ரூ.100 கோடியில் தடுப்பணைகள் கட்டப்படும்!: சட்டசபையில் கருணாநிதி அறிவிப்பு

19 April 2010 ·


தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டத்தினை உயர்த்தும் பொருட்டு, இந்த ஆண்டில் 100 கோடி ரூபாய்ச் செலவில் தடுப்பணைகள் கட்டப்படும் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.

தமிழக சட்டமன்றத்தில், பொதுப்பணித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அத்துறையின் பொறுப்பை வகிக்கும் முதலமைச்சர் கருணாநிதி நேற்று அளித்த பதிலுரையில் கூறியதாவது:-

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த இலக்கியங்களாலும், கட்டுமான அமைப்புகளாலும் நீர்வளத்தில் அக்காலத்திலேயே தமிழகத்தில் ஒரு தெளிவு இருந்தமையை உணர முடிகிறது. இன்றைய நிலையில் தமிழகத்தின் நீர்வளம் தமிழகத்தைச் சுற்றியுள்ள அண்டை மாநிலங்களோடு ஒப்பிடும்போதும், உறுப்பினர்கள் இங்கு குறிப்பிட்டதைப்போலவே, ஒரு பற்றாக்குறை மாநிலமாகவே இருப்பதை அனைவரும் அறிவர். இன்று, தமிழகத்தின் நீர்வளம் இந்தியாவின் நீர்வளத்தில் 2 சதவீதம்-இரண்டே இரண்டு சதவிகிதம்தான். மக்கள் தொகை ஆறரை சதவீதம். இதன் காரணமாக ஓர் இந்தியக் குடிமகனுக்குக் கிடைக்கும் நீரில் மூன்றில் ஒரு பாகம்தான் தமிழகத்தில் வாழும் ஒருவருக்கு இப்போது கிடைக்கிறது.

எதிர்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக உலகெங்கும் பிரச்சினைகள் மிகப்பெரிய அளவில் உருவெடுக்கும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை செய்து வருகின்றார்கள். இந்நிலையில், நீர் வளத்தைச் செம்மையாகக் கையாள்வதற்கும், பருவ மழை காலங்களில் கிடைக்கும் நீரையும் உரிய முறையில் சேமிப்பதற்கும் தகுந்த திட்டங்களையும், நடைமுறைகளையும் வகுக்க வேண்டும். வகுக்கப்படும் திட்டங்களின் அடிப்படையில் மக்கள் அவற்றைப் பின்பற்றி வருங்காலச் சமுதாயத்திற்குக் காத்துத் தந்திட வேண்டும்.

தமிழ்நாடு இந்திய தீபகற்பத்தின் கடைக்கோடி மாநிலம். தமிழகத்தில் பாயும் முக்கியமான ஆறுகள் அண்டை மாநிலங்களில் உற்பத்தியாவதால் நீர் வரத்தும் அண்டை மாநிலங்களையே சார்ந்ததாக உள்ளது. மாநிலத்தின் மேற்பரப்பு நீர் ஆதாரம் 853 டி.எம்.சி. எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அந்த 853 டி.எம்.சி.-யில் தமிழகத்துக்கு கிடைப்பது 592 டி.எம்.சி. மட்டுமே. எஞ்சிய 261 டி.எம்.சி. நீரை; கர்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகும் காவிரியிலிருந்தும், கேரளாவிலே பரம்பிக்குளம் ஆழியாறு, பெரியாறு வைகை ஆகியவற்றிலிருந்தும், ஆந்திர மாநிலத்திலே கொசஸ்தலையாற்றிலிருந்தும் பெறப்படுகின்றன.

2006-ல் பொறுப்பேற்றபின் இந்த அரசின் சார்பில் - பாசனத் திட்டங்களுக்கு மிகுந்த முன்னுரிமையளித்து வருகிறோம். செயற்கை முறையில் நிலத்தடி நீர்ச் செறிவினை உறுதி செய்திட அரசு மேற்கொண்ட முடிவின்படி, கடந்த இரண்டு ஆண்டுகளில் 550 கோடி ரூபாய் செலவில் 1859 இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டு; அதன்மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது என்பது நிலத்தடி நீர்ப் பிரிவின் ஆய்வுமூலம் தெரிய வந்துள்ளது. எனவே, இந்த ஆண்டும் 100 கோடி ரூபாய்ச் செலவில் தடுப்பணைகள் கட்டப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

காவிரி டெல்டா விவசாயிகள் பயன்பெறும் வகையில், குறிப்பாக, கடைமடைப் பகுதிகளிலும் காவிரிநீர் சென்று பாய்ந்து பாசனம் சிறப்பாக நடைபெறுவதை உறுதி செய்யும் பொருட்டு, சிற்றாறுகள், வாய்க்கால்கள், வடிகால்கள் ஆகியவற்றில் தூர்வாரும் பணிகளை நிறைவேற்றிட 12 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் அனைத்தும் செம்மையாக நிறைவேற்றப்பட்டு, அடுத்த மாதத்திற்குள் இந்த தூர் வாரும் பணிகள் முடிவடையும்.

வெள்ளக் காலங்களில் காவிரியில் வரும் உபரிநீரைத் தேக்கி வைக்க மேட்டூர்அணைக்குக் கீழே கல்லணையைத் தவிர வேறு அணையும் எதுவும் இல்லாத குறையைப் போக்கும் எண்ணத்தோடு, கரூர் மாவட்டம், மாயனூர் கிராமத்தில் காவிரியின் குறுக்கே அமைந்துள்ள கட்டளைப் படுகை அணையைத் தரம் உயர்த்தி கதவணையாக அமைக்கும் திட்டம் 189 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது 2011-ம் ஆண்டு பிப்ரவரியில் நிறைவுறும்.

இவ்வாறு கருணாநிதி பேசினார்.

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil