பார்வதி அம்மாளை விரட்டிய கெடுபிடிகள் 'இனி வேண்டாம் இந்தியா'
பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் விவகாரம், கடந்த இரண்டு வாரங்களாக ஈழத் தமிழர்கள், தமிழ் உணர் வாளர்களிடம் ஒருவித மனக்கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது-. சென்னைக்கு சிகிச்சை பெற வந்த அவரை அதே விமானத்தில் திருப்பியனுப்பியது, மத்திய-மாநில அரசுகளின் அனுமதி நிபந்தனைகள் என அடுத்தடுத்து விவகாரங்கள் சூடுபிடிக்க... அவரது சிகிச்சை, விவகாரம் அரசியல் ஆகிவிட்டது..!
இப்போது பார்வதி அம்மாள், தன் சொந்த ஊரான யாழ்ப்பாணம்
வல்வெட்டித்துறையில் சிகிச்சை பெற்று வருகிறார். பிரபாகரனின் ஊர்க்காரரும், இலங்கைத் தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு கட்சியின் பொதுச் செயலாளருமான சிவாஜிலிங்கம்தான், பார்வதி அம்மாளை உடனிருந்து கவனித்து வருகிறார். அவரிடம் பேசினோம்.
''பத்தாண்டுகளாகவே பார்வதி அம்மாளுக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்கள் இருந்தது. கூடவே வலது பக்கம் முழுவதும் பக்கவாதம்.இதே நிலையில்தான், அவர் தமிழகத்தில் இருந்து 2003-ம் ஆண்டில் வன்னிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இப்போதும் அதே நோய்களுடன்தான் போராடி, அவதிப்பட்டு வருகிறார்...'' என்று நம்மிடம் சொன்ன சிவாஜிலிங்கத்திடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.''இந்திய அரசு நிபந்தனைகளுடன் சிகிச்சைக்கு அனுமதித்த நேரத்தில் நீங்கள் அவரை இலங்கைக்கு அழைத்துச்சென்று விட்டீர்களே?''
''இதற்கு விளக்கமாக பதில் சொல்ல வேண்டும். மலேசியாவில் தங்கியிருந்த பார்வதி அம்மாளுக்கு அங்கிருந்த இந்தியத் தூதரகம், ஏப்ரல் 15-ம் தேதி 6 மாத விசா அளித்தது. ஆனால் 16-ம் தேதி சென்னைக்கு வந்த அவரை, அதே விமானத்தில் திருப்பி அனுப்பினர். அங்கு தங்க அவருக்கு விசா இல்லை. மலேசிய அரசு, விசேட விசா எதுவும் தரவில்லை... ஆனால், மனிதாபிமான அடிப்படையில் 'ஸ்பெஷல் பாஸ்' தந்து, 30 நாட்கள் தங்க அனுமதித்தனர். மே 17-ம் தேதி அந்த பாஸ் முடிகிறது. அதற்குள் அவருக்கு இந்தியா விசா பெறுவதிலும் இழுபறி... இந்த நிலையில்தான் பார்வதி அம்மாளின் குடும்பத்தார், பிரபாகரனின் அக்கா வினோதினி ஆகியோர் என்னைத் தொடர்புகொண்டு, 'அவரை இலங்கைக்கே அழைத்துச் சென்றுவிடுங்கள்' என்று கூறினார்கள். மே 7-ம் தேதியில் இருந்து, 20-ம் தேதி வரை மலேசிய ஏர்லைன்ஸில் டிக்கெட் கிடைக்கவில்லை. 10-ம் தேதியன்று மட்டும் ஸ்ரீலங்கன் விமானத்தில் இரண்டு ஸீட் கிடைத்தது. அன்று அங்கிருந்து புறப்பட்டு, இலங்கை நேரப்படி மாலை 5 மணிக்கு இலங்கை வந்ததும்தான், இந்திய அரசின் அனுமதி குறித்த விவரங்கள் எங்களுக்கு இரவில் தெரிவிக்கப்பட்டது.''
''தொடர்ந்து என்ன நடந்தது?''
''அவரை விமான நிலையத்தில் இருந்து வீல் சேரில் அழைத்துக்கொண்டு கொழும்பு நகரின் மையப் பகுதியான பம்பலபிட்டியில் உள்ள ஒரு விடுதியில் தங்கவைத்தோம். எப்போதும் ஒரு செவிலியர் உடனிருக்க, மூன்று நேரமும் மருத்துவர்கள் வந்து அவரைப் பார்த்துச் சோதித்துவிட்டு செல்கிறார்கள். அவர் கஞ்சி, சூப் போன்ற திரவ உணவுகளைத்தான் உட்கொள்கிறார். மே 11-ம் தேதி காலை தமிழ் தேசிய கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தன் எம்.பி., கொழும்பில் உள்ள இந்திய தூதரக அரசியல் பிரிவு அதிகாரி ரியாஸ் ஆகியோர் பார்வதி அம்மாளை வந்து பார்த்தனர். இந்திய அரசின் நிலையைக் கூறி, விசா விண்ணப்பத்தையும் கொடுத்தார்கள். பிரபாகரனின் அக்கா வினோதினியை தொடர்புகொண்டு விவரம் கூறினேன். பார்வதி அம்மாள் குடும்பத்தினரோ, 'இந்திய அரசின் கடுமையான நிபந்தனைகள், தடுப்புக் காவலைப் போன்று இருப்பதால், இந்தச் சூழலில் இந்தியாவில் சிகிச்சை பெறவேண்டாம்... ஒட்டுமொத்த இனத்தின் தன்மானத்துக்காகத்தானே இத்தனை பாடு... அதற்கு பாதிப்பு வரும் இடத்துக்குப் போகவேண்டாம்...' என்றவர்கள், வல்வெட்டித்துறைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்குமாறு தெரிவித்தார்கள். அதன்படிதான் இங்கு வந்திருக்கிறோம்...''
''பார்வதி அம்மாளுக்கு கொழும்புவில் இருந்து யாழ்ப்பாணப் பயணம் சிரமமாக இல்லையா?''
''அவருடைய வயோதிகமும், உடல் பிரச்னையும் மோசம்தான்... கொழும்பு விடுதியில் இருந்து செயின்ட் ஜான்ஸ் ஆம்புலன்ஸில் செவிலியர்கள் உடன் வர ஏ-9 நெடும்பாதை வழியாக யாழ்ப்பாணம் புறப்பட்டோம். வழியில் இடையிடையே அவர்கள் உடல்நிலைக்கு ஏற்றவாறு கொக்கரல்ல, தம்புல்ல, மதுவாச்சி, வவுனியா ஆகிய இடங்களில் எல்லாம் சிறிது நேரம் நின்று நின்று ஓய்வு தந்து, பயணம் தொடர்ந்தோம். காலை 6.30 மணிக்கு புறப்பட்டு வல்வெட்டித்துறை வர 12 மணி நேரம் ஆனது...''
''எப்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது?''
''வல்வெட்டித்துறையில் உள்ள மாவட்ட நிலை அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சொந்த ஊர் என்பதால், வசதி குறைவாக இருந்தாலும்... தெரிந்த முகங்கள், தெரிந்த மருத்துவர்கள் என்பது பார்வதி அம்மாள் மனதுக்கும் இதமாக இருக்கிறது. தொடர்ந்து இங்கு சிகிச்சை அளிப்போம். ஒருவேளை, கனடாவுக்கு விசா கிடைத்தால் அங்கு அழைத்துச் செல்லப்படுவார். இல்லையென்றால், வாழ்நாள் முடியும் வரை சொந்த மண்ணில் உள்ள சிகிச்சை வசதிகளையே எடுத்துக்கொள்வார்.''
''செம்மொழி மாநாட்டையட்டி, பார்வதி அம்மாளின் சிகிச்சையை வைத்து இங்கு அரசியல் நடப்பதாகக் கூறப்படுகிறதே?''
''என்னைப் பொறுத்தவரை, இந்த விஷயத்தில் தமிழகத்தின் உள்ளூர் அரசியலுக்குள் கருத்துக் கூற விரும்பவில்லை. பொதுவாக, இந்த விஷயத்தில் அவசர அவசரமாக 'எடுத்தேன், கவிழ்த்தேன்' என காரியங்கள் நடைபெற்றுவிட்டன. மனிதாபிமான அடிப்படையில் இந்த விஷயத்தை பார்த்திருக்க வேண்டும். அப்படி நடந்திருந்தால் சிக்கல் எதுவும் தோன்றியிருக்காது...''
''பிரபாகரன் குடும்பத்தார், நெடுமாறன் கவனிப்பில் இங்கே முசிறியில் சிகிச்சை அளிக்கலாம் என்று முடிவெடுத்தார்கள் என்றும்... ஆனால், நெடுமாறனுக்கு பெயர் கிடைத்துவிடும் என்பதால் அது தடுக்கப்பட்டது என்றும் ஒரு தரப்பினர் கூறுகிறார்களே?''
''சென்னையில் இருந்து பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்ட பிறகுதான் எனக்கு அதுபற்றிய தகவலை மலேசியாவில் இருந்து சொன்னார்கள். பார்வதி அம்மாளின் குடும்பத்தாரின் விருப்பம் முசிறியில் உள்ள சித்த வைத்தியர் ராஜேந்திரனிடம் சிகிச்சை பெறவேண்டும் என்பதுதான். மற்றபடி, நெடுமாறன் அய்யா கவனிப்பில் பார்வதி அம்மாளுக்கு சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு நடந்திருக்கலாம். பார்வதி அம்மாள் குடும்பத்தார் எதுவும் கூறாமல் நெடுமாறன் அய்யாவோ, யாரோ கவனிக்க முன்வரமாட்டார்கள்தானே..? தமிழக தலைவர்கள், இந்த சர்ச்சைக்கு இத்துடன் முற்றுப்புள்ளி வைத்துவிடவேண்டும் என்றுதான் பார்வதி அம்மாளின் குடும்பத்தார் விரும்புகிறார்கள்...' - வேண்டுகோளுடன் முடித்தார் சிவாஜிலிங்கம்.
வினோதினியின் விருப்பம்..!
பா£ர்வதி அம்மாள் தமிழகத்தில்தான் தங்கி சிகிச்சை எடுப்பார் என்ற நம்பிக்கையில், பிரபாகரனின் அக்கா வினோதினி கனடாவில் இருந்து மார்ச் 2-ம் வாரம் மலேசியா வந்தார். சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் தங்கிய அவர், 'அந்த முயற்சி தோல்வியில் முடிவடைந்து விட்டதே' என்று கண்ணீர் மல்க வருத்தத்துடன் கனடா திரும்பியதாக சிலர் கூறுகின்றனர்.
2 comments:
கனடாவில் அவர் மகள் வினோதினி சிகிச்சை அளிக்கலாமே? தமிழகத்தில் அவர் வருகை அரசியல் ஆனதை தடுத்திருக்கலாமே.
'பசியால் வாடும் இந்தியா'
பூனம் - பசிக்கு உணவில்லாமல் அடிக்கடி புழுதி மண்ணைத் தின்று வந்ததால் மூன்று வயதிலேயே அவளுக்கு சிறுநீரகம் செயலிழக்க ஆரம்பித்து விட்டது. இருமிக்கொண்டே இருக்கும் அவளைப் போலத்தான் அலகாபாத் அருகிலுள்ள கானே என்ற பழங்குடிக் கிராமத்தில் இருக்கும் மற்ற ஏழைச் சிறுவர்களும் மண்ணைத் தின்கிறார்கள்.
பெட்டகம்
உலகில் மிக வறிய நிலையில் வாழும் மக்களின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவில்தான் இருப்பதாக உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.
உணவு என்பது மக்களின் அடிப்படை உரிமை என்ற போராட்டம் எழுந்திருக்கும் நிலையில் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களை வரையறுப்பதில் புது வழியைக் கடைப்பிடித்து மானிய விலையில் உணவுப் பொருட்களை பெற்றுக் கொள்ளுவதற்குத் தகுதியான மக்களின் எண்ணிக்கையை பத்துக் கோடியால் அதிகரிக்க இந்திய அரசு எண்ணியுள்ளது.
ஆனால் அரசு வழங்கும் உணவுப் பொருளில் கால் பங்கு தான் உரிய மக்களைப் போய் சேர்கிறது என்றும் மோசடி திருட்டு இல்லாத வகையில் உணவு விநியோக முறை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்றும் இந்திய நிதியமைச்சின் தலைமைப் பொருளியல் ஆலோசகரான முனைவர். கௌஷிக்பாசு கூறுகிறார்.
பூனம் போன்ற பிள்ளைகளும் அவர்களின் குடும்பங்களும் அனுபவிக்கும் அடிப்படை உணவுப் பிரச்சனையையும், அதற்கான போராட்டங்கள், நடவடிக்கைகள், சவால்கள் எனபவற்றையும் ஆராயும் நமது முகவர் கிறிஸ் மொறிஸ் அவர்களின் செய்திப் பொதியை நேயர்கள் இங்குக் கேட்கலாம்.
Post a Comment