கொதிப்பின் பின்னணி- கோதாவரி தகராறு!

11 May 2010 ·


கொதிப்பின் பின்னணி
கோதாவரி தகராறு!

''பிரதமர் மன்மோகன் சிங்கும், ஆளும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியும்தான் நாட்டின் உச்சபட்ச அதிகாரம் படைத்தவர்கள் என்று யார் சொன்னது? அவர்கள் இருவரும் தங்கள் கிரீடத்தைக் கழற்றி வைக்கவேண்டும் உடனே! வெளியாகும் டேப் விவகார விவரங்களைப் பார்த்தால், நாட்டை நடத்திக் கொண்டிருப்பதே மத்திய அரசில் மறைமுக மாகக் கோலோச்சும் தொழிலதிபர்களும் இவர்களுக்குப் பாலமாக இருக்கும் மீடியேட்டர்களும்தான் என்றல்லவா தெரிகிறது?'' என்று கேட்கிறது மீடியா வட்டாரம்

டேப் பதிவு இரண்டு கட்டங்களில் நடந்ததாகச் சொல்லப்படுகிறது. ஒன்று, 2008 ஆகஸ்ட் மாதத்தில் கிட்டத்தட்ட 120 நாட்கள் பதிவு செய்யப்பட்டு, அதில் தொலைத்தொடர்பு வியாபாரங்கள் தொடர்பாகக் கிடைத்த தகவல்கள்! இரண்டாவதுகட்டம் - மக்களவைத் தேர்தல் முடிந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமையும் சமயத்தில் அமைச்சர் பதவிகள் யார் யாருக்கு என்று விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டு இருக்கும்போது நடந்த தொலைபேசி உரையாடல்கள்.

'ஸ்பெக்ட்ரம்' விவகாரத்தில் புயல் கிளம்பியது ஒருபுறமிருக்க... ஒட்டுமொத்தமாக தொலைத்தொடர்புத் துறையில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்த மிகப் பெரும் தொழிலதிபர்கள் எப்படியெல்லாம் கோஷ்டி பிரிந்து கேம் ஆடினார்கள் என்பதையும் சொல்லி அதிர வைக்கிறது இந்த டேப் விவகாரம். வெளிப்பார்வைக்கு வர்த்தக ஆலோசகராக இருந்தாலும், உள்ளூர பவர் புரோக்கராகவே செயல்பட்ட நீரா ராடியாவை வைத்து, மத்திய அரசில் காரியம் முடிக்க தொழிலதிபர்கள் எப்படியெல்லாம் காய் நகர்த்தினார்கள் என்ற கதைகள் அடுத்தடுத்து வெளியாகும் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.

வெளிநாட்டு கம்பெனிகளிடம் சர்வ சாதாரணமாக நடக்கும் பேரங்கள், கோடிக்கணக்கான ரூபாய் வெளி நாட்டு வங்கிகளில் முதலீடு செய்யப்படுவது, அங்கீகாரமற்ற வகையில் எல்லையைத் தாண்டியும் பணப்பட்டுவாடா நடப்பது ஆகியவை எல்லாமே தொலைபேசி உரையாடல் மூலம் கிடைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத் துறையின் அமைச்சராக வந்துவிடக் கூடாது என்று டாடா நிறுவனம் தடுக்க... தயாநிதிதான் வரவேண்டும் என்ற ரீதியில் சுனில் மிட்டல் துடித்ததாகவும் இந்த டேப் ஆதாரங்கள் கூறுகின்றன. மத்திய அமைச்சர்களின் இலாகாவை நிர்ணயிக்கும் அளவுக்கு இந்த பவர் புரோக்கர் பெண்மணிக்கு வீரியம் இருப்பதை உணர்ந்து, சுனில் மிட்டல் தன்னுடைய நிறுவனத்துக்காக லாபி செய்ய நீராவை அழைக்கும் விவகாரங்களையும் இந்த டேப் மூலமாகக் கண்டுபிடித்துள்ளார்களாம்!

டெல்லியில் உள்ள அரசியல்வாதிகளின் அதிகாரத்தைப் பெற பல முக்கியகார்ப்பரேட் கம்பெனிகள், நீரா ராடியா மாதிரியான ஆட்களை நிறையவே வைத்துள்ளது. இவர்களை மீடியேட்டர்கள் என்று சொல்லலாம் அல்லது ஜென்டிலாக பி.ஆர்.எம்-கள் என்பார்கள். சிலசமயம் சம்பந்தப்பட்ட கம்பெனிகளின் ஜி.எம்., மானேஜர் என்கிற பதவிகளின் போர்வையிலும் இந்த 'லயஸன்' ஆபீஸர்கள் நடமாடுகின்றனர். (இப்படிப்பட்ட லயஸன் புள்ளிகள், டெல்லி தமிழ் சங்கத்திலும் முக்கியப் பொறுப்புக்கு வந்து மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள், நிதி அமைச்சர்களை எல்லாம் அழைத்து விழா நடத்துவதும் உண்டு!) இவர்களுக்கு டெல்லி நார்த்-சௌத் பிளாக்குகளில் சாதாரணமாகப் போய்வர அனுமதியும் உண்டு. முறையான அனுமதி பெற்றவர்களைக் கூட போலீஸார் அனுமதிக்க மறுப்பார்கள். ஆனால், இந்தப் புள்ளிகளை பாதுகாப்பு அதிகாரிகள்செக்கிங்கூட செய்யமாட்டார்கள். அந்தளவுக்கு இவர்களுக்கு அமைச்சர்கள் மத்தியிலும் அதிகாரிகள் மத்தி யிலும் அபரிமிதமான செல்வாக்கு உண்டு.

காரியங்கள் நடைபெற்றவுடன், அதற்கான பரிசுகள் உள்நாட்டிலும் கொடுக்கப்படும். சில சமயம் வெளிநாட்டிலும் முதலீடு செய்யப்படும். அமைச்சர்களுக்கு மட்டுமல்ல... அதிகாரிகளுக்கும் இந்த சலுகைகள் உண்டு. பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 20 வருடம் 30 வருடங்கள்கூட இந்த புரோக்கர்கள் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களில் தொடர்பு வைத்துக்கொண்டு வருகின்றனர். இவர்கள் மூலம் அரசாங்கத்தில் முக்கியப் பதவிகளும் கிடைக்கும். ஓய்வு பெற்றவுடன் அடுத்த கட்டமாக இவர்கள் இந்த கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றியும் காசு பார்ப்பார்கள்!

நீரா ராடியா டேப் விவகாரம் இப்போது வெளியானதற்கு முகேஷ் அம்பானிக்கும் அனில் அம்பானிக்கும் இடையே நடந்துவரும் பிசினஸ் மெகா போட்டிதான் முக்கியக் காரணம் என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள். ''கோதாவரி ஆற்றுப்படுகையில் முகேஷ் அம்பானியின் காஸ் நிறுவனம் எரிவாயுவை எடுக்கிறது. இதில், அனில் அம்பானி நிறுவனத்துக்கும் முகேஷ் நிறுவனம் எரிவாயுவை சப்ளை செய்யவேண்டும் என்பது குடும்ப பாகப் பிரிவினையில் செய்துகொண்ட ஒப்பந்தம். இந்த பாகப் பிரிவினையின்படி முகேஷ் பழைய விலைக்கே எரிவாயுவை அனில் அம்பானி நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டும்! இது சகோதரர்களின் தாயார் தந்த தீர்ப்பு. ஆனால், அண்ணன் முகேஷ் இதை ஏற்றுக்கொள்ள மறுத்து, மத்திய அரசின் உதவியை நாடினார். மத்திய அரசும், 'ஆமாம், இது நாங்கள் வழங்கிய எரிவாயு ஒப்பந்தம். அரசாங்கத்துக்கு சொந்தமான எரிவாயுவை பாகப்பிரிவினை தீர்ப்பின் மூலம் எல்லாம் கட்டுப்படுத்த முடியாது' என்று சொல்லிவிட்டது. இது உச்ச நீதிமன்றத்தில் வழக்காக மாறியது. கோடி கோடியாகப் பணம் புரளும் இந்த எரிவாயு விவகாரத்தில் எந்த நேரத்திலும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகலாம் என்ற நிலை...

தீர்ப்பு எப்படி அமையுமோ என்ற டென் ஷனில் இதில் ஒரு சகோதரர் நீரா ராடியா மூலமாக மேற்கொண்ட ஒரு காரியம், மற்றொரு சகோதரரை உச்சகட்டக் கோபத்துக்கு ஆளாக்கிவிட்டது. அதைத் தொடர்ந்துதான் தனது பலத்தை முழுவதுமாகப் பிரயோகித்து வருமான வரி மற்றும் சி.பி.ஐ-க்குள் மட்டுமே உலவிக் கொண்டிருந்த டேப் விவகாரங்களை மீடியாக்கள் மூலம் வெளியே இழுத்துவிட்டார். அதன் விளைவு - ஸ்பெக்ட்ரம் வில்லங்கம் மட்டுமின்றி, முகேஷின் பங்குகள் எங்கெல்லாம் இருக்கிறது என்பதுடன் மற்ற பல விவகாரங்களும் மொத்தமாக வெளியில் வந்து அல்லோல கல்லோலப்படுகிறது!'' என்கிறார்கள் டெல்லியின் சீனியர் பத்திரிகையாளர்கள் சிலர்.

''குறிப்பிட்ட ஒரு நியூஸ் சேனலை முகேஷ் அம்பானியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார் நீரா ராடியா. அதன் மூலம் பல பத்திரிகையாளர்களுக்கு பரிசுகளும் ஒப்பந்தங்களும் கொடுக்கப்படுகிறது. பிரபல டி.வி. முகங்கள் சார்பில் முதலீடும் செய்யப்பட்டுள்ளது. இதே மாதிரி, தனது பிசினஸ் எதிரிகளை சமாளிக்க அனில் அம்பானியும் பல மீடியா நிறுவனங்களில் பணத்தை இறைத்துள்ளார்!'' என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள்.

அது மட்டுமல்ல... பிரதமர் அலுவலகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் பெரும் தொழிலதிபரின் சிபாரிசில் வந்தவர்தானாம். அமைச்சரவை செயலகத்தில் இரண்டு முறை பதவி நீடிப்பு பெற்ற வேறொரு அதிகாரி, மேற்சொன்ன தொழிலதிபருக்கு நேர் எதிராக இருப்பவர்! இப்படி பல மட்டங்களில் கார்ப்பரேட் நிறுவன விளையாட்டுகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறதாம்.

யார் இந்த நீரா?

குஜராத்தைச் சேர்ந்த நீரா, இங்கிலாந்து நாட்டுக் குடியுரிமை பெற்றவர். இவரது கணவர் ஜனக் ராடியா நிதி நிறுவன ஆலோசகராக இருந்தவர். மூன்று குழந்தைகளுக்குத் தாயான நீரா, விவாகரத்து பெற்றவர். நாடு நாடாக மாறிக்கொண்டே இருந்தவர். கென்யா நாட்டிலிருந்து 1995-ல் இந்தியாவுக்கு வந்து 'வைஷ்ணவி கார்ப்பரேட் கம்யூனிகேஷ'னைத் தொடங்கினார். முதலில், சஹாரா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விளம்பரம் மற்றும் மக்கள் தொடர்புப் பணிகளை கவனித்தார். பின்னர் ஸ்டார் குரூப், டாடா குரூப் என்று 'ஆலோசனை' வாய்ப்புகளைப் பிடித்தார். ரிலையன்ஸ் குரூப்பில் முகேஷ் அம்பானியின் நற்பெயரை பெற்றார். அடுத்தடுத்து இவரே பல நிறுவனங்களை தொடங்கும் வாய்ப்பும் கிடைத்தது.

அதில் 'கிரவுன்மார்ட் இன்டர்நேஷனல்' என்கிற நிறுவனம், வரி விஷயத்தில் படுசுதந்திரம் தரும் பகுதிகளில் ஒன்றான சேனல் ஐலேண்டில் 100 கோடி முதலீட்டில் கொடி கட்டியுள்ளதாம். இது தனியார் விமான சர்வீஸையும் தொடங்க இருக்கிறதாம். முன்பு அனந்தகுமார் விமானப் போக்குவரத்து அமைச்சராக இருக்கும்போது அவருக்கும் நன்கு அறிமுகமாகியிருந்தாராம் நீரா.

அவரென்ன... இன்னும் பல அமைச்சர்கள் மற்றும் மெகா தலைகளின் நன்னம்பிக்கை இவருக்கு உண்டு. அவையெல்லாம் இனிமேல் ஒவ்வொன்றாக வெளிவரும் என்கிறார்கள்!

-Vikatan


0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites