158 மனைவிகள்!

29 April 2010 ·


சில திருமணத் துளிகள்...

செய்தி சேனல்கள் மட்டும்தான் 24 மணி நேரம் இயங்குமா? அமெரிக்காவின் நியூஆர்லியன்ஸ் மாகாணத்தில் இருக்கும் ஃபிரெஞ்ச் குவார்ட்டர் தேவாலயம் எல்லா நாட்களும் 24 மணி நேரமும் திறந்தே இருக்கும். எப்போது வந்தாலும் திருமணம் செய்துவைக்கிறார் பாதிரியார் டோனி டலவேரா. அவசர பார்ட்டிகளுக்கு ஆறுதலாக இருக்கும் டோனிக்கு ஏரியாவில் 'ரொமான்ஸ் ஃபாதர்' என்று பெயர்!

உ.பி-யைச் சேர்ந்த பிரசாந்த் - அர்ச்சனா ஜோடி ஆகாயத்தில் பறந்து பறந்து திருமணம் முடித்திருக்கிறது. தம்பதியோடு சேர்த்து பலூன் பைலட், புரோகிதர், ஒளிப்பதிவாளர் குழு எனக் கிளம்பி 100 மீட்டர் உயரத்துக்கு மேலே சென்றார்கள். சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற திருமணச் சடங்குகளைத் தரையில் இருந்த உறவினர்களுக்கு நேரடி ஒளிபரப்பு செய்தார்கள். பலூனில் பறக்க மட்டும் ஆன செலவு 80 ஆயிரம் ரூபாய்!

'தவளைக்கும் சிறுமிக்கும் கல்யாணம் செய்து வைத்தால் காலரா குணமாகும்' என்பது விழுப்புரம் மாவட்டம் பள்ளிபுதுப்பட்டு கிராமத்தின் நம்பிக்கை. சமீபத்தில் விக்னேஸ்வரி என்கிற சிறுமியைத் தேர்ந்தெடுத்து, ஆரம்பப் பள்ளி ஒன்றில் தங்கவைத்தார்கள். குளத்தில் இருந்து தவளையைப் பிடித்து வந்து, திருமணம் செய்துவைத்தார்கள். ஊர் மக்கள் கொடுத்த அன்பளிப்புகள் புவனேஸ்வரியின் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. விருந்து முடிந்ததும் தவளையை மீண்டும் அதே குளத்தில் மீண்டும் விட்டுவிட்டார்களாம். கொடுமைடா சாமி!

சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ஐந்து வயது மிகாவும், ஆறு வயது அன்னாவும் சுட்டிக் காதலர்கள். அவர்களுக்கு ஆப்பிரிக்காவுக்குச் சென்று திருமணம் செய்துகொள்ள ஆசை. ஒருநாள், வீட்டில் பெற்றோர்கள் அசந்த நேரம் பார்த்து நீச்சல் உடை, குளிர்கண்ணாடி, மிதவைகளைப் பைகளில் அடைத்துவைத்து, அன்னாவையும் அவளின் தங்கையையும் (சாட்சிக்காம்!) அழைத்துக்கொண்டு விமான நிலையம் சென்றிருக்கிறான் மிகா. பாஸ்போர்ட், விசா விவகாரங்கள் தெரியாததால் போலீஸில் மாட்டிக்கொண்டார்கள். இப்பவே இப்படியா? என்று மிரண்டுபோன போலீஸ், மூன்று பேரையும் வீட்டுக்கு அழைத்துச் சென்று பெற்றோரிடம் ஒப்படைத்தது!

அமெரிக்காவில் ஃப்ளோரிடாவில் வசிக்கும் டேவன் டிரபோஷ் என்கிற 42 வயதுப் பெண்மணி வித்தியாசமாக விளம்பரம் கொடுத்திருந்தார். 'என் வீட்டை விற்க இருக்கிறேன். நீங்கள் விருப்பப்பட்டால் என்னைத் திருமணம் செய்துகொள்ளலாம்!' நான்கு படுக்கை அறைகள், டென்னிஸ் கோர்ட், நீச்சல்குளம் எனப் பக்காவான வீட்டை நான்கு வருடங்களாக யாரும் விலைக்கு வாங்க வரவில்லை. கடைசி முயற்சியாக இப்படி விளம்பரம் கொடுத்ததில் 500 பேர் க்யூவில் காத்திருக்கிறார்கள். இப்போது யாரைத் தேர்ந்தெடுப்பது என்று அடுத்த குழப்பத்தில் இருக்கிறார் டேவன்!

ஒரு தனி மனிதன் 158 திருமணங்களைச் செய்து சந்தோஷமாக வாழ்ந்தார் என்றால் நம்ப முடிகிறதா? பெர்சியா நாட்டை சேர்ந்த ஃபாத் அலி ஷா என்ற அரசர்தான் இந்தச் சாதனைக்குச் சொந்தக்காரர். ஷாவுக்கு நிஜப் போர் என்றால் போர் அடிக்கும். எந்த எதிரி மன்னனாவது போர் தொடுக்கத் தயாரானால், வெள்ளைக் கொடியோடு ஆரவாரமாகக் கிளம்பிவிடுவார். அந்த நாட்டு இளவரசியைத் தன் மனைவியாக்கிக்கொள்வார். இப்படியே 158 பேரைத் திருமணம் செய்திருக்கிறார் ஷா. கடைசி வரை அவருக்குப் பாதி மனைவிகளின் பெயரே தெரியாதாம். 158 மனைவிகள் மூலம் 260 குழந்தைகளையும் பெற்றிருக்கிறார். அவர் இறக்கும்போது அவருக்கு இருந்த பேரக் குழந்தைகளின் எண்ணிக்கை 780.

என்ன கொடுமை சார் இது!


0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites