நீயும்... நானும் கோபிநாத்!

23 April 2010 ·

நீயும்... நானும் கோபிநாத்!


றவுகள் ஒன்றுகூடும் விழாக்களில் எத்தனை குதூகலத்துடன் கூடுவோமோ, அதேபோல அந்த நிகழ்வுகள் முடிகிறபோது ஒரு விஷயம் மனசை லேசாக நெருடும். இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த எத்தனை உறவினர்கள் சில வருடங்களுக்கு முன்பு வரை நல்லது கெட்டதுகளை, சுக துக்கங்களைப் பகிர்ந்துகொள்கிற தோழமையோடு இருந்தார்கள் என்று.

எல்லாக் குடும்பங்களிலும் சம வயது உறவினர்கள் நிறையப் பேர் இருப்பார்கள். அவர்களுக்குள் ஓர் அழகான நட்பு இருக்கும். உறவினர் என்ற நிலையைத் தாண்டி, நண்பர்களாகவும் இருப்பார்கள். பரஸ்பரம் நல்ல புரிதல் இருக்கும். அழகழகான செல்லச் சண்டைகள் அரங்கேறும்.

அதென்னவோ தெரியவில்லை, ஒரு காலகட்டம் வரை உறவுத் தோழமையோடு இருந்த அந்த நண்பர்கள் வட்டம் நாலா பக்கமும் சிதறிப்போகிறது. படிப்புக்காக, வேலைக்காக என ஏதோ ஒரு காரணத்துக்காக ஆளுக்கு ஒரு திசையில் பயணப்பட ஆரம்பித்த பிறகு, அந்த அந்நியோன்யம் கொஞ்சம் கொஞ்சமாகத் தொலைந்துபோகிறது. சில வருடங்கள் கழித்து பொது நிகழ்ச்சியில் அவர்களைச் சந்திக்கிறபோது விட்ட இடத்தில் இருந்து தொடர முடிவது இல்லை.

பால்யத் தோழமை, பள்ளித் தோழமை, கல்லூரி மற்றும் அலுவலகங்களில் கிடைக்கிற நட்புகள் இதெல்லாம் சிறப்பான விஷயங்கள் என்றாலும், உறவுத் தோழமை இன்னமும் நெருக்கமானதும் உரிமையானதும்கூட.

நான் பள்ளியில் படிக்கிறபோது எனது தாத்தா உயிரோடு இருந்தார். வருடம் ஒரு முறை கருப்பையா கோயில் திருவிழாவுக்கு உறவுகளின் கூட்டம் களைகட்டும். தாத்தா நடுவில் உட்கார்ந்திருக்க, மகன் வழி, மகள் வழிப் பேரப் பிள்ளைகள் சுற்றி உட்கார்ந்து அந்த ஆறேழு நாட்களும் ஊரே அமர்க்களப்படும்.

அம்மு, வீனு, வாணி, பிரசாத், விமலாக்கா என்று ஏறக்குறைய சம வயதுப் பிள்ளைகள் கூட்டத்தால் வீடே நிரம்பி இருக்கும். தினமும் மாலை வேளையில், எங்கள் எல்லோரையும் உட்காரவைத்து பாட்டி சுற்றிப்போடும். சீட்டுக்கட்டு, கேரம்போர்டு, நொண்டிச்சில்லு, கோக்கா என்று விதவிதமான விளையாட்டுகள். சமைத்துப்போட சித்திமார்கள். காலையில் எழுந்து பம்புசெட்டுக்குப் போய்க் குளித்துவிட்டு, மாங்காய் பறித்துத் தின்றுகொண்டே வரும்போது நிறைய விஷயங்களைப் பகிர்ந்துகொள்வோம்

சித்தி பையன், மாமா மகள், பெரியம்மா மகன், அத்தையோட தங்கச்சிப் பையன் என்ற உறவு நிலை களைத்தாண்டி, அது அழகான நட்பு வட்டம்.

இன்றைக்கு அப்படி இல்லை. நான் கருப்பையா கோயில் திருவிழாவுக்குப் போய் 10 வருடங்களாவது இருக்கும். நான் இந்த விஷயங்களைச் சொல்கிறபோது, இதேபோன்று நீங்களும், உங்கள் உறவுத் தோழமைகளோடு நட்புப் பாராட்டிய நாட்கள் நினைவுக்கு வரலாம்.

உறவுகளுக்குள்ளேயே நட்பு வட்டம் அமைவது ஆனந்தமான விஷயம் மட்டுமல்ல; ஆரோக்கியமானதும்கூட. வெளியில் இருந்து ஒரு நண்பர் தருகிற அறிவுரை, யோசனைகளைப்போலவே, குடும்பத்துக்குள்ளேயே இருக்கிற நட்பு வட்டத்தின் யோசனைகள் கூடுதல் புரிதலோடு இருக்கும். அதன் நீக்குப்போக்குகள் குடும்பத்தின் தன்மை தெரிந்து வெளிப்படும்.

உறவுத் தோழமைகளோடு தொடர்ந்து இருக்க வேண்டும் என்றால், ஊருக்குள்ளேயே இருக்க வேண்டியதுதான் என்று நினைக்கத் தோன்றும். அப்படியெல்லாம் இல்லை. இன்று இருக்கிற தகவல் தொடர்பு வசதியில் அனைவரையும் ஒரே நேரத்தில் தொலைபேசி வழியேகூடத் தொடர்புகொள்ள முடியும்.

சில வருடங்களுக்கு முன்பு வரை நேரம் கிடைக்கும்போதெல்லாம் நீங்கள் சந்தித்து வந்த உங்கள் பெரிய அத்தைப் பையனோடு, சமீப காலத்தில் எப்போது பேசினீர்கள், ஏன் பேசவில்லை என்ற கேள்விக்கு நம்மிடம் காரணமே இருக்காது.

கால ஓட்டத்தில் புதிய புதிய உறவுகளும் நட்புகளும் கிடைக்கிறபோது மறந்தது தெரியாமலே நாம் மறந்துபோவது இந்த உறவுத் தோழமையைத்தான். இப்படி மெனக்கெட்டு ஏன் உறவுத் தோழமைகளோடு தொடர்ந்து சிநேகம்கொள்ள வேண்டும்.

நம்முடைய வெளி வட்டார நட்புகளும்கூட குடும்ப நண்பர்களாக மாற இந்த உறவுத் தோழமைகள்தான் கைகொடுக்கின்றன. வெளி வட்டார நண்பர்களைப்போல உறவுகள் நம்முடைய வளர்ச்சியில் மகிழ்வதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து சொல்லப்படுவதற்கு முக்கியமான காரணம், உறவுகள் நட்புறவோடு இயங்காமல் இருப்பதுதான்.

வேக வேகமாக ஓடி, களைத்து, சம்பாதித்துத் திரும்பிப் பார்க்கிறபோது, நாமும் நம்முடைய நாலு நண்பர்களும் மட்டுமே மீதம் இருக் கிறோம். வேலைப் பளு, கல்லூரியின் பாடச் சுமை, பள்ளிக்கூடத்தில் விடுமுறை கிடைக்காதது, பிள்ளைகளின் சம்மர் கோச்சிங் கிளாஸ் இவை எல்லாவற்றையும் தாண்டி, ஊரில் கோயில் திருவிழா என்றால், இரண்டு நாள் போய் கலந்துகொள்ளுங்கள்.

உறவுகள் தூர இருந்தால்தான் அழகு என்பது ஓரளவு உண்மைதான் என்றாலும், சம வயது உறவுத் தோழமைகளோடு ஏதேனும் ஒரு வகையில் தொடர்பில் இருங்கள். அவசரம், ஆபத்துத் தருணங்களில் இளம் பிராயத்து நட்போடு தோள் கொடுங்கள்.

நண்பர்கள் வட்டாரத்தில் சில குறிப்பிட்ட நபர்கள் இணைப்புப் பாலமாக இருப்பார்கள். நீண்ட நாட்களாக நாம் யாருமே சந்திக்கவில்லை. எனவே, இந்த வார இறுதியில் எல்லோரும் சந்திக்கலாம் என்று ஏற்பாடு செய்வார். அப்படி உறவுத் தோழமைகளுக்குள்ளும் செய்ய முயலலாம்.

ஆளுக்கு ஒரு திசையில் இருந்தாலும் இந்தக் கோடை விடுமுறை நாட்களில் உறவுத் தோழமைகள் ஒன்றுகூடி ஒரு Family tour ஏற்பாடு செய்யுங்கள். பழைய நாட்களின் நினைவுகளைப் பகிர்ந்துகொள்ள ஒரு வாய்ப்பு தேடுங்கள்.
விடுமுறைகளில் உறவுகள் கூடி மகிழும் பல குடும்பங்களை நான் அறிவேன். நீங்களும் அறிந்து இருப்பீர்கள். அவர்களைப் பார்க்கிறபோது லேசாகப் பொறாமை வரும். ஆசையாகவும் இருக்கும்.

பழைய நண்பர்களைச் சந்திக்கவும், உறவு களைப் பலப்படுத்திக்கொள்ளவும் கல்லூரி களில்கூட அமைப்புகள் இருக்கின்றன. ஏனோ, குடும்பங்களில் அப்படிப்பட்ட ஏற்பாடு இப்போது குறைவாக இருக்கிறது.

உறவுத் தோழமைகள், நட்பை மட்டுமல்ல குடும்ப உறவுகளையும் மேம்படுத்துகின்றன. வைபவச் சந்திப்புகளில், வாய்ப்பு கிடைக்கும்போது மட்டும் பகிர்ந்துகொள்ளப்படுகிற அன்பும் தோழமையும் தொடர, காலத்துக்கேற்றதுபோல சில ஏற்பாடுகளும் தேவைப்படுகின்றன.

'குடும்ப உறுப்பினர்களே, நண்பர்களாகவும் அமைகிற, அமைத்துக்கொள்ளுகிற வாய்ப்பு நமது சூழலில்தான் அதிகம். அதைத் தவறவிடாதீர்கள்.

கருப்பையா கோயில் திருவிழாவில் ஒன்றுகூட தாத்தாக்கள்தான் ஏற்பாடு செய்ய வேண்டுமா என்ன?

-ஒரு சிறிய இடைவேளை..

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites