காலாவதி மருந்து குறித்து கூறிய கருத்தை திசைதிருப்புவதா?: சட்டசபையில் கருணாநிதி கண்டனம்

21 April 2010 ·


காலாவதி மருந்து பற்றி தான் கூறியது தொடர்பாக சட்டசபையில் மார்க்சிஸ்ட் கட்சி தெரிவித்த கருத்துக்கு, முதலமைச்சர் கருணாநிதி நேற்று விளக்கம் அளித்தார்.

தமிழக சட்டசபையில் நேற்று, சுகாதாரத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ஜான் ஜோசப், காலாவதி மருந்துகள் பற்றி சில கருத்துக்களை தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட முதலமைச்சர் கருணாநிதி பேசியதாவது:-

காலாவதி மருந்துகளை விட போலி மருந்துகள்தான் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியவை என்று நான் சொன்னதை வேண்டுமென்றே திசை திருப்பி ஏதோ முதலமைச்சர் தவறாக காலாவதி மருந்துகளால் யாருக்கும் ஆபத்தில்லை என்று சொன்னதாக ஒரு அரசியல் விவாதத்தை சில நண்பர்கள் இந்த அவையிலே மாத்திரமல்ல- வெளியிலேயும் தங்களுடைய கட்சிப் பிரசாரத்துக்காக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

நான் சொன்னது- காலாவதி மருந்து என்பது, பிறகு பிரயோசனமே இல்லாமல் எந்தவிதமான சாதகமும் இல்லாமல், எந்தவிதமான நன்மை தீமை எதுவும் இல்லாமல் பயன்படாமல் போய்விடுகிறது. ஒரு நோயாளிக்கு அந்த மருந்தைக் கொடுத்தால்-கொடுக்க வேண்டிய உண்மையான மருந்தைக் கொடுக்காமல், கொடுக்கக் கூடாத மருந்தைக் கொடுத்ததாக ஆகிவிடும் என்றுதான் இந்த அவையிலே விளக்கம் அளித்திருக்கிறேன். வேண்டுமானால், நான் அளித்த விளக்கத்தை மீண்டும் படித்துப் பார்த்துக் கொள்ளலாம். நான் எதற்கு சொல்ல வருகிறேன் என்றால், காலாவதி மருந்துகளை விட போலி மருந்துகள் ஆபத்தானவை என்பதற்காகத்தான் சொல்ல வந்தேன்.

அது மாத்திரமல்ல; இப்படிப்பட்ட மருந்துகள்- காலவதி மருந்துகள் விற்பனையாகின்றன. சில பேர் அதிலே பிழைக்கிறார்கள். ஏமாற்றி வாழ்கிறார்கள் என்பதை கேள்விப்பட்டவுடன், எல்லா அதிகாரிகளையும்- தலைமைச் செயலாளர், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர், அமைச்சர் இப்படி எல்லோரையும் அழைத்து-உடனடியாக ஓர் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, இதைப் பற்றி ஆராய்ந்து அன்றைக்கே நான் இட்ட உத்தரவினால்தான் இன்றைக்கு பலபேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதை அவசரப்பட்டு வேண்டுமென்றே என்மீது அபவாதம் கூற வேண்டுமென்று எண்ணுகின்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உள்பட அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

வேறு கட்சிக்காரர்கள் என்றால், நான் அதை பொருட்படுத்த மாட்டேன். எதையும் துல்லியமாக ஆராய்ந்து, அதைப் பற்றி சொல்லக்கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே இப்படிப்பட்ட ஒரு மகத்தான தவறை பழியை என்மீது போடுமேயானால், அதற்காக நான் மிக மிக வருந்துகிறேன்.

இவ்வாறு கருணாநிதி பேசினார்.

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil