பூத் தூவ ஹெலிகாப்டர்... புகழ் பாட பொதுமக்கள்... திணறிய 'ராஜா' பாளையம்

28 April 2010 ·

பூத் தூவ ஹெலிகாப்டர்... புகழ் பாட பொதுமக்கள்...
திணறிய 'ராஜா' பாளையம்!

''ஷங்கர் படத்தில்கூட இந்த அளவுக்கு பிரமாண்டம் பார்த்த தில்லையே...'' என ஆச்சர்யத்தில் வாய் பிளந்துகிடக்கிறது ராஜபாளையம்!

ஆயிரம் வாகனங்களில் குவிந்த மக்கள் வாழ்த்துக் கோஷம் பாட... ஹெலிகாப்டர் மூலமாக வானில் இருந்து பூக்கள் தூவப் பட... நான்கு கிரேன் கேமராக்கள் வளைத்து வளைத்துப் படம் பிடிக்க... கடந்த 24-ம் தேதி குவைத் ராஜாவின் பிறந்த நாள் ராஜபாளையத்தையே திணறடித்தது!

நகரத்துக்குள் ஓடும் எல்லா மினி பஸ் களிலும் இலவச ட்ரிப். வெயிலை சமாளிக்க சாலைகளில் லாரி லாரியாகத் தண்ணீரைக் கொட்டிக் குளுகுளு வசதி. ஃபிளெக்ஸ், பேனர், அலங்கார வளைவுகள், போஸ் டர்கள் என எங்கெங்கும் குவைத் ராஜா. இலவசமாக வழங்கப்பட்ட டி-ஷர்ட், தொப்பிகளிலும் ராஜா... ராஜா... ராஜா!

புரோட்டா, புளியோதரைப் பொட்டலங்கள், தண்ணீர் பாக் கெட்டுகள் எல்லாம் லாரி லாரியாக இறங்கின. கொஞ்ச நேரத்திலேயே ராஜபாளையம் நகருக்குள் போக்கு வரத்தை நிறுத்திவிட்டார்கள். இத்தனைக் கும் அது தேசிய நெடுஞ்சாலை!காலையிலேயே குலதெய்வத்தை வணங்கிவிட்டு, தனது நர்ஸிங் கல்லூரி

மைதானத்துக்கு வந்த குவைத் ராஜா, இரண்டு ஏழைகளை வந்திருந்த ஹெலிகாப்டரில் ஏற்ற... 'பஸ்ஸுல போகக்கூட வழி இல்லாத எங்களை பிளேன்ல கூட்டிட்டுப் போற மகராசா... நீ நல்லா இருக்கணும்!' எனத் தழுதழுத்தார்கள். அடுத்தபடியாக, கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் பங்கேற்ற ஊர்வலத்தைப் பார்வையிட்ட ராஜா, மக்களைப் பார்த்துக் கையசைப்பதும், மாலைகளை அள்ளி வீசுவதுமாக அச்சு அசல் அரசியல்வாதியாக பந்தா காட்டினார்இதற் கிடையில், வானில் வட்டமிட்ட ஹெலிகாப்டர் தாழ்வாகப் பறந்து, கூட்டத்தினர் மீது பூக்களை மணிக்கணக்கில் தூவிக்கொண்டே இருந்தது. இந்தக் கொண்டாட்டங்களை ஒரு கட்டடத்தின் பால்கனியில் நின்று... கானா நாட்டு மேயர், இலங்கை அதிபரான ராஜபக்ஷேயின் செயலாளர், தென்-ஆப்ரிக்க அரசு தூதர் என பன்னாட்டு பிரதிநிதிகளும் பரவசத்தோடு பார்த்துக்கொண்டு இருந்தார்கள். இடையிடையே இயக்குநர் சுசி.கணேசன் மைக் பிடித்து, 'ஏழைகளுக்கு உதவுவதற்காகவே அவதரித்த கடவுளே!' என குவைத்தே கூச்சப்படும் அளவுக்குப் புகழ்ந்து தள்ளிக்கொண்டு இருந்தார். இவை அனைத்தும் விருதுநகர் மாவட்ட லோக்கல் சேனல்களில் நேரடி ஒளிபரப்பு வேறு.

யார் இந்த குவைத் ராஜா?

'வாட்ச்மேன் ஒருவரின் மகன்தான் இந்த ராஜா. உடற்பயிற்சியில் ஆர்வம்கொண்ட இவர், சஞ்சீவி மலையில் தலைகீழாக ஏறி சாதனை படைத்தவர். அடுத்து இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். பிறகு இள வயதில் குவைத் நாட்டுக்குச் சென்றவர், அங்கு ஜிம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தார். ஜிம்முக்கு வந்த குவைத்தைச் சேர்ந்த கோடீஸ்வரர் முகமது அல்ஃபஜி இவருக்கு நெருக்கமாகி இருக்கிறார். நோயால் அவதிப்பட்ட அவரை உடற்பயிற்சியின் மூலம் குணமாக்கினாராம் ராஜா. அதற்கு நன்றியாக ராஜாவுக்கு தனியாகவே ஒரு ஜிம்மை நிர்மாணித்துக் கொடுத்து, 'இனி உன் வளர்ச்சி உன் கையில்' என்று ஆசீர்வதித்திருக்கிறார். பிறகென்ன... கொஞ்சம் கொஞ்சமாக டெவலப் ஆன ராஜா, கம்ப்யூட்டர் ஏற்றுமதி, ராணுவ கான்ட்ராக்ட், அரிசி ஏற்றுமதி என்று தொ-ழில்களை விரிவுபடுத்தினார். இப்போது கானா தங்கச் சுரங்கத்துக்கும் ஈரான் எண்ணெய் கிணறுக்கும் சொந்தக்காரராம். 30 நாடுகளில் 'மில்லியன்'கணக்கில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது அவரது 'பிமா இன்டர்நேஷனல் கம்பெனி!' எனச் சொல்லி கண்ணுக்குள் கிர்ரைப் பாய்ச்சுகிறார்கள்.

குவைத் ராஜா சமூக மக்கள் இயக்க நிர்வாகி ஒருவரிடம் பேசியபோது, 'தமிழகம் முழுவதும் எங்கள் அமைப்பில் கிட்டத்தட்ட 16 லட்சம் பேர் உறுப்பினராக இருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே ராஜாவால் பலன் பெற்றவர்கள் - அல்லது பெறக் காத்திருப்பவர்கள். தென் மாவட்டங்களில் எப்போதும் சாதிக் கலவரம் இருக்கும். குறிப்பாக, ராஜபாளையம் ஏரியாவில் அது அதிகம். இப்போது எல்லா இன மக்களையும் ஒன்றிணைத்து ஓர் அமைப்பை உருவாக்கி இருக்கிறார் ராஜா. சமீபத்தில், ராஜபாளையம் நகராட்சியில் இடைத் தேர்தல் நடந்தபோது அதில் தனது அமைப்பு சார்பில் சிலரை நிறுத்தி வெற்றியடையச் செய்துள்ளார்!'' என்றார்.

இந்த விழாவின் இன்னோர் ஆச்சர் யம்... சுமார் ஆயிரம் போலீஸாரும், ஊர்க்காவல் படையினரும் கண்ணும் கருத்துமாகப் பாதுகாப்பு பணியில் மூழ்கி இருந்ததுதான். மாவட்ட எஸ்.பி-யே நேரில் ஆஜர். எஸ்.பி-யான கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டோம். 'அரசியல் கட்சிகளோ பிற அமைப்புகளோ பேரணி, பொதுக்கூட்டம் நடத்தினால் பாதுகாப்பு அளிப்போம். அப்படித்தான் இதுவும். சமூக மக்கள் இயக்கம் சார்பில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் ஏழைகளுக்கு அன்னதானமும், உதவியும் வழங்கப்படுகிறது என்கிறபோது நாங்கள் கண்டு கொள்ளாமல் இருக்க முடியுமா?' என்றார்.

''இந்த பிரமாண்டம் எல்லாம் அரசியலுக்கான அச்சாரம்தானே?'' என குவைத் ராஜாவிடமே கேட்டோம். ''அப்படி எல்லாம் எதுவும் இல்லை.ஏழை களுக்கான ஏராளமான மேம்பாட்டுத் திட்டங்களை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. பணக்காரர்கள் நினைத்தால், ஏழைகளின் தலையெழுத்தையே மாற்றி எழுத முடியும். என்னால் முடிந்ததை நான் ஊருக்குக் கொடுக்கிறேன். பிறந்த நாளன்றுபெரும்பாலும் நான் உள்ளூரில் இருந்தது இல்லை; வெளிநாட்டில்தான் இருப்பேன். இந்த வருடம் பிறந்த நாளே கூடாதென்று இருந்தேன். ஆனால், என் அம்மாவைப் பார்ப்பதற்காக ஊருக்கு வந்தேன். என்னால் பலன் பெற்ற சாதாரணப் பட்டவர்கள், தங்களால் முடிந்த அளவுக்கு போஸ்டர் அடித்து ஊர் முழுக்க ஒட்டிவிட்டார்கள். 'இதெல்லாம் வேண்டாம்...' என நான் என்னதான் சொன்னாலும் அவர்கள் அன்பாலும் வாழ்த்துகளாலும் என்னைக் கொண்டாடிவிடுகிறார்கள்!'' என்றவர், ''நான் ரொம்ப சாதாரணமான ஆள் சார். பெரிய படிப்பெல்லாம் கிடையாது. நட்புக்கு மரியாதை கொடுப்பேன். அந்த நட்புதான் பல நாட்டு அதிபர்களை இங்கே வரவழைச்சிருக்கு!'' என்கிறார் சாதாரணமாக.

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)
There was an error in this gadget

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil