந்து கொள்ளலாம்.''

''கடந்த சில மாதங்களுக்கு முன்பு உங்கள் துறையைச் சேர்ந்த சீப்-போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் பாலி என்பவர் இரண்டு கோடியை கையூட்டு பெறும்போது சி.பி.ஐ-யிடம் கையும் களவுமாக பிடிபட்டுள் ளாரே? இதே அதிகாரியோடு கைதான அருண் டால்மியா உங்களுக்குத் தெரிந்தவர் என்றும் அவர் மீது அன்னியச் செலவாணி குற்றச்சாட்டுகள் இருக்கிற செய்தியும் வந்ததே?''

''அமைச்சர் என்ற முறையில், துறை சார்ந்த நிகழ்ச்சிகளிலும், வேறு தனியார் நிகழ்ச்சிகளிலும் பலர் என்னோடு கலந்துகொள்கிறார்கள். அவர்களை எல்லாம் அடையாளப்படுத்தி ஞாபகப்படுத்தி நேரடியாக தொடர்புபடுத்த எத்தனிப்பதுசரியல்ல.. என்னுடைய பிறந்த நாளிலோ, வேறு விழாக்களிலோ, புத்தாண்டுக் கொண்டாட்டத்திலோ, பலர் பலரோடு என்னை சந்திக்க வருகிறார்கள்; புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள். படத்தில் இருக்கின்ற அனைவரோடும் தனிப்பட்ட பரிச்சயம் இருக்கவேண்டும் என்று பொதுவாழ்க்கையில் உள்ள ஒருவருக்கு அவசியமில்லை. நீங்கள் சொல்லுகின்ற நபர்மீது வழக்கு ஒன்று இருந்து - அந்த வழக்கில் என் பங்கோ, முயற்சியோ இருக்குமானால் வழக்கின் விசாரணையில் வெளிப்பட்டிருக்கும். அதுபற்றிய குற்றச்சாட்டேகூட என்மீது எதுவுமில்லை.''

''நெருப்பில்லாமல் புகையுமா? இத்தனை மீடியாக்களும் ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து விமர்சிக்க வேண்டிய அவசியம் என்ன?''

''ஊடகங்களுக்கு இவ்விஷயத்தில் எந்த சார்புத்தன்மையும் இல்லை என்று சொன்னால், பாமர மனிதன்கூட ஏற்றுக்கொள்ள மாட்டான். காரணம் தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள், மீடியாக்கள் மூலமாக விளம்பரத்திற்காக மட்டும் ஆண்டொன்றுக்கு 2,000 கோடி வரை செலவு செய்கின்றன. இந்த விளம்பர வருமானத்தை எந்த பத்திரிகையோ சேனலோ இழக்க முன்வருமா? எனவே, ஊடகங்கள் இந்த விஷயத்தில் பல நேரங்களில் நியாயமாக செயல்படவில்லையென்றே எண்ணத் தோன்றுகிறது. நான் இந்த துறைக்கு பொறுப்பேற்றவுடன் என்னென்ன மாறுதல் அடைந்துள்ளது என்பதைப் பற்றி பத்திரிகைகளும் ஊடகங்களும் எழுதுவதில்லை. தொலைபேசி இணைப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது மட்டுமட்டுமல்ல... கட்டணம் குறைந்துள்ளது. நாட்டில் எல்லா பொருளும் விலை ஏற்றத்தில் உள்ளன. ஆனால், தொலைபேசிக் கட்டணம் மட்டுமே குறைந்து கொண்டே இருக்கிறது. மேலும் பல வசதிகள் கிடைக்கவுள்ளது. உள்ளூர் அழைப்பு 10 பைசாவுக்கும், அகில இந்தியக் கட்டணம் 25 பைசாவுக்கும் விரைவில் வரவுள்ளது. இப்படியிருக்க ஸ்பெக்ட்ரம் குறித்து ஒரு ஆங்கில பொருளாதார நாளேட்டில் இது 'இராஜாவின் அவமானம்' [It is Raja's shame] என்று எழுதினார்கள். நான் சொல்கின்றேன்... 'It is my pride' ஆம், இது எனது பெருமை! நல்ல விஷயங்களைப் பாராட்டாவிட்டாலும் போகிறது... உண்மையை இவர்கள் பேச மறுப்பது ஏன்? அதற்கு பின்னால் உள்ள சக்திகள் எவை? சதி என்ன? அதுதான் இங்கே 'மில்லியன் டாலர்' கேள்வி!'

vikatan'

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil