அன்பான இல்லத்தரசிகள் இன்னும் இருக்காங்களா? |
மதன் கேள்வி பதில் |
அதிகமாகப் படித்துக்கொண்டே இருப்பவர்களுக்கு அலுப்பே ஏற்படாதா?படாது. உண்பதற்கும் புணர்வதற்கும்கூட இடைவேளை தேவைப்படும். படிப்புக்கு அது தேவை இல்லை. தொடர்ந்து நாள் முழுவதும் படிக்கலாம். மூளைக்குச் சோர்வு ஏற்படாது. அது ஓர் இனிய அடிக்ஷன். நீங்கள் எவ்வளவு படித்தாலும் மூளை என்கிற யானைக்கு அது சோளப்பொரிதான்!
'மகாபாரதம்' சகுனிபற்றி பின்னால் வந்த ராஜதந்திரி சாணக்கியர் அறிந்திருக்கலாம், இல்லையா?
நிச்சயமாக!
இந்தியாவில் முதல் சாம்ராஜ்யம் அமைத்த மௌரியர்கள் யார்? அவர்களுடைய முன்னோர் எங்கிருந்து வந்தனர் என்பது குறித்துப் பல கருத்துக்கள் உண்டு. ஆப்கானிஸ்தானில், ஹெராட் என்கிற முக்கிய நகரத்தில்தான் சகுனி பிறந்து வளர்ந்தார் என்று சொல்லப்படுகிறது. சகுனியின் வம்சத்தில் வந்தவர்கள்தான் மௌரியர்கள் என்று சில வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆகவே, சந்திரகுப்த மௌரியரின் ராஜகுருவான சாணக்கியருக்கு சகுனிபற்றித் தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பு இல்லை!
மதன் எந்த அழகிப் போட்டிக்காவது ஜட்ஜாகப் போனது உண்டா?
ஆஹா!
ஜட்ஜாகச் சென்று 'நீங்கள் அழகியாக இல்லாமல் இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?' என்று அபத்தமான கேள்விகள்கூடக் கேட்டிருக்கிறேன். நான் இதுவரை போகாத நிகழ்ச்சி 'கொழுகொழு' குழந்தைகளுக்கான போட்டிக்கு மட்டும்தான்!
சாமானியர்கள் யாரும் தன் பெயருக்குப் பின்னால் 'ஆனந்தா' என்பதைச் சேர்த்துக்கொள்வது இல்லையே, ஏன்?
அதற்கான தகுதி தங்களுக்கு இல்லை என்பதால், அப்படிப் பெயர்வைத்துக்கொள்ளாதது அந்தக் காலம். இப்போது கதை வேறு... தங்களை யாரும் சந்தேகமாகப் பார்க்கக் கூடாது என்பதற்காக அப்படிப் பெயர் வைத்துக்கொள்வது இல்லை!
நான் அளவுக்கு மீறி மற்றவர்களுக்கு உதவுகிறேன். இது நல்லதா?
இது அவர்களுக்கேகூட நல்லதல்ல!
உதாரணமாக, ஒருவர் நீரில் மூழ்கிக்கொண்டு இருக்கிறார். அவரைக் காப்பாற்ற ஒரு கயிற்றின் முனையைத் தூக்கி அவரிடம் வீசுகிறீர்கள். 'அளவுக்கு அதிகமாக' உதவ வேண்டும் என்று முடிவுகட்டி, கயிற்றின் இரு முனைகளையும் அவரிடம் தூக்கிப் போட்டால் என்ன ஆகும்?! ஆகவே, 'தேவையான அளவுக்கு' உதவுவதே நல்லது!
டி.வி-யில் செக்ஸ் கேள்வி-பதில் நிகழ்ச்சிகள் பலவற்றில் நிறைய ஆண்கள் தங்களுடைய ஆணுறுப்பு சிறிய அளவில் இருப்பதாகக் கூறி வருத்தம்கொள்வது ஏன்?
டாக்டர் நாராயண ரெட்டியிடம் கேட்க வேண்டிய கேள்வி இது (அவரும் நூற்றுக்கணக்கானவர்களுக்கு இதுபற்றி விளக்கம் தந்துஇருப்பார்)! அதாவது... உறுப்பில் அளவு பெரிய விஷயமே இல்லை. விறைப்புதான் முக்கியம். நீண்ட ஈட்டியை வைத்துக்கொண்டு சொதப்பலாம். குறுவாளை விதவிதமாகப் பயன்படுத்தலாம். அவசியம் இல்லாத காம்ப்ளெக்ஸ் இது. ஒரு விஷயம் புரிந்துகொண்டால் போதும். பரவசம் தரக்கூடிய அத்தனை நரம்பு நுனிகளும் மொத்தமாகப் பெண்ணின் வாசலருகே (சுமார் இரண்டு அங்குலத்துக்குள்தான்) அமைந்திருக்கின்றன. அதற்கு அப்புறம் உயிரணுக்களை எடுத்துச் செல்வதற்கான 'வெத்துப்பாதை'தான்!
உலகிலேயே காஸ்ட்லியான டிக்கெட் எது?
அது கடைசிப் பயணத்துக்கான டிக்கெட்! அதை வாங்க வாழ்நாள் முழுவதையும் செலவழித்தாக வேண்டும்!
அதிகாலையில் குளித்து, வாசலில் கோல மிட்டு, கணவனின் கால்கள் தொட்டு நமஸ்கரித்து, தெய்வத்தையும் நமஸ்கரித்து அன்றைய பணிகளைத் துவங்கும் பொறுப்பான, அன்பான இல்லத்தரசிகள் இன்றும் உள்ளனரா?
ஆச்சர்யப்படாதீர்கள்!
இன்றும் பல பெண்கள் அப்படி இருக்கக்கூடும். எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி (தூர உறவு) அப்படி இருந்தார். அவருடைய கணவருக்கு எல்லா கெட்ட பழக்கங்களும் உண்டு. 'சின்ன வீடு'ம் உண்டு. மனைவியை அடிப்பார். இருப்பினும் தினமும் அதிகாலையில் அவருடைய காலைத் தொட்டு வணங்கி, ஒரு தோத்திரப் பாடலைப் பாடிவிட்டு தன் மற்ற வேலைகளைச் செய்வார் அந்த மனைவி. ஆனால், அவரை 'இல்லத்தரசி' என்று அழைப்பதா, 'இல்லத்து அடிமை' என்று அழைப்பதா என்றுதான் புரியவில்லை
நன்றி விகடன்
5 comments:
Akayam is very useful to me I am having much pleasure to pursue in my e-mail. Thanks a lot
Akayam is very useful to me I am having much pleasure to pursue in my e-mail. Thanks a lot
Akayam is very useful to me I am having much pleasure to pursue in my e-mail. Thanks a lot
மிகவும் சிறப்பான பதிவு . பகிர்வுக்கு நன்றி !
உங்கள் இருவருக்கும் ஆகாயம் சார்பில் நன்றி ,கண்டிப்பாக உங்களுடைய ,பதிவுகள் எனக்கு ஊக்கம் அளிக்கின்றன ,
Post a Comment