கொழும்பு பட விழாவைத் தடுக்க வேண்டும் : கவிஞர் தாமரை வலியுறுத்தல்

19 May 2010 ·

இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச இந்திய திரைப்பட அகாடெமி விருதுகள் வழங்கும் விழாவில், இந்தியக் கலைஞர்கள் கலந்துகொள்ள விடாமல் தமிழ்த் திரைப்பட அமைப்புகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவிஞர் தாமரை வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தென்கொரியத் தலைநகர் சியோலில் நடப்பதாக இருந்த சர்வதேச இந்தியத் திரைப்படக் கழக விருது விழாவை சந்தடியின்றிக் கொழும்புக்கு மாற்றியதில் இந்திய அரசுக்கு ஒரு நோக்கம் உள்ளது. கொழும்பின் கையில் படிந்துள்ள தமிழனின் ரத்தக்கறையைத் துடைத்து தன் பாவத்தையும் மறைத்துக் கொள்வதே அது!

கொழும்பு ஐய்ஃபா (IIFA) விழாவின் முதன்மைத் தூதர் அமிதாப்பச்சன். அவரும் ஷாருக்கானும், ஐஸ்வர்யாராயும் உலகப்புகழ் பெற்ற பாலிவுட் கலைஞர்களும் மேடையில் தோன்றி இலங்கையில் "அழகும் அமைதியும் குடி கொண்டிருப்பதை" உலகமே பார்க்க உதவப்போகிறார்களாம்.

உலக மக்கள் தீர்ப்பாயம் டப்ளினில் வைத்து இலங்கையைப் போர்க்குற்றவாளியாக அறிவித்த இரண்டு மாதங்களில் எப்படி "அழகும் அமைதியும்" அங்கு குடிகொண்டன என்று அவர்கள் விளக்க வேண்டும்.

தமிழர்களின் வேண்டுகோளை மதித்து அமிதாப் விலகிக்கொண்டதாக ஒரு செய்தி! இது உறுதியானால் மகிழ்ச்சி! மற்றவர்களும் விலகிக்கொண்டு, விழாவை வேறிடத்தில் நடத்த வழி செய்ய வேண்டும்.

சர்வதேச இந்திய திரைப்பட விழா என்று பெயருக்குச் சொல்லப்பட்டாலும் பெரும்பாலும் இந்தித் திரைப்பட விழாவாகவே இதுவரை நடத்தப்பட்டது. ஆனால் இம்முறை தமிழ்த் திரைக்கலைஞர்களையும் இழுக்கச் சந்தடியின்றி ஒரு முயற்சி நடைபெறுகிறது.

மணிரத்னத்தின் "ராவணன்" கொழும்பு விழாவில் திரையேறும் என்று வந்த செய்தியை அவர் மறுத்திருக்கிறார். கமலஹாசன், ரஜினி, ரஹ்மானை கொழும்பு ஆட்கள் தனித்தனியாக அணுகி அழைத்ததாகவும் இவர்கள் மறுத்து விட்டதாகவும் ஒரு செய்தி. "தமிழன் ரத்தம் படிந்த கொழும்பில் விழா நடத்த நாங்கள்தானா கிடைத்தோம்," என்று சூடாகக் கேட்டாராம் பிரகாஷ்ராஜ்.

ஆனால் இது போதாது. தமிழ்த்திரைப்பட அமைப்புகள் உடனடியாகக் களமிறங்கி, இந்திய அளவில் யாரும் கொழும்பு விழாவில் கலந்து கொள்ள விடாமல் செய்ய வேண்டும். முள்ளிவாய்க்கால் படுகொலையைத்தான் நம்மால் தடுக்க முடியவில்லை. கொலைக்களத்தில் கூத்தடிப்பதையாவது தடுக்கலாம்தானே? இது நம் தமிழுறவுகளுக்கு ஆறுதலாக மட்டுமல்ல, கொழும்புக்கும் அதன் இந்தியக் கூட்டாளிகளுக்கும் நம் உணர்வுகளைச் சொல்லி எச்சரிப்பதாகவும் அமையும் அல்லவா?

பாரதிராஜா, செல்வமணி, மணிவண்ணன், சீமான், அமீர் போன்றவர்கள் திரையுலகின் முழு வலிமையோடும், தமிழக மக்களைத் தட்டியெழுப்பப் பாடுபட்டதைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். எல்லாமே முடிந்துவிட்டது என்று சோர்ந்துவிடவோ, ஓய்ந்து விடவோ கூடாது. ஐய்ஃபா விழா கொழும்பில் நடைபெற விடாமல் செய்ய நம்மால் முடியும். கோலிவுட்டின் கோரிக்கையை பாலிவுட்டால் அலட்சியப்படுத்த முடியாது.

நிறவெறி தாண்டவமாடிய தென் ஆப்பிரிக்க வெள்ளை அரசைத் தனிமைப்படுத்துவதில் முக்கியப்பங்கு வகித்த அதே இந்தியாதான், இப்போது தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்கள அரசு உலகில் தனிமைப்பட்டு விடாமல் பாதுகாத்து வருகிறது," என்று தாமரை தனது அறிக்கையில் கூறியுள்ளார்

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites