நீங்களும் ஆகலாம் ஒன் மினிட் மேனேஜர்!

23 April 2010 ·

நீங்களும் ஆகலாம் ஒன் மினிட் மேனேஜர்!

ங்களுக்கு ஒரு சவால். தினமும் உங்களுக்கு 86,400 ரூபாய் தருகிறோம். அதை அன்றே நீங்கள் செலவழிக்க வேண்டும். அந்தப் பணத்தை நீங்கள் எந்த விதத்திலும் சேமிக்க முடியாது. மறுநாள் மீண்டும் இன்னொரு 86,400 ரூபாய் தரப்படும். இப்போது உங்களுக்கான கேள்வி... தினமும் அந்த 86,400 ரூபாயை எப்படி உபயோகமாகச் செலவழிப்பீர்கள்?

'தினமுமே 86,400 ரூபாயா? மொத்தமாக ஒரு வாரப் பணத்தை முன்கூட்டியே தர மாட்டீர்களா' என்று யோசிக்கிறீர்களா? நண்பர்களே... ஏற்கெனவே தினமும் உங்களுக்கு அந்த '86,400 ரூபாய்' தரப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. புரிந்தவர்களுக்கு கங்கிராட்ஸ்... புரியாதவர்களுக்கு ஒரு நாளின் 24 மணி நேரத்தில் உள்ள 86,400 நொடிகள்தான் உங்களுக்கு வழங்கப்படும் அந்த 86,400 ரூபாய்! 'Nobody plans to fail, but fails to plan' என்ற ஆங்கிலப் பழமொழி உணர்த்தும் அர்த்தம் உணர்ந்தவர்களுக்கு, நேர நிர்வாகத்தின் மதிப்பு தெரியும்.

'அட போப்பா! எவ்வளவு வேகமா உழைச்சாலும் நேரமே கிடைக்க மாட்டேங்குதே?' என்று புலம்புபவராக இருந்தாலும், 'என்னதான் வேலை செஞ்சாலும் பொழுதே போகமாட்டேங்குதே!' என்று அங்கலாய்ப்பவராக இருந்தாலும் உங்கள் பொன்னான நேரத்தை இந்தக் கட்டுரையைப் படிப்பதில் கொஞ்சம் முதலீடு செய்யுங்கள்.

'ஒன் மினிட் மேனேஜர்' (One Minute Manager) ஆகச் செயல்படுபவர்கள்தான் சாதாரண நிலையில் இருந்து வி.ஐ.பி. அந்தஸ்துக்கு உயர்கிறார்கள். பில்கேட்சுக்கும் அவர் அலுவலக அட்டெண்டருக்கும் 24 மணி நேரம் என்பது ஒன்றுதான். ஆனால், அந்த 24 மணி நேரத்தை எப்படிக் கையாள்கிறார்கள் என்பதில்தான் இருவரின் அந்தஸ்தும் வித்தியாசப்படுகிறது. ஒரு நாளை நாம் நேரங்களாகப் (Hours)பிரித்துப் பார்க்கக் கூடாது. விநாடிகளாக (Seconds) வைத்துத்தான் திட்டமிட வேண்டும். அப்போதுதான் நாம் வீணடிக்கும் மணித்துளிகளின் அளவு தெரியும்.

மனிதவள மேம்பாட்டு நிபுணரும், நேர மேலாண்மை குறித்த கருத்தரங்குகளில் பங்குகொள்ளும் ஜேசீஸ் இன்டர்நேஷனல் அமைப்பின் பயிற்சியாளர் டி.கே.சந்திரசேகர், ''நேர நிர்வாகத்தைத் திட்டமிடுவது எப்படி?'' என்று விளக்குகிறார். 'இன்றைய வேலையை இன்றே செய், முடிந்தால் நாளைய வேலையையும் இன்றே செய். ஒருபோதும் இன்றைய வேலையை நாளை செய்யாதே, ஏனென்றால், நாளை என்ற ஒன்று இல்லவே இல்லை என்பதைப் புரிந்துகொண்டாலே போதும். நேரடியாகப் பார்த்தால், நேர மேலாண்மை என்ற வார்த்தையே தவறானது.

ஏனென்றால் நேரம் என்பது உங்கள் விருப்பப்படி மாற்றிக்கொள்ளத் தக்கது அல்ல. நேரம் நிலையானது. உங்களுக்குக் கிடைத்திருக்கும் நேரத்தைச் சரியானவிதத்தில் பயன்படுத்திக்கொள்ள சுய மேலாண்மையில்தான் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.

'லொம்பார்டி கோட்பாடு' என்பது பிரசித்தமானது. புகழ்பெற்ற கால்பந்து பிளேயராக இருந்து பின்னாளில் பயிற்சியாளர் ஆனவர் லொம்பார்டி. இவர் பயிற்சி அளிக்கும் அணி வீரர்கள் பயிற்சி நேரத்துக்கு அரை மணி நேரம் முன்னதாகவே மைதானத்துக்கு வந்து காத்திருக்க வேண்டும். 2.30 மணிக்குப் பயிற்சி ஆரம்பம் என்றால், 2 மணிக்கே மைதானத்தில் இருக்க வேண்டும். 2.05-க்கு வந்தால்கூட தாமத வருகைதான் அது. ஆனால், அந்த அரை மணி நேரத்தில் வீரர்களுக்கு எந்த வேலையும் கிடையாது. வெறுமனே மைதானத்தில் அமர்ந்து பயிற்சிக்குக் காத்திருக்க வேண்டும். டாணென்று 2.30-க்குப் பயிற்சி ஆரம்பிக்கும். இந்த முறையில் பயிற்சியைத் தொடங்கியதில் இருந்து, லொம்பார்டியின் அணி வீரர்கள் கால்பந்து போட்டி தொடங்கிய நிமிடத்தில் இருந்தே கோல் மழை பொழிய ஆரம்பித்தார்கள். தொடர் வெற்றிகளைக் குவிக்கவைத்தது லொம்பார்டி கோட்பாடு. அதனை ஆராய்ந்த உளவியலாளர்கள் காரணத்தை இப்படி விளக்கினார்கள்.

'போட்டி இரண்டரை மணிக்குத்தான் என்றாலும், 2 மணிக்கு மைதானத்தில் இருக்க வேண்டும் என்ற மனப்

போக்கு, துவக்க நிமிடத்தில் இருந்தே நமது பெஸ்ட்டைத் தர வேண்டும் என்ற எண்ணத்தை வீரர்களின் மனதில் உருவாக்குகிறதாம். 'போட்டிதான் ஒன்றரை மணி நேரம் நடக்குமே... முதல் இடைவேளைக்குப் பிறகு கோல் அடித்துக்கொள்ளலாம். எதிரணிதான் இன்னும் கோல் போடவில்லையே. அதற்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்!' போன்ற சாக்கு தேடும் மனப்போக்கினை அந்த முந்தைய அரை மணி நேரம் அடித்து உடைத்து விடுகிறது. அதுவும் இல்லாமல் போட்டி முன்னரே ஆரம்பித்துவிட்டதாக வீரர்களின் ஆழ்மனம் உணர் வதால், அரை மணி நேரம் முன்பாகவே போட்டி முடிந்துவிடும் என்ற எண்ணமும் அவர்களை அறியாமல் மனதில் பதிந்து எதிரணியைக் காட்டிலும் ஓட்டமாக ஓடுகிறார்கள். இதன் மூலமே லொம்பார்டி அணி வெற்றிகளைக் குவித்தது!'

இந்தக் கோட்பாடு ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பொருந்தும். 'செமஸ்டர் மார்ச்சில்தானே... இப்போது நவம்பர்தானே!' என்ற எண்ணம் பாஸ் மார்க் வாங்கப் போதுமானதாக இருக்கும். ஆனால், நூற்றுக்கு நூறு மனோபாவத்துக்கு இந்த எண்ணம்தான் முதல் எதிரி. இந்த மனோபாவத்தை மாற்றி ஆரம்பம் முதலே நமது பெஸ்ட்டைக் கொடுப்பதன் மூலம், நம் இலக்கை குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே அடைந்துவிடலாம்.

மேலைநாட்டு மக்களிடம் வாழ்நாள் முழுக்க இந்த மனோபாவம் மேலோங்கி இருக்கிறது. இளமையும் துடிப்பும் இருக்கும்போதே அவர்களால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு கடுமையாக உழைக்கிறார்கள். பெரும்பாலானோர் 50 வயதுக்கு மேல் வேலை செய்வது இல்லை. அவர்களுக்கான வாழ்க்கையை நிம்மதியாக வாழ்கிறார்கள். வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்கிறார்கள். ஆனால், இங்கே ஒருவரது கேரியர் நிலையாவதற்கே 35 வயது பிடிக்கிறது. அதன் பிறகு 45 வயதில் அசுரத்தனமாக உழைத்து ஓய்வு பெறும் 58 வயது வரை வீட்டு லோன், குழந்தைகளின் திருமணக் கடன் என்று டென்ஷனுடன் கழிக்கவேண்டி இருக்கிறது. இவற்றுக்கெல்லாம் லொம்பார்டி கோட்பாடு சிறந்த தீர்வு!

அதே சமயம் 'அதான் வேலை கிடைத்துவிட்டதே', 'திருமணமாகிவிட்டதே' என்பதுபோன்ற அசட்டை மனோபாவம் நமது பல திறமைகளை மழுங்கடிக்கிறது. கல்லூரி நாட்களில் நீங்கள் நன்றாகக் கவிதை எழுதுபவராகவோ, பாடுபவராகவோ இருந்திருக்கலாம். ஆனால், வேலை கிடைத்த பிறகு அதற்கெல்லாம் நேரம் இல்லை, ஆர்வம் இல்லை என்று ஏதேனும் காரணம் கற்பித்து வேறு எந்த விஷயத்திலும் நாம் கவனம் செலுத்துவது இல்லை. அப்படிச் சோர்ந்துவிடாமல் வேலைக்கும், ஆர்வத்துக்கும் சம்பந்தமே இல்லையென்றால்கூட, கொஞ்சம் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டால், இரண்டிலுமே சாதிக்கலாம். இதற்கு மிகப் பெரிய உதாரணம், எழுத்தாளர் சுஜாதா. தொழில்நுட்பம் சார்ந்த உயர் அரசுப் பணியில் இருந்தாலும், எழுத்தின் மீதான தணியாத ஆர்வத்தால் தமிழ் இலக்கியத்தின் மறக்க முடியாத பல படைப்புகளை உருவாக்கினார். நீங்களும் சாதிக்கப் பிறந்தவர்தான் என்பதை மனதில்கொள்ளுங்கள்!'' என்று ஒரே மூச்சில் முடித்தார் சந்திரசேகர்.

நெய்வேலி நிலக்கரிக் கழகத்தின் பயிற்சிப் பிரிவில் கூடுதல் முதன்மை மேலாளராக இருக்கும் சண்முகசுந்தரம், ''நாம் ஒரு செயலைச் செய்வதன் மூலம், அதற்கென ஒதுக்கப்படும் நேரத்தைச் செலவிடுகிறோமா, வீணடிக்கிறோமா அல்லது முதலீடு செய்கிறோமா என்பதைத் தீர்மானித்தாலே, நேர நிர்வாகத்தில் அடிப்படை நமக்குக் கைவந்துவிட்டது என்று உணரலாம்!'' என்கிறார். என்.எல்.சி. ஊழியர்களின் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளில் கவனம் செலுத்தி வரும் சண்முகசுந்தரம், தேவைகளின் திறன் அறிந்து அதற்கு நேரம் ஒதுக்கப்படும் கலை குறித்து விவரிக்கிறார்.

''சாப்பிடுவது, குளிப்பதுபோன்ற அன்றாட விஷயங்களுக்கு நாம் தினமும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கியே ஆக வேண்டும். அந்த நேரத்தைச் செலவழிக்கிறோம் எனலாம். டி.வி. பார்ப்பது, இணையத்தில் விளையாடுவது, கல்லூரி வகுப்பிலோ, பணியிடத்திலோ வெட்டி அரட்டைகளில் ஈடுபடுவது நேரத்தை வீணடிக்கும் பட்டியலில் சேரும். உடற்பயிற்சி, நல்ல புத்தகங்களைப் படிப்பது, புதிய மொழியைக் கற்றுக்கொள்வதுபோன்றவை நேரத்தை முதலீடு செய்யும் வகையில் அடங்கும். நமது எந்தச் செயலையுமே நிச்சயம் இந்த மூன்று பிரிவுகளுள் ஏதேனும் ஒன்றில் அடக்கிவிடலாம். நீங்கள் ஒரு செயலைச் செய்யும்போது, இவற்றுள் எந்தப் பட்டியலில் அது அடங்கும் என்பதை நேர்மையாகத் தீர்மானியுங்கள். அப்படி கணிக்கத் துவங்கினாலே, உங்களது பெரும்பாலான விரயங்களும், அநாவசியச் செலவுகளும் முதலீடாக மாறும்.

நமக்குப் பிடிக்காத, அவ்வளவாக ஆர்வத்தைத் தூண்டாத வேலைகளையும் நாம் செய்ய வேண்டியிருக்கும். உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட பாடத்தில் ஒரு கேள்விக்கான பதில் மட்டும் கடினமானதாக இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்தப் பதிலை மட்டும் பிறகு படிக்கலாம் என்று முடிவெடுக்கிறீர்கள். தொடர்ந்து படிக்கும்போது, அதேபோல மேலும் நான்கைந்து கேள்விகள் கடினமாக இருந்தால், அவற்றையும் 'பிறகு படிக்கலாம்' என்று அடுக்கிவைக்கிறீர்கள். பிறகு என்ன நடக்கும்? சுலபமான பதில்களைப்படிக்கும்போதுகூட, மிச்சம் இருக்கும் அந்தக் கடினமான பதில்கள்தான் உங்கள் மனதுக்குள் பூதமாக அமர்ந்திருக்கும். அவற்றை எப்படி எதிர்கொள்வது என்ற பதற்றத்திலேயே உங்கள் இயல்பான திறன் பாதிக்கப்படலாம். அதற்குப் பதில் அந்தக் கடினமான பதிலை முதலிலேயே படித்து முடித்துவிட்டால், பெரும் சுமை நீங்கிய திருப்தியுடன் மற்ற பகுதிகளை எதிர்கொள்ளலாம். ஆர்வம் இல்லாத அல்லது கடினமான வேலைகளை முதலிலேயே முடித்துவிடுவதன் மூலம், தேவை இல்லாத எரிச்சலைத் தவிர்க்கலாம்!''

நேர நிர்வாகம்பற்றி மணிக்கணக்காகப் பேசலாம், சுயமுன்னேற்றப் புத்தகங்களைப் புரட்டலாம், கருத்தரங்குகள், பயிலரங்குகளில் கலந்துகொள்ளலாம். ஆனால், உங்களுக்குள் இருந்து முன்முனைப்பு கிளை விடவேண்டும் என்பதை உணருங்கள். 'மனித வாழ்க்கை என்பது ஒரு நொடிதான்' என்ற புத்தன் வாக்கைப் புரிந்துகொள்ளுங்கள்!

The Power of Now

இன்றைய 24*7 உலகில் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களிடம் எதிர்பார்க்கும் ஒரு குணம் 'டெட்லைன்'களுக்குள் வேலையை முடிக்கும் சாமர்த்தியம். அன்றைய தினத்தின் வேலையை அன்றே செய்து முடிப்பதுதான் இந்த டெட்லைன் குணத்தை வளர்த்தெடுக்கும்.

'ஹார்டுவொர்க்' என்பதைக் காட்டிலும் இன்று 'ஸ்மார்ட்வொர்க்'தான் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்த நேரத்தில் மிகத் திறமையாகச் செயல்களைச் செய்து முடிக்கும் பண்பை வளர்த்துக்கொள்ளுங்கள். அது பயிற்சியினால் மட்டுமே வரக்கூடியது. அதற்கு 'ஹார்டுவொர்க்' அவசியம்.

மறுநாள் அணிய வேண்டிய உடைகளை முந்தைய நாள் இரவே தேர்ந்தெடுத்துவையுங்கள். இதனால் அதிஅவசர காலைப் பொழுதில் துணிமணிகள் சிக்காத பதற்றத்தைத் தவிர்க்கலாம்.

எவ்வளவு வேலைகள் இருந்தாலும், குறிப்பிட்ட மணிக்குப் படுத்து, இத்தனை மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள்.

'சும்மாதானே இருக்கிறோம்' என்று ஏற்கெனவே பார்த்த ஐ.பி.எல். போட்டிகளின் மறுஒளிபரப்புகளைப் பார்த்துக்கொண்டு இருக்காதீர்கள். அந்த நேரத்தைத் தோட்டத்திலோ, அம்மாவுடன் கிச்சன் வேலைகளிலோ செலவிடுங்கள்.

மாதத்தில் ஏதேனும் ஒருநாள் முழுக்க டி.வி., கம்ப்யூட்டர், செல்போனுக்கு விடுமுறை அளியுங்கள். ஒரு நாளின் 24 மணி நேரம் எவ்வளவு அழகானது என்பதை உணர்வீர்கள்.

வீட்டில் அனைவருடனும் பேச நேரம் இருப்பது இல்லையா? இரவு உணவை எல்லோரும் நிச்சயம் ஒன்றாகச் சாப்பிடுங்கள். ஒவ்வொருவரின் நாள் குறித்தும் அப்போது விவாதியுங்கள்!


First Things First

உங்களின் அன்றாட செயல்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.

1) முக்கியமானது, அவசரமானது (Important and Urgent)

2) முக்கியம் இல்லாதது. ஆனால், அவசரமானது (Unimportant but Urgent)

3) முக்கியமானது. ஆனால் அவசரம் இல்லாதது. (Important but not urgent)..

4) முக்கியம் இல்லாதது, அவசரம் இல்லாதது (Unimportant and Not urgent). இந்த நான்கு விதிகளின் அடிப்படையில் உங்களின் ஒரு வாரத்துக்கான, மாதத்துக்கான வேலைகளைத் திட்டமிடுங்கள். உங்களின் பணி வெகு சுலபமாக முடியும்.

பல வேலைகள் உங்கள் முன் இருந்தாலும் முதலில் உங்களுக்கு என்ன பணி வந்ததோ அதை முதலில் முடிக்கப் பழகுங்கள்.

எந்த ஒரு வேலையையும் அதிகபட்சம் இரண்டு நாட்களுக்கு மேல் இழுத்துக்கொண்டு இருக்காதீர்கள்.

உங்களால் முடிந்தால் மட்டுமே எந்தச் செயலிலும் இறங்குங்கள். முடியாது என்று தெரிந்துவிட்டால் அதைக் கை கழுவிவிடுவது உத்தமம். காரணம், நேரம் மிச்சம்!

சில செயல்களுக்குப் பெரிதாக 'புரொஃபஷனலிசம்' அல்லது 'பெர்ஃபக்ஷனலிசம்' தேவைப்படாது. இ-மெயில் அனுப்புவது, ஆர்குட் ஸ்கிராப், எஸ்.எம்.எஸ். அனுப்புவது போன்ற 'சின்னப்புள்ளத்தனமான' நடவடிக்கைகளுக்கு நிபுணத்துவம் தேவை இல்லை. ஆகவே, இந்தக் காரியங்களுக்கு மெனக்கெட்டு உங்கள் மதிப்புமிக்க நேரத்தை வீணாக்க வேண்டாம்.

உங்கள் வேலைகளை நீங்கள்தான் செய்ய வேண்டும். அதேபோல மற்றவர்களின் வேலையை நீங்கள் செய்யாதீர்கள்!

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)
There was an error in this gadget

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil