ஓரினப் பேராசிரியரின் மர்ம மரணம் விஷமா? விசனமா?

19 April 2010 ·




ரி
க்ஷாக்காரருடன் ஹோமோ செக்ஸ் வைத்துக் கொண்டிருந்ததாக அலிகர் முஸ்லிம் பல்கலை கழகத்தில் சஸ்பெண்டான பேராசிரியர் ஸ்ரீனிவாச ராமச்சந்திரா சிராஸ் பற்றி கடந்த 3.3.2010-ம் தேதியிட்ட ஜூ.வி. இதழில் எழுதியிருந்தோம். தற்போது, சிராஸ் தன் படுக்கையில் மர்மமான முறையில், உடலெங்கும் கொப்புளங்களுடன் இறந்து கிடக்க... இந்த விவகாரம், மீண்டும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது!

சிராஸ், பல்கலைக்கழக வளாகத்தின் ஆசிரியர் குடியிருப்பில் தங்கியிருந்தபோது, கடந்த பிப்ரவரி 9-ம் தேதி அங்கே ஒரு ரிக்ஷாக்காரருடன் உடலுறவில் ஈடுபட்டிருந்திருக்கிறார். இதை, 'வாய்ஸ் ஆஃப் நேஷன்' எனும் இந்தி சேனலின் நிருபர்கள் குழு, ரகசியமாகப் படமாக்கியதைத் தொடர்ந்துதான் அவர் சஸ்பெண்ட் ஆனார்.

சிராஸுக்கு ஆதரவாக ஹோமோ செக்ஸ் சேர்க்கை நலனுக்காக உதவும் 'நாஜ் ஃபௌண்டேஷன்' மற்றும் 'சஹேலி' உட்பட பல அமைப்புகள் குரல் கொடுத்தன. இதனால், உற்சாகமடைந்த சிராஸ், தம் வீட்டில் பலவந்தமாகப் புகுந்ததாக மீடியா



மற்றும் நிர்வாகத்தினர் உட்பட ஏழு பேர் மீது போலீஸில் புகார் அளிக்க... போலீஸார் இதை பதிவு செய்யாமல் கிடப்பில் போட்டனர். அடுத்து சிராஸ், மாவட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒரு மனு அளித்தார். அதுவும் காத்திருப்பு பட்டியலில் சேர்ந்தது. எனவே, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில், விசாரணையின்றி செய்யப்பட்ட தனது சஸ்பெண்டை ரத்து செய்ய உத்தரவிடவேண்டும் என மனு அளிக்க...
அதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளித்ததுடன், சிராசின் சஸ்பெண்டை நீக்கும்படி பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவின் நகல் கடந்த 5-ம் தேதி பல்கலைக்கழக நிர்வாகத்திடம் அளிக்கப்பட்டும், சஸ்பெண்ட் நீக்கப்படவில்லை. இதனால் மனம் நொந்திருந்த சிராஸ், கடந்த 7-ம் தேதி வீட்டில் பிணமாகக்கிடந்தார்.

''சிராஸின் போஸ்ட்மார்ட்டத்தில் இயற்கையான மரணமல்ல என தெரியவந்துள்ளது. உடலின் வயிற்று பாகங்கள் ஆக்ராவின் லேப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில், ஒருவேளை அவர் விஷம் கலந்த உணவை சாப்பிட்டுத் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது யாராவது கொடுத்துக் கொலை செய்தார்களா என்பது தெரியவரும்...'' என சொல்கிறார், அலிகர் நகர காவல் துறைக் கண்காணிப்பாளர் மான்சிங் சௌகான்.

''தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கோழையல்ல எனது சகோதரர் சிராஸ். அவரது சாவில் பெரிய மர்மம் அடங்கியிருக்கிறது. போலீஸார் தீவிரமாக விசாரிக்கவேண்டும்!'' என்று குரல் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார், சிராஸின் சகோதரர்சஞ்சீவ்.

மணமான சில மாதங்களிலேயே விவாகரத்து பெற்றவர் சிராஸ். பெற்றோர் மூலமாக நாக்பூரில் கிடைத்த சொத்தின் மதிப்பு ஏழு கோடி ரூபாய் என செய்திகள் கிடைக்க... சொத்துக்காகவும் சிராஸ் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் ஒரு கருத்து நிலவுகிறது.

இதற்கிடையே, இறந்துபோன சிராஸின் சஸ்பெண்டை நீக்கியப் பல்கலைக்கழகம், அவரை மீண்டும் பணியில் சேரும்படிக் கூறிய உத்தரவை நவீன இந்திய மொழிகள் துறைக்கு அனுப்பியது. இந்தக் கடிதத்தை அதன் தற்காலிகத் தலைவர் பேராசிரியர் ஷேக் மஸ்தான், மீடியா முன்பாக பிரித்துப் படித்தார். அந்தக் கடிதம் சிராஸ் உயிருடன் இருந்த 5-ம் தேதியிடப்பட்டிருந்தது. ஆனால், அதை தாமதமாக 8-ம் தேதி அனுப்பப் பட்டிருப்பதும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. இது குறித்து, அதன் துணை வேந்தர் பேராசிரியர் பி.கே.அப்துல் அஜீஸ், ''அவரது சஸ்பெண்டை ரத்து செய்யும்படி அலகாபாத் நீதிமன்றம் போட்ட உத்தரவு கிடைத்த தினமே அதை அமல்படுத்திக் கடிதம் அனுப்பிவிட்டேன். அது எப்படி இவ்வளவு தாமதமாகப் போனது என விசாரணை நடத்துவேன்...'' என்றார்.

இதேபோன்ற நிலை அலிகர் மாவட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், சிராஸ் உயிருடன் இருந்தபோது அளித்த மனுவைக் கடந்த 5-ம் தேதி விசாரித்த நீதிமன்றம், அதில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று மீடியா உட்பட ஏழு பேர் மீதும் உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த போலீஸுக்கு உத்தரவிட்டது. 9-ம் தேதி அதைப் பெற்ற போலீஸார்

எஃப்.ஐ.ஆர். பதிவுசெய்து விசாரணையைத் தொடங்க... கடந்த 11-ம் தேதி இரவு மேலும் ஒரு புதிய திருப்பம்! காணாமல் போயிருந்த 35 வயது ரிக்ஷாக்காரர் போலீஸில் ஆஜராகி, ''நான் ரிக்ஷா ஓட்டி குடும்பத்தை காப்பாற்றி வந்தபோது, சிராஸை சந்தித்தேன். எனது வண்டியிலேயே ரெகுலர் சவாரி செய்தவர், உடலுறவுக்கு அழைத்தார். நான் மறுத்தபோது, என் மீது திருட்டுக் குற்றம்சுமத்தி போலீஸில் பிடித்துக் கொடுத்து விடுவதாக மிரட்ட... பலவந்தமாக நான் அவருடன் கடந்த ஆறு மாதங்களாக உடலுறவில் ஈடுபட்டேன்!'' என பரபரப்பைக் கிளப்பினார்.

ஆனால், நாஜ் ஃபௌண்டேஷன் தலைவரும், உச்ச நீதிமன்றத்தில் நடந்துவரும் மேல் முறையீட்டு வழக்கின் மனுதாரருமான அஞ்சலி கோபாலன் நம்மிடம், ''அந்த ரிக்ஷாக்காரர் சிராஸ் உயிருடன் இருந்தபோது ஏன் இதை கூறவில்லை? எனவே, இதை போலீஸார் ஆழமாக விசாரிக்கவேண்டும். அடுத்து எங்களைப் போன்ற ஆதரவு அமைப்புகளும் பல்வேறு சமூக அமைப்புகளும் டெல்லியில் கூடி ஆலோசிப்போம். அதன்படி எங்கள் நடவடிக்கைகள் தொடரும்...'' என்றார்.

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites