உறையவைக்கும் உலக உதாரணங்கள் ..ஊரெல்லாம் உளவாளிகள்!

01 May 2010 ·

உறையவைக்கும் உலக உதாரணங்கள்


ஊரெல்லாம் உளவாளிகள்!

பாகிஸ்தானில் உள்ள ஐ.எஸ்.ஐ. ஏஜென்ட்டான ராணா என்பவருக்கு இந்திய ரகசியங்களை உளவுபார்த்துக் கொடுத்ததாக, பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரி மாதுரி குப்தா கைது செய்யப்பட்டார். இந்த பரபரப்பைத் தொடர்ந்து, 'வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களின் நிலை எந்த அளவில் இருக்கிறது?' என்ற ஒரு கேள்வி எழ... அதைப்பற்றிய ஓர் அலசல் இங்கே.

தங்கள் பெயர் வெளியிட விரும்பாமல் தூதரகங்கள் சம்பந்தப்பட்ட சிலர், நம்மிடம் சொன்ன தகவல்கள் அனைத்துமே அதிர்ச்சி ரகம்!

''அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் உள்ள தூதரகங்களுக்கு

அதிகாரிகளாகச் செல்வது உயர் வானது. ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா செல்வது தாழ்வானது, சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற நாடுகளுக்குச் செல்வது சுமார் என அதிகாரிகளால் பிரித்துப் பார்க்கப்படுகிறது. தூதரகங்களில் நல்ல போஸ்ட்டிங் கிடைக்க மலையாளியாக இருக்க வேண்டும் அல்லது மாமூல் வெட்ட வேண்டும். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு போஸ்ட்டிங் போட சில கோடிகள். கனடா என்றால் 50 லட்சம் வரை மாமூல் என கப்பம் கட்டுவார்கள். இதைக் கொடுத்தவர்கள் திரும்ப எடுப்பது எப்படி? விதிமுறைகளை மீறி ஒரு விசா வழங்க, 5,000 டாலர் கள் வாங்குகிறார்கள்.. புதிய பாஸ்போர்ட் பெற 2,000 டாலர்கள் என்று மேலைநாடுகளில் வசூல் வேட்டை நடக்கிறது. இதனால், அமெரிக்காவில் விசா இல்லாமல் தங்கி இருப்பவர்களும் புதிய பாஸ்போர்ட் பெற முடியும். வாஷிங்டனில் உள்ள தூதரகத்தில் வேலை செய்த கன்னட இளைஞர் ஒருவர், இரண்டே வருடங்களில் சுமார் ஒரு லட்சம் டாலர்களை சுருட்டி இருக்கிறார். அமெரிக்க உளவுத் துறையும் இந்தியத் தூதரகமும் கூட்டாகச் சேர்ந்து அவரைக் கைது செய்வதற்கு முன்பு சென்னைக்கு தப்பி வந்து, வீடு வாங்கி செட்டிலாகிவிட்டார். அனைவரும் இப்படி அயோக்கியர்கள் அல்ல. ஒரு சிலர்தான் இப்படி இருக்கிறார்கள்.

மேலைநாடுகளில் இருக்கும் இந்தியத் தூதரக அதிகாரிகளுக்கு அரசியல்வாதிகள் செலவு வைப் பார்கள். இந்தியாவில் இருந்து வரும் அமைச்சர்கள், அதிகாரிகள், ஊர் சுற்றிப் பார்க்க சொகுசு கார், ஸ்பெஷல் சாப்பாடு, ஏராளமான பரிசுப் பொருட்கள், விலை உயர்ந்த விஸ்கி என்று 10 ஆயிரம் டாலர்கள் வரை செலவு வைத்தால், அந்த தூதரக அதிகாரி எங்கேதான் போவார்?

இதில் பல அமைச்சர்கள், தங்கள் தோழிகளையும் கூடவே ரகசியமாக அழைத்து வந்து வெளிநாடுகளில் 'அரசுமுறைப் பயணத்தில்' லூட்டி அடிப்பார்கள். அரசாங்கக் கணக்கில் காட்ட முடியாததால் தூதரக அதிகாரிகளே ஹோட்டல் ரூம் முதல், அவர்களின் மேக்கப் செலவு வரை அழுதாக வேண்டும். இல்லா விட்டால், 'அடுத்த போஸ்ட்டிங் ஆப்பிரிக்க நாடுதான்' என்று மிதமான மிரட்டல் வரும்!

குடும்பத்துடன் மேற்கத்திய நாடுகளுக்கு போஸ்ட் டிங் போகிறவர்கள், மூன்று வருடம் பணி முடித்து வேறு நாட்டுக்கு மாற்றலாகிச் செல்லும்போது தங்கள் மனைவி, குழந்தைகளை, அமெரிக்காவிலோ, இங்கிலாந்திலோ விட்டுவிட்டுத்தான் போகிறார்கள். அவர்கள் குடும்பம் மெள்ள மெள்ள அங்கே செட்டில் ஆகிவிட்ட பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரியும் ஓய்வு அல்லது வி.ஆர்.எஸ்ஸில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என்று செட்டில் ஆகிவிடுவார்கள். அவர்கள் மாற்ற லாகிப் போனாலும் அவர்கள் குடும்பம் மேல் நாட்டில் வாழ்வதற்கு வசதி செய்து கொடுப்பது எது? வேலை செய்யும்போதே பல்வேறு ரகசியங்களைக் கூறுவதால் தங்க அனுமதி கொடுத்து பணமும் கொடுக்கிறதா அயல்நாட்டு அரசாங்கங்கள்? அல்லது பாஸ்போர்ட், விசா வழங் குவதற்கு பெறப்படும் லஞ்சமா?'' என்று கேள்வி எழுப்பியவர்கள், தொடர்ந்தனர்.

''மூன்று வருடங்களுக்குள் எவ்வளவு சுருட்ட முடியுமோ... அவ்வளவும் சுருட்டுகிறார்கள். கடந்த ஓர் ஆண்டாக மத்திய அரசு எடுக்கும் வலுவான நடவடிக் கைகளால் இவர்கள் ஆட்டம் சற்றே அடங்கி இருக்கிறது. மும்பை குண்டு வெடிப்பு சதிகாரன் ஹேட்லிக்கு சிகாகோ துணைத் தூதரகம் விசா வழங்கிய பிறகு ஒவ்வொரு வழக்கும் அலசி ஆராயப்படுகிறது. மேலைநாடுகளில் இந்தியத் தூதரகம் மற்றும் துணை தூதரகங்களில் வேலை செய்பவர்கள் அனை வரும் இந்தியாவில் இருந்து அனுப்பப்படுவது இல்லை. லோக் கலாகவும் வேலைக்கு ஆட்களை எடுத்துக்கொள்ளலாம். ஆனால், சம்பளம் இந்திய ரூபாய் மதிப்பில் தரப்படும். ஆயிரம் டாலர்கள் மாதச் சம்பளம் பெறும் உள்ளூர் கிளார்க்குகள், விசா மற்றும் பாஸ்போர்ட் ஊழியர்கள் பாடு மிக திண்டாட்டம். வீட்டு வாடகைகூட கட்ட முடியாத சம்பளத்தில் வேலை செய்யும் உள்ளூர் ஊழியர்கள் சிலர், வார விடுமுறை நாட்களில் அலுவலகம் வந்து தகுதியற்றவர்களுக்கு பணத்தைப் பெற்றுக்கொண்டு விசா, பாஸ்போர்ட் கொடுத்ததையும் மத்திய அரசு கண்டுபிடித்தது.

ஒவ்வொரு தூதரகம் மற்றும் துணைத் தூதரங்களிலும் உளவுத் துறையாக 'ரா' அமைப்பின் அதிகாரி ஒருவர் மஃப்டியில் வேலை செய்வார். உளவு பார்ப்பதற்காக அவருக்குத் தனியாக ஒரு தொகை ஒதுக்கப்படும். இந்தத் தொகையை அந்த அதிகாரி தனக்கு செய்தி தருபவர்களுக்குக் கொடுப்பார். அமெரிக்காவில் மிகப் பிரபலமான நகரில் இருந்த 'ரா' உயர் அதிகாரி ஒருவர், பல ஆண்டுகளுக்கு முன்பு தன் அலுவலகத்தில் வேலை செய்த பெண் ஊழியர் ஒருவருக்கு வைர வளையல், புடவைகள், விலை உயர்ந்த ஆடைகள் வாங்கிக் கொடுத்து அதை 'சோர்ஸ்'க்கு கொடுத்ததாகக் கணக்கில் காட்டினார். 'தூதரகங்களில் வேலை செய் பவர்கள் அந்த நாட்டில் உள்ள பெண்களிடம் அதிகம் பழகக் கூடாது. அதன் மூலமாக அரசாங்க ரகசியங்கள் வெளியேற வாய்ப்பு உண்டு' என்று புதிய அரசு 'சர்க்குலர்' அனுப்பியும் வெள்ளைக்கார அழகிகளுடன் சுற்றும் இந்திய உயர் அதிகாரிகள் உண்டு. இதன் மூலம்தான் அரசு ரகசியங்கள் 'லீக்' ஆவதாக பலமான பேச்சு உண்டு.

அமெரிக்காவில் ஒரு பெரிய நகரத்தில் வேலை செய்த இந்தியச் செய்தி நிறுவனத்தின் தலைமை நிருபர், பல ஆண்டுகளாக பாகிஸ்தானின் உளவாளியாக இருந்தார். பிளவுபடாத பாகிஸ்தானில் சுதந்திரத்துக்கு முன்பு பிறந்த அவர், தன்னை பாகிஸ்தானி என்றே சக நிருபர்களிடம் கூறி வருவார். இந்திய அமைச்சர்கள் இங்கு வரும்போது சென்சிட்டிவ்வான கேள்விகளுக்குப் பதில் பெற்று அந்த டேப்பை அப்படியே அருகில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் சேர்ப்பித்துவிடுவார். அவர் இறக்கும் வரை தன்னை மாற்றிக்கொள்ளவே இல்லை. காரணம், அரசியல் பிரஷர்தான். இவருக்கு பாகிஸ்தான் அரசியல்வாதிகள் அனைவரும் நல்ல நண்பர்கள்!'' என்று முடித்தனர்.

'தாய் மண்ணே வணக்கம்' என்று நல்ல நாட்டுப் பற்றுடன் இருப்பவர்களை சரியாக அலசித் தேர்ந்தெடுத்து, வெளிநாட்டு தூதரகங்களுக்கு அனுப்புவதுதான் இத்தகைய பிரச்னைகளுக்கு எல்லாம் ஒரே தீர்வு!

மாதுரி மர்மங்கள்!

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் இந்தியத் தூதரகத்தில் இரண்டாம் நிலைச் செயலாளராகப் பணியாற்றும் 53 வயதான மாதுரி குப்தாவை இந்தியப் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்திருக்கிறார்கள். பாகிஸ்தான் உளவு அமைப்புகளுக்கு இந்தியாவின் சில ரகசியங்களை இவர் சொன்னார் என்பதுதான் குற்றச்சாட்டு. 'பிரதமர் கலந்துகொள்ளப் போகும் சார்க் மாநாட்டுக்கு மொழிபெயர்ப்பாளராகச் செல்லவேண்டும்' என்று சொல்லி, பாகிஸ்தானில் இருந்து வரவழைக்கப்பட்டு... மாதுரி கைது செய்யப்பட்டார்!

மாதுரியை விசாரித்துவரும் புலனாய்வுத் துறை வட்டாரத்தில், ''இந்தியத் தூதரகத்தில் இருந்து அனுப்பப்படும் இ-மெயில்கள், தொலைத் தொடர்புகள், பேச்சுகள் மட்டுமின்றி தனக்குச் சம்பந்தமே இல்லாத சில விஷயங்களிலும் மாதுரி விவரங்கள் கேட்டுக்கொண்டு இருந்தார். இதனால், 'ஐ.பி.' மற்றும் 'ரா' உளவு அமைப்புகளுக்குச் சந்தேகங்கள் வந்தன. அதைத் தொடர்ந்து, பல மாதங்களாகக் கண்காணிக்கப்பட்டு, இறுதியில் பிடிபட்டுள்ளார். டெல்லி வீட்டில் இருந்த கம்ப்யூட்டர், லேப்டாப், பாகிஸ்தானில் வீடு மற்றும் அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர்கள் போன்றவற்றைக் கொண்டுவந்து சோதனை நடத்தியதில், இவரது உளவுப் பணிகள் குறித்து பல தகவல்கள் கிடைத்துள்ளன.

மாதுரியிடம் 'தி டான்' என்கிற ஆங்கிலப் பத்திரிகையின் செய்தியாளர், பாகிஸ்தான் உள்நாட்டு உளவு அமைப்பான ஐ.பி-யின் டெபுடி இயக்குநர் ராணாவை அறிமுகப்படுத்தினார். 56 வயது ராணாவுக்கும் மாதுரிக்கும் ரகசிய உறவு இருந்திருக்கிறது. இருவரும் இஸ்லாமாபாத்தில் ரகசிய இடங்களில் சந்திப்பது உண்டு. ராணா மூலமாகத்தான் மாதுரி உளவு சொல்லியுள்ளார். 'இவருடைய உளவுத் தகவலையட்டி காபூலில் உள்ள இந்தியத் தூதரகம் தாக்கப்பட்டது' என்றும், 'மும்பைத் தாக்குதல் சம்பவங்கள்கூட அந்த உளவால் இருக்கலாம்' என்றும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. இதைப்பற்றியும் தீர விசாரித்து வருகிறோம். இதில் உண்மை இருந்தால்... மாதுரியை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்வோம். இப்போது, அலுவலக ரகசியத் திருட்டுக்காக மட்டுமே கைது செய்து விசாரிக்கிறோம். பாகிஸ்தான் உளவாளிகளுக்கு அவர் இப்படிப்பட்ட தகவல்கள் சொல்வது, இந்திய அதிகாரிகளின் உயிருக்கே ஆபத்தானது. விசாரணை தொடர்கிறது!'' என்று முடித்தனர்.

''மாதுரி குப்தாவின் பழக்கவழக்கங்கள் எல்லாம் இங்கிருந்தபோதே வெளியுறவுத் துறையினருக்குத் தெரிந்திருக்குமே? அப்படி இருக்க, பயங்கரவாதத்தைத் தூண்டிவிடும் எதிரி நாட்டில் இவர் எப்படி நியமனம் செய்யப்பட்டார்?'' என்றும் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். பதில் என்ன?


இன்னும் சில அதிர்ச்சிகள்!

கடந்த 2008-ம் ஆண்டு ரஷ்யாவில் பணியாற்றிய கடற்படை உயர் அதிகாரி சுக்கிந்தர் சிங், ரஷ்ய அழகியிடம் காதல்கொண்டு மாஸ்கோவின் இந்தியத் தூதரகத்தை காமக் களியாட்டக் கட்டடம் ஆக்கினார். ரஷ்யாவில் இருந்து விமானம் தாங்கி போர்க் கப்பலான 'அட்மிரல் கோர்ஷ்கோவ்' வாங்கும் பொறுப்பை இவருக்கு இந்திய அரசு கொடுத்தது. அவரோ அதைத் தவறாகப் பயன்படுத்தி, அந்த அழகியுடன் இருந்த 'நித்தியானந்தா ஸ்டைல்' நிர்வாணப் புகைப்படங்கள் வெளியில் வர... மானம் போனது. போர்க் கப்பல் வாங்கியதில் ஏகப்பட்ட பண விரயம்; கூடவே கடற்படை ரகசியங்களும் அவுட்!

மன்மோகன் ஷர்மா, சீனத் தலைநகரில் இந்திய தூதரகத்தின் அதிகாரி. 'ரா'வில் இருந்து பிரத்தியேகமாக உளவு பார்க்க அனுப்பிவைக்கப்பட்டவர். 'சீன மொழி படிக்கிறேன்' என்று பெய்ஜிங் அழகியிடம் சரணடைந்தார். இந்திய ரகசியங்கள் எல்லாம் இரண்டாவது 'பெக்'கில் வெளியேறின. சீன அரசால் பிரத்தியேகமாக அனுப்பப்பட்ட இந்தப் பெண், லகுவாகப் பிடித்த மீன் - ஷர்மா. இந்தியா தூங்கி எழுந்து அவரைத் திரும்ப அழைப்பதற்குள், பல ரகசியங்கள் அந்தப் பெண்ணின் மடியில்!

2007-ம் ஆண்டு ஹாங்காங்கில் இந்திய தூதரகத்தில் பணியாற்றிய ரவி நாயர், சீன உளவுத் துறையின் பெண்ணிடம் அம்பேல். பல ரகசியங்கள் கைமாறின. நாயரை அவசரமாக கொழும்புக்கு மாற்றினார்கள்!

உலகின் பல நாடுகளைக் கண்காணிக்கும் 'ரா' அமைப்பில் இருந்த ரபீந்தர் சிங் என்பவர், அமெரிக்க உளவாளியாகச் செயல்பட்டார். அமெரிக்காவைக் கண்காணிக்கும் பொறுப்பில் இருந்தவர் 'டாலருக்கு' விலை போனார். இவர் மூலம் பல மிக முக்கியத் தகவல்கள் லீக் ஆகின. தாம் கண்காணிக்கப்படுவதை உணர்ந்த சிங், 2004-ம் ஆண்டு நேபாளம் வழியாக அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்றார். இன்று வரை அவரை நாடு கடத்தக் கேட்டும் அமெரிக்கா அசைந்து கொடுக்கவில்லை!

இந்திய பிரதமரின் அலுவலகத்திலேயே சி.ஐ.ஏ. உளவாளிகள் தைரியமாக வலம் வந்தனர். பிரதமராக இருந்த வாஜ்பாய் அணு ஆயுத சோதனை செய்ய இரண்டு முறை குறித்த தேதியும் அமெரிக்காவுக்குத் தெரிந்துபோனது!

பாகிஸ்தானில் 1990-களில் பணியாற்றிய இந்தியக் கடற்படை அதிகாரி ஒருவரது சபலத்தை அறிந்து, பாகிஸ்தான் அரசு பல அழகிய பெண்களை சப்ளை செய்து, வளைத்துப் போட்டது. தன் போஸ்ட்டிங் முடிந்து டெல்லி திரும்பிய பிறகும் அவருக்கு பிளாக்மெயில் வரவே... பதவியை ராஜினாமா செய்து ஓடிவிட்டார்!


நன்றி விகடன்

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites