கே.பாலசந்தர் 25

21 April 2010 ·


மிழ் சினிமாவின் பீஷ்மர். உறவுகளுக்கு, உணர்வுகளுக்குப் புது வண்ணம் பூசிய பிதாமகன். செஞ்சுரி போட்ட சிகரம் கே.பாலசந்தரின் பெர்சனல் பக்கங்கள்.

தஞ்சைத் தரணியின் நன்னிலம் - நல்லமாங்குடி அக்ரஹாரத்தில் நமக்காகப் பிறந்தது 9, ஜுலை 1930-ல். ஆம், 80 வயது கே.பி-யின் கலையுலகப் பொது வாழ்வு அங்கே சிறு வயதில் திண்ணை நாடகங்களில்தான் ஆரம்பம்!

சென்னை ஏ.ஜி. ஆபீஸில் 12 ஆண்டுகள் பணிபுரிந்துகொண்டே, நாடகங்கள் நடத்திவந்தார். 'மேஜர் சந்திரகாந்த்' மிகப் பிரபலமான நாடகம். 'எதிர் நீச்சல்', 'நாணல்', 'விநோத ஒப்பந்தம்' போன்றவை மிகுந்த வரவேற்பைப் பெற்ற நாடகங்கள்!

கமல், ரஜினி, சிரஞ்சீவி, நாசர், பிரகாஷ்ராஜ், பூர்ணம் விஸ்வநாதன், சரத்பாபு, சார்லி, விவேக், எஸ்.பி.பி. என இவர் அறிமுகப்படுத்திய நடிகர்கள் ஏராளம். இன்னமும் இவரைக் கண்டாலே எழுந்து நின்றுவிடுவார் ரஜினி!

இதுவரை 101 படங்கள் இயக்கி இருக்கிறார். முதல் படம், 'நீர்க்குமிழி'. 'பொய்' வரை பட்டியல் நீள்கிறது!

ஆரம்ப காலத்தில் ஒண்டுக் குடித்தனம் நடத்தியது கோபாலபுரத்தில் கலைஞர் இல்லத்துக்கு அருகே, மூன்றாவது தெருவில். கலைஞரைச் சந்திக்க நினைத்து, நாடகங்களில் பிரபலமான பிறகுதான் அந்தக் கனவு நனவானது!

தேசிய விருது, மாநில விருது, பத்மஸ்ரீ, அண்ணா விருது, கலைஞர் விருது, கலைமாமணி, ஃபிலிம்பேர், பல்கலைக்கழகங்களின் டாக்டர் பட்டங்கள் என ஏராளமான அங்கீகரிப்புகள் பாலசந்தருக்கு உண்டு

மனைவியின் பெயர் ராஜம். கவிதாலயா தயாரிப்புப் பணியில் இருக்கிற புஷ்பா கந்தசாமி, கைலாசம், பிரசன்னா என மூன்று குழந்தைகள். மிகுந்த இடைவெளிவிட்டுப் பிறந்ததால் பிரசன்னா மட்டும் ரொம்பச் செல்லம்!

பி.எஸ்சி., முடித்துவிட்டு முத்துப்பேட்டையில் ஓர் ஆண்டு பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து இருக்கிறார். 'தென்றல் தாலாட்டிய காலம்' என அதை ஆசையாகக் குறிப்பிடுவார்

தோட்டக் கலையில் ஆர்வம். யார் உதவி யையும் எதிர்பார்க்காமல், வீட்டையும் தோட்டத்தையும் தானே பெருக்கிச் சுத்தமாக வைத்துக்கொள்ள விரும்புவார்!

ஸ்ரீதேவி, ஜெயப்பிரதா, சரிதா, சுஜாதா, ஸ்ரீப்ரியா, ஜெயசுதா, ஜெயசித்ரா, கீதா, ஸ்ரீவித்யா, சுமித்ரா, ஜெயந்தி, மதுபாலா, ரம்யாகிருஷ்ணன் என பாலசந்தர் அறிமுகப்படுத்திய கதாநாயகிகளின் பட்டியல் இன்னும் நீளம்!

எம்.ஜி.ஆரின் 'தெய்வத்தாய்' படத்துக்கு வசனம் எழுதியிருக்கிறார். சிவாஜியைவைத்து 'எதிரொலி' என ஒரே ஒரு படம் இயக்கியிருக்கிறார். அடுத்து, இவரே ஹிட் ஹீரோக்களை உருவாக்கியது வரலாறு!

மலையருவியும் கடற்கரையும் பாலசந்தரின் படங்களில் நிச்சயம் இடம்பெறும். 'அச்சமில்லை அச்சமில்லை' படத்தில் நடிகர்களின் பெயர்ப் பட்டியலில் மலையருவியின் பெயரையும் சேர்த்தவர்!

விநாயகர்தான் இஷ்ட தெய்வம். பள்ளி நாட்களில் தெரு முனையில் இருந்த விநாயகர் கோயிலுக்கு அர்ச்சகராக இருந்த அனுபவமும் உண்டு. வீட்டுக்குப் பெயர்கூட 'விநாயகா'!

பாலசந்தரின் தந்தை 18 ரூபாய் சம்பளத்தில் கிராம அதிகாரியாக இருந்து இவரை கல்லூரி வரை படிக்கவைத்தது கலெக்டர் ஆக்க வேண்டும் என்பதற்காக. திரைத் துறையில் தான் பெரிய உயரத்துக்கு வந்ததை அப்பா பார்க்கவில்லையே என்ற வருத்தம் இன்னமும் இருக்கு டைரக்டருக்கு!

1972 மார்ச் 10-ம் தேதி வரை செயின் ஸ்மோக்கர். மார்ச் 11-ம் தேதி சிறு மாரடைப்பு வர, புகைப் பழக்கத்துக்கு விடை கொடுத்தார்!

கவிதாலயா என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி 56 படங்கள் தயாரித்து இருக்கிறார். ரஜினியில் ஆரம்பித்து, ஜீவன் வரைக்கும் அவர் தயாரிப்பில் நடிக்காதவர்களை எண்ணிவிடலாம்!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என நான்கு மொழிகளில் படங்கள் இயக்கி இருக்கிறார் பாலசந்தர். 'ஏக் துஜே கேலியே' மூலம் கமல் ஹிந்திக்குப் போனார். எஸ்.பி.பி. பாடிய 'தேரே மேரே பீச் மே' இன்றைக்கு வரைக்கும் ஆல் டைம் ஹிட்!

பாலசந்தரை மானசீகமாக மிகவும் பாதித்த நடிகர் எம்.ஆர்.ராதா. நாடகங்களில் அவரது அநாயாசமான நடிப்பை எப்பவும் சிலாகிப்பார்!

அண்ணா அவர்களை பாலசந்தருக்குப் பிடிக்கும். 'இரு கோடுகள்' படத்தில் அவரைக் காட்டுவதற்குப் பதிலாக, அவரது குரலைவைத்து படமாக்கிய காட்சி வெகுவாக ரசிக்கப்பட்டது!

சீரியல்களில் சின்னதாக முகம் காட்டிய பாலசந்தர், டைரக்டர் தாமிராவின் 'ரெட்டச் சுழியில்' நண்பர் பாரதிராஜாவுடன் இணைந்து பெரும் பாத்திரத்தில் நடிக்கிறார்!

இன்னமும் சினிமாதான் உலகம். சினிமா பார்ப்பதும், படிப்பதும், திரையுலகம் சம்பந்தப்பட்டவர்களைச் சந்திக்கவும்தான் விரும்புவார். உறவினர்களுக்கு ஒரு புன்னகை, கையசைப்பு அவ்வளவுதான்!

படங்கள் பார்த்து, அவை மனதைப் பாதித்துவிட்டால், உடனே அந்த இயக்குநருக்கு நீண்ட பாராட்டுக் கடிதம் எழுதுவார். நேரிலும் சந்தித்துப் பேசி தட்டிக்கொடுப்பார். '16 வயதினிலே' பார்த்துவிட்டு பாரதிராஜாவின் காலில் விழுவேன் என பாலசந்தர் பேசிவிட, பதறிவிட்டார் பாரதிராஜா!

சுட்டிங் இருந்தால் காலை நாலரை மணிக்கே எழுந்துவிடுவார். இல்லாவிட்டால் ஆறு மணி. இவரின் சுறுசுறுப்பை இன்றைய இளைஞர்களிடம்கூட காண முடியாது!

ஒரே ஒரு தடவை பெப்ஸி தலைவராக இருந்திருக்கிறார். நீண்ட நாள் பிரச்னைகளைக்கூட சுமுகமாகத் தீர்த்துவைத்த பெருமை உண்டு!

தூர்தர்ஷனில் 1990-ல் வெளிவந்த இவரது 'ரயில் சிநேகம்' இன்றளவும் பேசப்படும் தொடர். கை அளவு மனசு, ரகுவம்சம், அண்ணி போன்றவையும் இவரது பரபரப்பான தொடர்களாகும். பின்னாளில் வெளிவந்த மெகா சீரியல்களுக்கு இவர்தான் ஆரம்ப விதை போட்டார்

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites