என்னதான் நடக்கும் கோவையில்?

23 April 2010 ·என்னதான் நடக்கும் கோவையில்?

ல்லா சாலைகளும் கோவையை நோக்கி!

புதிய சட்டமன்றத்தைத் திறந்துவிட்ட தித்திப்பில் கோவையில் செம்மொழி பால்கோவா சாப்பிடத் தயாராகி வருகிறார் முதல்வர் கருணாநிதி. ஜூன் மாதம் மூன்றாம் தேதி தனது 87-வது வயதில் அடியெடுத்துவைக்கும் முதல்வர், அதே மாதத்தில் 23-ம் தேதி முதல் 27 வரை ஐந்து நாட்கள் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கான அறிவிப்பைச் செய்திருக்கிறார்.

மாநாட்டுப் பணிகளைக் கவனிப்பதற்காக 21 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நித்தமும் ஏதாவது ஒரு குழுவின் கூட்டம் நடந்துகொண்டு இருக்கிறது. வாரந்தோறும் அமைச்சரவைப் பிரதானிகள் கோவையில் முகாமிட்டு நடப்புகளைக் கவனிக்கிறார்கள். முதல்வர் கருணாநிதியின் முழுச் சிந்தனையும் இதைச் சுற்றியே

என்னதான் நடக்கப்போகிறது கோவையில்?

ஈரோடு, சேலத்தில் இருந்து கோவை வந்தால் உள்ளே நுழையும் இடத்தில் அமைந்துள்ள பிரமாண்டமான அரங்கம் கொடிசியா. கோயம்புத்தூர் மாவட்டச் சிறுதொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு என்பது இதன் அர்த்தம். (மாநாட்டை முன்னிட்டு இவர்கள் நல்ல தமிழ்ப் பெயரைச் சூட்டிக்கொள்ளலாம்!) இங்குதான் கண்காட்சிகள் நடக்கும். இந்த அரங்கில் இப்போது தமிழ் மணக்க இருக்கிறது. இந்த இடத்தை 25 அரங்கங்களாகப் பிரித்துவிட்டார்கள். ஓர் அரங்கில் இருந்து

இன்னொன்றுக்குச் சத்தம் கேட்காத அளவுக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஐந்து நாட்களும் அறிஞர்கள் உட்கார்ந்து தமிழாய்வு நடத்தப்போவது இங்குதான்.

*'கருணாநிதிக்கு நடக்கப்போகும் இன்னொரு பாராட்டு விழாவாகத்தான் இது இருக்கும்' என்று ஆரம்பத்தில் அதிகமான விமர்சனங்கள் அமைந்துவிட்டதால், தமிழாய்வுதான் நடக்க இருக்கிறது என்பதை உறுதிப்படுத்த சில ஆக்கபூர்வமான வேலைகளில் மாநாட்டுக் குழுவினர் இறங்கியுள்ளனர். ''ஐந்து நாள் மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகள் படிப்பதற்காக 7,358 ஆய்வாளர்கள் பதிவு செய்து, அதில் 6,886 பேர் தங்களது ஆய்வுச் சுருக்கங்களை அனுப்பி உள்ளார்கள். அவற்றில் இருந்து 1,000 கட்டுரைகளை மட்டும் தேர்ந்தெடுத்துள்ளோம். இவர்களில் 214 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். மாநாட்டில் இவர்கள் வாசிக்கும் கட்டுரைகள், பின்னர் புத்தகங்களாகக் கொண்டுவரப்படும்'' என்கிறார் ஆய்வரங்கப் பொறுப்பாளரும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தருமான ம.ராஜேந்திரன். தமிழ் இலக்கிய இலக்கணத்தில் தொடங்கி சிற்றிதழ்கள் வரை... சங்க காலத் தமிழக அரசியலில் ஆரம்பித்து இன்றைய தலித் இலக்கியம் வரை 55 தலைப்புகளில் கட்டுரைகள் தயாராகின்றன. 'தற்கால உலகில் தமிழ்ச் செம்மொழி' என்பது இந்த ஆய்வரங்குகளின் பொதுத் தலைப்பு.

மாநாட்டை குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் தொடங்கிவைக்கிறார். அன்று கோவை வ.உ.சி. பூங்கா மைதானத்தில் இருந்து கொடிசியா வரை பிரமாண்டமான ஊர்வலம் நடக்கிறது. சுமார் ஒன்பது கி.மீ. தூரத்தைக் கடக்கும் இந்த ஊர்வலம். கடையேழு வள்ளல்கள் தொடங்கி தமிழர் பாரம்பரியத்தை விளக்கும் அத்தனை காட்சிகளாலும் நிறைந்திருக்கும், 40 அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு. ஊர்திகளுக்கு இடையில் மயிலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் என 34 வகையிலான கலைகளை இரண்டு ஆயிரம் கலைஞர்கள் ஆடி வருவார்களாம். அவிநாசி சாலையில் இதைப் பொதுமக்கள் பார்க்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

கோவையில் நடப்பது மற்ற ஊர்களுக்குத் தெரிய வேண்டாமா? அந்தப் பொறுப்பை கல்லூரி மாணவர்கள் வசம் ஒப்படைத்திருக்கிறார்கள். சென்னை, தஞ்சை, கன்னியாகுமரி ஆகிய மூன்று ஊர்களில் இருந்து கல்லூரி மாணவர்கள் செம்மொழி மராத்தான் ஓட்டம் வரவிருக்கிறார்கள். அவரவர் பல்கலைக்கழக எல்லை வரை வருவார்கள். அடுத்த பல்கலைக்கழக எல்லையில் மற்ற கல்லூரி மாணவர்கள் சுடரை வாங்கிக்கொள்வார்கள். மூன்று அணிகளும் சேலத்தில் ஒன்று சேர்ந்து, கோவைக்கு வரும். இதற்கு 'குறுந்தொலைவுத் திரள் ஓட்டம்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. மராத்தான் என்பதை இனி இப்படி அழைக்கலாம்.

தமிழ் வளர்கிறதோ இல்லையோ, கோவை வளரப்போகிறது. அந்த அளவு கோவைக்கு அடிப்படை வசதிகள் செய்யப்படுகின்றன. அவிநாசி சாலை, திருச்சி சாலை, காமராஜர் சாலையில் மின்சார கேபிள் பதிக்கிறார்கள். மேட்டுப்பாளையம் - கோவை சாலையை நான்கு வழிகளாக்க 49 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிப் பொது நிதி மூலமாக மின்விளக்குகள், பூங்காக்கள் பராமரிப்புசெய்யப்படுகின்றன. கல்யாண மண்டபங்கள் முதல் கழிப்பறைகள் வரை மராமத்து பார்க்கப்படுகின்றன. புதிய தாழ்தளப் பேருந்துகள் வலம் வருகின்றன. இப்படி சுமார் 300 கோடி ரூபாய்க்கு மேல் கோவை கொழிக்க அரசு உத்தரவுகள் போடப்பட்டு, அதிகாரிகள் தங்கள் காரியங்களில் மும்முரமாக இருக்கிறார்கள்.

கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தின் பெரும்பகுதி இடம் பராமரிப்பு இல்லாமல் காடாகக் கிடந்தது. அதில் சுமார் 100 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தி, தாவரவியல் பூங்கா அமைக்கிறார்கள். முதல் கட்டமாக 20 கோடி ரூபாய் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு 'செம்மொழிப் பூங்கா' என்று பெயர்.

41 நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் வருவதால் கோவை இந்தக் கூட்டத்தைத் தாங்காது. சுமார் 5,000 அறைகள் தேவை என்று திட்டமிட்டுள்ளார்கள். கோவை மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் உள்ள அத்தனை விடுதிகளையும் அரசு கைப்பற்றிவிட்டது. தனியார் நிறுவனங்களின் தங்குமிடங்கள் உள்ளிட்டவையும் வாங்கப்பட்டுள்ளன. 129 திருமண மண்டபங்கள், கல்லூரி மாணவர் விடுதிகள் என கிடைத்ததை எல்லாம் பிடித்துப் போடுகிறார்கள். 'அந்த வாரத்துல எந்த விஷேசமும் நடத்தக் கூடாது' என்று கோவை வாசிகள் முடிவெடுக்கும் அளவுக்கு ஊர் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

மாநாட்டுத் தலைவர் முதல்வர் கருணாநிதிதான். ஆனால், அவர் துணை முதல்வர் ஸ்டாலின், கனிமொழி இருவரையும் அனைத்துப் பணிகளையும் எடுத்துச்செய்ய உத்தரவிட்டுள்ளார். அமைச்சர்கள் கே.என்.நேரு, பரிதி இளம் வழுதி, தங்கம் தென்னரசு, பொங்கலூர் பழனிச்சாமி ஆகியோர் பரபரப்பாக இருக்கிறார்கள். அதிகாரிகளில் தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி, அலாவுதீன், ஜோதி ஜெகராஜன் ஆகியோர் பங்கு முக்கியமானதாக இருக்கிறது. அனைத்துத் துறைகளுக்கும் ஒவ்வொரு வேலையைப் பிரித்துக் கொடுத்திருக்கிறார் கருணாநிதி.

தனது வாழ்நாள் சாதனையாக கருணாநிதி இந்த மாநாட்டை நினைக்கிறார். கோவையில் பார்ப்போம்!

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil