''கள்வனுக்கும் காதல் வரும்!''

23 April 2010 ·


''கள்வனுக்கும் காதல் வரும்!''


'' 'மலையூர் மம்பட்டியான்' வந்தப்போ எல்லாரும் என் பெயர் மறந்து 'மம்பட்டியான்'னு கூப்பிட ஆரம்பிச்சாங்க. அந்த அளவுக்கு மக்கள் மனசைத் தொட்ட படம் அது. 27 வருடங்களுக்குப் பிறகும் அந்தக் கதைக்கு உயிர் இருக்கு. தகப்பன் நடிச்ச அதே படத்துல இப்போ மகனும் நடிக்கப் போறான். பிரசாந்த்தை இன்னும் இறுக்கமா, கம்பீரமா மாத்தியிருக்கேன். அச்சு அசலா அதே காட்சி அமைப்பு இருக்காது. காலத்துக்கு ஏற்ற மாதிரி எல்லாத்தையும் மாத்தியிருக்கேன்''- மனம் விட்டுப் பேசுகிறார் டைரக்டர் தியாகராஜன்.

''எப்படி வந்திருக்கு 'மம்பட்டியான்'?''

'' 'கள்வனுக்கும் காதல் வரும்'னு சொல்லியிருக்கோம். மம்பட்டியான் சூழ்நிலைக் கைதிதான். தனது தாயையும் தகப்பனையும் கொன்னவங்களைப் பழி வாங்குகிறான். அதற்குப் பிறகு, காட்டில் ஒளிய வேண்டிய நிர்பந்தம். அப்போ அவன் எப்படி ஏழைகளின் தோழனா மாறுகிறான் என்பதைக் கதைப்போக்கில் சொல்லியிருக்கோம். முன்னாடி மம்பட்டியானைத் தேடி ஐந்து போலீஸ்காரர்கள் போகிற மாதிரி கதை இருக்கும். இதில் ஐந்து, 500 பேரா மாறியிருக்கு. ஒரு தேடுதல் வேட்டைங்கிறது என்னென்ன சாகசங்கள்கொண்டது, அதற்கு இடையூறுகள் எப்படி எல்லாம் வரும், அதைச் சமாளிச்சு வெளியே வர்றவிதம்னு எல்லாத்தையுமே பெரிசா, பிரமாண்டமா பண்ணியிருக்கோம். பழைய 'மலையூர் மம்பட்டியான்' பெரிய வெற்றி பெற்றாலும், அது பெரிய படம்னு சொல்ல முடியாது. ஆனால், புது மம்பட்டியானைக் காசைக் கொட்டி எடுத்திருக்கோம். இன்னிக்கு வீரப்பனைப் பிடிக்கவே 25 வருஷம் ஆச்சு. ஆனால், மம்பட்டியான் இருக்கிற இடத்தை அவ்வளவு சீக்கிரம் யாரும் கண்டுபிடிக்க முடியாது. அவனுக்கு மிருகங்களின் வாசனை தெரியும். மொத்தக் காட்டையும் தன் வீடாவெச்சிருந்தான். அடிதடி, வெட்டுக்குத்து பார்த்துச் சலித்த கண்களுக்குப் பசுமையான காடும் அதுக்குள்ள இருக்குற மம்பட்டி யானும் புது விருந்து!''

''நிறைய கஷ்டப்பட்டீங்க போலிருக்கே?''

''பெரிய காடு. யூனிட்டைக் கொண்டுபோறது கஷ்டம். விநோதமான அட்டைகள், பாம்புகள், பூச்சிகள்னு ரொம்பச் சங்கடம். சட்டுனு திரும்பி கேரவனுக்கு வந்துட முடியது. ஜெய்சங்கர் செய்த ரோலில் பிரகாஷ்ராஜ். 'சரியான நேரத்துக்கு வர மாட்டார். காட்டுக்குள்ளே ஷூட்டிங் வெச்சிருக்கீங்க. ஜாக்கிரதை'ன்னு சொன்னாங்க. ஆனால், பிரகாஷ்ராஜிடம் எந்தப் புகாரும் இல்லை. ரொம்ப ரசிச்சு செஞ்சிருக்கார். எனக்கும் இது சேலஞ்சிங்கான படம். நான் நடிச்ச படத்தைவிட நல்லாஇருக்கணும்

இன்னிக்குத் தேதிக்கு அப்டேட்பண்ணி இருக்கணும்னு இரட்டைச் சவால்கள். நிச்சயம் வித்தியாசமா இருக்கும். மூணு வருஷம் கழிச்சு வருகிற பிரசாந்த்துக்கு இந்தப் படம் பெயர் சொல் லும்!''

''ஒரு வழக்குக்காக பிரசாந்த் நடிப்பில் இருந்து ஒதுங்கிஇருந்திருக்க வேண்டுமா?''

''ரொம்ப ஜோடிச்சு, தீர்மானம் பண்ணி, பிரசாந்த்தைச் சிக்கவெச்ச வழக்கு அது. என்னிக்கு விசாரணை, எப்ப ஆரம்பிக்கும்னு யாருக்கும் எதுவும் தெரியாது. அந்தப் பெண் ஏற்கெனவே திருமணம் ஆகியிருந்ததைக் கண்டுபிடிச்சதும்தான் எங்களுக்கு நிம்மதி. இல்லாவிட்டால் பிரசாந்த் இப்ப இருக்க வேண்டிய இடம் இது இல்ல. மகனை இப்படி ஒரு சிக்கலில் பார்ப்பது எந்தத் தகப்பனுக்கும் வரக் கூடாது. பிரசாந்த் நம்பிக்கையாக இருந்ததுதான் இதில் பெரிய விஷயம். இனி எந்தப் பிரச்னையும் இல்லை.''

''சரிதா அருமையாகச் செய்த ரோல் அது. கண்ணாத்தாளை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா?''

''சரிதா ரோலில் மீரா ஜாஸ்மின் பண்ணியிருக்காங்க. இவங்களும் சும்மா கிடையாது. தேசிய விருது வாங்கினவங்க. சரிதாவை ஷூட்டிங்கின்போது பார்த்திருக்கேன். பளீர் பளீர்னு முக பாவம் ஓடிவந்து மறையும். மீரா இன்னும் அளவா, அடக்கமா நடிச்சிருக்காங்க. இரண்டு பேரையும் என்னால் ஒற்றுமைப்படுத்த முடியாதது உண்மை. மலையூர் மம்பட்டியானைப் பார்த்துட்டு சிலிர்த்திருக்கிறார் வடிவேல். 'இப்ப அதே கதையில் கவுண்டமணி ரோலில் நீங்க வர்றீங்க'ன்னு சொன்னதும், மிக நீண்ட நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கார். படத்தில் காடு, மேடு, தேடல், சாகசத்துக்கு மத்தியில் வடிவேலு நிச்சயம் பெரிய ரிலீஃப். நானே அதை உணர்ந்துஇருக்கேன். பிரகாஷ்ராஜ், வடிவேல் இரண்டு பேரும் படத்துக்குப் பெரிய ப்ளஸ்.''

'' 'காட்டு வழி போற பொண்ணே கவலைப்படாதே'ன்னு இளையராஜா குரலில் ஆரம்பிக்கும் பாட்டை யாரும் மறந்திருக்க இயலாது. யார் புதுப் படத்துக்கு இசை?''

''அந்தப் பாட்டுகூட கொஞ்சம் மாற்றத்தோடு இருக்கும். யார் இசைன்னு இதுவரைக்கும் யாருக்கும் சொல்லலை. அது சஸ்பென்ஸ். ஆடியோ ரிலீஸ் அன்னிக்குத்தான் யார் இசையமைப்பாளர்னு தெரியும். அங்கே ஒரு சின்ன ஆச்சர்யத்தை உண்டாக்கப்போறோம். பார்த்துட்டுச் சொல்லுங்க!''

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil