கற்புக்கு வந்த சோதனை!

01 May 2010 ·

கற்புக்கு வந்த சோதனை!


டிகை குஷ்பு மீது தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட 22 வழக்குகளை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது. 'கற்பு குறித்து அவர் சொன்ன கருத்துகள், தவறானவை அல்ல!' என்று அந்தத் தீர்ப்பு உறுதிப்படுத்தி உள்ளது. பேச்சு சுதந்திரத்துக்கான வெற்றி என்று இதை பலரும் வரவேற்கிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் குஷ்பு கூறியிருந்த கருத்துகள், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. பல்வேறு அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டங்களிலும், போராட்டங்களிலும் ஈடுபட்டன. சிலர் தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் உள்ள நீதிமன்றங்களில் அவர் மீது வழக்கு தொடுத்தார்கள். 'அவை எல்லாம் தன் அடிப் படை உரிமையைப் பறித் தவையாக

இருக்கின்றன... அவற்றை ரத்து செய்ய வேண்டும்' என்று கேட்டு உச்ச நீதிமன்றத்தில் குஷ்பு முறையீடு செய்திருந்தார். அதை யட்டி அவர் வழக்குகள் மீதான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இப்போது, குஷ்பு தொடுத்த வழக்கில் இறுதித் தீர்ப்பு வந்துள்ளதுவயது வந்த ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதை இந்தியாவில் எந்தச் சட்டமும்தடை செய்யவில்லை!' என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தமது தீர்ப்பில் கூறியுள் ளனர். தன் மீது தொடுக்கப்பட்ட வழக்குகள் தனது அடிப் படை உரிமைகளில் ஒன்றான பேச்சு சுதந்திரத்தைப் பறிப் பதாக உள்ளது என்று குஷ்பு கூறிய வாதத்தை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர். இறுதித் தீர்ப்பை வழங்குவதற்கு முன்னால், கடந்த மாதத்தில் இந்த வழக்கில் சில கருத்துகளை நீதிபதிகள் தெரிவித்தனர். இந்து மதக் கடவுளர்களும்கூட திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்த கதைகளை நீதிபதிகள் அப்போது சுட்டிக்காட்டினர். இந்துத்துவ அமைப்புகள் சில, இந்துக் கடவுள்களை அவமதித்துவிட்டதாகக் குற்றம் சாட்டி உச்ச நீதிமன்றத்துக்கு ஆயிரக்கணக்கான கண்டனத் தந்திகளை அனுப்பும்படி பிரசாரம் செய்தன. இத்தகைய அச்சுறுத்தல்களையும் மீறி உச்ச நீதிமன்றம் இப்போது தீர்ப்பு அளித்துள்ளது. குஷ்புவுக்கு ஆறுதல் தந்த தீர்ப்பு இது என்பதைவிடவும், இந்திய சமூகத்தில் கோலோச்சிக்கொண்டு இருக்கும் பழைமை வாய்ந்த கருத்துகளுக்கு எதிரானதாக இந்தத் தீர்ப்பு அமைந்திருக் கிறது.

பொருளாதாரத் தளத்தில் இந்தியா காணும் வளர்ச்சி யைப் பண்பாட்டுத் தளத்தில் பின்னோக்கி இழுத்து தடைப்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள் சிலர். பிற்போக்குத்தனத்தை அரசியலாகக்கொண்ட அவர்கள், பண்பாட்டுத் தளத்தில்தான் அதிகம் செயல்படுகிறார்கள். இந்திய சமூகம் வளர்ச்சி அடையவில்லை என்று சொல் லாமல் சொல்வதாகவே அவர்களது நடவடிக்கைகள் இருந்து வருகின்றன.

மதத்தின், கடவுளின் பெயர்களால் சமூகத்தில் ஓர் அச்சுறுத்தலை விதைக்கும் அடிப்படைவாத சக்திகள், அரசியல் லாபத்துக்காக எதையும் செய்யலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். வாழ்வின் சகல கூறுகளையும் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே அவர்களது எண்ணம். இத்தகைய பிற்போக்குச் சக்திகள் முன்வைக்கும் கருத்துகளை சமூகம் ஏற்றுக் கொள்ளவில்லை என்றபோதிலும், தமது மறுப்பைக் காட்டுவதற்கு மக்களுக்கு வழி எதுவும் இல்லாத நிலையில் அடிப்படைவாத சக்தியின் கை ஓங்கி இருப்பதுபோலவே தோன்றுகிறது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தமது வாதத்தை நியாயப்படுத்த இந்துக் கடவுளரின் கதைகளில் இருந்து உதாரணத்தை எடுத்துச்சொல்லி இருக்கிறார்கள். இந்து மதத்தில் எல்லாவற்றுக்குமே உதாரணங்களை எடுத்துச் சொல்ல முடியும். பாலியல் சுதந்திரத்துக்கு அதில் இருந்து ஏராளமான சான்றுகளை நாம் எடுத்துக்காட்ட முடியும். அதைப்போலவே, அதற்கு எதிரான நிலைப்பாட்டுக்கும் ஆதாரங்களைக் காட்டலாம். அதுதான் இந்து மதத்தின் சிறப்பு!

உலகில் உள்ள மதங்களிலேயே மிகவும் நுட்பமாகக் கட்டமைக்கப்பட்டது இந்து மதம். மேற்கத்திய நாடுகளில் 15-ம் நூற்றாண்டுக்குப் பிறகு அறிமுகமான பல கருத்தாக்கங்கள், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்து மதத்தில் அடிப்படை ஆதாரங்களாக முன் வைக்கப்பட்டு இருக்கின்றன. வாழ்வின் எந்த அம்சத்தைப் பற்றியும் இனிமேல் மிகையாக எதுவும் சொல்லிவிட முடியாது என்கிற அளவுக்கு பல விஷயங்கள் சாஸ்திரங்களிலும் புராணங்களிலும் உள்ளன. வாழ்வின் அடிப்படை நோக்கமாக மூன்று விஷயங்களை இந்து மதம் வரையறுத்து இருக்கிறது. தர்மம், அர்த்தம் மற்றும் காமம். இவற்றை விரிவாக எடுத்துரைக்கக்கூடிய சாஸ்திரங்களும் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இருந்து கி.பி. முதலாம் நூற்றாண்டுக்கு இடையில் உருவாக்கப்பட்டவை என்று கருதப்படுகிற தர்ம சூத்திரங்கள்தான், தர்மம் குறித்த தொன்மையான ஆவணங்களாகக் கருதப்படுகின்றன. ஆனாலும், மனுதர்ம சாஸ்திரம்தான் இதில் உச்சபட்ச வரையறையாகக் கருதப்படுகிறது. பல நூறு ஆண்டுகளாக இந்திய சமூகத்தின் கருத்தியலை மனுதர்ம சாஸ்திரம் மேலாதிக்கம் செய்து வருகிறது என்பதை நாம் அறிவோம். அது ஒருவரால் எழுதப்பட்டதா, பலரால் எழுதப்பட்டதன் தொகுப்பா என்பதில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அதில் தெரிவிக்கப்பட்டுள்ள பல்வேறு விஷயங்கள் இன்று வரை சமூகத்தால் பின்பற்றப்பட்டு வருகின்றன.

அர்த்தம் என்பது ஆட்சி மற்றும் நிர்வாகம் தொடர்பான விஷயங்களைப்பற்றியது. சந்திரகுப்த மௌரியரின் அரண்மனையில் அமைச்சராக இருந்த கௌடில்யர் என்பவரால், கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வாக்கில் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் அர்த்த சாஸ்திரம், இது தொடர்பான அடிப்படை ஆவணமாகக் கருதப்படுகிறது. அரசர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைப்பற்றிய அறிவுரைகளும் ஆலோசனைகளும் குறிப்பிடப்பட்டுள்ள அர்த்த சாஸ்திரம், இன்றைய மக்க ளாட்சிக் காலத்திலும்கூட பயன்படக்கூடியது. அதில் சொல்லப்பட்டுள்ள தந்திரங் களும் யுக்திகளும் இன்றைய ஆட்சியாளர்களும் கையாளக் கூடியவையாக இருக்கின்றன.

வாத்ஸ்யாயனா மல்லநாகா என்பவரால் எழுதப்பட்ட காம சூத்ரா என்பதே காமம் என்ற தத்துவத்துக்கு அடிப் படை ஆவணம். அது, உடல் இன்பம் தொடர்பான விஷயங்களை மட்டும் பேசவில்லை. வாழ்வின் பல்வேறு கூறுகளையும் அலசி ஆராய்கிறது. இந்த மூன்று அடிப்படை கருத்தாக்கங்களில் முதன்மையானதாக தர்மம் என்பது வைக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று சாஸ்திரங்களும் பல்வேறு விஷயங்களைப்பற்றி வேறுபட்ட கருத்துகளைப் பேசுவதாக இருந்த போதிலும், தமக்குள் உள்ளார்ந்த தொடர்புகொண்டவையாகவும் இருக் கின்றன. எல்லாவற்றையும் துறந்த துறவிகளுக்கு தர்ம சாஸ்திரம் மதிப்பு கொடுக்கிறது. ஆனால், ஏனைய இரண்டு சாஸ்திரங்கள் அவர்களுக்கு அத்தகைய மதிப்பை வழங்குவதில்லை.

காமம் என்பதைப் பொறுத்த வரை அதை தமது வாரிசுகளை உருவாக்குகின்ற தர்மத்தைப் பின்பற்றுவதற்காகவும், அதிகாரத்தை அடைவதற்காகவும், இன்பத்தை நுகர்வதற்காகவும் பயன் படுத்தலாம் என்று காம சூத்ரா சொல் கிறது. ஆனால், அதற்கு மாறுபட்ட கருத்துகளும் சொல்லப்பட்டு இருக் கின்றன. ஒருவர் அர்த்தா எனப்படும் அதிகாரத்தைப் பயன்படுத்தி காமத்தை அடையக் கூடாது. அதுபோலவே, தர்மத்துக்காகவும் அதை பயன்படுத்தக் கூடாது என்பதுபோன்ற கருத்துகள் அஸ்வகோஷர் என்பவரால் கூறப் பட்டுள்ளன. இன்னும் ஏராளமான இலக்கியப் பிரதிகளையும் நாம் எடுத்துக் காட்டுகளாக அடுக்க முடியும்.

ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவைப்பற்றி, அவர்கள் எவ்வாறு தமது இல்லற வாழ்க்கையை அமைத்துக்கொள்வது என்பதுபற்றி ஏராளமான விஷயங்கள் நமது சாஸ்திரங்களிலும், வேதங்களிலும், புராணங்களிலும், இலக்கியங்களிலும் பேசப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில் பார்த்தால் குஷ்பு சொன்ன கருத்துகள் மிகமிகச் சாதாரணமானவை.

இந்து மதப் புராணங்களில் மட்டு மின்றி, தமிழ் இலக்கியப் பிரதிகளிலும் எத்தனையோ சான்றுகளை நாம் எடுத்துக்காட்டலாம். கற்பு என்ற சொல்லை நாம் ஒரே பொருளில் கையாளுவதில்லை. அது பல்வேறு விதமாகப் புரிந்துகொள்ளப்பட்டு இருக்கிறது. தமிழ் இலக்கியங்களில் அது கல்வி, தியானம், இல்லறம் என்று பல பொருள்களில் கையாளப்பட்டுள்ளது. பதிற்றுப்பத்து என்னும் சங்க இலக்கியத்தில், 'உலகந்தாங்கிய மேம்படு கற்பின்' என்று சொல்லப்படும் இடத்தில் அது கல்வி என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. திருவிளையாடல் புராணத்தில் 'பல புவனமும், நின்பாற் கற்புவைத்துய்ய' என்று பாடப்பட்டுள்ளது. இங்கே கற்பு என்பது தியானம் என்ற பொருள். முடிவு செய்துகொள்ளுதல் என்ற பொருளிலும்கூட அது கையாளப் பட்டுள்ளது. கம்பராமாயணத்தில் அது பெண்ணின் கௌரவத்தோடு தொடர்பு படுத்தப்படுகிறது. 'கொன்றானோ கற்பழியா குலமகளை' என்று கூறப் பட்டுள்ள இடத்தில் அதை நாம் உணர லாம். 'களவு கூட்டத்துக்குப் பின் தலை வன் தலைவியை விதிப்படி மணந்து இல்லறம் புரியும் ஒழுக்கம்' என்று தமிழ்ப் பேரகராதி இதற்கு விளக்கம் அளிக்கிறது. இந்த விளக்கத்தின்படி, திருமணம் என்ற சடங்குக்கு முன்பாகவே தலைவனும் தலைவியும் கூடி வாழ்வது தமிழ் சமூகத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்றாக இருந்துள்ளது என்பதையும், அதன் பிறகு திருமணம் செய்துகொண்டு வாழ்வதைத்தான் கற்பு என அவர்கள் குறித்துள்ளனர் என்பதையும் நாம் விளங்கிக்கொள்ளலாம். சட்டரீதியாகப் பயன்படுத்தும்போது அதற்கு மாறுபட்ட ஒரு பொருள் உண்டாகிறது. அங்கு அது, உடலுறவு என்பதோடு நேரடியாக சம்பந்தப்படுத்தப்படுகிறது.

குஷ்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வைத்துத்தான் இதுபோன்ற விஷயங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை. ஆனால், இன்று வாழ்வின் அனைத்து விஷயங்களுக்கும் நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

நீதிமன்றங்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக இதுபோன்ற விஷயங்களைக் கையில் எடுப்பது மக்களுக்குக் கேடாகவே முடியும். இதை குஷ்பு மட்டுமல்ல... அவர் மீது வழக்கு தொடுத்தவர்களும் புரிந்து கொள்வது நல்லது. ஊடகங்களும் இத்தகைய பிரச்னைகளுக்கு தேவையற்ற விளம்பரங்களைத் தந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பாமல் சமூகத்துக்கு அவசியமான விஷயங்களை நோக்கி தமது அக்கறையைக் குவிக்க வேண்டும்!

நன்றி விகடன்




0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites