ஜீவா 25

23 April 2010 ·


ஜீவா 25

ம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஜீவன். பாட்டாளிகளின் தோழன். அடக்குமுறைகளுக்கு அஞ்சாத வீரன். கலைகள் பேசிய புலவன். நேர்மையான அரசியலுக்கு இலக்கணமாக இருந்தவன். எளிய மனிதன்... புனிதன்!

பெற்றோர் வைத்த பெயர் சொரிமுத்து. மூக்கு குத்தி இருந்ததால் நண்பர்களுக்கு மூக்கன். அரசியல் அறிந்ததும் சூட்டிக்கொண்ட பெயர், ஜீவானந்தம். தனித்தமிழ் ஆர்வம் காரணமாக சில காலம் 'உயிர் அன்பன்' என்றும் வலம் வந்தார். என்றென்றும் நமக்கு இவர் தோழர் ஜீவா!

ஐந்தாம் ஃபாரம் படிக்கும்போதே பாடல்கள் இயற்றும் திறமை பெற்றிருந்தார். 'காலுக்குச் செருப்புமில்லை... கால் வயித்துக் கூழுமில்லை... பாழுக்கு உழைத்தோமடா... பசையற்றுப்போனோமடா!' என்ற இவரது பாட்டுதான் தமிழ்நாட்டுத் தொழிலாளர்கள் அனைவரையும் செங்கொடியின் கீழ் திரளவைத்த பாட்டாளி கீதம்!

காரைக்குடி - சிராவயலில் இவர்வைத்திருந்த ஆசிரமம்பற்றிக் கேள்விப்பட்டு பார்க்க வந்தார் காந்தி, 'உங்களுக்குச் சொத்து எவ்வளவு இருக்கிறது?' என்று கேட்டார். 'இந்தியாதான் என் சொத்து' என்று ஜீவா சொல்ல... 'நீங்கள்தான் இந்தியாவின் சொத்து' என்று சொல்லிவிட்டுப் போனார் காந்தி!

தாழ்த்தப்பட்ட மக்களை மேல் சாதியினரின் குடியிருப்பு வழியாக அழைத்துப் போனதற்காக இவரது சொந்த ஊரான பூதப்பாண்டி மக்கள் எதிர்த்தார்கள். இந்த ஊரே வேண்டாம் என்று வெளியேறி னார் ஜீவா!

உடலை கட்டுமஸ்தாக வைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்துவார். சாண்டோ வி.கே.ஆச்சாரி என்பவரிடம் அனைத்து உடற்பயிற்சிகளையும் கற்றார். விவேகானந்தர் என்ற பெயரில் ஃபுட்பால் டீம்வைத்து இருந்தார். தொடர்ச்சியான சிறை வாழ்க்கைதான் ஜீவாவின் உடல் பலத்தைக் குறைத்தது

'எவ்வளவு காலம்தான் பேசிக்கொண்டே இருப்பீர்கள்? பொறுப்புகளுக்கு வர வேண்டாமா?' என்று முதலமைச்சர் பி.எஸ்.குமாரசாமி ராஜா கேட்டார். 'ஏழைகளுக்காகப் பேச வேண்டியதுதான். சாக வேண்டியதுதான்' என்று தயக்கம் இல்லாமல் பதவிகளைத் தட்டிக் கழித்தார்!

ஆரம்ப காலத்தில் முரட்டுத் துணியால் ஆன டவுசர்தான் அணிவார். தலைமறைவு வாழ்க்கைக்கு இதுதான் வசதி என்பார். அதன் பிறகு சில காலம் பைஜாமா அணிந்தார். கடைசி வரையில் சாதாரண கதர் வேட்டி, சட்டை, ரப்பர் செருப்புதான்

நான் ஏன் கம்யூனிஸ்ட் ஆனேன், நான் ஏன் கம்யூனிஸ்ட்டாக இருக்கிறேன், நீங்களும் கம்யூனிஸ்ட் ஆக வேண்டுமா? - ஆகிய மூன்று புத்தகங்களை எழுதப்போவதாகச் சொல்லி குறிப்புகள் எடுத்துவைத்திருந்தார். ஆனால், கடைசிவரை எழுதவில்லை!

நீங்கள் உங்களது வாழ்க்கை வரலாற்றை எழுத வேண்டும்' என்று எம்.ஜி.ஆர். ஒருமுறை ஜீவாவிடம் கேட்டபோது, 'என் வாழ்க்கை மல்லுக்கட்டிய மனிதனின் சாதாரண வாழ்க்கைதானே... அது கிடக்கட்டும்!' என்று சிரித்தார்!

யுத்த எதிர்ப்புப் பிரசாரம் காரணமாக சென்னை மாகாணத்தைவிட்டு ஜீவாவை வெளியேறச் சொன்னார்கள். பிரெஞ்சு அரசாட்சி நடக்கும் புதுச்சேரியிலும் அனுமதி இல்லை. பம்பாய் மாகாணத்துக்குள் நுழைந்தபோது கைது செய்து திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு நாடு கடத்தினார்கள். சொந்தஊரைவிட்டே வெளியேறக் கூடாது என்று தடை போட்டு அடைத்தார்கள். இந்த அளவுக்கு மாநிலம்விட்டு மாநிலம் எவரும் விரட்டப்பட்டது இல்லை!

கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டபோது ஜீவா தலைமறைவாக என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஆர்.ராதா, குத்தூசி குருசாமி ஆகியோர் வீடுகளில்தான் மறைந்து இருந்தார்!

பத்மாவதி மீதான ஜீவாவின் காதலுக்குத் தூதுவனாக இருந்தவர் எம்.ஆர்.ராதா. 'காதல் கடிதம் கொண்டுபோய் கொடுத்திருக்கிறேன். காதல் கடிதமா அது? சுத்த வரட்டு மனுஷன்... ஜனசக்திக்குக் கட்டுரை எழுதுறது மாதிரியில்ல எழுதியிருந்தார்' என்று கிண்டல்அடித்தார் ராதா!

ஜீவாவுக்கு இடது காது கொஞ்சம் மந்தம். அதனால் காது கேட்கும் கருவியை மாட்டியிருப்பார். அடுத்தவரைப்பற்றி யாராவது குறை சொல்ல ஆரம்பித்தால், கருவியைக் கழற்றிவிட்டு, 'இனி எனக்குக் கேட்காது. பேசலாம்' என்று அறிவிப்பார்!

ஜீவாவிடம் இருந்த ஒரே பொருள், டேப்ரெக்கார்டர். அவரது பேச்சுக்களைப் பதிவு செய்வதற்காகக்கொடுத்து இருந்தார்கள். அதை இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் கேட்டதும் கொடுத்துவிட்டார்!

தாம்பரம் கஸ்தூரிபாய் நகர் பகுதி புறம்போக்கு நிலத்தில் ஓலைக் குடிசை போட்டுக் குடிஇருந்தார். அவருக்குச் சொந்த இடமோ, வீடோ கடைசி வரை இல்லை. அந்தக் குடிசையை இடித்துவிட்டு வீடாகக் கட்டித் தர எம்.ஜி.ஆர். முன்வந்தபோதும் மறுத்துவிட்டார் ஜீவா!

புத்தகப் பிரியர். ஜீவா வருகிறார் என்றால் பலரும் தங்களது புத்தகங்களைப் பதுக்க ஆரம்பிப்பார்களாம். ஆனால், இவர் படித்து முடித்த புத்தகத்தை யார் கேட்டாலும் கொடுத்துவிடுவார். அடுக்கிவைக்கவே மாட்டார்!

முதல் பொதுத் தேர்தலில் வட சென்னை சட்ட மன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். அடுத்து நடந்த தேர்தல்களில் தோற்றார். 'சட்டசபைக்குப் போவது காலவிரயம்' என்பதும் அவரது கருத்து!

முதல் மனைவி கண்ணம்மாளின் மகள் குமுதாவை 17 ஆண்டுகள் கழித்துத்தான் முதன் முதலாகப் பார்த்தார். திடீரென்று ஒருநாள் ஜீவாவைச் சந்தித்து 'நான் உங்கள் மகள்' என்ற துண்டுச்சீட்டை குமுதா கொடுக்க... 'ஆம்! என் மகள்' என்று இவர் பதில் எழுதித் தந்து மகளாக ஏற்றுக்கொண்டார்!

ஜீவா - பத்மாவதி தம்பதியருக்கு உஷா, உமா ஆகிய இரு மகள்களும், ஸ்டாலின் மணிக்குமார் என்ற மகனும் உண்டு!

சுயமரியாதை இயக்கம், சுயமரியாதை சமதர்மக் கட்சி, காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி என்று தொடர்ந்து கட்சி மாறிக்கொண்டே இருந்தவர் என்ற குற்றச்சாட்டு உண்டு. 'சிலர் கட்சி பக்தர்களாக இருப்பார்கள். மாற மாட்டார்கள். சிலர் நாட்டு பக்தர்களாக இருப்பார்கள். நாட்டுக்காக மாறுவார்கள். அப்படிப்பட்டவர் ஜீவா' என்று விளக்கம் அளித்தார் ராஜாஜி!

ஜனசக்தி என்ற நாளிதழை யும் தாமரை என்ற இலக்கிய இதழையும் தொடங்கியவர்.

ஜீவா மறைந்த பிறகு அவரது மூத்த மகள் உஷாவுக்கு மாப்பிள்ளை பார்த்துத் திருமணம் நடத்திவைத்தவர் பெரியார். அந்த மேடையில்வைத்துத்தான் 'பெரியாருக்கு ஒரு கனியைக் கொண்டுவந்து இருக்கிறேன். சுயமரியாதைத் திருமணங்கள் செல்லும் என்ற சட்டத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டு வந்திருக்கிறேன்' என்று அறிவித்தார் அப்போதைய முதல்வர் அண்ணா!

ஜீவாவின் கடைசிக் காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபடும் சூழ்நிலை உருவானது. 'எங்கள் கட்சி எஃகுக் கோட்டை என்று இதுவரை பேசி வந்த நானே, ஏன் பிளவுபடுகிறது என்று பேச வேண்டுமா?' என்று வருத்தப்பட்டார். ஆனால், அவரது மறைவுக்குப் பிறகுதான் பிளவு ஏற்பட்டது!

'அன்பும் அரசியலும் வேறு வேறல்ல; உலகம் முழுமைக்கும் அன்பும் சகோதரத்துவமும் நிலவ வேண்டும் என்பதே உண்மையான அரசியல் தத்துவமாகும். ஆகவே, அன்பினை அழிக்கக்கூடிய எதுவும் அரசியலாக இருக்க முடியாது. கூடாது!' - இதுதான் ஜீவாவின் அரசியல் தத்துவம்!

'பத்மாவதிக்குத் தந்தி கொடு... காமராஜருக்கு போன் பண்ணு!' - இவை இரண்டும்தான் ஜீவா கடைசியாகச் சொன்ன வார்த்தைகள்!

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites