ஆழ்மனதின் அற்புத சக்திகள் - ஏழு வகை 'சக்ரா'!

15 May 2010 ·

ம் முன்னோர்கள் மனித உடலில் ஏழு சக்தி மையங்கள் இருப்பதாகக் கருதினார்கள். அந்த சக்தி மையங்களை "சக்ரா" என்று அழைத்தார்கள். அந்த சக்தி மையங்கள் இருப்பதாக சீனா, திபெத் போன்ற நாட்டு முன்னோர்களும் நம்பி வந்தனர். இந்த "சக்ரா"க்களின் தன்மையைப் பொறுத்தே மனிதர்களின் தன்மையும், ஆற்றலும், அறிவும் அமைகிறதாக அவர்கள் நம்பினார்கள்.

ஒவ்வொரு சக்ராவும் புறக்கண்ணால் காண முடியாததாக இருந்தாலும் சூட்சும சரீரத்தில் இருக்கும் சக்தி மையங்களாக அவர்கள் அவற்றைக் கண்டதோடு அந்த சக்ராக்களுக்குத் தனித்தனியாக சின்னங்களும், நிறங்களும், மந்திர சப்தங்களும் ஒதுக்கி இருந்தார்கள். ஒவ்வொரு சக்ராவும் தனித்தன்மை கொண்டதாகவும், சில குறிப்பிட்ட சக்திகளை மையமாகக் கொண்டதாகவும், அந்த சக்திகளை உருவாக்கவும், கட்டுப்படுத்தவும் முடிந்ததாகவும் கருதப்பட்டது. குண்டலினி சக்தியும் இந்த சக்ராக்களின் வழியாகத் தான் மேலே எழுகிறது என்றும் சொல்லப்படுகிறது.

இருபதாம் நூற்றாண்டில் பல மேலை நாட்டு அறிஞர்களும் இந்த சக்ராக்களில் காட்டிய ஈடுபாடும், ரெய்கி போன்ற மாற்று சிகிச்சை முறைகளில் இந்த சக்ராக்களைப் பயன்படுத்தியதும், தியான முறைகளில் பயன்படுத்தியதும் உலகளவில் இந்த சக்ரா முறைகளைப் பிரபலப்படுத்தின.

இனி ஏழு சக்ராக்களையும் அறிந்து கொள்வோம்...



1) மூலாதார சக்ரா

இது மனித உடலில் ஆசன வாயின் அருகே அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது. மரத்துக்கு வேர் எப்படியோ அப்படியே உடல் வலிமைக்கு ஆணிவேராக இந்த சக்ரா விளங்குகிறது. அமைப்பில் நான்கு இதழ் தாமரையுடன் உள்ள இதன் நிறம் சிவப்பு. இது "லா" என்ற சத்தத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மந்திரமாக உச்சரிக்கும் போது லாம், லாங் என்ற இரு உச்சரிப்புகளுக்கு இடையே உச்சரிக்கப்படுகிறது. அதாவது லா என்கிற ஒலி பிரதானமாக உச்சரிக்கப்பட்டு அது முடிகிற போது ம்/ங் ஒலிகளின் மெலிதான சேர்க்கையோடு முடிகிறது. இந்த மந்திர ஒலியால் இந்த சக்ரா சக்தி பெறுகிறது. உடல் ஆரோக்கியம், தற்காப்பு ஆகியவற்றுக்கு இந்த சக்ராவின் செயல்பாடு முக்கியம்.



2) ஸ்வாதிஷ்டானா சக்ரா
இது மனித உடலில் ஆண்/பெண் குறி பாகத்தில், இன விருத்தி உறுப்புகளை ஒட்டி அமைந்துள்ளது. இது ஆறு இதழ் தாமரை அமைப்பில் ஆரஞ்சு நிறத்தில் அமைந்துள்ளது. இது வா என்ற எழுத்தின் ஒலியை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மந்திரமாக உச்சரிக்கும் போது இது வாம்/வாங் இவற்றின் இடைப்பட்ட உச்சரிப்பாக இருக்கிறது. அதாவது வா பிரதானமாக உச்சரிக்கப்பட்டு அது முடிகிற போது ம்/ங் ஒலிகளின் மெலிதான சேர்க்கையோடு முடிகிறது. இந்த மந்திர ஒலியால் இந்த சக்ரா சக்தி பெறுகிறது. இனவிருத்தி, அடிப்படை உணர்ச்சிகள், அடிப்படைத் தேவைகள் ஆகியவற்றுக்கு இந்த சக்ராவின் செயல்பாடு சரியாக இருப்பது முக்கியம்.




3) மணிபுரா சக்ரா

இது மனித உடலில் தொப்புளுக்குக் கீழ் வயிற்றுப் பகுதியில் அமைந்துள்ளது. இது பத்து இதழ் தாமரை அமைப்பில் மஞ்சள் நிறத்தில் அமைந்துள்ளது. இது ரா என்ற எழுத்தின் ஒலியை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மந்திரமாக உச்சரிக்கும் போது இது ராம்/ராங் இவற்றின் இடைப்பட்ட உச்சரிப்பாக இருக்கிறது. அதாவது ரா பிரதானமாக உச்சரிக்கப்பட்டு அது முடிகிற போது ம்/ங் ஒலிகளின் மெலிதான சேர்க்கையோடு முடிகிறது. இந்த மந்திர ஒலியால் இந்த சக்ரா சக்தி பெறுகிறது. ஜீரணம், செயலாற்றத் தேவையான சக்தி, எண்ணங்களால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள் ஆகியவை இந்த சக்ராவின் கட்டுப்பாட்டில் வருகின்றன.

4) அனாஹதா சக்ரா
இது மனிதனின் நெஞ்சுப்பகுதியில் அமைந்துள்ளது. இது பன்னிரண்டு இதழ் தாமரை அமைப்பில் பச்சை நிறத்தில் உருவகப்படுத்தப்படுகிறது. இது யா என்ற எழுத்தின் ஒலியை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மந்திரமாக உச்சரிக்கும் போது இது யாம்/யாங் இவற்றின் இடைப்பட்ட உச்சரிப்பாக இருக்கிறது. அதாவது யா பிரதானமாக உச்சரிக்கப்பட்டு அது முடிகிற போது ம்/ங் ஒலிகளின் மெலிதான சேர்க்கையோடு முடிகிறது. இந்த மந்திர ஒலியால் இந்த சக்ரா சக்தி பெறுகிறது. இதயமும், அன்பு, கருணை, இரக்கம் போன்ற மேலான உணர்வுகளும் இந்த சக்ராவின் கட்டுப்பாட்டில் வருகின்றன.

5) விசுத்தா அல்லது விசுத்தி சக்ரா
இது மனிதனின் தொண்டைப் பகுதியில் அமைந்துள்ளது. இது பதினாறு தாமரை இதழ்கள் கொண்ட தாமரையாக நீல நிறத்தில் இருக்கிறது. இது ஹா என்ற எழுத்தின் ஒலியை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மந்திரமாக உச்சரிக்கும் போது இது ஹாம்/ஹாங் இவற்றின் இடைப்பட்ட உச்சரிப்பாக இருக்கிறது. அதாவது ஹா பிரதானமாக உச்சரிக்கப்பட்டு அது முடிகிற போது ம்/ங் ஒலிகளின் மெலிதான சேர்க்கையோடு முடிகிறது. இந்த மந்திர ஒலியால் இந்த சக்தி பெறுகிறது. தைராய்டு சுரப்பியும், பேச்சுத் திறனும், எந்த விஷயத்தையும் அடுத்தவருக்குப் புரிய வைக்கும் சக்தியும் இந்த சக்ராவின் செயல்பாட்டைப் பொறுத்து அமைகின்றன.

6) ஆஜனா சக்ரா
இது இரு புருவங்களுக்கிடையில் பொட்டு வைக்கும் நெற்றிப் பகுதியில் அமைந்துள்ளது. இதை நெற்றிக் கண் சக்ரா என்றும் அழைக்கிறார்கள். இது கருநீல நிறத்தில் இரண்டு இதழ் தாமரை சின்னத்தில் அமைந்துள்ளது. இது ஓம் என்ற மந்திர சப்தத்தில் சக்தி பெறுகிறது. ஆங்கிலத்தில் aum என்று உச்சரிப்புக்கிணையாக இந்த ஓம் இருக்கிறது. கூர்மையான, தெளிவான புறப்பார்வை மற்றும் அகப்பார்வை, ஆழ்மன சக்திகள், ஞானத் தெளிவு ஆகியவை இந்தச் சக்ராவின் செயல்பாட்டைப் பொறுத்து அமைகிறது.




7) சஹஸ்ரரா சக்ரா

இது தலையின் உச்சிப்பகுதியில் அமைந்துள்ளது. ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை வடிவத்தில் கருஞ்சிவப்பு நிறத்தில் இந்த சக்ரா அமைந்துள்ளது. இது ஆ என்ற எழுத்தில் ஆரம்பித்து ஓம் (aum) என்று முடியும் படியான மந்திர உச்சரிப்பில் பலம் பெறுகிறது. ஆத்ம ஞானம், தெய்வீக சக்திகள் போன்றவை கைகூடுவது இந்த சக்ராவின் குறையற்ற செயல்பாட்டாலேயே.

இந்த ஏழு சக்ராவின் சின்னங்களையும், மந்திர சப்தங்களையும் கூடுமான வரை மனதில் இருத்துங்கள். சக்ரா தியான முறையை அடுத்து பார்க்கலாம்.

-vikatan

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites