யாழ்ப்பாணப் பயணம் ரத்து - தமிழக சின்னத்திரை கலைஞர்கள் முடிவு..!

05 May 2010 ·

யாழ்ப்பாணப் பயணம் ரத்து - தமிழக சின்னத்திரை கலைஞர்கள் முடிவு..!

தமிழக சின்னத்திரை கலைஞர்கள் வன்னி அழிப்பின் ஓராண்டு நினைவுக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதை ரத்து செய்துவிட்டதாக அறிவித்துள்ளார்கள்.

வன்னி அழிப்பின் ஓராண்டினையொட்டி அதைக் கொண்டாடுவதற்காக மிகப் பெரும் விழாக்களை ஏற்பாடு செய்து வரும் சிங்கள அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை இதன் பொருட்டு ஏற்பாடு செய்துள்ளது.

வரும் மே 18-ம் தேதியன்று நாடெங்கும் வெற்றிக் கொண்டாட்டங்கள் நடைபெற வேண்டும் என்று பாதுகாப்புத் துறைச் செயலர் கோத்தபய ராஜபக்‌ஷே உத்தரவிட்டுள்ளார். அதன் விளைவாக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இருந்து சின்னத்திரை நட்சத்திரங்கள் சிலர் இந்தக் கொண்டாட்டத்தில் கலை நிகழ்ச்சி நடத்த ஒத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் நிஷா, வெங்கட், தேவ், சுஹாசினி, நீபா, சுரேஸ்வர், ஸ்ரீ, நிசா, மகாலஷ்மி என்று சில கலைஞர்கள் ‘ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்’ என்கிற தலைப்பில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். நிகழ்ச்சிகளுக்கான ரிகர்சலும் சென்னையில் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில் நேற்றுதான் தமிழகச் சின்னத்திரைக் கலைஞர்கள் யாழ்ப்பாணம், வவுனியா வருகின்றனர் என்ற செய்தி வெளியானதைத் தொடர்ந்து தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ஏற்கெனவே இலங்கையில் ஜூன் மாதம் நடக்கவுள்ள இந்திய அளவிலான திரைப்பட விழாவை அமிதாப்பச்சன் முன்னின்று நடத்தப் போகிறார் என்ற தகவல் கிடைத்தே அவர் வீட்டு முன்பாகவே பெரும் போராட்டம் நடத்தி அந்த நிகழ்வையே இப்போது கேள்விக்குறியாக்கியிருக்கின்றன தமிழர் அமைப்புகள்.

அதோடு தமிழ்த் திரைப்படத் துறையின் உச்ச நட்சத்திரங்களான ரஜினி, கமல், உள்ளிட்ட பலரும் தங்களுக்கு வந்த அழைப்பினை நிராகரித்திருப்பதும் தெரிந்த விஷயமே.

இந்த நேரத்தில் தமிழக சின்னத்திரைக் கலைஞர்களின் இந்த ‘ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம்’ பற்றி செய்தி கேட்டு பல அமைப்பினரும் டென்ஷனாகிவிட்டார்கள். விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் இதனைக் கண்டித்து அறிக்கையே விட்டிருந்தார்.
“தமிழ் மக்கள் தமது உயிர்களை பல்லாயிரக்கணக்கில் பறி கொடுத்த வடக்கு மண்ணில் அந்த பலி கொடுப்பின் ஓராண்டு நிறைவு நடக்கும் அதே மாதத்தில் சிங்கள அரசு மேற்கொள்ளும் கேளிக்கை நிகழ்வில் பங்குகொள்ள தமிழகத்தில் இருந்து சின்னத்திரை நட்சத்திரங்கள் நிகழ்ச்சி நடத்த செல்ல இருப்பது தமிழர்கள் அனைவரது மனதிலும் வேதனையைத் தோற்றுவிக்கிறது.

தமிழனாய் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும்படியும், இன அழிப்பில் நடைபெறும் இந்த வெற்றிக் கொண்டாட்டங்களைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதன் பின்பு சர்ச்சைகள் பல திசைகளில் இருந்தும் எழுவதை உணர்ந்த சின்னத்திரைக் கலைஞர்கள் கூட்டமைப்பு அந்தக் கலைஞர்களுடன் பேச்சு நடத்தி அந்த விழாவுக்குச் செல்வதை தடுத்து நிறுத்தியுள்ளது.

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites