குஷ்பூ -தி மு க குடும்ப ரிப்போர்ட் -எங்கே தொடங்கியது தி .மு . க பாசம் ?

19 May 2010 ·

ர்ச்சை நாயகி குஷ்பு, கற்பு தொடர்பான விவகாரத்தில் தீர்ப்பு வந்த மாத்திரத்தில், 'காங்கிரஸில் சேருவேன்' என்று அறிவித்தார். ஆனால், திடீரென தி.மு.க--வுக்கு வந்திருக்கிறார்.

குஷ்புவின் அறிவாலய சங்கமம் எப்படித்தான் நடந் தது? அவருடைய பாசத்தின் துவக்கப் புள்ளி எது?

''கற்பு சர்ச்சையால் 23 இடங்களில் குஷ்புவுக்கு எதிராக அவதூறு வழக்குகள் போடப்பட்டன. விடுதலைச் சிறுத்தைகள், பா.ம.க. உட்பட பல அமைப் புகள்குஷ்புவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தின. அத்தகையப் போராட்டங்களில் அரசியல் ஆதாயம் மற்றும் விளம்பரம் தேடும் நோக்கம் இருந்தது. அப்போது தமிழகத்தில் காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. எதிர்ப்புக் கிளப்பியவர்கள் இதில் அவர்கள் ஆதாயம் தேடப் பார்த்தார்கள். ஆனால், அவர்களுக்குப் பிடி எதுவும் கொடுக்காமல் அப்போது அமைதியாக இருந்தார் குஷ்பு. அரசியல் என்ட்ரியின் மூலம் அவருடைய பொறுமைக்கு இப்போது பலன் கிடைத்திருக்கிறது!'' என்றார்கள் குஷ்புவுக்கு நெருக்கமானவர்கள்.

அறிவாலய வட்டாரம் வரிசைக் கிரமமாக வேறு சில சம்பவங்களை அடுக்குகிறது -

''கற்பு விவகாரம் வெடித்தபோது எங்கள் கட்சி வெளிப்படையாக எந்தக் கருத்தையும் சொல்லவில்லை. ஒருவகையில் குஷ்புவுக்கு மறைமுகமாக ஆதரவு கொடுத் தது. ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்த கனிமொழி, 'குறுந்தொகையில் திருமணத்துக்கு முன்பான செக்ஸ் பற்றி பல கவிதைகள் இருக்கின்றன. அதனால், இதனை தமிழ்க் கலாசாரத்துக்கு அன்னியமானவை என்று முத்திரை குத்த வேண்டுமா? குஷ்புவுக்கு மட்டுமான பிரச்னையாகப் பார்க்காமல், பொதுவான பெண் இனத்துக்கான பிரச்னையாகப் பார்ப்போம். எதிர்க் கருத்தோ, புதிய கருத்தோ சொல்லும் பெண்களைக் கற்பு என்பதைக் காட்டி பயமுறுத்துகிறார்கள்' என்று சொன்னார். இதுதான் குஷ்புவுக்கு தி.மு.க. மீது மரியா தையை ஏற்படுத்தியது.

சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவனும் குஷ்புவும் மோதிக் கொண்டார்கள். அப்போது, அந்த விழாவில் கலந்துகொண்ட கனிமொழியும், தமிழச்சி தங்கபாண்டியனும் சமாதானம் செய்து வைத்தார்கள். கூடவே, குஷ்புவுக்கு ஆதரவாகவும் இருந் தார்கள். 2008-ம்ஆண்டு தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடந்தபோது, தி.மு.க-வைச் சேர்ந்த ராம.நாராயணனின் வெற்றிக்காக குஷ்பு பாடுபட்டார். அதைத் தொடர்ந்து எங்கள் கட்சியின் மேல்மட்டம் வரையில் அவருக்கு நல்ல அறிமுகம் கிடைத்தது. இதன் மூலமாக படிப்படியாக அவருடைய தி.மு.க. பாசமும் வளரத் தொடங்கியது. முற்போக்கு எண்ணம் கொண்ட குஷ்புவுக்கு தி.மு.க-தான் சரியான இடம்!'' என்று சொல்லும் அறிவாலய வட்டாரம்...

''2006 சட்டசபைத் தேர்தலின்போது சிம்ரன், விந்தியா, கோவை சரளா, முரளி என்று கோலிவுட்டையே அ.தி.மு.க-வில் சேர்த்து தேர்தல் பிரசாரம் செய்தார் ஜெயலலிதா. அப்போது குஷ்புவையும் பிரசார மேடை களில் ஏற்ற முயற்சி நடந்தது. அந்தத் தேர்தலில் ஆயிரம்விளக்கு தொகுதியில் ஸ்டாலினுக்கு எதிராக குஷ்புவை நிறுத்தவும்கூட முயற்சி செய்தார்கள். ஆனால், அரசியலின் போக்கு தெரிந்த குஷ்பு உஷாராக அதை மறுத்துவிட்டார். அதேசமயம், அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதாவின் வெறுப்புக்கும் ஆளாகாமல் 'ஜெயா' டி.வி. மூலம் அந்த முகாமிலும் 'ஜாக்பாட்' அடித்துக் கொண்டே இருந்தார்.

இதற்கு நடுவே, சில மாதங்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், ஊர் நலனுக்காக என்று சொல்லி, தவளைக்கும் சிறுமிக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது. இந்த விஷயத்தைக் கண்டித்த குஷ்பு, 'இது மூட நம்பிக்கையின் வெளிப்பாடு.

விஞ்ஞான காலத்தில் மூட நம்பிக்கையில் மக்கள் இன்னும் சிக்கிக் கிடக்கிறார்கள்' என்று சீறினார். அதாவது, தி.மு.க-வின் கொள்கைகளோடு தன்னுடைய கொள்கை இணைந்துபோகும் என்று அவ்வப்போது அவர் சிக்னல் காட்டிக்கொண்டே இருந்தார்!'' என்றார்கள்.

'பெரியார்' படத்தில் மணியம்மை வேடத்தில் குஷ்பு நடித்ததையே தி.மு.க-வில் அவர் இணைவதற்கான 'சிறப்புத் தகுதி'யாக முதல்வர் கருணாநிதி தற்போது கூறியுள்ளார். இதுபற்றி குறிப்பிடும் சினிமா புள்ளிகள் சிலர், ''தமிழக அரசு நிதியுதவியுடன் எடுக்கப்பட்ட 'பெரியார்' படத்தில் குஷ்பு நடிக்கக்கூடாது என்று சட்டசபை வரை பிரச்னை எழுந்தது. ஆனாலும், குஷ்புதான் நடிக்க வேண்டும் என தமிழக அரசு உறுதியாக இருந்தது. கருணாநிதி கதை வசனத்தில் உருவான 'தாய் காவியம்' படத்தில் தாய் கேரக்டரில் முதலில் ராதிகா ஒப்பந்தம் செய்யப்பட்டார். சில காரணங்களால் ராதிகா விலக... அந்த கேரக்டரில் குஷ்புவை நடிக்க வைக்க கருணாநிதியே பரிந்துரை செய்தார். அந்தப் படத்தின் தொடக்க விழாவிலும்கூட, 'மணியம்மையாக குஷ்பு நடித்ததைப் பார்த்தபோதே அவரது திறமை புரிந்தது. இந்தப் படத்திலும் அவர் சிறப்பாக நடிப்பார்' என்று பரிந்துரை செய்தார் முதல்வர். ஊன்றி கவனித்தவர்களுக்கு, தி.மு.க-வில் இந்த நடிகை இணைந்தது பெரிய ஆச்சரியமாக இருக்காது!'' என்றார்கள்.

சின்னத்திரை வட்டாரத்தில் பேசினோம்.

''தி.மு.க-வோடு குஷ்புவின் பந்தம் மறைமுகமாகஇறுகியது 'கலைஞர்' தொலைக்காட்சி வந்த பிறகுதான். 'நம்ம குடும்பம்' தொடர் மூலம் கலைஞர்டி.வி-யில் பங்களிப்பை தொடங்கியவர், அடுத்து 'மானாட மயிலாட' நிகழ்ச்சியில் கலக்கத் துவங்கினார்: டான்ஸ் மாஸ்டர் கலாவையும் மீறி குஷ்புவின் சாமர்த் தியம் அதில் எதிரொலித்தது. சினிமா துறையினருக்காக நல வாரி யத்தை சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவித்தது. அந்த வாரியத்தில் குஷ்புவையும் நியமித்து முக்கியத்துவம் கொடுத்ததை நாங்கள் ஆச்சரியமாக எடுத்துக் கொள்ளவில்லை!'' என்றார்கள்.

பெங்களூருவில் உள்ள குஷ்புவின் வீட்டை விற்பது தொடர்பாக ஒரு விவகாரம் வந்தது. 'மோசடி செய்து விட்டார்' என்று அவர் மீது ஒருவர் வழக்குப் போட்டார். அப்போது, குஷ்புவுக்கு ஆதரவாக அரசியல் செல்வாக்கு நீண்டதாகவும்... அதனால் குஷ்புவின் அறிவாலய பாசம் பெருகிவிட்டதாகவும் ஒரு பேச்சு இருக்கிறது.

''எங்கள் குடும்பமே காங்கிரஸ் குடும்பம். மும்பையில் என் படுக்கை அறையில் ராஜீவ் காந்தி படங்களைத்தான் வைத்திருப்பேன்!'' என்று சொன்ன குஷ்பு, எப்படி தி.மு.க-வுக்குப் போனார் என்று காங்கிரஸ் பிரமுகர்களிடம் கேட்டோம். ''குஷ்பு தி.மு.க-வில் சேர்ந்தபோது முதல்வர் அளித்த பேட்டியிலேயே இதற்கு பதில் இருக்கிறது. 'திடீரென்று குஷ்பு தி.மு.க-வில் சேரவில்லை. ஒரு மாத காலம் வரையில் அவரிடம் பேசிக்கொண்டு இருந்தோம்' என்று முதல்வர் சொல்லி இருக்கிறார். காங்கிரஸில் அவர் சேர்வது உறுதியாகிவிட்ட நிலையில் கிட்டத்தட்ட அவரைத் தட்டிப் பறித்திருக்கிறார்கள். 'ஜெயலலிதாவைபோல ஆங்கிலத்திலும் இந்தியிலும் சரளமாகப் பேசக் கூடிய ஆற்றல் உள்ளவர் குஷ்பு. 'மேலவையில் குஷ்பு' என்று ஜூ.வி-யில் பல நாட்கள் முன்பே செய்தி போட்டுவிட்டீர்கள். ஆனால், அவரை ராஜ்யசபாவுக்கு அனுப்புவார்களோ என்ற ஒரு எண்ணம் எங்களுக்கு இருக்கிறது. குஷ்புவை டெல்லிக்கு அனுப்பி வைப்பதன் மூலம், காங்கிரஸ் பெருந்தலைவர்களுடனான உறவை பலப்படுத்த முடியும் என்றுகூட தி.மு.க. கணக்கு போட்டிருக்கலாம்'' என்றார்கள் இவர்கள்.

நேற்றுவரை நடிகை ராதிகாவை உச்சபட்சமான முக்கியத்துவத்தோடு நடத்தி வந்தது தி.மு.க. தலைமை. சின்னத் திரை சங்கத்தின் பொறுப்பில் ராதிகாவின் இடத்துக்கு வந்த குஷ்பு, இப்போது தி.மு.க-வில் ராதி காவுக்கான இடத்தைப் பிடித்துவிட்டாரா என்ற கேள்வி யும் தற்போது எழுகிறது. ''கடந்த தேர்தலின்போது, திடீரென தன் கணவர் சரத்குமாருடன் சேர்ந்து ஜெயலலிதாவை நேரில் சந்தித்தார் ராதிகா. அதைத் தொடர்ந்து நடந்த சில விஷயங்களில் அப்செட் ஆன தி.மு.க. அதையெல்லாம் தன் மனதுக்குள்ளேயே போட்டு வைத்திருந்தது. இப்போது குஷ்புவை புரமோட் செய்வதன் மூலம் அந்த அப்செட்டுக்கு மருந்து போட்டுக் கொள்கிறது'' என்று கூறும் சிலர்...

''இப்போதே எழுதி வைத்துக் கொள்ளுங்கள். எல்லோரும் நினைக்கிற மாதிரி குஷ்பு ஆக்டிவ் அரசியலில் நீடித்து நின்று, ஜெயலலிதாவை தீவிரமாக எதிர்க்க மாட்டார். கலை உலகில் புகழோடு இருப்பவர்கள் கால மாற்றங்களையும் மனதில் கொண்டு, பக்குவமாக படகு ஓட்டுவதுதான் புத்திசாலித்தனம். குஷ்பு அதிபுத்திசாலி!'' என்றொரு புதிர் வார்த்தையும் போட்டு முடிக்கிறார்கள்.

''நடிகை குஷ்பு ஓர் அரசியல்வாதியாகப் பரிணமித்து இருப்பது வரவேற்கத்தக்கது, இது அவரின் துணிச்சலான முடிவு. பெண்கள்பொதுவாழ்வில் ஈடுபடுவது மிகவும் அவசியமானது. ஆனால், தன் அரசியல் பிரவேசத்துக்கு விடுதலைச் சிறுத்தை கட்சியும், பா.ம.க-வும் போட்ட பொய் வழக்குகள்தான் காரணம் என்று அவர் கூறியிருக்கிறார். இதில், ஓர் உண்மையைச் சொல்லியாக வேண்டும். குஷ்பு மீதான இந்த வழக்குகளில் ஒன்றிரண்டுதான் கட்சிகளைச் சார்ந்தவர்கள் தொடுத்தவை. மற்ற அனைத்து வழக்குகளுமே கட்சி சாராத தனி நபர்களால் தொடுக்கப்பட்டவைதான். இது தொடர்பாக என் கவனத்துக்கு வந்தபோது, இத்தகைய நடவடிக்கைகளில் சிறுத்தைகள் யாரும் ஈடுபடவேண்டாம் என்று தடுத்தேன்.

அரசியலில் அடியெடுத்து வைத்ததுமே குஷ்பு முழு அரசியல்வாதியைப்போல பேசத் தொடங்கியிருக்கிறார். அரசியலில் அவர் வெற்றிகரமாக செயல்படுவார் என்று இதன் மூலம் தெரிகிறது. 'திருமணத்துக்கு முன்பு தாம்பத்ய உறவை வைத்துக்கொள்ளலாம்' என்று தான் சொன்னதை உச்ச நீதிமன்றம் நியாயப்படுத்துவதாக குஷ்பு கூறுகிறார். எதிர்ப்புக்குக் காரணம் இதுவல்ல... தமிழக பெண்களின் நடத்தையைப்பற்றி அவர் பேசியதுதான்! உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்ட வழக்கும் இதுபற்றியது அல்ல.

'இந்தியா டுடே' வாரப் பத்திரிகையில் வந்த குஷ்புவின் கற்பு பேட்டி பற்றி, 'தினத்தந்தி' நாளிதழில் முதலில் கருத்துக் கூறியவர்கள் எந்தக் கட்சியையும் சேராத பொதுவானவர்கள்தான். அதன்பிறகு தமிழக மக்களின் நடத்தையைப் பற்றி குஷ்பு கூறியதுதான், மக்களின் உணர்வுகளைச் சீண்டக்கூடிய வகையில் அவர் பேசியதுதான் பிரச்னையே. நாளிதழில் வெளியான பொதுமக்கள் கருத்து பற்றி அவர் பொறுப்பாக பதில் சொல்லியிருக்க வேண்டும். பதில் சொல்வதாக நினைத்துக்கொண்டு, தமிழ்நாட்டில் யார் யோக்கியம் என்பதுபோல அவர் கேட்டதுதான் எதிர்ப்புக்கு எண்ணெய் வார்த்தது! தொலைக்காட்சிப் பேட்டியில் தமிழ்ப் பெண்களைப் பற்றி நடிகர் ஜெயராம் கூறிய கருத்தால் பிரச்னை உருவானபோது, அவர் வெளிப்படையாக வருத்தம் தெரிவித்தார். ஆனால் குஷ்பு, உணர்ச்சிவயப்பட்டு தமிழக மக்களைப்பற்றி தவறாகப் பேசிவிட்டோம் என்பதை இன்னும்கூட உணர்ந்ததாகத் தெரியவில்லை.

பா.ம.க., சிறுத்தைகள் வழக்குத் தொடுத்தார்கள் என்று குஷ்பு குறிப்பிடுவது ஒரு நொண்டிச்சாக்கு, இதை ஏற்க முடியாது!''

கட்சியில் சேர ஸ்டாலின் பேனா..!

அறிவாலயத்தில் உயர்மட்ட குழு மற்றும் முக்கிய ஆலோசனை நடத்துவதற்காக உள்ள ஹாலில்தான் குஷ்பு, கட்சியில் சேரும் வைபவம் அரங்கேறியது. இதுவரை இப்படிப்பட்ட எந்த நிகழ்ச்சியும் அங்கே அரங்கேறியது கிடையாதாம். முதல்வர் கருணாநிதிக்கும், துணை முதல்வர் ஸ்டாலினுக்கும் குஷ்பு சால்வை போட... கட்சி உறுப்பினர் படிவத்தை 'குஷ்பு சுந்தர்' என்று பெயர் எழுதி அவரிடம் நீட்டினார் ஸ்டாலின். அதில் கையெழுத்துப் போட குஷ்புவிடம் அப்போது பேனா இல்லை. சட்டென்று, தன் பேனாவை ஸ்டாலின் நீட்ட... வாங்கிக் கையெழுத்துப் போட்டு கருணாநிதியிடம் கொடுத்தார் குஷ்பு. ஸ்டாலின் பேனாவை அவரைத் தவிர வேறு யாரும் பயன்படுத்தியது கிடையாதாம். கட்சிக்கு வந்த முதல்நாளே அந்த வாய்ப்பு குஷ்புவுக்கு வாய்த்தது என்று பேசிக்கொண்டார்கள் சீனியர் உடன்பிறப்புகள்.

''தமிழச்சிகள் மன்னிக்க மாட்டார்கள்!''

வெகுண்டு எழுகிறார் வேல்முருகன்

பா.ம.க-வின் மாநில அமைப்புச் செயலாளரும் பண்ருட்டி தொகுதிஎம்.எல்.ஏ-வுமான வேல்முருகன், ''தி.மு.க-வில் குஷ்புவைச் சேர்த்துக் கொண்டது பற்றி கருத்துக் கூற விரும்பவில்லை. யாரை கட்சியில் சேர்க்கலாம், கூடாது என்பது அந்தந்த கட்சிகளின் முடிவு. ஆனால், தன் மீது வழக்குப் போட்டு பா.ம.க-வும், சிறுத்தைகளும் புகழைத் தேடிக்கொள்ள முயன்றதாக அவர் கூறியுள்ளார். ஆடை குறைத்து ஆடுகிறவர்களைப் பற்றிப் பேசி புகழைத் தேடவேண்டிய அவசியம் பா.ம.க-வுக்கும் இல்லை, சிறுத்தைகளுக்கும் இல்லை. ஆகவே, எங்கள் கட்சியைப் பற்றியோ அய்யாவைப் பற்றியோ பேச குஷ்பு போன்றவர்களுக்கு எந்த அருகதையும் இல்லை.

எங்கேயோ இருந்து பிழைக்கவந்து, நடிப்பு என்ற பெயரால் அங்கங்களைக் காட்டிய குஷ்புவுக்கு, துரத்திவரும் புலியை முறத்தால் அடித்து விரட்டிய புறநானூற்றுத் தாய்மாரின் பரம்பரை பற்றிப் பேச எந்தத் தகுதியும் இல்லை. தமிழகத்தில் ஒட்டுமொத்த தமிழரின் மனதையும் புண்படுத்தும் வகையில் அவர் பேசியதை, உச்ச நீதிமன்றம் மன்னிக்கலாம். தமிழச்சிகள் மன்னிக்கமாட்டார்கள்.'

vikatan'

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites